வரலாறு - வரலாற்றுக்காலத்தைச் சேர்ந்த வேட்டையாடிகள் - சேகரிப்பாளர்கள் | 11th History : Chapter 1 : Early India: From the Beginnings to the Indus Civilisation
வரலாற்றுக்காலத்தைச் சேர்ந்த வேட்டையாடிகள் - சேகரிப்பாளர்கள்
நுண்கற்கருவிகளால் வேட்டையாடியும் உணவைச்
சேகரித்தும் வாழ்ந்த மனிதர்கள் பிற்காலத்திலும், அதாவது புதிய கற்காலம், இரும்புக்காலம்,
வரலாற்றுக் காலத்தின் வளர்ச்சிக்குப் பிறகும் கூட அப்படியே தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள்.
நகரங்களில் வாழ்ந்த மக்கள் அதிக செல்வத்தை ஈட்டிய போது, இம்மக்கள் விளிம்புநிலைச் சமூகங்களின்
ஒரு பகுதியாக ஆகியிருக்கலாம். இன்றைக்கும் தொலைதூரங்களில் உள்ள காடுகளில் வசிக்கும்
மக்களையும் அந்தமான் போன்ற பகுதிகளில் வசிப்பவர்களையும் வேட்டையாடுதல் - சேகரித்தல்
வாழ்க்கைமுறையைத் தேர்வு செய்த அத்தகைய சமூகத்தினராகவே நாம் கருதலாம். 19ஆம் நூற்றாண்டிலும்
20ஆம் நூற்றாண்டிலும் அத்தகைய பல குழுக்கள் வாழ்ந்ததாக எட்கர் தர்ஸ்டன் எழுதிய தென்னிந்தியாவின்
சாதிகளும் பழங்குடிகளும் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை நாகரிக முதிர்ச்சியற்றவர்களாகக்
கருதுவது தவறு. மாறாக, வேட்டையாடுதல் – உணவைச் சேகரித்தல் என்னும் வாழ்க்கைமுறையைத்
தேர்வு செய்தவர்களாகவே அவர்களை நாம் கருத வேண்டும். சிந்து நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது
தமிழ்நாட்டில் நுண்கற்கருவிகளைப் பயன்படுத்தும் வேட்டையாடி- சேகரிப்பாளர்கள் வாழ்ந்தார்கள்.
புதிய கற்காலத்தில் வேளாண்மை செய்வதும் கால்நடைகளை மேய்ப்பதுமாக இருந்த மக்கள் ஆந்திரா-
கர்நாடகா பகுதியில் வசித்தார்கள்.
இடைக்கற்காலப்
பண்பாட்டின் சிறப்பியல்புகள்
• இடைக்கற்கால மக்கள் ஓரளவு நிரந்தர மற்றும்
தற்காலிகக் குடியிருப்புகளில் வசித்தனர்.
•
குகைகளிலும் திறந்த வெளிகளிலும் வசித்தார்கள்.
•
இறந்தோரைப் புதைத்தார்கள்.
•
அவர்களுக்குக் கலைத்திறன் இருந்திருக்கிறது.
•
விரிவான புவியியல் பகுதிகளில் அவர்கள்
பரவியிருந்தனர்.
•
இக்காலகட்டத்திலிருந்து இந்தியாவின்
பல பகுதிகளில் பண்பாட்டுத் தொடர்ச்சியைக் காண முடிகிறது.
•
அவர்களின் நுண்கற்கருவிகள் சிறிய விலங்குகளையும்
பறவைகளையும் வேட்டையாட உதவின.