இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் | விலங்கியல் - பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி | 11th Zoology : Chapter 9 : Locomotion and Movement
21. பல்வகை இயக்கங்களின் பெயர்களைக் கூறு
அ) அமீபா போன்ற இயக்கம்
ஆ) குறு இழை இயக்கம்
இ) நீரிழை இயக்கம்
ஈ) தசை இயக்கம்
22. சார்க்கோமியரிலுள்ள தசையிழைகளின் பெயர்களைக் கூறுக..
அ) தடித்த இழைகள்
ஆ) மெல்லிய இழைகள்
23. எலும்புத் தசைகளிலுள்ள சுருங்கு புரதங்களின் பெயர்களைக் கூறு.
1. மையோசின்-தடித்த தசையிழையில் உள்ள புரதம்
2. ஆக்டின்-மெல்லிய இழையில் உள்ள புரதம்
24. எலும்புத் தசைகளை விளக்கும் போது "வரியுடைய" என்பது எதைக் குறிக்கிறது.
வரியுடைய என்ற சொல் தசையிழையில் உள்ள அடர்த்தி மிகு A பட்டைகளையும், அடர்த்தி குறைந்த I பட்டைகளையும் குறிக்கிறது.
25. சம இழுப்பு சுருக்கம் எவ்விதம் நடைபெறுகிறது.
• இவ்வகை சுருக்கத்தில் தசைகளில் நீளத்தில் மாற்றம் ஏற்படும்.ஆனால் விசையில் மாற்றம் ஏற்படுவதில்லை.
• இங்கு உருவாக்கப்படும் விசையில் எந்த மாற்றமும் இல்லை.
எ.கா. பளுதூக்குதல், டம்பெல் தூக்குதல்
26. சமநீளச் சுருக்கம் எவ்விதம் நடைபெறுகிறது.
• இவ்வகை சுருக்கத்தில் தசையின் நீளத்தில் மாற்றம் அடைவதில்லை. ஆனால் இழு விசையில் மாற்றம் ஏற்படுகிறது.
• இங்கு உருவாகும் விசையில் மாற்றம் ஏற்படுகிறது.
எ.கா. சுவரை தள்ளுதல், அதிக எடையுடைய பையைத் தாங்குதல்.
27. கபால எலும்புகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
• கபாலத்தில் மொத்தம் எட்டு எலும்புகள் உள்ளன.
• 1. ஒரு இணை உச்சி எலும்பு
• 2. ஒரு இணை பொட்டெலும்பு
• 3. நுதலெலும்பு
• 4. பிடரி எலும்பு
• 5. எத்மாய்டு எலும்பு
• 6. ஆப்புருவ எலும்பு
28. மனித உடலில் இணைக்கப்படாத எலும்பு எது?
• நாவடி எலும்பு (Hyoid)
29. அச்சு சட்டகத்தில் அடங்கியுள்ள மூன்று முக்கிய பகுதிகளின் பெயர்களைப் பட்டியலிடுக.
1. மண்டையோடு
2. நாவடி (ஹையாய்டு எலும்பு
3. முதுகெலும்பு தொடர்
4. மார்புக் கூடு
30. டெட்டனி எவ்வாறு ஏற்படுகிறது ?
• பாராதைராய்டு ஹார்மோன் பற்றாக் குறைவால், உடலில் கால்சியம் அளவு குறைகிறது.
• இதனால் தீவிர தசை இறுக்கம் ஏற்படுகிறது. இதற்கு டெட்டனி என்று பெயர்.
31. சட்டக மண்டலத்தின் பணிகள் யாவை ?
சட்டக மண்டலத்தின் பணிகள்
• இவ்வமைப்பு உடலுக்கு உறுதியான கட்டமைப்பை அளிப்பதுடன் புவியீர்ப்பு விசைக்கு எதிராக உடல் எடையைத் தாங்குகின்றது.
• உடலுக்கு நிலையான வடிவத்தைத் தந்து அதனை நிர்வகிக்கிறது.
• மென்மையான உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கின்றது.
• கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுப்புக்களை சேமிக்கின்றது. மேலும் மஞ்சளான எலும்பு மஜ்ஜைப் பகுதியில் ஆற்றல் மூலமான கொழுப்பை (டிரைகிளிசரைடு) சேமிக்கின்றது.
• எலும்புகளோடு இணைக்கப்பட்ட தசைகளுடன் சேர்ந்து நெம்புகோல்போல் செயல்பட்டு இடப்பெயர்ச்சிக்குப் பயன்படுகின்றது.
• அதிக எடையைத் தாங்கக்கூடிய வலுவைத் தருவதும், இயக்க அதிர்வுகளை ஏற்பதும் எலும்புகளேயாகும்.
• விலா எலும்புகள், பஞ்சு போன்ற முள்ளெலும்புகளின் பகுதிகள் மற்றும் நீண்ட எலும்புகளின் முனைப்பகுதி ஆகிய இடங்களில் இரத்தச் சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளையணுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
32. மார்புக் கூட்டை உருவாக்கும் விலா எலும்புகளின் வகைகள் யாவை?
1. உண்மை விலா எலும்புகள் (1 முதல் 7 இணைகள்)
2. போலி விலா எலும்புகள் (8,9,10 வது இணைகள்)
3. மிதக்கும் விலா எலும்புகள் (11,மற்றும் 12 வது இணைகள்)
33. இடுப்பு வளையத்திலுள்ள எலும்புகள் யாவை?
1. இலியம்
2. இஸ்கியம்
3. பூப்பெலும்பு
34. தசை மண்டலத்தின் கோளாறுகளைப் பட்டியலிடுக.
1. தசைச் சோர்வு
2. தசைச் செயலிழப்பு
3. தசைப்பிடிப்பு
4. தசைச் சிதைவு நோய்
5.மூட்டுவலி ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் கௌட்
35. தசைச் சுருக்கத்திற்ககான சறுக்கு இழைகோட்பாட்டை விளக்கு.
• சறுக்கு இழை தசைச் சுருக்கம் ஒரு செயல் மிகு நிகழ்வாகும். இக்கோட்பாட்டை ஆன்ட்ரூ F, ஹக்ஸ்லி மற்றும் ரோல்ப் நிடர்கெர்க் என்பவரால் உருவாக்கப்பட்டது.
• மைய நரம்பு மண்டலத்திலிருந்து இயக்க நரம்புகளின் வழியே வருகின்ற நரம்பு தூண்டுதலால் தசை சுருக்கம் துவங்குகிறது.
• இயக்க நரம்பும், சார்க்கோ லெம்மாவும் இணையும் தசை சந்திப்பில் அசிட்டைல் கோலைன் சுரக்கிறது. இது சார்க்கோ லெம்மாவில் செயல் மிகு மின்னழுத்தத்தை உருவாக்குகிறது.
• இந்த செயல் மிகு மின்னழுத்தம். சார்க்கோ பிளாச வலையிலிருந்து அதிக அளவு கால்சிய அயனிகளை வெளியேற்றுகிறது.
• அதிகரித்த கால்சியம் அயனிகள் மெல்லிய இழைகள் உள்ள ட்ரோபோனின் என்னும் புரதத்துடன் இணைகிறது. மெல்லிய இழையிலுள்ள ஆக்டீன், மையோசின் தலையில் உள்ள ட்ரோபோமையோசினுடன் இணைந்த குறுக்குப் பாலத்தை உருவாக்குகிறது. இதனால் ஆக்டின், மற்றும் மையோசின் ஆகியவை இணைந்து ஆக்டோமையோசின் என்ற புரத கூட்டமைப்பு உருவாகிறது.
• இப்போது ATP ஆற்றலை பயன்படுத்தி மையோசின் தலைப்பகுதி மெல்லிய இழையின் அச்சுப்பகுதிக்கு 90° கோணத்திற்கும் வரும் வரை சுழல்கிறது.
