வரலாறு - தொடக்க நிலைப் புதிய கற்காலப் பண்பாடுகளும் (Early Neolithic Cultures) வேளாண்மையின் தொடக்கமும் | 11th History : Chapter 1 : Early India: From the Beginnings to the Indus Civilisation
தொடக்க நிலைப் புதிய கற்காலப் பண்பாடுகளும் (Early Neolithic
Cultures) வேளாண்மையின் தொடக்கமும்
வேளாண்மை, விலங்குகளைப் பழக்கப்படுத்துதல்
ஆகியவற்றின் தொடக்கமாக புதிய கற்காலம் அமைந்தது. இந்திய வரலாற்றில் இது ஒரு முக்கியமான
கட்டமாகும். புதிய கற்காலப் பண்பாட்டின் பழமையான சான்றுகள் எகிப்தின் செழுமைப்பிறைப்பகுதி,
மெசபடோமியா, சிந்துப்பகுதி, கங்கைப் பள்ளத்தாக்கு, சீனா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
ஏறத்தாழ பொ. ஆ.மு. 10,000-5,000க்கு இடைப்பட்ட காலத்தில் இவ்விடங்களில் வேளாண்மை தோன்றி,
பல பண்பாட்டு வளர்ச்சிகளுக்கு வழிவகுத்தது.
தாவரங்களையும் விலங்குகளையும் பழக்கப்படுத்தியதன்
மூலமாக உணவுதானியங்கள், கால்நடைத் தீவனங்கள் ஆகியவற்றின் உற்பத்தியும் விநியோகமும்
அளவில் அதிகரித்தன. ஆறுகளின் மூலம் படியும் செழிப்பான மண் வேளாண்மையை மேம்படுத்தி,
படிப்படியாக தானிய உற்பத்தியில் உபரியின் அளவை அதிகரித்தது. பழம்பெரும் நாகரிகங்களின்
தோற்றத்துக்கு உபரி உணவு உற்பத்தி மிக முக்கியமான காரணமாகும். பெரிய கிராமங்கள் தோன்றின.
மட்பாண்டங்கள் செய்யும் தொழில் வளர்ந்தது. நிரந்தர இருப்பிடங்கள் கட்டப்பட்டன. எனவே,
இக்காலத்தின் பண்பாட்டு வளர்ச்சிகள் மொத்தமாக ‘புதிய கற்காலப் புரட்சி’ எனப்படுகின்றன.
இந்தியாவின் புதிய கற்காலப் பண்பாடு
வெவ்வேறு வட்டாரப் பண்பாடுகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை வெவ்வேறு காலகட்டங்களில் வளர்ந்தன.
இந்தியாவின் வடமேற்குப்பகுதியிலும் பாகிஸ்தானிலும் தொடக்க காலத்திலேயே தோன்றின. வடகிழக்கு
இந்தியாவில் புதிய கற்காலப்பண்பாடுகள் மிகவும் பிந்தைய காலத்திலேயே, அதாவது, ஏறத்தாழ
தொடக்க வரலாற்றுக் காலத்தில்தான் தோன்றின.
வடமேற்கு
இந்தியாவில் புதியகற்காலப் பண்பாடு (Neolithic Culture)
மனிதர்கள் தாவரங்களையும் விலங்குகளையும்
பழக்கப்படுத்தியதற்கான சான்றுகளைக் கொண்டிருப்பதில் வடமேற்கு இந்தியாவின் புதிய கற்காலப்
பண்பாடு மிகப் பழமையானதாகும். மெஹர்கார், ரானா குண்டாய், சாராய் காலா, ஜலில்பூர் ஆகியவை
புதிய கற்காலப் பண்பாடு நிலவிய இடங்களாகும். இவ்விடங்கள் தற்போது பாகிஸ்தானில் உள்ளன.
ஏறத்தாழ பொ.ஆ.மு. 7000ஐச் சார்ந்ததாகக்
கணிக்கத்தகுந்த தொடக்க கற்காலப் பண்பாட்டுக்கான சான்றுகள் மெஹர்காரில் கிடைத்துள்ளன.
