வரலாறு - சிந்து நாகரிகம் | 11th History : Chapter 1 : Early India: From the Beginnings to the Indus Civilisation
சிந்து நாகரிகம்
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த இடைக்கற்காலம், புதிய கற்காலம் உள்ளிட்ட பல பண்பாடுகள் இந்தியாவின் மற்ற பகுதிகளில் நிலவின.
பெயரிடு முறையும் படிநிலைகளும் காலவரிசையும்
இந்தியாவின் வடமேற்குப்பகுதியிலும் பாகிஸ்தானிலும் பொ.ஆ.மு. 3000 கால அளவில் தோன்றிய நாகரிகங்களும் பண்பாடுகளும் மொத்தமாகச் சிந்து நாகரிகம் எனப்படும். இந்நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதல் இடம் ஹரப்பா என்பதால், இது ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. ஹரப்பா நாகரிகம் திடீரென்று ஒரே நாளில் தோன்றிவிடவில்லை . இப்பகுதியில் புதிய கற்காலக் கிராமங்களின் தொடக்கம் நடைபெற்றது ஏறத்தாழ பொ.ஆ.மு. 7000 (புதிய கற்காலப் பகுதியான மெஹர்காரின் காலத்தைப் போல) எனக் கணிக்கப்படுகிறது. ஹரப்பா நாகரிகம் பல்வேறு கட்டங்களாகப் (படிநிலைகள்) பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
தொடக்க கால ஹரப்பா பொ.ஆ.மு. 3000-2600
முதிர்ச்சி அடைந்த ஹரப்பா பொ.ஆ.மு. 2600-1900
பிற்கால ஹரப்பா பொ.ஆ.மு. 1900-1700
ஒரு நகரப் பண்பாட்டிற்கான கூறுகள் முதிர்ச்சி பெற்ற ஹரப்பாவின் காலத்தில் இருந்தது. அதற்குப்பின் அது வீழ்ச்சி அடைந்தது.
ஹரப்பாவுக்கு முதன்முதலில் பொ.ஆ. (கி.பி) 1826இல் வருகை தந்தவர் சார்லஸ் மேசன். 1831இல் அம்ரி என்னும் ஹரப்பா பண்பாட்டோடு தொடர்புடைய இடத்திற்கு அலெக்ஸாண்டர் பர்ன்ஸ் வருகை தந்தார். லாகூரிலிருந்து முல்தானுக்கு ரயில் பாதை அமைப்பதற்காக ஹரப்பா அழிக்கப்பட்டது. இப்பகுதியிலிருந்து ஒரு முத்திரை இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் முதல் அளவையரான அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாமுக்குக் கிடைத்தது. 1853இலும் 1856இலும் 1875 இலும் அவர் ஹரப்பாவைப் பார்வையிட்டார். ஆனால் ஹரப்பாவின் முக்கியத்துவத்தையும் அதன் நாகரிகத்தையும் உணர்ந்து, அங்கு ஆய்வு நடத்தக் காரணமாக இருந்தவர் சர் ஜான் மார்ஷல் ஆவார். இவர் இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குனராகப் பொறுப்பேற்ற நிகழ்வு, இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனை எனலாம். இவரது முயற்சிகள் மூலம் ஹரப்பாவில் ஆய்வுகள் தொடங்கப்பட்டன.
பிற்காலத்தில் 1940களில் ஆர். இ.எம். வீலர் ஹரப்பாவில் அகழாய்வுகள் நடத்தினார். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, ஹரப்பா நாகரிகப் பகுதியில் பெரும்பாலான இடங்கள் பாகிஸ்தானுக்கு உரியதாகிவிட்டன. எனவே ஆய்வாளர்கள் இந்தியாவில் உள்ள ஹரப்பா நாகரிகப்பகுதிகளைக் கண்டறிய ஆவல் கொண்டனர். ஹரப்பா நாகரிகத்துடன் தொடர்புடைய காலிபங்கன், லோத்தல், ராக்கிகார்ஹி, டோலாவீரா ஆகியவை இத்தகைய முயற்சிகளால் அகழாய்வுக்கு உட்பட்டன. 1950களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப்பயணங்களும் அகழாய்வுகளும் ஹரப்பா நாகரிகத்தையும் அதன் இயல்பையும் புரிந்து கொள்ள உதவின.
புவியியல் அமைவிடமும் குடியிருப்புகளும்
சிந்து நாகரிகமும் அதன் சமகாலப் பண்பாடுகளும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலுமாக மொத்தம் 1.5 மில்லியன் சதுரகிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளன. மேற்கில் பாகிஸ்தான் - ஈரான் எல்லையில் அமைந்துள்ள சட்காஜென்டர் குடியிருப்புகள், வடக்கில் ஷார்ட்டுகை (ஆப்கானிஸ்தான்), கிழக்கில் ஆலம்கிர்புர் (உத்தரப்பிரதேசம்), தெற்கில் தைமாபாத் (மகாராஷ்டிரம்) எனச் சிந்து நாகரிகப்பகுதியின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இதன் மையப்பகுதிகள் பாகிஸ்தானிலும் இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் உள்ளன.
தொடக்கம்
உலகில் வேளாண்மையும் விலங்கு வளர்ப்பும் மிக முன்பே தொடங்கிவிட்ட பகுதிகளில் சிந்து பகுதியும் (மெஹர்கார்) ஒன்று. சிந்து பகுதியின் புதிய கற்காலப் பண்பாடுகளுக்கும் பிற்காலத்து நகர நாகரிகத்துக்கும் தொடர்ச்சி உள்ளதா எனத் தெரியவில்லை . ஹரப்பா நாகரிகத்தின் தொடக்க நிலையில் அப்பகுதி முழுவதும் கிராமங்களும் ஊர்களும் வளர்ச்சி பெற்றன. முதிர்ந்த ஹரப்பா பண்பாட்டுக் கட்டத்தில் நகர மையங்கள் தோன்றின.
திட்டமிடப்பட்ட நகரங்கள்
ஹரப்பா (பஞ்சாப், பாகிஸ்தான்),மொகஞ்சதாரோ (சிந்து, பாகிஸ்தான்), டோலவிரா, லோத்தல், சுர்கோட்டடா (குஜராத், இந்தியா), காலிபங்கன் (ராஜஸ்தான், இந்தியா), பனவாலி, ராக்கிகார்ஹி (ஹரியானா, இந்தியா), சர்கோட்டடா (குஜராத், இந்தியா) ஆகியவை ஹரப்பா கால முக்கிய நகரங்களாகும். அரண்களால் பாதுகாக்கப்படும் தன்மை, நன்கு திட்டமிடப்பட்ட தெருக்கள், சந்துகள், கழிவுநீர் வசதி ஆகியவை ஹரப்பா நகரங்களின் குறிப்பிடத்தக்க கூறுகள். தகுந்த குடிமை அதிகாரிகளின் கீழ் இத்தகைய திட்டமிடல் நிகழ்ந்திருக்கக்கூடும். ஹரப்பா மக்கள் கட்டுமானத்துக்குச் சுட்ட, சுடாத செங்கற்களையும் கற்களையும் பயன்படுத்தினர். நகரங்கள் சட்டக் வடிமைப்பைக் கொண்டிருந்தன. கழிவுநீர் வடிகால்கள் திட்டவட்டமான ஒழுங்குடன் கட்டப்பட்டன. வீடுகள் சேற்று மண்ணாலான செங்கற்களாலும் கழிவுநீர் வடிகால்கள் சுட்ட செங்கற்களாலும் கட்டப்பட்டன. வீடுகள் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைக் கொண்டிருந்தன.
மொகஞ்சதாரோ ஓர் உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரம். அது கோட்டைப்பகுதியாகவும் தாழ்வான நகரமாகவும் இரு வேறுபட்ட பகுதிகளைக் கொண்டிருந்தது. வீடுகளில் சுட்ட செங்கற்களால் தளம் அமைக்கப்பட்ட குளியலறையும் சரியான கழிவுநீர் வடிகாலும் இருந்தன. மேல்தளம் இருந்ததை உணர்த்தும் வகையில் சில வீடுகள் படிக்கட்டுகளைக் கொண்டுள்ளன. வீடுகளில் பல அறைகள் இருந்தன. பல வீடுகளில் சுற்றிலும் அறைகளுடன் கூடிய முற்றம் அமைந்திருந்தது.
நகரத்தின் கோட்டைப்பகுதி முக்கியத்துவம் வாய்ந்த இருப்பிடத்துக்கான அமைப்புகளுடன் காணப்படுகிறது. இதைப் பொதுமக்களோ, மக்களில் குறிப்பிட்ட சிலரோ பயன்படுத்தியிருக்கலாம். மொகஞ்சதாரோவில் உள்ள ஒரு கட்டிடம் சேமிப்புக்கிடங்காக அடையாளம் காணப்படுகிறது.
பெரும் குளம் (The Great Bath) என்பது முற்றத்துடன் கூடிய ஒரு பெரிய குளமாகும். குளத்தின் நான்கு பக்கங்களிலும் உள்ள நடைபாதை வடக்குப்பக்கத்திலும் தெற்குப்பக்கத்திலும் படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது. நடைபாதையின் அருகே பல அறைகளும் உண்டு. சில கட்டுமான அமைப்புகள் தானியக்கிடங்குகளாக அடையாளம் காணப்படுகின்றன. அதன் சுவர்கள் ஜிப்சம் செறிந்த சுண்ணச்சாந்தால் பூசப்பட்டு, நீர் புகாதபடி இருக்கின்றன. அக்கட்டுமானத்தில் கழிவுநீர் வடிகால் வசதி இருந்தது. பெருங்குளம் சடங்குகளுடன் தொடர்புடைய நீராடல் நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
வாழ்வாதாரமும் பொருளாதார உற்பத்தியும்
ஹரப்பா மக்கள் நிலையாக வாழ்வதற்கு வேளாண்மை முக்கிய ஆதாரமாக விளங்கியது. கோதுமை, பார்லி, அவரை வகைகள், கொண்டைக்கடலை, எள், வெவ்வேறு தினை வகைகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களைப் பயிரிட்டார்கள். வேளாண்மையில் கிடைத்த உபரி வருவாய் முக்கியமான பல செயல்பாடுகளுக்கு ஆதாரமாக விளங்கியது. ஹரப்பா மக்கள் இரட்டைப்பயிரிடல் முறையைப் பின்பற்றினார்கள்.
ஹரப்பா மக்கள் உழவுக்குக் கலப்பையைப் பயன்படுத்தினார்கள். நிலத்தை உழுது, விதைக்கும் வழக்கத்தை அவர்கள் கொண்டிருந்திருக்கலாம். உழுத நிலங்களைக் காலிபங்கனில் காணமுடிகிறது. அவர்கள் பாசனத்துக்குக் கால்வாய்களையும் கிணறுகளையும் பயன்படுத்தினார்கள்.
தொல்தாவரவியலாளர்கள் (Archaeobotanist) பழமையான வேளாண்மையையும் மனிதருக்கும் - சுற்றுச்சூழலுக்கும் இடையேயான உறவையும் குறித்து ஆய்வு செய்கிறார்கள்.
விலங்குகளைப் பழக்கப்படுத்துதல்
ஹரப்பாவில் மேய்ச்சலும் ஒரு முக்கியமான தொழிலாக இருந்தது. செம்மறியாடு, வெள்ளாடு, கோழி உள்ளிட்ட பறவைகளை வளர்த்தார்கள். எருமை, பன்றி, யானை போன்ற விலங்குகள் குறித்த அறிவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் ஹரப்பா பண்பாட்டில் குதிரை இல்லை. ஹரப்பாவில் மாடுகள் செபு எனப்பட்டன. பெரிய உடலமைப்பைக் கொண்ட இவ்வகை மாடுகள் அவர்களின் பல முத்திரைகளில் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஹரப்பா மக்களின் உணவில் மீன், பறவை இறைச்சி ஆகியவையும் இருந்தன. காட்டுப் பன்றி, மான், முதலை ஆகியவற்றுக்கான சான்றுகளும் ஹரப்பா நாகரிகப் பகுதிகளில் கிடைத்துள்ளன.
கைவினைத் தயாரிப்பு
ஹரப்பா பொருளாதாரத்தில் கைவினைத் தயாரிப்பு ஒரு முக்கியமான பகுதியாகும். மணிகள் மற்றும் அணிகலன் செய்தல், சங்கு வளையல் செய்தல், உலோக வேலைகள் ஆகியவை கைவினைச் செயல்பாடுகளாக இருந்தன. கார்னிலியன் (மணி), ஜாஸ்பர், கிரிஸ்டல் (படிகக்கல்), ஸ்டீட்டைட் (நுரைக்கல்) ஆகியவற்றிலும் செம்பு, வெண்கலம், தங்கம் ஆகிய உலோகங்களிலும் சங்கு, பீங்கான், சுடுமண் ஆகியவற்றிலும் அணிகலன்களைச் செய்தார்கள். இந்த அணிகலன்கள் எண்ணற்ற வடிவமைப்பிலும் வேலைப்பாடுகளுடனும் செய்யப்பட்டன. இவை மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இங்கிருந்து கலைப்பொருள்கள் ஏற்றுமதி ஆன செய்தி மெசபடோமியாவில் நடத்தப்பட்ட அகழாய்வு மூலம் தெரிகிறது.
ஹரப்பா நாகரிகப் பகுதிகள் சில குறிப்பிட்ட கைவினைப்பொருள் தயாரிப்பில் தேர்ச்சி பெற்றதாக உள்ளன. அத்தகைய பொருள்களும் அவற்றின் உற்பத்தி மையங்களும் கீழேயுள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மட்பாண்டங்கள்
ஹரப்பா மக்கள் அன்றாடத் தேவைகளுக்குப் பலவகைப்பட்ட மட்பாண்டங்களைப் பயன்படுத்தினர். அவை நன்கு சுடப்பட்டவை. மட்பாண்டங்கள் அடர் சிவப்பும் கறுப்பும் கலந்த வண்ணம் பூசப்பட்டிருந்தன. அகன்ற பாத்திரத்தை வைப்பதற்கேற்ற தாங்கி, நீரைச் சேர்த்துவைக்கும் கலன், துளைகளுடன் கூடிய கலன், கையில் ஏந்துவதற்கு ஏற்ப குறுகிய பிடியுடன் உள்ள கோப்பை, நுனி சிறுத்தும் தாங்கும் பகுதி நன்கு அகன்றும் உள்ள கோப்பைகள், தட்டுகள், கிண்ணங்கள் போன்ற பலவகைகளில் மட்பாண்டங்கள் காணப்படுகின்றன. அவற்றில் வரையப்பட்டுள்ள ஓவியங்களில் அரச இலைகள், மீன் செதில், ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் வட்டங்கள், கோணல்மாணலான கோடுகள், பக்கவாட்டில் உள்ள பட்டைகள், வடிவியல் கூறுகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள் நன்கு சுடப்பட்டதாகவும் நுட்பமான வேலைப்பாடு கொண்டதாகவும் இருக்கின்றன.
உலோகங்களும் கருவிகளும் ஆயுதங்களும்
ஹரப்பா நாகரிகம் வெண்கலக் கால நாகரிகமாகும். அம்மக்கள் செம்பு வெண்கலக் கருவிகள் செய்ய அறிந்தவர்கள். வெண்கலக் கருவிகளைத் தயாரித்தாலும், வேளாண்மைக்கும் கைவினைப்பொருள்கள் உற்பத்திக்கும் பலவகைப்பட்ட கருவிகள் அவர்களுக்குத் தேவைப்பட்டன. ஒருவகைப் படிகக்கலில் செய்யப்பட்ட கத்திகளும் செம்புப்பொருள்களும் எலும்பு மற்றும் தந்தத்தில் ஆன கருவிகளும் பயன்படுத்தப்பட்டன. கூர்முனைக் கருவிகள், உளிகள், ஊசிகள், மீன் பிடிப்பதற்கான தூண்டில், சவரக்கத்திகள், தராசுத் தட்டுகள், கண்ணாடிகள், அஞ்சனக் கோல்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டன. ரோரிசெர்ட் எனப்படும் படிகக்கல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள். அம்பு, ஈட்டி, கோடரி, மழுங்கல் முனைக் கோடரி ஆகியவை அவர்களின் ஆயுதங்களாக இருந்தன. ஹரப்பா மக்கள் இரும்பை அறிந்திருக்கவில்லை.
ரோரி செர்ட் : இந்தப் படிவுப்பாறை பாகிஸ்தானில் உள்ள ரோரி பகுதியில் காணப்படுகிறது. ஹரப்பா மக்கள் கத்திகளும் பிற கருவிகளும் செய்வதற்கு இது பயன்பட்டது.
துணிகளும் அணிகலன்களும்
ஹரப்பா மக்கள் துணியாலான ஆடைகளை அணிந்தார்கள். கல்லாலும் உலோகங்களாலுமான அணிகலன்களைப் பயன்படுத்தினார்கள். அவர்களுக்குப் பருத்தி, பட்டு ஆகியவை குறித்த அறிவு இருந்தது. ஒரு சுடுமண் பொம்மையில் மதகுரு போல் தோற்றமளிக்கும் உருவம் துணியாலான, பூவேலைப்பாடுகள் கொண்ட மேலாடையை அணிந்துள்ளதைக் காண்கிறோம். மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட நடனமாடும் பெண் சிலையின், முழங்கையின் மேல்பகுதி வரை வளையல்கள் காணப்படுகின்றன. ஹரப்பா மக்கள் கார்னிலியன், செம்பு, தங்கம் ஆகியவற்றால் ஆன அழகிய வேலைப்பாடுகள் கொண்ட அணிகலன்களை உருவாக்கினர். அவற்றில் சில பொறிக்கப்பட்ட வடிவங்களைக் கொண்டுள்ளன. இவை மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஒப்பனைப்பாண்டங்கள், கல்லாலான பாத்திரங்கள், சங்கு வளையல்கள் ஆகியவையும் பயன்பாட்டில் இருந்தன. அவர்கள் உருவாக்கிய அணிகலன்கள் வணிக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக விற்கவோ, பண்டமாற்றம் செய்யவோ பயன்பட்டன.
வணிகமும் பரிவர்த்தனையும்
ஹரப்பாவின் பொருளாதாரச் செயல்பாடுகளில் வணிகமும் பரிவர்த்தனையும் முக்கியப்பங்கு வகித்தன. ஹரப்பா மக்களுக்கு மெசபடோமியோவுடன் நெருக்கமான வணிகத்தொடர்பு இருந்தது. அவர்கள் இந்தியாவில் பிற பண்பாடுகளைச் சேர்ந்த மக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார்கள். சுமேரிய நாகரிகம் நிலவிய ஓமன், பஹ்ரைன், ஈராக், ஈரான் ஆகிய இடங்களில் ஹரப்பாவைச் சேர்ந்த முத்திரைகளும் பொருள்களும் கிடைத்துள்ளன. க்யூனிபார்ம் கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன. அவற்றில் காணப்படும் 'மெலுகா' என்னும் சொல் சிந்து பகுதியைக் குறிக்கிறது. ஹரப்பாவில் செய்யப்பட்ட ஜாடி ஓமனில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹரப்பாவைச் சேர்ந்த முத்திரைகள், எடைக்கற்கள், தாயக்கட்டைகள், மணிகள் மெசபடோமியாவில் கண்டெடுக்கப்பட்டன. கார்னிலியன், வைடூரியம், செம்பு, தங்கம், பலவகைப்பட்ட மரங்கள் ஆகியவையும் ஹரப்பாவிலிருந்து மெசபடோமியாவுக்கு ஏற்றுமதியாயின. ஹரப்பா மக்கள் இந்தியாவின் வேறு பகுதிகளுடனும் தொடர்பு கொண்டு, மூலப்பொருள்களைப் பெற்று, அவற்றை மேலும் சில செய்முறைகளுக்கு உட்படுத்தி, உற்பத்தியில் ஈடுபட்டார்கள்.
எடைக்கற்களும் அளவீடுகளும்
ஹரப்பாவில் சரியான எடைக்கற்களும் அளவீடுகளும் பயன்படுத்தப்பட்டன. வணிகப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதால், முறையான அளவீடுகளுக்கான தேவையிருந்தது. ஹரப்பா நாகரிகப்பகுதிகளிலிருந்து படிகக்கல்லாலான, கனசதுர வடிவ எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எடைக்கற்கள் இரும முறையை உணர்த்துகின்றன. எடையின் விகிதம் இருமடங்காகும்படி பின்பற்றப்பட்டுள்ளது: 1:2:4:8:16:32. 16 -இன் விகிதம் கொண்ட சிறிய எடை அளவீடு இன்றைய அளவீட்டில் 13.63 கிராம் கொள்ளத்தக்கதாக உள்ளது. ஹரப்பா மக்கள் இன்றைய அளவீட்டில் ஒரு இஞ்ச் = 1.75செ.மீ ஆகக் கொள்ளும் விதத்தில் அளவுகோலையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். எடைக்கற்கள் கனசதுர வடிவத்தில், படிகக்கல்லில் செய்யப்பட்டிருந்தன. அவர்கள் இரும எண் முறையை (1,2,4,8,16,32,......) பின்பற்றினார்கள். இம்முறை அணிகலன்களையும் உலோகங்களையும் எடை போடப் பயன்பட்டிருக்கலாம்.
முத்திரைகளும் எழுத்துமுறையும்
ஸ்டீட்டைட், செம்பு, சுடுமண், தந்தம் போன்றவற்றாலான முத்திரைகள் ஹரப்பா நாகரிகப் பகுதிகளில் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஹரப்பா எழுத்துமுறையை இன்றுவரைக்கும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. 5000க்கும் மேற்பட்ட எழுத்துத்தொடர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்துத்தொடர் 26 குறியீடுகளைக் கொண்டுள்ளது. பல அறிஞர்கள் அது திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கருதுகிறார்கள். போக்குவரத்துக்கு உட்படும் பொருள்கள் மீது குறியிட்டு அடையாளப்படுத்துவதற்காக முத்திரைகள் பயன்பட்டிருக்கலாம். பொருள்களின் உரிமையாளரைக் குறிப்பதற்கும் அவை பயன்பட்டிருக்கலாம்.
கலையும் பொழுதுபோக்கும்
ஹரப்பா நாகரிகப்பகுதிகளிலிருந்து கிடைக்கும்
சுடுமண் உருவங்கள்,
மட்பாண்டங்களில் காணப்படும்
ஓவியங்கள், வெண்கல
உருவங்கள் ஆகியவை
ஹரப்பா மக்களின்
கலைத்திறனை உணர்த்துகின்றன. ஸ்டீட்டைட் கல்லில் அமைந்த
‘மத குரு’,
செம்பாலான ‘நடனமாடும்
பெண்’ (இவையிரண்டும்
மொகஞ்சதாரோவில் கிடைக்கப்பெற்றுள்ளன.), ஹரப்பா,
மொஹஞ்சதாரோ, டோலாவிரா
ஆகிய இடங்களில்
கிடைத்த கல்
சிற்பங்கள் ஆகியவை
ஹரப்பாவின் முக்கிய
கலைபடைப்புகளாகும். பொம்மை
வண்டிகள், கிலுகிலுப்பைகள், சக்கரங்கள், பம்பரங்கள், சதுரங்க
விளையாட்டில் பயன்படுத்தப்படுவதைப் போன்ற
காய்கள், கட்டங்கள்
வரையப்பட்ட பலகைகள்
ஆகியவை ஹரப்பா
மக்களின் பொழுதுபோக்கு
விளையாட்டுகளுக்குச் சான்றாகும்.
நம்பிக்கைகள்
சிந்து மக்கள்
இயற்கையை வழிபட்டார்கள். அரச மரங்கள் வழிபாட்டுக்குரியதாக இருந்திருக்கலாம். சில சுடுமண்
உருவங்கள் தாய்த்தெய்வத்தைப் போல் உள்ளன. காலிபங்கனில்
வேள்வி பீடங்கள்
அடையாளம் காணப்பட்டுள்ளன. ஹரப்பா மக்கள் இறந்தோரைப்
புதைத்தனர். புதைப்பதற்கான
நடைமுறைகள் விரிவாக
இருந்தன. இறந்த
உடல்களை எரித்ததற்கான
சான்றுகளும் கிடைத்துள்ளன. ஹரப்பா புதைகுழிகளில் மட்பாண்டங்கள், அணிகலன்கள், தாமிரக்கண்ணாடி, மணிகள் ஆகியவை கிடைத்துள்ளன. இறப்பிற்கு பின்னரான வாழ்க்கை பற்றிய அவர்களின் நம்பிக்கையை இவை குறிக்கலாம்.
அரசியல் முறை
மட்பாண்டங்கள், முத்திரைகள், எடைக்கற்கள், செங்கற்கள் ஆகியவற்றில் காணப்படும் சீரான தன்மை அரசியல் முறை செயல்பட்டதை உணர்த்துகிறது. தீவிரமான வணிக நடவடிக்கைகளுக்குத் தொழிலாளர்களைத் திரட்ட வேண்டிய தேவை இருந்திருக்கும். அதிகாரம் படைத்த ஆட்சியமைப்பால் இத்தேவை நிறைவேற்றப்பட்டிருக்கலாம். ஹரப்பாவும் மொஹஞ்சதாரோவும் நகர அரசுகளுக்கான ஆட்சியமைப்பின் கீழ் இயங்கியிருக்கலாம். பண்பாட்டுப் பொருள்களிலும் அளவீடுகளிலும் காணப்படும் சீரான தன்மை ஹரப்பா சமூகம் உறுதியானமையநிர்வாகத்தின் கீழ் இயங்கியிருக்க வேண்டும் என்ற கருத்தை வலுப்படுத்துகிறது.
நாகரிகத்தை உருவாக்கியவர்களும் இந்தியப் பண்பாட்டின் உருவாக்கமும்
ஹரப்பா நாகரிகத்தைப் உருவாக்கியவர்கள் திராவிட மொழிகளைப் பேசியவர்கள் என ஒரு ஆராய்ச்சியாளர் தரப்பு தெரிவிக்கிறது. தங்கள் நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஹரப்பா மக்கள் கிழக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் இடம்பெயர்ந்ததைத் தொல்லியல் சான்றுகள் காட்டுகின்றன. அவர்கள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் குடிபெயர்ந்திருக்கலாம். எனினும் ஹரப்பா எழுத்துகளின் பொருள் விளங்கினால்தான், உறுதியான விடை கிடைக்கும்.
சிந்து நாகரிகமும் சமகாலப் பண்பாடுகளும்
மேய்ச்சல் சமூக மக்கள், வேளாண்மை செய்வோர், வேட்டையாடிகள் - உணவு சேகரிப்பாளர்கள் போன்றோரை உள்ளடக்கிய பல குழுக்கள் சிந்து பகுதியில் வசித்தன. இப்பகுதியில் கிராமங்களும் பெரிய நகரங்களும் இருந்தன. மக்கள் அங்கு ஒன்று கலந்திருந்தனர். இத்தகைய எண்ணற்ற சமூகங்களைச் சார்ந்த மக்கள் இக்காலகட்டத்தில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையும், குஜராத்திலிருந்து அருணாசல பிரதேசம் வரைக்கும் இருந்திருக்கலாம். அவர்களின் வரலாறும் இதே அளவு முக்கியமானது. இச்சமூகங்களின் பண்பாடும் சூழலியல் அறிவும் இந்தியப் பண்பாட்டுக்குப் பங்களிப்பு செய்துள்ளன.
