Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | அச்சுச் சட்டகம் - (Axial Skeleton)
   Posted On :  09.01.2024 02:22 am

11 வது விலங்கியல் : பாடம் 9 : இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம்

அச்சுச் சட்டகம் - (Axial Skeleton)

இந்தச் சட்டகம் உடலின் முக்கிய அச்சை உருவாக்குகின்றது. மண்டையோடு, நாவடி (ஹயாய்டு) எலும்பு, முதுகெலும்புத் தொடர் மற்றும் மார்புக் கூடு ஆகியவை அச்சுச் சட்டக எலும்புகள் ஆகும்.

அச்சுச் சட்டகம் - (Axial Skeleton)

இந்தச் சட்டகம் உடலின் முக்கிய அச்சை உருவாக்குகின்றது. மண்டையோடு, நாவடி (ஹயாய்டு) எலும்பு, முதுகெலும்புத் தொடர் மற்றும் மார்புக் கூடு ஆகியவை அச்சுச் சட்டக எலும்புகள் ஆகும்.


) மண்டையோடு (Skull) 

மண்டையோட்டில் (படம் 9.5) உள்ள எலும்புகள் கபால எலும்புகள் மற்றும் முகத்தெலும்புகள் என இரு தொகுப்புகளாக அமைந்துள்ளன. மொத்தமாக உள்ள 22 எலும்புகளில் கபால எலும்புகள் 8ம் முகத்தெலும்புகள் 14ம் அடங்கும். கபால எலும்புகள் மூளைக்கு உறுதியான பாதுகாப்பு வெளியுறையை அளிப்பதால் இதற்கு மூளைப் பெட்டகம் (Brain Box) என்று பெயர். இதன் கொள்ளளவு சுமார் 1500 .செமீ. ஆகும். கபால எலும்புகள் தையல் போன்ற அமைப்பினால் அசையாமல் இணைக்கப்பட்டுள்ளன. கபால எலும்புகளில் ஓரிணை உச்சி எலும்பு (Parietal) ஓரிணை பொட்டெலும்பு (Temporal) ஆகியவையும், நுதலெலும்பு (Frontal), பிடரிஎலும்பு (Occipital), எத்மாய்டு (Ethmoid), மற்றும் ஆப்புருவ எலும்பு (Sphenoid) ஆகியன தனி எலும்புகளாகவும் உள்ளன.


பொட்டெலும்பில் உள்ள பெரிய துளை புறச்செவித் துளையாகும். முகத்தெலும்புகளில் மேல்தாடையெலும்பு (Maxilla), கன்னத்தின் வளையெலும்பு (Zygomatic), அண்ண எலும்பு (Palatine), கண்ணீர்ச்சுரப்பியண்மை எலும்பு (Lacrimal), மூக்கினிடை கீழ் காஞ்சா (Inferior nasal concha) மற்றும் மூக்கினிடைத் தட்டெலும்பு (Nasal) ஆகியவை இணை எலும்புகளாகவும் கீழ்த்தாடையெலும்பு (Mandible) மற்றும் இடைநாசி எலும்பு (Vomer) ஆகியன தனி எலும்புகளாகவும், உள்ளன இவையனைத்தும் இணைந்து. மண்டையோட்டின் முன்பகுதியை உருவாக்கு கின்றன. தொண்டைக் குழியின் அடிப்பகுதியில் U வடிவ ஒற்றை நாவடி (Hyoid) எலும்பு உள்ளது. ஒவ்வொரு நடுச்செவியிலும் சுத்தி வடிவ (Malleus) எலும்பு, பட்டடை (Incus) எலும்பு மற்றும் அங்கவடி (Stapes) எலும்பு ஆகிய 3 சிற்றெலும்புகள் உள்ளன. இவற்றிற்குச் செவிச்சிற்றெலும்புகள் என்று பெயர்.

மேல்தாடை, மேக்ஸில்லா என்னும் மேல்தாடை எலும்புகளாலும் கீழ்த்தாடை, மேன்டிபிள் என்னும் கீழ்த்தாடை எலும்புகளாலும் ஆனது. கபாலத்துடன் இணைந்த மேல்தாடை அசையும் தன்மையற்றது. அசையும் தன்மை கொண்ட கீழ்த்தாடையானது தசைகள் மூலம் கபாலத்துடன் இணைந்துள்ளது.

கண்குழிகள், நாசிப்பள்ளம் ஆகியவை மண்டையோட்டில் உள்ள முக்கியத் துளைகள் ஆகும். மண்டையோட்டு பெருந்துளை (Foramen Magnum) எனும் பெரிய துளை மண்டையோட்டின் பின்புறம் உள்ளது. இதன் வழியாகவே மூளையின் முகுளப்பகுதி தண்டுவடமாகக் கீழிறங்குகின்றது.


