Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | உயிரின உலகின் பல்வகைத் தன்மை (Diversity in the Living World)
   Posted On :  05.01.2024 09:43 am

11 வது விலங்கியல் : பாடம் 1 : உயிருலகம்

உயிரின உலகின் பல்வகைத் தன்மை (Diversity in the Living World)

உலகிலுள்ள அத்தனை உயிரினங்களும் கூட்டாகச் சேர்ந்து வாழ்கின்றன. இதில் ஏறக்குறைய 8.7 மில்லியன் யூகேரியோட்டிக் சிற்றின உயிரினங்கள் இப்புவியில் பரவியுள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

அலகு – I

பாடம் - 1

உயிருலகம்



பாட உள்ளடக்கம்

1.1 உயிரின உலகின் பல்வகைத் தன்மை

1.2 வகைப்பாட்டின் தேவை

1.3 வகைப்பாட்டியல் மற்றும் தொகுப்பமைவியல்

1.4 மூன்று பேருலக வகைப்பாடு 

1.5 வகைப்பாட்டு படிநிலைகள் 

1.6 பெயரிடும் முறைகள்

1.7 சிற்றினக் கோட்பாடு

1.8 வகைப்பாட்டுக் கல்விக்கான கருவிகள்


"ஒட்டுமொத்த இயற்கையையும், அதன் அழகையும் மற்றும் அனைத்து உயிரிகளையும் அரவணைப்பதே நம் பெரும் கடமையாகும்

- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்



கற்றலின் நோக்கம்:

உயிரினப் பல்வகைத் தன்மையின் முக்கியத்துவத்தினைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.

வகைப்பாட்டின் தேவையைப் புரிந்து கொள்ளுதல்

விலங்குகளை வகைப்படுத்துவதற்காக வகைப்பாட்டியலின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளச் செய்தல் மற்றும் இனத்தொடர்பு தொகுப்பமைப்பியல் சார்ந்த ஆர்வத்தினை உருவாக்குதல்.

பெயரிடு முறையின் அடிப்படை விதிகளையும் அதன் பயன்களையும் அறிந்து கொள்ளச்செய்தல்.


உலகிலுள்ள அத்தனை உயிரினங்களும் கூட்டாகச் சேர்ந்து வாழ்கின்றன. இதில் ஏறக்குறைய 8.7 மில்லியன் யூகேரியோட்டிக் சிற்றின உயிரினங்கள் இப்புவியில் பரவியுள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. நிலவாழ் உயிரினங்களில் 86 சதவீதமும் கடல் வாழ்வனவற்றில் 91 சதவீதமும் இன்னும் கண்டுபிடித்து விளக்கப்பட்டு, பட்டியல்படுத்தப்பட வேண்டியுள்ளது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. மனிதன் மற்ற உயிரினங்களை விட மேம்பட்ட நிலையில் இருந்தாலும் உணவுத் தேவைக்காகத் தாவரங்களையும், விலங்குகளையும், சார்ந்தே வாழவேண்டி உள்ளது. விவசாய வேலைக்காகவும், தோழமைக்காவும் மற்றும் பிற பொருளாதாரப் பயன்களுக்காகவும் மனிதன் விலங்குகளைப் பயன்படுத்துகிறான். எனவே விலங்குகளைப் புரிந்து கொள்வதும் அவற்றின் தனித்தன்மைகள், வாழிடம், நடத்தை முறைகள் மற்றும் அவற்றின் பரிணாமத் தொடர்புகளைப் பற்றி அறிந்து கொள்வதும் மிகவும் அவசியமானதாகும். உயிரினங்களின் பல்லுயிர்தன்மை, வகைப்பாட்டின் தேவை, வகைப்பாட்டின் வகைகள், வகைப்பாட்டியலின் படிநிலைகள், பெயரிடும் முறைகள் மற்றும் வகைப்பாட்டிற்கு உதவும் சாதனங்கள் போன்றவற்றை இப்பாடம் விளக்குகிறது.


உயிரின உலகின் பல்வகைத் தன்மை (Diversity in the Living World)

பல்வேறு வகைப்பட்ட உயிரினங்கள் வாழ்வதற்காக எண்ணற்ற வாழ்விடங்களை இப்புவி கொண்டுள்ளது. துருவப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் முதல் வெப்ப நீர் ஊற்றுகள் வரை, ஆழம் குறைந்த கடற்பரப்பு முதல் ஆழ்கடல் வரை, அதிக மழைப்பொழிவு கொண்ட வெப்ப மண்டலக் காடுகள் முதல் வறண்ட பாலைவனம் வரையுள்ள அனைத்துப் பகுதிகளிலும் தாவரங்களும், விலங்குகளும் வாழ்கின்றன. இவ்வகையான பல்வேறுபட்ட சூழ்நிலை மண்டலங்களில் வெற்றிகரமாக வாழ்வதற்கேற்ப சிற்றினங்கள் பல்வேறுபட்ட தகவமைப்புகளைப் பெற்றுள்ளன.

சூழ்நிலை மண்டலம் (Ecosystem) எனப்படுவது தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்ற உயிர்க்காரணிகளுக்கும் தாது உப்புக்கள், தட்பவெப்ப நிலை, மண், நீர் மற்றும் சூரிய ஒளி போன்ற உயிரற்ற காரணிகளுக்கும், இடையேயுள்ள தொடர்புகளைக் குறிப்பதாகும். பல்வேறு வகைப்பட்ட சிற்றினங்கள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை மண்டலத்தில் வாழ்வதே பல்லுயிர்தன்மை (Biodiversity) எனப்படுகிறது. பல்லுயிர்தன்மை என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் வால்டர் ரோசன் (Walter Rosen, 1985) என்பவர் ஆவார். இச்சொல் E.D. வில்சன் என்பவரால் வரையறுக்கப்பட்டது.


உயிரிகளின் பண்புகள்

உயிரினங்கள் பல்வேறு வகைப்பட்ட தனிப்பண்புகளால் உயிரற்றவைகளிலிருந்து வேறுபடுகின்றன. செல்களாலான உடலமைப்பு, உணவூட்டம், சுவாசம், வளர்சிதை மாற்றம், வளர்ச்சி, உணர்வுகளுக்கு ஏற்ப வினைபுரிதல், இடப்பெயர்ச்சி, இனப்பெருக்கம், கழிவுநீக்கம், தகவமைதல் மற்றும் உடல் சமநிலைப்பேணுதல் (Homeostasis) போன்றவை உயிரிகளின் முக்கிய பண்புகளாகும். உயிரினங்களில் காணப்படும் நுண்ணிய பண்புகளைக்கூடக் கண்டறிந்து அவற்றை ஆவணப்படுத்தியதில் எண்ணற்ற அறிவியலாளர்கள் மற்றும் வகைபாட்டியலாளர்களுக்கு சீரிய பங்குண்டு. உயிரினங்களை வகைப்படுத்தவும்அவற்றிற்கிடையே உள்ள தொடர்பினை அறியவும் அவர்களின் கூர்ந்தாய்வே பெரிதும் உதவுகிறது.


11th Zoology : Chapter 1 : The Living World : Diversity in the Living World in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 1 : உயிருலகம் : உயிரின உலகின் பல்வகைத் தன்மை (Diversity in the Living World) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 1 : உயிருலகம்