இந்தியாவின் வடமேற்குப்பகுதியில் சிந்து நாகரிகம் செழிப்புற்றிருந்தபோது, பிற பகுதிகளில் பல்வேறு பண்பாடுகள் வளர்ந்துகொண்டிருந்த. இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியிலும் (கேரளா) இலங்கையிலும் வேட்டையாடியும் சேகரித்தும் வாழ்ந்த சமூகங்கள் செயல்பட்டன. படகுப்போக்குவரத்து குறித்த அறிவுடன் இருந்த ஹரப்பா மக்கள் தென்னிந்தியாவுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கலாம். ஆனால் அதற்குத் தெளிவான தொல்லியல் சான்றுகள் கிடைக்கவில்லை. தென்னிந்தியாவின் வட பகுதி, குறிப்பாகக் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகியவை புதிய கற்காலப் பண்பாடுகளுடன், மேய்ச்சல் மற்றும் கலப்பை சார்ந்த வேளாண்மையிலும் ஈடுபட்டு வந்தன. புதிய கற்காலப் பண்பாடு காஷ்மீர், கங்கைச் சமவெளி ஆகிய வட இந்தியப்பகுதிகளிலும் மத்திய இந்தியாவிலும் கிழக்கு இந்தியாவிலும் பரவியிருந்தபோது தக்காணத்திலும் மேற்கு இந்தியாவிலும் செம்புக்காலப் பண்பாடு நிலவியது. இவ்வாறு இந்தியா ஹரப்பா நாகரிகக் காலத்தில் பல்வேறு பண்பாடுகளின் கலவை என்று சொல்லத்தகுந்த நிலப்பகுதியாக விளங்கியது.
வீழ்ச்சி
ஏறத்தாழ பொ.ஆ.மு. 1900இல் சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்தது. காலநிலை மாற்றம், மெசபடோமியாவுடனான வணிகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, தொடர் வறட்சியின் காரணமாக ஆறுகள் மற்றும் நீர் நிலைகள் காய்ந்து வற்றிப்போதல் ஆகியவை வீழ்ச்சிக்கான காரணங்களாக வரலாற்றாசிரியர்களால் கணிக்கப்படுகின்றன. சிந்து நாகரிகத்தின் அழிவுக்குப் படையெடுப்பு, வெள்ளம், ஆறு தன் போக்கை மாற்றிக்கொண்ட நிகழ்வு ஆகிய காரணங்களும் முன்வைக்கப்படுகின்றன. காலப்போக்கில் இம்மக்கள் சிந்து பகுதியிலிருந்து தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் இடம்பெயர்ந்தார்கள்.
சிந்து நாகரிகமும் தமிழ் நாகரிகமும்
இந்திய வரலாற்றில் நிகழ்ந்த முதல் நகரமயமாக்கத்தின் வெளிப்பாடு சிந்து நாகரிகமாகும்.
சிந்து நாகரிகத்தின் தோற்றமும் தோற்றுவித்தவர்கள் குறித்த செய்திகளும் விவாதத்துக்கு உரியனவாகவே உள்ளன. சிந்து எழுத்துகளின் பொருளை இன்னும் கண்டறிய முடியவில்லை. தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட பெருங்கற்காலத் தாழிகளில் மெல்லிய கீறல்களாக எழுதப்பட்ட வாசகங்களும் சில இடங்களின் பெயர்களும் சிந்து நாகரிகத்துக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் இடையேயான உறவை நிறுவுவதற்கான சான்றுகளாக முன்வைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவிலும் இடைக்கற்காலத்திலிருந்து தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்து வந்ததற்குப் பல தொல்லியல் சான்றுகள் உள்ளன. இவர்களில் சில சமூகங்கள் சிந்து பகுதியிலிருந்து இடம்பெயர்ந்திருக்கலாம் என்பதை மறுக்க முடியாது. எனினும் உறுதியானதொரு முடிவுக்கு வர இன்னும் அதிக ஆய்வுகள் தேவை.
பழந்தமிழகத்தைச் சேர்ந்த ஊர்களான அரிக்கமேடு, கீழடி, உறையூர் போன்றவை இந்தியாவில் நடந்த இரண்டாம் நகரமயமாக்கத்தின் பகுதிகள் ஆகும். இந்த ஊர்கள் சிந்து நகரங்களிலிருந்து மிகவும் வேறுபட்டதாக உள்ளன.