) முதுகெலும்புத் தொடர் (Vertebral Column)

33 முள்ளெலும்புகள் தொடர்ந்து வரிசையாக இணைக்கப்பட்டு உடலின் முதுகுப்புறத்தில் முதுகெலும்புத் தொடராக உள்ளது இம் முள்ளெலும்புகள் முள்ளெலும்பு இடைத் தட்டுகள் (Inter vertebral discs) என்னும் குருத்தெலும்புகளால் இணைக்கப்பட்டுள்ளன (படம் 9.6). மண்டையோட்டின் அடிப்பகுதியில் தொடங்கும் இத்தொடர் இடுப்புப் பகுதிவரை நீண்டு நடுவுடல் பகுதிக்குக் கட்டமைப்பை அளிக்கின்றது. முதுகெலும்புத் தொடரிலுள்ள எலும்புகள் ஐந்து பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை கழுத்து முள்ளெலும்புகள் (Cervical - 7), மார்பு முள்ளெலும்புகள் (Thoracic - 12), இடுப்பு முள்ளெலும்புகள் (Lumbar - 5) மற்றும் திருவெலும்புப்பகுதி முள்ளெலும்புகள் (Sacral – 5), (கைக்குழந்தைகளில் 5 எலும்புகளாக இருந்த திருவெலும்புப்பகுதி பெரியவர்களில் ஒரே எலும்பாக இணைந்துள்ளன.) மற்றும் வால் எலும்பு (Coccyx 1) ஆகியன. (குழந்தைகளில் இருந்த, 4 வால் முள்ளெலும்புகள் பெரியவர்களில் ஒன்றிணைந்து ஒற்றை வால் எலும்பாக மாறியுள்ளன).


ஒவ்வொரு முள்ளெலும்பின் மையத்திலும் உள்ளீடற்ற பகுதி உள்ளது. இதற்கு நரம்புக்கால்வாய் என்று பெயர். இதன் வழியாகவே தண்டுவடம் செல்கின்றது. முதல் முள்ளெலும்பு அட்லஸ் (Atlas) என்றும் இரண்டாவது முள்ளெலும்பு அச்சு முள்ளெலும்பு (Axis) என்றும் அழைக்கப்படுகின்றன. முதல் முள்ளெலும்பு, பிடரிஎலும்பில் காணப்படும் முண்டுப்பகுதியோடு (Occcipital condyles) அசையும் வகையில் இணைந்துள்ளது.

தண்டுவடத்தைப் பாதுகாப்பது, தலையைத் தாங்குவது, விலா எலும்புகள் இணையும் புள்ளியாகச் செயல்படுவது, மற்றும் பின்பக்கத் தசைகளை இணைப்பது ஆகியன முதுகெலும்புத் தொடரின் பணிகளாகும்.


) மார்பெலும்பு (Sternum)

தட்டையான மார்பெலும்பு வயிற்றுப்புறத்தில் மார்புக்கூட்டின் மையப் பகுதியில் உள்ளது. இது விலா எலும்புகள் மற்றும் வயிற்றுப்புறத் தசைகள் இணைவதற்கு இடமளிக்கின்றது.


) விலா எலும்புக்கூடு (Rib Cage)

12 இணை விலா எலும்புகள் உள்ளன. மெல்லிய தட்டையான (படம் 9.7) ஒவ்வொரு விலா எலும்பும் முதுகுப்புறத்தில் முதுகெலும்புத் தொடருடனும் வயிற்றுப்புறத்தில் மார்பெலும்புடனும் இணைந்துள்ளது. இவற்றின் முதுகுப்புறத்தில் இரு அசையும் இணைவுப் பகுதிகள் உள்ளதால் இவை இருதலைக் கொண்டன (Bicephalic) எனப்படுகின்றன. முதல் 7 இணை விலா எலும்புகள் உண்மை விலா எலும்புகள் (Vertebro- sternal ribs) அல்லது முள்ளெலும்புகள் விலா எலும்புகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை முதுகுப்புறத்தில் முதுகெலும்புத் தொடரின் மார்பு முள்ளெலும்புகளுடனும் வயிற்றுப்பகுதியில் மார்பெலும்புடனும் ஹையலின் குருத்தெலும்பால் இணைக்கப் பட்டுள்ளன. 8, 9, 10 ஆவது இணை விலா எலும்புகள் நேரடியாக மார்பெலும்புடன் இணையாமல் 7ஆவது விலா எலும்பின் ஹையலின் குருத்தெலும்பு பகுதியோடு இணைந்துள்ளது. இதற்குப் போலி விலா எலும்புகள் (Vertebro-chondral ribs) என்று பெயர். கடைசி இரு இணைகள் (11 மற்றும் 12 ஆவது இணை) வயிற்றுப் பகுதியில் மார்பெலும்புடன் இணையாமல் இருப்பதால் இவற்றிற்கு மிதக்கும் விலா எலும்புகள் (Vertebral ribs) என்றும் பெயர். மார்பு முள்ளெலும்புகள், விலா எலும்புகள் மற்றும் மார்பெலும்பு ஆகியவற்றால் விலா எலும்புக்கூடு உருவாகியுள்ளது. நுரையீரல், இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகளைப் பாதுகாப்பதுடன் சுவாசத்திலும் எலும்புக்கூடு பங்கேற்கின்றது.


11th Zoology : Chapter 9 : Locomotion and Movement : The Axial skeleton in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 9 : இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் : அச்சுச் சட்டகம் - (Axial Skeleton) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 9 : இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம்