விலங்கியல் - மரபு கடத்தலின் செயல் அலகாக மரபணு | 12th Zoology : Chapter 5 : Molecular Genetics
மரபு கடத்தலின் செயல் அலகாக மரபணு
மரபணு என்பது, மரபுக் கடத்தலுக்கான இயற்பிய மற்றும் செயலிய அடிப்படை அலகாகும். 1860ல் கிரிகெர் மெண்டல், மரபணு கோட்பாடுகளை முதன் முதலாக விளக்கினார். ஆனால் அவர் ஜீன் (அல்லது) மரபணு என்ற சொல்லை பயன்படுத்தவில்லை. அதை அவர் ‘காரணி’ (factor) என்றே அழைத்தார். 1909ல் டேனிஷ் உயிரியலாளரான வில்ஹெல்ம் ஜோஹன் சென் என்பவர் மரபணு (ஜீன்) என்ற சொல்லை உருவாக்கினார். பாரம்பரியமாக கடத்தப்படும் பண்புகளை இவை நிர்ணயிக்கின்றன என்பதை இது குறிக்கிறது.
1902ல் சட்டன் (Sutton) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட கோட்பாட்டில் கீழ்க்கண்டவாறு மரபணு வரையறுக்கப்பட்டுள்ளது. குரோமோசோம்களில் நிலையான இடத்தை ஆக்கிரமித்துள்ள, மெண்டலின் மரபு கடத்தல் விதிகளை பின்பற்றுகின்ற மற்றும் புற பண்புகளின் வெளிப்பாட்டிற்கு காரணமாகவும் அமைகின்ற தனித்துவ துகள்களே மரபணுக்கள் எனப்படும். இவை கீழ்க்கண்ட பண்புகளைப் பெற்றுள்ளன.
ஒவ்வொரு உயிரியிலும் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கையைவிட, மரபணுக்களின் எண்ணிக்கை அதிகம். எனவே, ஒரே குரோமோசோமில் பல மரபணுக்கள் இடம் கொண்டுள்ளன.
மணி கோர்த்த மாலையில் உள்ள மணிகளைப் போல, ஒற்றை நீள் வரிசையில் மரபணுக்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
• ஒவ்வொரு மரபணுவும் தமக்குரிய மரபணு அமைவிடத்தைக் (Locus) கொண்டுள்ளன.
• மரபணுக்கள் அல்லீல்கள் எனப்படும் பல மாற்று வடிவங்களைக் கொண்டிருக்கலாம்.
ஒரு மரபணு - ஒரு நொதி கோட்பாடு (One gene-one enzyme hypothesis)
1940ல், ஜார்ஜ் பீடில் மற்றும் எட்வர்டு டாடம் ஆகியோர், சிவப்பு ரொட்டி பூஞ்சை என்றழைக்கப்படும் நியுரோஸ்போரா கிரஸ்ஸா (Neurospora crassa) வில் செய்த சோதனைகளின் அடிப்படையில் ஒரு மரபணு-ஒரு நொதி கோட்பாடு உருவானது. இக்கோட்பாட்டின் படி ஒவ்வொரு நொதியின் உற்பத்தியையும் ஒரு மரபணு கட்டுபடுத்துகிறது.
ஒரு மரபணு - ஒரு பாலிபெப்பைடு கோட்பாடு (One gene-one polypeptide hypothesis)
ஒரு நொதியென்பது ஒன்றுக்கு மேற்பட்ட பாலிபெப்டைடு சங்கிலியால் ஆக்கப்பட்டது என அறியப்பட்டுள்ளது. ஒரு பாலிபெப்டைடை மட்டுமே ஒரு மரபணு உருவாக்கலாம். இதனால், ஒவ்வொரு மரபணுவும் நொதியின் மூலக்கூறில் உள்ள ஒரேயொரு பாலிபெப்டைடு சங்கிலியின் உற்பத்தியை மட்டுமே கட்டுப்படுத்தும் என ஒரு மரபணு - ஒரு பாலிபெப்டைடு கோட்பாட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
• திடீர் மாற்றம் என்றழைக்கப்படும் நிகழ்வின் மூலம் இருப்பிடம் மற்றும் உள் பொருட்களில் மரபணுக்கள் திடீரென மாற்றம் பெறுகின்றன.
• மரபணுக்கள், தன்னிய நகலாக்கத்திறன் (Self-Duplication) கொண்ட வை ஆதலால் தன் நகலை தாமே உற்பத்தி செய்து கொள்கின்றன.