• இதனால் ஆக்டின் மற்றும் மையோசினிடையே பிணைப்பு ஏற்பட்டு மையோசின் தலைப்பகுதி 90° கோணத்திலிருந்து 45° க்கு சாய்ந்த பின் விசையின் தாக்கம் தொடங்குகிறது.
• இதனால் குறுக்குப் பால அமைப்பு உறுதியான உயர்விசை பிணைப்பாக மாறி மையோசின் தலைப்பகுதியை சுழல வைக்கிறது. இவ்வாறு சுழலும் போது; அதனுடன் இணைந்து ஆக்டின் இழைகள் A பட்டையின் மையப்பகுதிக்கு இழுக்கப்படுகிறது. மையோசின் பழைய நிலைக்கு திரும்பி ATP மற்றும் பாஸ்பேட் அயனிகள் விடுவிக்கப்பட்டு புதிய ATP மையோசின் தலைப் பகுதியில் இணைகிறது. இதனால் குறுக்குப் பாலம் உடைகிறது.
• இந்த தாக்கத்தின் முடிவில் மையோசின் தலைப் பகுதியிலிருந்து ஆக்டின் இழைகள் விடுவிக்கப்பட்டு மீண்டும் அடுத்த சுழற்சிக்கு தயாராகி, தசையிழை சுருங்கும் வரை இத்தாக்கம் தொடர்ந்து பல முறை நிகழ்கிறது.
• இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுவதால் மெல்லிய இழைகள் சார்க்கோமியரின் மையப்பகுதியை நோக்கி இழுக்கப்படுகிறது.
• இந்நிகழ்ச்சியில் தடித்த மற்றும் மெல்லிய இழைகளின் நீளத்தில் மாற்றம் இல்லை. ஆனால் ஆக்டின் இழைகளுடன் இணைந்த Z கோடுகள் இருபக்கத்திலிருந்து இழுக்கப் படுவதால் சார்க்கோமியர் சுருங்குகிறது. இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுகிறது.
• கால்சியம் அயனிகள் மீண்டும் சார்க்கோ பிளாசத்திற்குள் சென்ற உடன் ஆக்டீன் இழையின் செயல்படு பகுதி, மறைக்கப்பட்டு, மையோசின் தலைப்பகுதி, ஆக்டீனுடன் Z கோடுகள் பழைய நிலைக்குச் செல்கிறது.
36. தொடர் உடற்பயிற்சி செய்வதன் நன்மைகள் யாவை?
• தொடர் உடற்பயிற்சியால் பல உடற்செயலியல் நன்மைகள் :
• தசைகள் நீண்டு வளர்வதுடன் உறுதியாகின்றது.
• இதயத்தசை ஓய்வு வீதம் குறைகின்றது.
• தசை நார்களில் நொதிகளின் உற்பத்தி உயர்கின்றது.
• தசை நார்கள் மற்றும் தசை நாண்கள் உறுதியடைகின்றன
• மூட்டுகள் மேலும் வளையும் தன்மையடைகின்றது.
• மாரடைப்பிலிருந்து பாதுகாப்பு கிடைக்கின்றது.
• ஹார்மோன்களின் செயல்பாட்டை அதிகரிக்கின்றது.
• அறிவாற்றல் தொடர்பான பணிகளை மேம்படுத்துகிறது.
• உடல் பருமனைத் தடுக்கிறது.
• தன்னம்பிக்கையையும் மரியாதையையும் அதிகரிக்கிறது.
• நல்ல உடற்கட்ட அழகுப் பண்பைக் கூட்டும்.
• தரமான வாழ்வுடன் ஒட்டு மொத்தமாக உடல் நலமடைகின்றது.
• மன அழுத்தம், தகைப்பு மற்றும் பதட்டம் ஆகியவற்றைத் தடுக்கிறது.
• உடற்பயிற்சி செய்யும் போது வளர்சிதை மாற்ற வீதம் அதிகரிக்கிறது.
• அதற்கேற்ப தசைகளில் ஆக்ஸிஜன் தேவையும் அதிகரிக்கிறது.
• இத்தேவையை ஈடுசெய்ய அதிக அளவு ஆக்ஸிஜன் கொண்ட இரத்த சிவப்பணுக்கள் செயல்படும் மையங்களுக்கு செல்கின்றன.
• இதயத் துடிப்பும், இதயத்திலிருந்து வெளியேறும் இரத்தத்தின் அளவும் அதிகமாகிறது. தசைகளையும், எலும்புகளையும் உறுதியாக்க, சரிவிகித உணவுடன், உடற்பயிற்சியும் முக்கிய பங்காற்றுகிறது.
37. பல்வவேறு எலும்பு முறிவுகள் யாவை ?
1. குறுக்கு வகை (Transverse): இவ்வகையில் முறிவு, எலும்பின் நீள் அச்சிற்கு செங்குத்துக் கோணத்தில் குறுக்காக ஏற்படும்.
2. இடம் மாறா சாய்வு வகை (Oblique non-displaced): இவ்வகையில் எலும்பின் நீள்அச்சிற்கு சாய்வான கோணத்தில் முறிவு ஏற்படும் ஆனால் உடைந்த எலும்பு தன்னுடைய நிலையிலிருந்தது விலகாமல் இருக்கும் .
3. இடம் மாறும் சாய்வு வகை (Oblique displaced): இவ்வகையில் எலும்பின் நீள் அச்சிற்கு சாய்வான கோணத்தில் முறிவு ஏற்படும் ஆனால் உடைந்த எலும்புகள் தன்னுடைய நிலையிலிருந்து விலகும்.
4. திருகு வகை (Spiral): அதிகப்படியான திருகல் விசையை எலும்பின் மீது செலுத்தும் போது திருகுபோன்ற சுழல் பிளவு எலும்புகளில் ஏற்படுகிறது. எ.கா. விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் பொதுவான எலும்பு முறிவு.
5 பச்சைக்கொம்பு (Greenstick): இதில் பச்சை மரக் கொம்புகள் போன்று முழுமையாக உடையாமல் காணப்படுகின்றன. இவ்வகை முறிவு குழந்தைகளின் எலும்புகள் வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருப்பதால் ஏற்படுகின்றது.
6. நொறுங்குதல் வகை (Comminuted): மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட துண்டுகளாக எலும்புகள் நொறுங்குகிறது, இவ்வகை, குறிப்பாக வயதானவர்க்கு மட்டும் ஏற்படும், இவர்களது எலும்புகள் எளிதில் உடையும் தன்மையுடையன (கடினமானது, ஆனால் எளிதில் உடையக் கூடியது).
38. எலும்புமுறிவு ஏற்படும் விதம் மற்றும் எலும்பு முறிவு குணமாதல் பற்றி விவரி.
எலும்புகள் உறுதியானவை என்ற போதிலும் சில நேரங்களில் உடையும் நிலை ஏற்படுகின்றது. எலும்பு முறிவுகளைக் கீழ்க்காணும் அடிப்படைகளைக் கொண்டு வகைப்படுத்தலாம். அவை,
I. எலும்பு முறிவுப்பகுதியின் இருப்பிடம்
II. முறிவின் முழுமை
III. எலும்பு முறிவும் முறிந்த எலும்பின் நீள் அச்சும் அமைந்துள்ள விதம்
IV. முறிந்த எலும்பு தோலில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு.
முறிந்த எலும்புகள் குணமாதல் (Mechanism and Healing of a Bone fracture)
செல்களால் ஆன, வளர்ச்சித் திறன் கொண்ட உயிர்திசுக்களைக் கொண்ட அமைப்பே எலும்பாகும். தன்னைத்தானே பழுதுபார்த்துக்கொள்ளும் திறனையும் உடலின் அழுத்தத்திற்கேற்ப அமைப்பை சீரமைக்கும் திறனையும் எலும்புகள் பெற்றுள்ளன. எலும்பில் பொருட்கள் படிதல், பொருட்கள் மீள உறிஞ்சப்படுதல் ஆகிய இரண்டும் எலும்பின் மீள் வடிவாக்கத்திற்குக் காரணமாகும். எளிய எலும்பு முறிவில் முறிந்த எலும்பைச் சரிசெய்வதில் நான்கு நிலைகள் உள்ளன (படம் 9.13).
