ஒளிமின்னழுத்த விளைவு | இயற்பியல் - ஒளிமின்னோட்டத்தின் மீதான படுகதிர் செறிவின் விளைவு | 12th Physics : UNIT 8 : Dual Nature of Radiation and Matter
ஒளிமின்னோட்டத்தின் மீதான படுகதிர் செறிவின் விளைவு
சோதனை
அமைப்பு
ஒளிமின் விளைவு நிகழ்வினை விரிவாக ஆராய்வதற்கு
படம் 7.8 இல் காட்டியுள்ள சோதனைக் கருவி பயன்படுத்தப் படுகிறது. S என்பது ஒளி மூலம்
ஆகும். இதில் இருந்து V என்கிற தெரிந்த மற்றும் மாற்றக்கூடிய அதிர்வெண்ணும், I செறிவும்
கொண்ட மின்காந்த அலைகள் வெளிவிடப்படுகின்றன. ஒளி உணர் பொருளினால் செய்யப்பட்ட கேத்தோடு
C (எதிர்மின் தகடு) எலக்ட்ரான்களை உமிழ்வதற்குப் பயன்படுகிறது. கேத்தோடில் இருந்து
வெளிவரும் எலக்ட்ரானை ஆனோடு A (நேர்மின் தகடு) ஏற்கிறது. புற ஊதா மற்றும் கண்ணுறு ஒளிக்கதிர்களை
அனுமதிக்கும் குவார்ட்ஸ் ஜன்னல் கொண்ட வெற்றிட கண்ணாடிக் குழாயில் இந்த மின்வாய்கள்
பொருத்தப்பட்டுள்ளன.
மின்னழுத்தப் பகுப்பான் PQ க்கு குறுக்கே சாவி
K வழியாக உயர் மின்னழுத்த மின்கலத் தொகுப்பு B இணைக்கப்படுகிறது. இதன் மூலம் C மற்றும்
A இடையே தேவையான மின்னழுத்த வேறுபாடு வழங்கப்படுகிறது. மின்னழுத்தப் பகுப்பானின் நடுமுனையில்
Cயும், நகரும் முனையில் A யும் இணைக்கப் பட்டுள்ளன. C ஐப் பொருத்து , A ஐ தேவையான நேர்
அல்லது எதிர் மின்னழுத்தத்தில் வைக்கமுடியும். இந்த நேர் அல்லது எதிர் மின்னழுத்தத்தை
அளப்பதற்கு ஏதுவாக மையத்தில் சுழி அளவீடு உள்ள வோல்ட்மீட்டரானது அவற்றின் குறுக்கே
இணைக்கப்பட்டுள்ளது. தொடரிணைப்பில் உள்ள மைக்ரோ அம்மீட்டர் மூலம் சுற்றிலுள்ள மின்னோட்டத்தை
அளவிடலாம்.
கேத்தோடு C மீது எந்த ஒளியும் விழாத போது,
ஒளி எலக்ட்ரான்கள் உமிழப்படுவதில்லை . மைக்ரோ அம்மீட்டர் சுழி அளவீட்டைக் காட்டும்.
புறஊதா அல்லது கண்ணுறு ஒளியானது C மீது விழும்போது, ஒளிஎலக்ட்ரான்கள் உமிழப்பட்டு
படம் 7.8 ஒளிமின் விளைவினை ஆராய்வதற்கான சோதனை
அமைப்பு
ஆனோடால் ஏற்கப்படுகின்றன. இதன் விளைவாக, மின்சுற்றில்
ஏற்படும் ஒளிமின்னோட்டமானது மைக்ரோ அம்மீட்டரால் அளவிடப்படுகிறது.
i) படுகதிரின் செறிவு ii) மின்வாய்களுக்கிடையே
உள்ள மின்னழுத்த வேறுபாடு iii) உலோகத்தின் தன்மை iv) படுகதிரின் அதிர்வெண் ஆகியவற்றைப்
பொருத்து ஒளிமின்னோட்டத்தில் ஏற்படும் மாறுபாட்டைக் கண்டறிய இந்தச் சோதனைக்கருவி பயன்படுகின்றது.
ஒளிமின்னோட்டத்தின்
மீதான படுகதிர் செறிவின் விளைவு
ஒளிமின்னோட்டத்தின் மீதான படுகதிர் ஒளிச்செறிவின்
விளைவினை ஆராய்வதற்கு, படுகதிரின் அதிர்வெண்மற்றும் எலக்ட்ரானை ஏற்கும் ஆனோடின் முடுக்கு
மின்னழுத்தம் ஆகியவை மாறிலியாக வைக்கப்படுகின்றன. C ஐப் பொருத்து A ஆனது நேர் மின்னழுத்தத்தில்
உள்ளதால், C யிலிருந்து வெளிப்படும் எலக்ட்ரான்கள் A ஐ அடைந்து, சுற்றில் மின்னோட்டம்
பாய்கிறது. இப்போது படுகதிர் ஒளிச்செறிவினை மாற்றி அமைத்து, அதற்குரிய ஒளிமின்னோட்டம்
அளவிடப்படுகிறது.
படம் 7.9 படுகதிர் செறிவைப் பொருத்து ஒளிமின்னோட்டத்தின்
மாறுபாடு
படுகதிர் ஒளிச்செறிவானது x-அச்சிலும், ஒளிமின்னோட்டமானது y-அச்சிலும் வைத்து வரைபடம் வரையப்படுகிறது. படம் 7.9 இல் காட்டப்பட்ட வரைபடத்திலிருந்து ஒளிமின்னோட்டமானது - அதாவது ஒரு வினாடியில் உமிழப்படும் எலக்ட்ரான் களின் எண்ணிக்கை - படுகதிரின் செறிவிற்கு நேர்த்தகவில் அமைவது புலனாகிறது.
குறிப்பு
இங்கு, ஒளிச்செறிவு என்பது அதன் பொலிவுத்தன்மையைக் குறிக்கும். மங்கலான ஒளியை
விட பொலிவான ஒளியானது அதிக செறிவினைக் கொண்டிருக்கும்.