புவியியல் - கண்ட நகர்வுக் கோட்பாடு | 11th Geography : Chapter 3 : Lithosphere: Endogenic Processes
கண்ட நகர்வுக் கோட்பாடு (Continental Drift Theory)
1912 ஆம் ஆண்டு ஆல்பர்ட் வெகனரின் (1880-1930) கருத்துப்படி பல மில்லியன்
வருடங்களுக்கு முன்பு எல்லா கண்டங்களும் ஒரே கண்டமாக இருந்தது. இவரின் கூற்றுப்படி
250 மில்லியன் வருடங்களுக்கு முன்பு
புவி 'பாஞ்சியா' (அனைத்து நிலங்களும்) என்ற ஒரே
நிலப்பகுதியாக காணப்பட்டது. இந்த நிலப்பரப்பை சுற்றி "பாந்தலாசா" என்ற ஒரு பெருங்கடல் சூழ்ந்திருந்தது. நீண்ட
காலக்கட்டத்திற்கு மேலாக அதாவது சுமார் 220 மில்லியன் வருடங்களுக்கு முன்பு கண்டங்கள் இடம் பெயர்ந்து
தற்போதைய நிலைக்கு வந்துள்ளது. முதலில் பாஞ்சியா இரு நிலப்பகுதிகளாக உடைந்தன. அவை
வடக்கில் "லாரேசியா" எனவும் மற்றும் தெற்கில் "கோண்டுவானா" எனவும் அழைக்கப்பட்டன. லாரேசியா மேலும் உடைந்து யுரேஷியா
மற்றும் வட அமெரிக்காவாக பிரிந்தது. கோண்டுவானா நிலம் மேலும் உடைந்து ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா,அண்டார்டிகா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா
எனப் பிரிந்தது.
வெகனர் கண்ட நகர்வுக்
கோட்பாட்டை நிரூபிக்க சில ஆதாரங்களை முன்வைத்தார். அவற்றை விரிவாக பார்ப்போம்.
கண்ட நகர்வுக் கோட்பாட்டை நிரூபிக்கும்
சான்றுகள் (Evidences
to support continental drift theory)
பின்வரும் சான்றுகள் மூலமாக
கண்டநகர்வு கோட்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது.
1. பல்வேறு கண்டங்களில் சில ஒத்த
அரிய உயிரின புதைப்படிவங்கள் (Fossils) காணப்பட்டன. மீஸோசரஸ் (Mesosaurus) என்ற சிறிய ஊர்வன விலங்கின்
புதைப்படிவங்கள் ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் மட்டும் காணப்பட்டது.
2. 360 மில்லியன் ஆண்டுகள் பழமையான
பெர்ன் மரத்தின் புதைப்படிவங்கள் இந்தியாவிலும் அண்டார்டிக்காவிலும் மட்டும்
காணப்பட்டது.
3. ஒரே கால கட்டத்தில் உருவான ஒத்த
வகையான பாறைகள் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் (தென் அமெரிக்கா) காணப்பட்டது.
4. நியூ பவுண்ட்லாந்தின் புவியியல்
அமைப்பு அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஸ்காண்டிநேவியாவுடன் பொருந்துகிறது.
அப்பலேச்சியன் (Appalachian) மலையின் புவியியல் அமைப்பானது வட ஆப்பிரிக்காவில் உள்ள
மொராக்கோ மற்றும் அல்ஜீரியாவுடன் பொருந்துகிறது.
5. ஒத்த கண்டங்களின் எல்லைகள்
ஒன்றோடு ஒன்று பொருந்துகின்றன. உதாரணமாக, ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியும் தென் அமெரிக்காவின்
கிழக்குப் பகுதியும் ஒன்றாக பொருந்துகின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
டெக்சாஸ்
(Texas) குன்றில் காணப்படும்மந்திரித்த பாறை பல
பில்லியன் வருடங்கள் பழமையானது. ஹவாய் தீவுகள் மிகவும் இளம் லாவாவினால் உருவான
ஹாட் ஸ்பாட் (Hotspot) ஆக உள்ளது.