1. இரத்தக்கட்டி (Haematoma) ஏற்படுதல்
எலும்பு முறிதலின் போது எலும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள தசைகளில் உள்ள இரத்த நாளங்கள் உடைவதாலும் திசுக்கள் சிதைவடைவதாலும் இரத்தகசிவு உறைதல் ஏற்படுகின்றது. இதனால் இரத்த உறைவுக்கட்டி எலும்பு முறிந்த பகுதியைச் சுற்றி அமைகின்றது. இப்பகுதியில் உள்ள திசுக்கள் வலியுடன் வீங்குகின்றது. ஆக்ஸிஜன் கிடைக்காமையால் எலும்பு செல்கள் இறந்துவிடுகின்றன.
2. நார்க்குருத்தெலும்பு காலஸ் உருவாதல்
எலும்பு முறிந்த ஒரு சில நாட்களில் பல்வேறு செயல்கள் மூலம் மென்மையான துகள்கள் நிறைந்த காலஸ் திசு தோன்றுகின்றது. இரத்தக்கட்டியான ஹிமடோமாவினுள் இரத்த நுண் நாளங்கள் உருவாகின்றன. விழுங்கும் தன்மை கொண்ட ஃபேகோசைட் செல்கள் எலும்பு முறிவுப் பகுதியில் நுழைந்து அங்குள்ள கழிவுகளைச் சுத்தம் செய்கின்றன. அதேநேரத்தில் ஃபைப்ரோபிளாஸ்ட் (Fibroblasts) எனும் நார் உண்டாக்கும் செல்களும் ஆஸ்டியோபிளாஸ்ட் (Osteoblasts) எனும் எலும்புண்டாக்கும் செல்களும் அருகில் உள்ள பெரியாஸ்டியம் மற்றும் என்டாஸ்டியம் பகுதியில் இருந்து உள் நுழைந்து எலும்பின் மீள்கட்டமைப்பை தொடங்குகின்றன. நார் உண்டாக்கும் செல்கள் நார்த்திசுவையும் குருத்தெலும்பை உண்டாக்கும் செல்கள் (Chondroblasts) குருத்தெலும்பு மேட்ரிக்ஸையும் உருவாக்குகின்றன. சீரமைக்கப்படும் திசுவினுள் எலும்பு உண்டாக்கும் செல்கள் பஞ்சுபோன்ற எலும்பை உருவாக்கின்றன. பின்னர் இதில் குருத்தெலும்பு மேட்ரிக்ஸ் கால்சியத்தை நிரப்பி நார்க்குருத்தெலும்பு காலஸ் உருவாக வழி செய்கிறது.
3. எலும்பு காலஸ் (Bony callus) உருவாக்கம்
சில வாரங்களில், நார்க்குருத்தெலும்பு காலஸ் பகுதியில் புதிய எலும்பு நீட்சி தோன்றுகின்றது. படிப்படியாக அது பஞ்சுபோன்ற எலும்பு கடினமான எலும்பு காலஸாக உருவாகின்றது. எலும்புகாலஸ் இரு எலும்புப்பகுதிகளும் நன்கு இணையும் வரை தொடர்ந்து வளர்கிறது முழுமையாக இணைந்த எலும்பு உருவாக ஏறத்தாழ 2 மாதங்கள் முதல் ஓராண்டு வரை ஆகலாம்.
4. மறு வடிவமைத்தல் நிலை
எலும்பு காலஸ் உருவாக்கம் பல மாதங்கள் நீடிக்கின்றது. பின்னர் இது மறு வடிவமைத்தல் நிலையை அடைகின்றது. டையஃபைசிஸின் வெளிப்புறம் மற்றும் எலும்பின் மெடுலரி பகுதியில் உள்ள உபரிப் பொருட்கள் நீக்கப்பட்டு, இறுக்கப்பட்ட எலும்பின் கடினசுவர்கள் மீண்டும் கட்டப்படுகின்றன. இதன் மூலம் பழைய எலும்புத்தோற்றம் மீண்டும் மறுவடிவமைக்கப் படுகின்றது. மறுவடிவமைக்கப்பட்ட எலும்பானது முறியாத பழைய எலும்பு போன்ற தோற்றத்தை பெறுகிறது.
39. இயன் மருத்துவம் (ஃபிசியோதெரபி) என்றால் என்ன ?
இயன் மருத்துவம் (Physiotherapy)
செயலிழந்த கை, கால்களை உடற்பயிற்சி சிகிச்சை மூலம் இயல்பாகச் செயல்பட வைக்கும் முறையே இயன் மருத்துவம் ஆகும். மறுவாழ்வளிக்கும் தொழில் முறையான இந்தச் சிகிச்சை முறை, எல்லா உடல் நல மையங்களிலும் மேற்கொள்ளப் படுகிறது. பிஸியோதெரபிஸ்ட் எனப்படும் இயன் மருத்துவர்கள், சிகிச்சைக்கான பயிற்சிகளை அளிப்பர். தசைகள் வீணாதல் மூட்டுகள் விறைத்த நிலைக்குச் செல்லுதல் ஆகியன எலும்பு முறிவு சிகிச்சையின் இறுதியில் ஏற்படுகின்றன. இயன் மருத்துவ சிகிச்சை முறையான தொடர் உடற்பயிற்சி மூலம் மேலே குறிப்பிட்ட பிரச்சினைகளைச் சரிசெய்யலாம். மூட்டு வலி, ஸ்பான்டைலோசிஸ், தசை மற்றும் எலும்பு குறைபாடுகள் பக்கவாதம் மற்றும் தண்டுவடப் பாதிப்பு போன்றவற்றை இம்முறையில் தீர்க்கலாம் என நிரூபணம் ஆகியுள்ளது.
40. மூட்டுகள் நழுவுதல் பற்றி குறிப்பு எழுதுக.
மூட்டு நழுவுதல் என்பது மூட்டின் அசைவுப்பகுதி இணைவுப் பகுதியை விட்டு முழுமையாக இடம் பெயர்தல் ஆகும். இதில், எலும்புகளின் இயல்பான இணைவு அமைப்பு மாற்றப்படுகின்றது.
தாடை, தோள்பட்டை, விரல்கள், பெருவிரல் ஆகிய இடங்களில் உள்ள மூட்டுக்கள் எளிதில் நழுவக்கூடிய மூட்டுக்கள் ஆகும்.
மூட்டுநழுவுதலை கீழ்வரும் கீழ்வரும் முறையில் வகைப்படுத்தலாம், அவை
1. பிறவிக்குறைபாடு மூட்டு நழுவுதல்
2. விபத்து மூட்டு நழுவுதல்
3. நோய்நிலை மூட்டு நழுவுதல்
4. பக்கவாதத்தினால் ஏற்படும் மூட்டு நழுவுதல்.
1. பிறவிக் குறைபாட்டு மூட்டு நழுவுதல்: இவ்வகை மூட்டு நழுவுதல் மரபியல் காரணிகள் அல்லது வளர் கருவில் ஏற்படும் குறைபாட்டின் விளைவு ஆகும்.
2. விபத்து மூட்டு நழுவுதல்: தீவிரமான தாக்கத்தின் அல்லது அடிபடுவதன் விளைவாகத் தோள்பட்டை, இடுப்பு மற்றும் முழங்காலில் ஏற்படுவதாகும்.
3. நோய் நிலை மூட்டு நழுவுதல்: காச நோய் போன்ற நோய்களால் ஏற்படுகிறது. அதனால் இடுப்புபகுதி நழுவும்.
4. பக்கவாதத்தினால் மூட்டு நழுவுதல்: இது கால்கள் அல்லதுகைகளில் ஒருபகுதிதசைகளில் ஏற்படும் செயலிழப்பு பக்கவாதத்தை உண்டாக்குவதால் ஏற்படுகிறது.