வரலாறு - பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை | 11th History : Chapter 1 : Early India: From the Beginnings to the Indus Civilisation
பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை
கற்றல் நோக்கங்கள்
• இந்தியாவின் கற்கால மனிதர்கள் குறித்துப் படிப்பது
• பழங்கற்கால, இடைக்கற்கால இந்தியச் சமூகங்களைப் புரிதல்
• புதிய கற்காலப் புரட்சியின் முக்கியத்துவத்தைக் கற்றல்
• சிந்து நாகரிகத்தின் சிறப்பியல்புகளை அறிதல்
அறிமுகம்
இந்தியா ஒரு தொன்மை வாய்ந்த நாகரிகங்களும் பண்பாடுகளும் கொண்ட வளர்ச்சி பெற்ற நாடாகும். பழங்கற்காலம் முதலாக இந்தியாவில் பல குழுக்களைச் சேர்ந்த மக்கள் பலமுறை குடிபெயர்ந்து பல்வகைப்பட்ட சூழல்களுக்கு ஏற்றவாறு தங்கள் பண்பாடுகளைத் தகவமைத்துக் கொண்டனர். இதன் விளைவாகப் பன்மைத் தன்மை கொண்ட நம்பிக்கைகளும் வாழ்க்கை முறைகளும் தோன்றின. உணவு சேகரித்தல் எனும் நிலையிலிருந்து கால்நடை மேய்ச்சல் வாழ்க்கை முறைக்குச் சமூகம் நகர்ந்தது, சிந்து வெளியில்குடியேறிய மக்கள் செம்புக்காலத்தில் பெரும் பக்குவமடைந்து ஒரு முதிர்ச்சியடைந்த வாழ்க்கை நிலையை அடைந்தனர்.
இப்பாடம் கற்காலத்தில் மனிதர்கள் முதன் முதலாகக் குடியமர்ந்ததில் தொடங்கி, சிந்து நாகரிகத்தின் வீழ்ச்சி வரையிலான இந்திய வரலாற்றின் மீது முழுக் கவனம் செலுத்துகிறது. புதிய கற்காலப் பண்பாட்டையும் விளக்குகிறது.
சான்றுகள்
இந்திய வரலாற்றில் கற்கால வாழ்க்கை முதல் சிந்து நாகரிகம் வரையிலான நெடுங்காலத்தைப் புரிந்துகொள்ள தொல்லியல் சான்றுகளே பெரிதும் உதவுகின்றன. தொல்லியல் ஆய்விடங்கள், நிலவியல் அடுக்குகள், விலங்குகளின் எலும்புகள், படிமங்கள், கற்கருவிகள், எலும்புக்கருவிகள், பாறை ஓவியங்கள், கைவினைப் பொருள்கள் ஆகியவை இச்சான்றுகளாகும். எழுத்துவடிவச் சான்றுகள் இக்காலத்துக்கு இல்லை. ஹரப்பா மக்கள் ஓர் எழுத்துமுறையைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அதன் பொருளை இன்றளவும் அறிய முடியவில்லை.
கற்கால மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உறவைப் புரிந்துகொள்ள விலங்கு (fauna), தாவரங்கள் (flora) வடிவிலான சான்றுகள் இன்றியமையாதவை. கருகிய விதைகள், மகரந்தங்கள், கல்லாகிப்போன தாவரங்கள் (பைட்டோலித்) ஆகிய தாவரச் சான்றுகள் கற்கால மக்கள் மேற்கொண்ட வேளாண்மை சார்ந்த அறிவைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
வரலாற்றுக் காலத்துக்கு முன்பு நடைபெற்ற மனித இடப்பெயர்ச்சிகள் குறித்து அறிந்துகொள்ள அவர்களுடைய மரபணுக்களும் முக்கியமான சான்றுகளாகும். மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ. (மரபணு) ஆய்வுகள் கற்கால மனிதர்களின் இடப்பெயர்ச்சிகள் குறித்த தகவல்களை வழங்குகின்றன. வரலாற்றுக்கு முந்தைய கால எலும்பிலிருந்து டி.என்.ஏ-வைப் பிரித்தெடுத்து, மனிதக்கூட்டம் பல்வேறு பகுதிகளுக்குப் பரவியது குறித்துப் புரிந்துகொள்ள அறிவியலாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.
மற்றுமொரு முக்கியமான வரலாற்றுச் சான்று மொழி ஆகும். இந்தோ - ஆரிய, திராவிட, ஆஸ்ட்ரோ - ஆசியாட்டிக், திபெத்தோ - பர்மன் ஆகிய மொழிக்குடும்பங்கள் இந்தியாவில் செழித்து வளர்ந்தன. இந்திய வரலாற்றில் நடைபெற்ற மனித இடப்பெயர்ச்சிகளின் பல்வேறு கட்டங்களில் இம்மொழிகள் தோன்றி வளர்ந்தன.