கோதுமையும் பார்லியும் பயிரிடப்பட்டன. செம்மறியாடு, வெள்ளாடு கால்நடைகள் ஆகியவை வளர்க்கப்பட்டன.
இப்பண்பாடு சிந்து நாகரிகத்துக்கு முந்தையதாகும்.
மெஹர்காரில் நிலவிய புதிய கற்காலப் பண்பாட்டின்
முதல் பண்பாட்டுக் காலம் ஏறத்தாழ பொ.ஆ.மு. 7000-5500ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. இப்பண்பாட்டைச்
சேர்ந்தவர்கள் மட்பாண்டங்களைப் பயன்படுத்தவில்லை. அறு வரிசை பார்லி, எம்மர் கோதுமை,
எய்ன்கான் கோதுமை, இலந்தை, பேரீச்சை ஆகியவற்றைப் பயிரிட்டார்கள். ஆடுமாடுகளைப் பழக்கப்படுத்தினார்கள்.
ஓரளவு நாடோடியாக வாழக்கூடிய, மேய்ச்சலில் ஈடுபடக்கூடிய, எனினும் மையமான தங்குமிடம்
கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் ஓரளவு இடம் விட்டு இடம் குடிபெயரக்கூடிய நாடோடி
கால்நடை மேய்க்கும் குழுவினராவர். ஈர மண்ணால் வீடு கட்டினார்கள். இறந்தோரைப் புதைத்தார்கள்.
சங்கு, சுண்ணாம்புக்கல், நீலவண்ணக்கல், இரத்தினக்கல், வைடூரியம், மணற்கல் ஆகியவற்றில்
செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்தார்கள்.
மெஹர்காரில்
தொடக்க கால பல்மருத்துவம் :
மனித மூதாதையருக்கு மருத்துவக் குணம் கொண்ட மூலிகைகள் குறித்த அறிவு இருந்திருக்கிறது.
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து அவர்களால் தங்களது உடல்நலத்தைப் பராமரிக்க முடிந்தது.
வாழ்க்கைமுறை மாறியபோது புதிய நோய்கள் தோன்றின. அவற்றுக்கான மருந்துகளைக் கண்டறிய வேண்டியிருந்தது.
புதிய கற்காலத்திலிருந்து மக்கள் அரைத்த
தானியங்களையும் சமைத்த உணவுகளையும் உண்ணத் தொடங்கினார்கள். இது பல் கோளாறுகளுக்கும்
பிற உடல் பிரச்சினைகளுக்கும் வழிவகுத்தது. உயிருள்ள ஒரு மனிதரின் பல்லில் துளையிட்டதற்கான
மிகப் பழமையான சான்று மெஹர்காரில் கிடைத்துள்ளது. இது பல்மருத்துவத்துக்கான ஒரு முகவுரையாகத்
தோன்றுகிறது.
மெஹர்கார் புதிய கற்காலப் பண்பாட்டின்
இரண்டாம் காலகட்டம் ஏறத்தாழ பொ.ஆ.மு. 5500 - 4800க்கு உட்பட்டதாகவும் மூன்றாம் காலகட்டம்
ஏறத்தாழ பொ.ஆ.மு.4800-3500க்கு உட்பட்டதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இக்காலகட்டங்களில்
மட்பாண்டத் தொழில்நுட்பத்துக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. சுடுமண் உருவங்களும் பளபளப்பான
ஒப்பனை மட்பாண்டங்களின் மணிகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. பெண்கள் அணிந்த அணிகலன்களுக்கான
சான்றுகளும் கண்டறியப்பட்டுள்ளன. பதக்ஷானில் மட்டுமே கிடைக்கக்கூடிய வைடூரியம் இங்குக்
கிடைப்பதை நெடுந்தூர வணிகத்துக்கான சான்றாகக் கொள்ளலாம். சிந்து நாகரிகத்தின் முதிர்ந்த
கட்டத்தின் தோற்றத்துக்குப் பிறகு, மெஹர்கார் கைவிடப்பட்ட நகரமானது.
காஷ்மீரில்
புதிய கற்காலப் பண்பாடு
காஷ்மீர் பகுதியில் நிலவிய புதிய கற்காலப்
பண்பாடும் ஹரப்பா நாகரிகமும் ஒரே சமகாலத்தவையாகும். இக்காலகட்டத்தைச் சேர்ந்த முக்கியமான
ஆய்விடமான பர்சாஹோம், பெருங்கற்காலத்துக்கும் தொடக்க வரலாற்றுக்காலத்துக்கும் சான்றாக
உள்ளது. இங்கு மக்கள் குளிரிலிருந்து காத்துக்கொள்ள ஏறத்தாழ 4 அடி ஆழம் கொண்ட குழி
வீடுகளில் வசித்தார்கள். முட்டை வடிவம் கொண்ட இவ்வீடுகள் அடிப்பகுதியில் அகலமாகவும்
மேல் பகுதியில் குறுகியதாகவும் இருந்தன. இவற்றுக்கு அருகே ஒரு வேயப்பட்ட கட்டுமானத்துக்கான
தூண்களை ஊன்றுவதற்கான குழிகளைக் காண முடிகிறது. புதிய கற்காலத்தில் காஷ்மீரில் வளர்ப்பு
விலங்குகளாகச் செம்மறியும் வெள்ளாடும் இருந்தன. தாவரங்களைப்பயிரிட்டார்கள். பர்சாஹோமைச்
சேர்ந்த புதிய கற்கால மக்கள் ஹரப்பா மக்களோடு வணிகத்தில் ஈடுபட்டார்கள். கையால் வனைந்த
மட்பாண்டங்களையும் எலும்பிலான கருவிகளையும் பயன்படுத்தினார்கள். கற்கோடரி, உளி, வாய்ச்சி
(மரம் செதுக்கும் கருவி), உலக்கை, மத்து போன்ற கருவிகள் மக்களிடம் இருந்தன. குளிரைத்
தாக்குப்பிடிப்பதற்காகத் துணியில் விலங்குகளின் தோலைச் சேர்த்துத் தைப்பதற்குக் குத்தூசிகள்
பயன்படுத்தப்பட்டன. தோல்களைக் கொண்டு வேலை செய்ய செதுக்குவதற்கான அல்லது சீவுவதற்கான
கருவியை மக்கள் பயன்படுத்தினர்.
புதிய கற்காலத்தின் இரு கட்டங்கள் இங்கு
அடையாளம் காணப்பட்டுள்ளன. செராமிக், செராமிக் அல்லாதது என அவற்றைப் பிரிக்கலாம். செராமிக்
அல்லாத கட்டத்தில் மட்பாண்டத் தொழில்நுட்பத்துக்கான அடையாளங்கள் இல்லை. செராமிக் கட்டத்தில்
மட்பாண்டங்களுக்கான சான்றுகள் கிடைக்கின்றன. இக்கட்டத்தில் மக்கள் சேற்று மண்ணாலான
வீடுகளைக் கட்டினார்கள். செம்பாலான அம்புகளைச் செய்தார்கள். கறுப்பு நிறப் பாண்டங்களையும்
அகேட், கார்னிலியன் கல் மணிகளையும் வண்ணம் பூசப்பட்ட பானைகளையும் பயன்படுத்தினார்கள்.
இங்கு காணப்படும் ஒரு புதைகுழியில் காட்டு நாயின் எலும்பும் மான் கொம்பும் காணப்பட்டன.
சூரியன், நாய் ஆகியவை இடம்பெறும் ஒரு வேட்டைக்காட்சி செதுக்கப்பட்டுள்ள ஒரு கல்லும்
இங்கு உள்ளது.
கோதுமை, பார்லி, பட்டாணி, பருப்பு ஆகியவற்றுக்கானவிதைகள்
அகழாய்வுகளின் போது கண்டெடுக்கப்பட்டன. கால்நடைகள், செம்மறியாடு, வெள்ளாடு, பன்றி,
நாய், சில பறவைகள் ஆகியவை பழக்கப்படுத்தப்பட்டன.
