விலங்கியல் - பாடச் சுருக்கம் - உயிருலகம் | 11th Zoology : Chapter 1 : The Living World
பாடச் சுருக்கம்
பூமியின் பல்வகையான வாழிடங்களில் பல்வேறுபட்ட உயிரிகள் வாழ்கின்றன. உயிரற்ற பொருட்களிலிருந்து வேறுபடுகின்ற பல்வேறு சிறப்பு பண்புகளை உயிரிகள் பெற்றுள்ளன. எளிதில் அடையாளம் கண்டு, உணரக்கூடிய பண்புகளின் ஒற்றுமைகளைக் கொண்டு, உயிரினங்களைக் குழுக்களாக வகைப்படுத்துவதே வகைப்பாடு ஆகும். உயிரினங்களை அறிவியல் ரீதியாக முறையாக வரிசைப்படுத்துவதே வகைப்பாட்டியல் ஆகும். ஐந்துலக வகைப்பாட்டை R.H விட்டேகர் முன்மொழிந்தார். கார்ல் வோயீஸ் மற்றும் அவரது குழுவினர் மூன்று பேருலகக் கோட்பாட்டை உருவாக்கினர். உலகம், தொகுதி, வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம் மற்றும் சிற்றினம் ஆகிய ஏழு வகைகள் வகைப்பாட்டியலின் படிநிலைகள் ஆகும். விலங்கினத்திற்கு அல்லது வகைப்பாட்டியல் குழுவிற்கு அறிவியல் பெயரிடும் செயலே 'பெயரிடுதல்' ஆகும். ஒவ்வொரு அறிவியல் பெயரும், பேரினப் பெயர், சிற்றினப் பெயர் என இருபெயர் கூறுகளைக் கொண்டதாகும். நேரடி களப்பணி, ஆய்வு, அடையாளம் காணல், வகைப்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல் ஆகியவை முக்கியமான வகைப்பாட்டியலுக்கான கருவிகளாகும். அதிகத் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மைக்காக மூலக்கூறு தொழில் நுட்பங்களும் வகைப்பாட்டியல் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
செயல்பாடு:
இச்செயல் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் பாடங்களைப் படிப்பதற்கு முன் கொடுக்கப்பட்டுள்ள படங்களை நன்கு உற்றுநோக்கி அவற்றின் பண்பு நலன்களை அறிந்து கொண்டதன் அடிப்படையில் ஒவ்வொரு விலங்கும் எந்த வகுப்பைச் சேர்ந்தது என்று வரிசைப்படுத்த வேண்டும். விலங்குகளின் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு பண்பினைக் குறிப்பிடவேண்டும்.
மாணவர்களைப் பள்ளி விளையாட்டுத் திடலுக்கு அழைத்துச்சென்று மைதானத்தில் காணக்கூடிய முதுகுநாணற்ற உயிரினங்களை இனம் கண்டு அவற்றின் முக்கியப் பண்புகளை வரிசை படுத்தச் செய்ய வேண்டும்.
இணையச்செயல்பாடு
Deep Tree
பரிணாம வளர்ச்சிப் பாதையை அறிந்து கொள்வோமா!
படிகள்
1. கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக்குறியீட்டைப் பயன்படுத்தி, "Play Game" என்ற பொத்தானைச் சொடுக்கிய பின் சொந்த அல்லது பள்ளி "id" ல் உள்நுழையவும். அப்படியில்லை எனில் "Guest Pass" என்னும் பொத்தானைப் பயன்படுத்தி உள்நுழையவும். பிறகு DEEP TREE என்று எழுதப்பட்டிருப்பதைச் சுட்டியின் உதவியால் சொடுக்கிப் பரிணாம வளர்ச்சி செயல்பாட்டினை ஆரம்பிக்கவும்.
2. தேடுதிரையில் ஒரு விலங்கின் பொதுப்பெயரை "SEARCH" ல் உள்ளிட்டவுடன் தோன்றும் அட்டவணையில் பொருத்தமான பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
3. குறிப்பிட்ட சிற்றினத்தின் வகைப்பாட்டினையும் விலங்குலகத்தின் படிநிலையையும் அறிந்து கொள்ளவும்.
4. இரண்டு இனங்களை ஒப்பீடு செய்ய திரையின் அடிப்பகுதியில் இருக்கும் RELATE என்பதைச் சொடுக்கவும். அதே போல் இரண்டு இனங்களின் உறவினைப் பற்றி தெரிந்து கொள்ள DNA என்பதைச் சொடுக்கவும்.
DEEP TREE உரலி
http://www.pbs.org/wgbh/nova/labs/lab/evolution/