மூலக்கூறு மரபியல் - மரபணுப் பொருளாக டி.என்.ஏ | 12th Zoology : Chapter 5 : Molecular Genetics
மரபணுப் பொருளாக டி.என்.ஏ
கிரிஃபித், எவரி போன்றவர்களின் சோதனைகளுக்கு அப்பால் பல உயிரியலாளர்கள், செல்லில் உள்ள புரதங்களே மரபுப் பண்புகளை கடத்தும் பொருட்கள் என்றும் டி.என்.ஏ.க்கள் அல்ல என்றும் உறுதியாக நம்பினார்கள். யூகேரியோடிக் குரோமோசோம்களில் டி.என்.ஏவும் புரதமும் ஏறத்தாழ சமஅளவில் இருக்கின்றன. மரபுப்பொருளாக இருக்க தேவையான ஒரு பண்பு, செய்திகளை மொழிபெயர்க்கும் திறனாகும். இத்திறனுக்கு தேவையான வேதிப்பல்வகைமையையும், கூட்டுத்தொகுதி அமைப்பையும் புரதங்களே பெற்றுள்ளன என்று அவர்கள் கருதினர். என்றாலும், 1952ல் செய்யப்பட்ட ஹார்ஷேசேஸ் (Harshey-Chase) சோதனைகளின் முடிவுகள், டி.என்.ஏ. வே மரபணுப் பொருள் என்பதற்கான, அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய, சான்றுகளை அளித்தன.
பாக்டீரியாக்களை தாக்கும் தன்மை கொண்ட T2 - பாக்டீரியோஃபேஜ்களை பயன்படுத்தி, 1952ல் ஆல்பிரெட் ஹார்ஷே மற்றும் மார்தா சேஸ் ஆகியோர் பல சோதனைகளை செய்தனர். உண்மையில், T2 - பாக்டீரியோஃபேஜ் என்பது, எஸ்சரிச்சியா கோலை (எ.கோலை) என்ற பாக்டீரியாவை தாக்கும், வைரஸ் ஆகும். பாக்டீரியங்களோடு இவ்வைரஸ்களை கலந்தால், பாக்டீரியாவின் பரப்பின் மீது வைரஸ்கள் மெல்லிய படலமாக படர்கின்றன. பின், அவற்றிலிருந்து பாக்டீரியாவிற்குள் சில பொருட்கள் செலுத்தப்படுகின்றன. பிறகு, ஒவ்வொரு பாக்டீரியமும் உடைந்து பெரும் எண்ணிக்கையிலான புது ஃபேஜ்களை வெளியேற்றுகின்றன. டி.என்.ஏ மற்றும் புரதம் ஆகிய இவ்விரண்டில் எது பாக்டீரியாவுக்குள் சென்ற பொருள்? என்பதை ஹார்ஷேயும் சேஸும் கண்டறிய விரும்பினர். எல்லா நியுக்ளிக் அமிலங்களிலும் பாஸ்பரஸ் உண்டு ஆனால் புரதங்களில் இப்பொருள் இல்லை. அதைப்போலவே பெரும்பாலான புரதங்களில் (சிஸ்டீன் மற்றும் மெதியோனைன்) கந்தகம் உண்டு. ஆனால் நியுக்ளிக் அமிலத்தில் இப்பொருள் இல்லை.
ஆகவே இதனை அடிப்படையாகக் கொண்டு, கதிரியக்க தன்மை கொண்ட ஐசோடோப்புகளான கந்தகத்தின் 35S, பாஸ்பரஸின் 32P ஆகியவற்றை பயன்படுத்தி ஹார்ஷேவும் சேஸிம் சோதனைகளை வடிவமைத்தனர். இதன் மூலம் தொற்று ஏற்படுத்தும் போது வைரஸின் புரதம் மற்றும் நியுக்ளிக் அமிலங்களை தனித்தனியான பாதைகளில் கண்காணிக்க இயலும். 35S அல்லது 32P ஐசோடோப்புகள் உள்ள வளர் ஊடகத்தில் உள்ள பாக்டீரியாக்களில் தொற்று ஏற்படுத்த ஃபேஜ்கள் அனுமதிக்கப்பட்டன. 355 உள்ள ஊடகத்தில் வளரும் பாக்டீரியோஃபேஜ்ஜில் புரதங்களும், 32P உள்ள ஊடகத்தில் வளரும் ஃபேஜ்களில் டி.என்.ஏ.க்களும் அடையாளமிடப்பட்டிருந்தன. இவ்வாறு ஃபேஜ்களின் டி.என்.ஏவும் புரதமும் வெவ்வேறு அடையாளங்களை பெற்றிருப்பதால் இனம் காண்பது எளிதாகிறது.
இவ்வாறு அடையாளமிடப்பட்ட ஃபேஜ்களை, அடையாளமிடப்படாத எ.கோலை பாக்டீரியங்களோடு ஹர்ஷேவும் சேஸும் கலந்தனர். இதனால் ஃபேஜ்கள் பாக்டீரியங்களை தாக்கி அவற்றின் மரபணுப் பொருட்களை பாக்டீரியாவினுள் செலுத்தின. இவ்வாறு தொற்றுக்கு உள்ளான பாக்டீரியங்களை (பாக்டீரிய சிதைவுக்கு முன்பு) மிதமான குலுக்கலுக்கு ஆட்படுத்தி அதில் ஒட்டியுள்ள பொருட்கள் விடுவிக்கப்பட்டன.
பின்னர், பாக்டீரியங்களை ஆய்வு செய்ததில், 32P இணைந்த பொருட்கள் மட்டுமே இருந்தன. வெளியில் உள்ள ஊடகத்தில் 35S இணைந்த பொருட்கள் இருந்தன. புதிய தலைமுறை ஃபேஜ்களில் கதிரியக்க சோதனை செய்தபோது அவற்றில் வெறும் 32P மட்டுமே இருந்ததும், 35S இல்லாமலிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது (படம் 5.2). எனவே இம்முடிவுகள் மூலம், பாக்டீரியா செல்களுக்குள் சென்றவை டி.என்.ஏ பொருட்கள் மட்டுமே, புரத உறை பொருட்கள் அல்ல என்பது தெளிவாக்கப்பட்டது. இவ்வாறு, ஹர்ஷேவும் சேஸும், வைரஸிடமிருந்து பாக்டீரியாவுக்கு பாரம்பரிய செய்தியைக் கொண்டு சென்றது புரதங்கள் அல்ல டி.என்.ஏ மட்டுமே என இறுதியாக நிரூபித்தனர்.