Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | தசை மண்டல மற்றும் எலும்பு மண்டலக் குறைபாடுகள் (Disorders of Muscular and Skeletal System)
   Posted On :  09.01.2024 02:42 am

11 வது விலங்கியல் : பாடம் 9 : இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம்

தசை மண்டல மற்றும் எலும்பு மண்டலக் குறைபாடுகள் (Disorders of Muscular and Skeletal System)

அ) தசை மண்டலக் குறைபாடுகள் ஆ) எலும்பு மண்டல குறைபாடுகள் (Disorders of Skeletal System)

தசை மண்டல மற்றும் எலும்பு மண்டலக் குறைபாடுகள் (Disorders of Muscular and Skeletal System)


) தசை மண்டலக் குறைபாடுகள் 

மையாஸ்தீனியா கிரேவிஸ்: (Myasthenia gravis) நரம்பு தசை சந்திப்பில் அசிட்டைல் கோலைன் செயல்பாடு குறைவதால் இந்நிலை தோன்றுகின்றது. இது ஒரு சுயதடைகாப்பு நோயாகும். இதனால் எலும்புத்தசைகளில், தசைச் சோர்வு, பலமின்மை மற்றும் பக்கவாதம் ஆகியன தோன்றும். சார்கோலெம்மாவில் அசிட்டைல்கோலைன் உணர்வேற்பிகளை எதிர்ப்பொருட்கள் தடைசெய்வதால் தசைகளில் பலமின்மை எற்படுகின்றது. இந்நோய் முற்றிய நிலையில் மெல்லுதல், விழுங்குதல், பேசுதல், சுவாசித்தல் ஆகியன கடினமாகும்.

டெட்டனி: (Tetany) பாரதைராய்டு ஹார்மோன் பற்றாக்குறையின் காரணமாக உடலில் கால்சியத்தின் அளவு குறைகிறது. இதனாலேயே தீவிரத் தசை இறுக்கம் ஏற்படுகின்றது. அதற்கு டெட்டனி என்று பெயர்.


தசைச்சோர்வு (Muscle fatigue)

தொடர்ந்து பலமுறை தசைச்சுருக்கம் நடைபெற்ற பின்னர் தசை மேலும் சுருங்க முடியாத நிலையை அடையும். இந்நிலையே தசைச்சோர்வாகும். தசைகளில் ATP பற்றாக்குறை மற்றும் ஆக்ஸிஜனின்றி நடைபெறும் குளுக்கோஸ் சிதைவின் விளைவாக சேகரமாகும் லாக்டிக் அமிலம் ஆகியவை தசை சோர்வடையக் காரணங்களாகும்.


தசைச்செயலிழப்பு (Atrophy)

தசைகளின் செயல்பாடுகள் குறைவது அல்லது முற்றிலும் முடங்கிப்போகும் நிலை தசைச்செயலிழப்பு எனப்படும். தசைகளின் அளவு சுருங்குவதால் தசைகள் பலமிழந்து விடுகின்றன. நீண்ட காலமாகப் படுக்கையில் இருக்கும் நோயாளிகள், தசைகளைத் தொடர்ந்து பயன்படுத்தால் அவை வலுவிழக்கின்றன.


தசைப்பிடிப்பு (Muscle Pull)

தசையில் ஏற்படும் கிழிசலே தசைப்பிடிப்பு எனப்படும். விபத்து போன்ற அதிர்ச்சி இழுப்பால் தசையிழைகளில் ஏற்படும் கிழிவு சுளுக்கு எனப்படும். தசைகளின் மீள் திறனைவிட அதிகமாகத் திடீரென இழுபடுவதால் இந்நிலை ஏற்படுகின்றது. சரியற்ற நிலையில் நீண்ட நேரம் இருக்கையில் அமர்வதால் முதுகுத் தசைகளில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு முதுகுவலி உண்டாகிறது.


தசைச்சிதைவு நோய் (Muscular dystrophy)

பல தசை நோய்களின் ஒன்றிணைந்த தொகுப்பு தசைச் சிதைவுநோய் என்பதாகும். எலும்புத் தசைகளின் தீவிரச் செயலிழப்பு, தசைகளைப் பலமில்லாமல் ஆக்கி, நுரையீரல் மற்றும் இதயச் செயலிழப்பை உண்டாக்கி இறுதியில் இறப்பை ஏற்படுத்துகிறது. டச்சீன் தசைச் சிதைவு (Duchene Muscular Dystrophy -DMD) என்பது பொதுவாக காணப்படும் தசைச் சிதைவு நோயாகும்.


) எலும்பு மண்டல குறைபாடுகள் (Disorders of Skeletal System)

மூட்டுவலி (Arthritis) மற்றும் எலும்புப்புரை (Osteoporosis) ஆகியன எலும்பு மண்டலத்தில் ஏற்படும் முக்கியக் குறைபாட்டு நோய்களாகும்.


1. மூட்டு வலி (Arthritis) வீக்கம் மற்றும் சிதைவு ஆகியவை மூட்டுகளைப் பாதிப்பதே மூட்டுவலி எனப்படும். இவற்றில் பல வகைகள் உள்ளன. அவை

) ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் (Osteoarthritis): இது வயது முதிர்வு காரணமாக எளிதில் அசையும் மூட்டுகளில் உள்ள எலும்பு முனைகளின் சிதைவால் தோன்றுகிறது. விரல்கள், முழங்கால், இடுப்பு, முதுகெலும்புத் தொடர் போன்றவற்றின் மூட்டுகளில் இவ்விதப் பாதிப்பு தோன்றுகின்றது.

) ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் (Rheumatoid arthritis): மூட்டுகளின் இடையே உள்ள உயவு (Synovial) படலத்தில் அதிகத்திரவம் சேர்ந்து, அதிக வலியுடன் வீக்கம் தோன்றுதல் ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் ஆகும். இது எந்த வயதிலும் தோன்றலாம். ஆனால் அறிகுறிகள் இயல்பாக 50 வயதுக்கு முன்னர் வெளிப்படும்.

) கௌட் (Gouty arthritis or gout): மூட்டுகளில் யூரிக் அமிலம் படிகங்களாகப் படிவது அல்லது அவற்றைக் கழிவு நீக்கம் மூலம் வெளியேற்ற முடியாத நிலையில் கௌட் தோன்றுகின்றது. உயவு மூட்டுகளில் இது படிகின்றது.


2. எலும்புப்புரை (Osteoporosis): கால்சியத்தை உணவின் வழியாகப் போதுமான அளவிற்கு எடுத்துக்கொள்ளாத நிலையிலும் ஹார்மோன் குறைபாடு காரணமாகவும் இந்நோய் தோன்று கின்றது. இது குழந்தைகளில் ரிக்கெட்ஸ் நோயையும் வயது முதிர்ந்த பெண்களில் ஆஸ்டியோமலேசியா நோயையும் உண்டாக்குகின்றது. இந்நிலையில் எலும்பானது மென்மையாகவும் எளிதில் உடையும் தன்மையுடையதாகவும் மாறுகின்றது. இந்நிலையைப் போதுமான அளவு கால்சியம் உட்கொள்ளல், வைட்டமின் D உட்கொள்ளல் மற்றும் தொடர்ச்சியான உடற்செயல்பாடுகளால் குறைக்கலாம்.

11th Zoology : Chapter 9 : Locomotion and Movement : Disorders of muscular and skeletal system in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 9 : இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் : தசை மண்டல மற்றும் எலும்பு மண்டலக் குறைபாடுகள் (Disorders of Muscular and Skeletal System) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 9 : இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம்