விலங்கியல் - மரபணு பொருளுக்கான தேடல் | 12th Zoology : Chapter 5 : Molecular Genetics
மரபணு பொருளுக்கான தேடல்
செல்களில் நடைபெறும் குன்றல் பிரிவின் போது அச்செயலில் ஈடுபட்டுள்ள உட்கரு, தமக்குத் தாமே சிறிய தண்டு போன்ற உறுப்புகளாக சீரமைத்துக் கொள்கிறது. இதற்கு குரோமோசோம் என்று பெயர். இக்கருத்துக்களை 1848 லேயே, ஜெர்மனியைச் சேர்ந்த தாவரவியல் அறிஞரான வில்ஹெல்ம் ஹோஃப்மீஸ்டெர் (Wilhelm Hofmeister) குறிப்பிட்டுள்ளார். 1869ல், ஸ்விஸ் நாட்டைச் சேர்ந்த மருத்துவரான பிரெடெரிக் மீஸ்ஷர் (Friedrich Meicher) செல்லின் உட்கருவிலிருந்து நியுக்ளின் (Nuclein) எனும் பொருளை பிரித்தெடுத்தார். இப்பொருளுக்கு 1889ல் ஆல்ட்மன் (Altman) என்பவர் நியுக்ளிக் அமிலம் என பெயர் மாற்றினார். இதுவே தற்போது டி.என்.ஏ என்றழைக்கப்படுகிறது. புரதங்கள் மற்றும் டி.என்.ஏ ஆகியவற்றால் குரோமோசோம்கள் ஆக்கப்பட்டுள்ளன என்பது 1920 வாக்கில் தெளிவானது. மரபுசார்ந்த செய்திகளை எடுத்துச் செல்லும் உண்மையான கடத்திகளை அறிவதற்காக பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
டி.என்.ஏ தான் மரபணுப் பொருள் என்பதை நிரூபித்த கிரிஃபித் (Griffith) சோதனை, ஏற்கனவே பதினோராம் வகுப்பு பாட நூலில் விளக்கப்பட்டுள்ளது. பாக்டீரியாவின் மரபணுப் பொருள் டி.என்.ஏ தான் என்பதற்கு பாக்டீரிய தோற்றமாற்றமே (Bacterial Transformation) முதல் சான்று என்றாலும் இத்தோற்றமாற்றத்திற்கான அவரின் சோதனைகளால் மரபணுப் பொருளின் வேதிப்பண்பையும் வரையறுக்க இயலவில்லை.
பின்னர் 1944ல், ஆஸ்வால்டு ஏவரி (Oswald T.Avery) காலின் மேக்லியாட் (Colin M.Macleod) மற்றும் மேக்லின் மெக்கார்டி (Maclyn J.Mc Carty) ஆகியோர், 'உடல்வெளி (invitro) முறை மூலம் கிரிஃபித்தின் சோதனைகளை மீள மேற்கொண்டனர். இதன் மூலம், வீரியமற்ற பாக்டீரியாவை வீரியம் கொண்டதாக மாற்றுகிற தோற்றமாற்ற நிகழ்வுக்குக் காரணமான பொருட்களை அடையாளம் காண முயன்றனர். இவ்வாய்வின் போது, வெப்பத்தினால் கொல்லப்பட்ட S-வகை பாக்டீரியாவிலிருந்து டி.என்.ஏ, ஆர்.என்.ஏ மற்றும் புரதங்கள் பிரித்தெடுக்கப்பட்டு அவை R-வகை பாக்டீரியாவினுள் சேர்க்கப்பட்டன. இதன் விளைவாக R-வகையின் சொரசொரப்பான புறப்பரப்பு மென்மையாக மாறியது மட்டுமல்லாமல், அவை, நோயூக்கியாகவும் மாறின (படம் 5.1). ஆனால், டி.என்.ஏ. யேஸ் (டி.என்.ஏ சிதைவு நொதி) நொதியுடன் பிரித்தெடுக்கப்பட்ட பகுதியை வினைபுரிய செய்த பின், செலுத்தப்பட்ட போது, தோற்றமாற்றம் செய்யும் பண்பை அது இழந்திருந்தது. ஆனால், ஆர்.என்.ஏ. யேஸ் (ஆர்.என்.ஏ சிதைவு நொதி) அல்லது புரோட்டினேஸ் (புரத சிதைப்பு நொதி) ஆகியவை எதுவும் தோற்றமாற்ற நிகழ்வை பாதிக்கவில்லை. எனவே, தோற்றமாற்ற நிகழ்விற்கு டி.என்.ஏ. வே காரணம் என்பது, டி.என்.ஏ.யேஸால் செரிக்கப்பட்டதால் ஏற்பட்ட தோற்றமாற்ற பண்பு இழப்பிலிருந்து, தெரிய வருகிறது. இச்சோதனைகள், டி.என்.ஏ. வே மரபணுப் பொருளாகவும் புரதம் அல்ல என்பதையும் காட்டுகின்றன. ஒரு வகை செல்லிலிருந்து (S-வகை) எடுக்கப்பட்ட டி.என்.ஏவை இன்னொரு வகை செல்லிற்குள் (R-வகை) செலுத்தும்போது, முதல் வகை (S-வகை)யின் சில பண்புகள் மீளக்கிடைக்கின்றன. இம்மொத்த நிகழ்வே தோற்றமாற்றம் (Transformation) எனப்படும்.