சிவப்பு மான், காஷ்மீர் கலைமான், வரையாடு, கரடி, ஓநாய் போன்ற காட்டு விலங்குகளின்
எலும்புகள் அவர்கள் வேட்டையிலும் ஈடுபட்டதைக் காட்டுகின்றன.
நினைவுச்சின்னமாகக் குத்துக்கல் எழுப்பப்படும்
வழக்கம் பெருங்கற்காலத்தில் இருந்தது. அக்கால மக்கள் சிவப்பு நிற மட்பாண்டங்களையும்
உலோகப் பொருள்களையும் பயன்படுத்தினார்கள். பருப்பு வகை பயன்பாடு அவர்களுக்கு
மத்திய ஆசியாவுடன் இருந்த தொடர்பைக் கூறுகிறது. ஹரப்பா நாகரிகத்துடன் இவர்களுக்குத்
தொடர்பு இருந்திருக்கலாம்.
கங்கைச்
சமவெளியிலும் மத்திய இந்தியாவிலும் புதிய கற்காலப்பண்பாடு
கங்கைச் சமவெளியிலும் மத்திய இந்தியாவிலும்
லேகுரதேவா, சோபானி முண்டா
ஆகிய இடங்களில் புதிய கற்காலப் பண்பாடு நிலவியதாகத்
தெரிகிறது. தொடக்க காலத்திலேயே, அதாவது ஏறத்தாழ பொ.ஆ.மு. 6500இலேயே நெல் சாகுபடி
நடந்ததற்கான சான்றுகள் லேகுரதேவாவில் கிடைத்துள்ளன.
மத்திய இந்தியாவில் புதிய கற்காலப் பண்பாடு நிலவிய
இடங்கள் கயிற்றின் தடம் பதிக்கப்பட்ட மட்பாண்டங்களால் அடையாளம் காணப்படுகின்றன. கோல்டிவா,
சிரந்த், செனுவார், மககரா ஆகியவை முக்கியமான புதிய கற்கால ஆய்விடங்களாகும். இந்த இடங்களும்
மட்பாண்டங்கள் செய்தல், தாவரம் வளர்த்தல், விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் ஆகிய செயல்பாடுகளுக்கான
சான்றுகளுடன் உள்ளன.
அறு வரிசை பார்லி, பல வகைப்பட்ட கோதுமை,
அரிசி, பட்டாணி, பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, கடுகு, ஆளி, பலா ஆகியவை
பயிரிடப்பட்டதற்கான முழுமையான சான்றுகள் இங்கெல்லாம் கிடைத்துள்ளன. காட்டு விலங்குகளின்
எலும்புகளுடன், செம்மறியாடு, வெள்ளாடு, ஏனைய கால்நடைகள் ஆகியவற்றின் எலும்புகளும்
கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புதிய கற்கால மனிதர்கள் மேல்புறத்தில் கயிற்றின்
தடம் பதிக்கப்பட்ட மட்பாண்டங்களைப் பயன்படுத்தினார்கள்.
நுண்கற்கள், எலும்பு, மான்
கொம்பு ஆகியவற்றாலான கருவிகளும் சுடுமண் பொருள்களும்
பயன்பாட்டில் இருந்தன. இந்த இடங்கள் ஏறத்தாழ பொ.ஆ.மு இரண்டாம்
நூற்றாண்டின் இடைப்பகுதி வரைக்கும் செழிப்புடன் இருந்துள்ளன.
கிழக்கு
இந்தியாவில் புதிய கற்காலம்
பிகார், மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளின் பல இடங்களில்
புதிய கற்காலப் பண்பாடு நிலவியது.
பிர்பன்புர், சிரந்த் போன்றவை அத்தகைய
இடங்களாகும். கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள புதிய கற்கால வளாகங்களுடன்
இந்த இடங்களை ஒப்பிடும்போது பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. மழுங்கிய, திரண்டமுனையுள்ள
கோடரி, உளி, தோள்பட்டைக் கோடரி ஆகியவை இந்த இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதே பகுதியில்
உள்ள குச்சாய், கோல்பய்சாசன், சங்கர்ஜங் ஆகிய இடங்களும் புதிய கற்காலப் பண்பாடு நிலவிய
இடங்களாகும்.
