படிக வடிவமுடைய திடப்பொருட்களை வகைப்படுத்துதல்
இப்படிகங்களில், அடிப்படை அமைப்பு அலகுகளாக நேர் அயனிகள் மற்றும் எதிர் அயனிகள் காணப்படுகின்றன. இவைகள் வலிமையான நிலைமின்னியல் கவர்ச்சி விசையால் ஒன்றோடொன்று இறுக்கமாகப் பிணைத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமின்னியல் கவர்ச்சி விசையானது பெருமமாக அமையும் வகையில் நேர் அயனியைச் சுற்றிலும் அதிகபட்சமாக எத்தனை எதிர் அயனிகள் இருக்க வாய்ப்புள்ளதோ அந்த அளவிற்கு அயனிகள் காணப்படுகின்றன. இதன் மறுதலையும் உண்மை . அயனிப் படிகங்கள் வரையறுக்கப்பட்ட படிக அமைப்பினைப் பெற்றுள்ளன. பெரும்பாலான அயனி படிகங்கள் கனச்சதுர நெருங்கிப்பொதிந்த அமைப்பினைப் பெற்றுள்ளன. எ.கா பின்வரும் படத்தில் காட்டியுள்ளவாறு சோடியம் குளோரைடு படிகத்தில் Na+ மற்றும் C1- அயனிகள் அமைந்துள்ளன.
பண்புகள்
1. அயனிப் படிகங்கள் அதிக உருகு நிலையைப் பெற்றுள்ளன.
2. இவைகள் மின்சாரத்தை கடத்துவதில்லை. ஏனெனில் அயனிகள் குறிப்பிட்ட அணிக்கோவைப் புள்ளிகளில் நிலையான இடத்தினைப் பெற்றுள்ளன.
3. இவைகள் உருகிய அல்லது கரைசல் நிலையில் மின்கடத்தும் தன்மையைப் பெற்றுள்ளன. ஏனெனில் இந்நிலைகளில், எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி அயனிகள் தன்னிச்சையாக இயங்கும் தன்மையினைப் பெற்றுள்ளன.
4. இப்படிகங்களில் காணப்படும் உட்கூறு அயனிகளின் இடஅமைவை மாற்றியமைக்க மிக வலிமையானப் புறவிசை தேவைப்படுவதிலிருந்து, இவைகள் கடினமானவை என அறியலாம்.
இப்படிகங்களில் காணப்படும் உட்கூறுகள் (அணுக்கள்) முப்பரிமாண வலைப்பின்னல் கட்டமைப்பில், முற்றிலும் சகப்பிணைப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன. எ.கா வைரம். சிலிக்கன் கார்பைடு போன்றவை. இத்தகைய சகப்பிணைப்புப் படிகங்கள் மிகக் கடினமானவை. மேலும் அதிக உருகுநிலை உடையவை. பொதுவாக இவைகள் மிகக் குறைவான வெப்ப மற்றும் மின் கடத்தும் தன்மையைப் பெற்றிருக்கின்றன.
மூலக்கூறு படிகங்களில் காணப்படும் உட்கூறுகள் நடுநிலை மூலக்கூறுகள் ஆகும். இம்மூலக்கூறுகள் வலிமை குறைந்த வாண்டர்வால்ஸ் கவர்ச்சி விசையால் ஒன்றொடொன்று பிணைத்து வைக்கப்பட்டுள்ளன. பொதுவாக இப்படிகங்கள் மென்மையானவை. மேலும் மின்கடத்தும் தன்மையைப் பெற்றிருப்பதில்லை. இவைகளைப் பின்வருமாறு மூன்று பிரிவுகளாக மேலும் வகைப்படுத்தலாம்.
தங்களுக்குத் தெரியுமா?
எழுதப் பயன்படுத்தும் பென்சில்களில் கிராஃபைட் பயன்படுகிறது. இது பென்சிலில் இருந்து எளிதாக நழுவி, தாளில் கருமையான ஒரு அடையாளத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இதன் நழுவுத் தன்மையினால் இருசக்கர வாகன சங்கிலிகளில் பயன்படுத்தப்படும் உயவு எண்ணெயாகவும் மேலும் பல்வேறு உயவு எண்ணெய்களின் ஒரு பகுதி பொருளாகவும் பயன்படுகிறது.
(i) முனைவற்ற மூலக்கூறு படிகங்கள்
இப்படிகங்கள் உட்கூறுகளாக உள்ள மூலக்கூறுகள் வலிமைக் குறைந்த சிதைவு விசை அல்லது லண்டன் விசைகளால் ஒன்றொடொன்று பிணைத்து வைக்கப்பட்டுள்ளன. இவைகள் குறைந்த உருகுநிலை உடையவை. மேலும் அறை வெப்பநிலையில் வழக்கமாகதிரவங்களாகவோ வாயுக்களாகவோ காணப்படுகின்றன. எ.கா நாஃப்தலீன், ஆந்தரசீன்.
(ii) முனைவுற்ற மூலக்கூறு படிகங்கள்
இவற்றின் உட்கூறுகளான மூலக்கூறுகள் முனைவுற்ற சகப்பிணைப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன. இவைகள் ஒப்பீட்டு அளவில் வலிமையான இருமுனை - இருமுனை இடை விசைகளால் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. முனைவற்ற மூலக்கூறு படிகங்களைக் காட்டிலும் இவற்றின் உருகுநிலை அதிகம். எ.கா திட CO2, மற்றும் திட NH3, முதலியன.
(iii) ஹைட்ரஜன் பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள மூலக்கூறு படிகங்கள்
இத்தகைய படிகங்களில் காணப்படும் உட்கூறு மூலக்கூறுகளுக்கிடையே ஹைட்ரஜன் பிணைப்பு காணப்படுகிறது. பொதுவாக அறை வெப்பநிலையில் இவைகள் மென்மையான திண்மங்களாகும். எ.கா பனிக்கட்டி (H2O), குளுக்கோஸ், யூரியா முதலியன.
உலோகப் பிணைப்பினைப் பற்றி தாங்கள் ஏற்கனவே பதினொன்றாம் வகுப்பில் கற்றறிந்துள்ளீர்கள். உலோகப் படிகங்களின் அணிக்கோவைப் புள்ளிகளில் நேர்மின் சுமையுடைய உலோக அயனிகள் காணப்படுகின்றன. இவைகள் எலக்ட்ரான் நிரம்பிய வெளியில் விரவியுள்ளன. இப்படிகங்கள் கடினமானவை. மேலும் அதிக உருகுநிலையுடையவை. இவைகள் தங்களுக்கே உரிய பளபளப்புத்தன்மைகளைப் பெற்றிருப்பதுடன் மிகச் சிறந்த வெப்ப மற்றும் மின்கடத்தும் தன்மையைப் பெற்றுள்ளன. எ. கா Cu, Fe, Zn, Ag, Au, Cu-Zn CULTTM உலோகங்கள் மற்றும் அவற்றின் உலோகக் கலவைகள்.