பாறைக்கோளம் | உள் இயக்கச் செயல்முறைகள் - பிளவுகளின் வகைகள் - பாறைக்கோளம் | 11th Geography : Chapter 3 : Lithosphere: Endogenic Processes
பிளவு (Fault)
பாறைத் தொகுதிகள் பக்கவாட்டில் நகரும் புவி மேலோடுகளின்
அடுக்குகள் உடைவதை பிளவுகள் என்கிறோம். பொதுவாக இது புவித் தட்டு எல்லைகளில்
நடைபெறுகிறது. இங்கு புவித் தட்டின் நகர்வானது புவி மேலோட்டை அழுத்துவதாலும்
இழுப்பதாலும் புவியின் மேலோட்டை உடைக்கின்றது. பிளவுகளில் ஏற்படும் வேகமான இடம்
பெயர்தலுடன் தொடர்புடைய ஆற்றல் தான் பெரும்பாலான நில நடுக்கத்திற்கு காரணமாக
அமைகிறது.
உடைந்த பாறைகளின்
தொகுதியானது ஒன்றுக்கொன்று கடந்து செல்லக்கூடிய பரந்த தட்டையான மேற்பரப்பை
பிளவுதளம் (Fault plane) என்கிறோம். பிளவு
தளத்திற்கும், கிடைத்தளத்திற்கும்
இடைப்பட்ட கோணத்தை பிளவுச் சரிவு (fault
dip) என்கிறோம்.
பிளவில் உள்ள தொகுதியின் மேல்பகுதி மேல் வீச்சுப் பாறை எனப்படும். பிளவு
ஏற்படும்போது பாறையின் ஒரு பகுதி பிளவு தளத்தின் வழியே கீழ்நோக்கி நகருகிறது. இது
கீழ்வீச்சுப் பாறை (Down thrown) எனப்படும். சிலசமயங்களில்
பிளவு தளத்தில் எந்த பாறைத் தொகுதி நகர்ந்தது என்பதை அறிவது கடினம். பிளவின் மேல்
மதிலை தொங்கும் சுவர் (Hanging wall) என்கிறோம். பிளவில் உள்ள
கீழ் மதில் அடிச்சுவர் (Foot wall) எனப்படும்.
பிளவுச்
சரிவு (Fault scarp)
பிளவுச் சரிவு (Fault scarp) என்பது
செங்குத்து சுவர் போன்ற சரிவாகும். இது மேலோட்டுப் பாறைப் பிளவுகளால்
ஏற்படுகின்றது. சிலநேரங்களில் பிளவுச் சரிவானது செங்குத்து பாறைப் போன்றும்
தோற்றம் அளிக்கும்.
பிளவுகளின் வகைகள் (Types of fault)
புவித் தட்டுகள் நகர்வதன்
அடிப்படையில் பிளவுகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
நேர்பிளவு (Normal fault)
புவி மேலோட்டின் செங்குத்து
நகர்வினை நேர்பிளவு என்று அழைக்கிறோம். விலகும் எல்லைகளில் உள்ள புவித் தட்டுகளின்
இழுவிசை காரணமாக நேர்பிளவு உருவாகின்றது. இதில் ஒரு தொகுதியானது மற்றொரு
தொகுதியின் மேல் உள்ளது (தொங்கும் சுவர்). மற்றொரு தொகுதி பிளவின் கீழ் உள்ளது
(அடிச்சுவர்). பாறைத் தொகுதியின் நகர்வானதுநேர்பிளவுகளில் ஏற்பட்டால் தொங்கும் சுவர் கீழ் நோக்கி
நகரும்.
படம் 3.17 நேர் மற்றும் எதிர் பிளவு
நேர்பிளவினால் ஏற்படும்
நிலத்தோற்றங்கள்
1. பிளவுப் பள்ளத்தாக்கு (Rift valley) அல்லது பிளவிடை பள்ளம் (Graben)
இரண்டு இணையான நேர்
பிளவுகளுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு குறுகலானநிலப்பகுதி கீழ் நோக்கி நகரும்
போது பிளவுப் பள்ளத்தாக்கு உருவாகின்றது. இதை கிரேபேன் (Graben)என்றும் அழைக்கிறோம். கிரேபேன்
என்பது ஜெர்மன் மொழியிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் "பள்ளம்" என்பதாகும். பிளவு பள்ளத்தாக்கு பின்னர் நீர் நிரம்பி ஆறாக
ஓடும். பொதுவாக பிளவுப் பள்ளத்தாக்கு நீளமாக, குறுகலாக மற்றும் மிக ஆழமாக
காணப்படும்.
எடுத்துக்காட்டு:
1. இரண்டு பிண்ட மலைகளான வோஸ்ஜஸ் (Vosges) மற்றும் கருப்புக்காடு (Block forest) ஆகியவற்றிற்கு இடையில் ரைன் (Rhine)பிளவு பள்ளத்தாக்கு
அமைந்துள்ளது.
2. இந்தியாவில் உள்ள விந்திய
மற்றும் சாத்பூரா பிண்ட மலைகளுக்கு (Satpura block mountains) இடையில் நர்மதா பிளவு
பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.
3. ஆப்பிரிக்காவின் பெரும்பிளவு
பள்ளத்தாக்கு
(The Great African Rift
Valley)
உலகிலேயே மிகப்பெரிய பிளவு பள்ளத்தாக்கு ஆப்பிரிக்காவின்
பெரும் பிளவு பள்ளத்தாக்கு ஆகும். இது 6,400 கி.மீ தூரத்திற்கு தெற்கில் மோசாம்பிக்கிலிருந்து (Mozambique) வடக்கே சிரியா வரை பரவியுள்ளது.
பள்ளதாக்குகளில் உள்ள பள்ளமானது ஏரியாக மாறும். ஆப்பிரிக்காவில் உள்ள ஏரிகள், இஸ்ரேலின் சாக்கடல் மற்றும்
செங்கடல் போன்றவை பிளவு பள்ளத்தாக்கின் பாகங்கள் ஆகும்.
2. பிண்ட மலை (Horst)
இரண்டு பிளவுகளுக்கு இடையில்
உள்ள நிலப்பகுதியானது மேலே தள்ளப்படும் போது பிண்ட மலை (Horst)உருவாகிறது. இந்த நிகழ்வில்
மையத் தொகுதியானது மேல்நோக்கி உந்தப்படுவது மட்டுமல்லாமல் அதன் பக்கவாட்டில் உள்ள
பகுதிகள் கீழ் நோக்கியும் உந்தப்படுகிறது. அதனால் மையப்பகுதியானது குவி மாடம் (Dome) போன்று தோற்றம் அளிக்கின்றது.
குறிப்பாக, இந்தியாவின் மத்திய மேற்குப்
பகுதியில் உள்ள விந்திய சாத்பூரா மலைத்தொடர்கள் பிண்ட மலைகள் ஆகும்.
எதிர் பிளவு (Reversefault)
புவி மேலோட்டின் கிடையான நகர்வினால் ஏற்படும் பிளவை
எதிர்பிளவு என அழைக்கிறோம். இரண்டு உடைந்த பிளவுகள்ஒன்றை நோக்கி மற்றொன்று
நகர்வதினால் எதிர்பிளவுகள் உருவாகின்றது. இழுவிசை காரணமாக குவியும் எல்லைகளில்
எதிர்பிளவு தோன்றுகிறது. பிளவின் ஒரு பக்கமானது மற்றொரு பக்கத்தின் கோணத்தின் மேல்
உள்ளது.
பக்கவாட்டு நகர்வு பிளவு
(Transform fault)
பக்கவாட்டு நகர்வு எல்லையின் விளிம்புகளின் முறிவினால் பக்க
நகர்வு பிளவுகள் உருவாகின்றது. பிளவுகளின் இரு பக்கத்தில் உள்ள பாறைகளானது
ஒன்றைவிட்டு ஒன்று கடந்து செல்வதால் ஒன்று சற்று மேல் நோக்கியும் மற்றொன்று
கீழ்நோக்கியும் நகரும். இது பெரும்பாலும் பெருங்கடல் கொப்பரையில் நிகழக்கூடியவை.