தென்னிந்தியாவில்
புதிய கற்காலம்
புதிய கற்காலப் பண்பாடு தென்னிந்தியாவில்
முக்கியமாக ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாட்டின் வடமேற்குப் பகுதி ஆகியவற்றில்
நிலவியதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு சாம்பல் மேட்டைச் சுற்றிலும் குடியிருப்புகள்
சூழ்ந்திருக்கும் கட்டமைப்பு இந்த இடங்களில் காணப்படுகிறது. புதிய கற்கால வளாகத்தின்
ஒரு பகுதியாக 200க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை நீராதாரங்களுடன்
கூடிய கருங்கல் குன்றுகளுக்கு அருகே அமைந்துள்ளன. இவ்விடங்கள் கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு,
துங்கபத்திரை, காவிரி சமவெளிகளிலும், கர்நாடகாவிலுள்ள சங்கனகல்லு , தெக்கலகோடா, பிரம்மகிரி,
மஸ்கி, பிக்லிகல், வட்கல், ஹெமிங்கே, கல்லூர் ஆகிய இடங்களிலும், ஆந்திரப்பிரதேசத்தில்
நாகார்ஜூனகொண்டா, ராமாபுரம், வீராபுரம், தமிழ்நாட்டில் பையம்பள்ளி ஆகிய இடங்களிலும்
புதிய கற்காலப் பண்பாடு நிலவியுள்ளது.
சில தொடக்க காலப் புதிய கற்கால ஆய்விடங்கள்
சாம்பல் மேடுகளைக் கொண்டுள்ளன. ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள உட்னுர், பல்வோய், கர்நாடகத்தில்
உள்ள கொடெக்கல், குப்கல், புடிகல் ஆகியவை இத்தகைய சாம்பல் மேடுகளைக் கொண்டுள்ளன. மெல்லிய
சாம்பலும் நுண்ணுயிர்களால் சிதைக்கப்பட்ட மாட்டுச்சாண அடுக்குகளும் இப்பகுதிகளில் காணப்படுகின்றன.
சாம்பல் மேட்டைச் சுற்றிலும் வீடுகளும் புதை குழிகளும் மனித வாழிடங்களுக்கான சான்றுகளாக
உள்ளன.
வடகிழக்கு
இந்தியாவில் புதிய கற்காலம்
வடகிழக்கு இந்தியாவில் புதிய கற்காலப்பண்பாடு
மிகப் பின்னாலேயே தோன்றியது. இங்கு இப்பண்பாட்டின் காலம் பொதுவாக பொ.ஆ.மு.
2500-1500 அல்லது அதற்கும் பின்னர் என்று கணிக்கப்படுகிறது. தோளில் வைத்துக்கொள்ளத்தக்க
மழுங்கல் முனைக் கோடரிகளும், முனை நீட்டிச் சாய்வாக்கப்பட்ட மழுங்கல் முனைக் கோடரிகளும்
அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து, அருணாசல பிரதேசம் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தாஜலி ஹேடிங், சருதரு ஆகியவை அஸ்ஸாமில் புதிய கற்காலப் பண்பாடு நிலவிய இடங்களாகும்.
இடம்பெயர் வேளாண்மை (shifting cultivation) செய்ததற்கான சான்றுகள் அஸ்ஸாமில் கிடைத்துள்ளன.
சேனைக்கிழங்கும் சேப்பங்கிழங்கும் பயிரிடல், இறந்தோருக்குக் கல்லாலும் மரத்தாலும் செய்யப்பட்ட
நினைவுச்சின்னங்களைக் கட்டுதல், ஆஸ்ட்ரோ - ஆசிய மொழிகள் பேசப்படுதல் ஆகியவை இக்காலப்பண்பாட்டின்
முக்கியக்கூறுகளாகும். இவை இப்பகுதிக்கும் தென்கிழக்கு ஆசியாவுக்குமிடையேயான பண்பாட்டு
ஒப்புமைகளை உணர்த்துகின்றன.