திடப் பொருட்களின் பொதுப் பண்புகள் General characteristics of solids
வாயு மூலக்கூறுகள் தங்களுக்கிடையேக் குறிப்பிட்ட தகுந்த கவர்ச்சி விசை ஏதும் இல்லாமல் கட்டுபாடின்றி இயங்குகின்றன என நாம் ஏற்கனவே பதினொன்றாம் வகுப்பில் கற்றறிந்துள்ளோம். வாயுக்களை போல் அல்லாமல், திடப்பொருட்களில் இடம்பெற்றுள்ள அணுக்கள், அயனிகள் அல்லது மூலக்கூறுகள் அவற்றிற்கிடையேயான வலிமையான கவர்ச்சிவிசையினால் இறுக்கமாகப் பிணைத்து வைக்கப்பட்டுள்ளன.
திடப்பொருட்களின் பொதுப் பண்புகள் பின்வருமாறு
(i) திடப்பொருட்கள் வரையறுக்கப்பட்ட வடிவம் மற்றும் கன அளவைப் பெற்றுள்ளன.
(ii) திடப்பொருட்கள் கடினமானவை மேலும் அமுக்க இயலாத் தன்மை உடையவை.
(iii) திடப்பொருட்களில் அவற்றின் உட்கூறுகளுக்கிடையே வலிமையான ஓரின விசைகள் காணப்படுகின்றன.
(iv) திடப்பொருட்களில் காணப்படும் அணுக்கள், அயனிகள் அல்லது மூலக்கூறுகள் ஆகியவற்றிற்கு இடையேயான தொலைவு குறைவானதாகும்.
(v) திடப்பொருட்களின் உட்கூறுகள் (அணுக்கள், அயனிகள் அல்லது மூலக்கூறுகள்) நிலையான இடஅமைவினைப் பெற்றுள்ளன. மேலும், அவ்விட அமைவினைப் பொறுத்து மட்டுமே அவைகள் அலைவுற இயலும்.