கதிர்வீச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு | இயற்பியல் - பாடச்சுருக்கம், கருத்து வரைபடம் | 12th Physics : UNIT 8 : Dual Nature of Radiation and Matter
பாடச்சுருக்கம்
* துகள் என்பது மிகச்சிறிய அளவிலான குவிக்கப்பட்ட
பருப்பொருள் என கருதப்படுகிறது (குறிப்பிட்ட இடம் மற்றும் கால எல்லைகள்). ஆனால் அலை
என்பது அகன்ற பரவலான ஆற்றலாகும் (குறிப்பிட்ட இடம் மற்றும் கால எல்லைகள் இல்லாதது).
* பொருளின் எந்தவொரு பரப்பிலிருந்தும் எலக்ட்ரான்
வெளியேற்றப்படும் நிகழ்வு எலக்ட்ரான் உமிழ்வு எனப்படும்.
* உலோகத்தின் பரப்பிலிருந்து எலக்ட்ரானை வெளியேற்றத்
தேவைப்படும் சிறும ஆற்றல் உலோகத்தின் வெளியேற்று ஆற்றல் எனப்படும்.
* 1ev என்பது 1.602 X 10-19 J க்குச்
சமமாகும்.
* வெப்ப ஆற்றலால் ஏற்படும் எலக்ட்ரான் உமிழ்வு
வெப்ப அயனி உமிழ்வு எனப்படும்.
* மிக வலிமையான மின்புலத்தை உலோகத்தின் குறுக்கே
அளிக்கும் போது மின்புல உமிழ்வு ஏற்படுகிறது.
* குறிப்பிட்ட அதிர்வெண் கொண்ட மின்காந்தக்
கதிர்வீச்சு உலோக பரப்பின் மீது படும்போது, ஒளிமின் உமிழ்வு நடைபெறுகிறது
* மிக வேகமாகச் செல்லும் எலக்ட்ரான் கற்றை
உலோகத்தின் பரப்பின் மீது மோதும் போது இரண்டாம் நிலை எலக்ட்ரான் உமிழ்வு ஏற்படுகிறது.
* ஒளி மின்னோட்டம் ஆனது (ஒரு வினாடியில் உமிழப்படும்
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை) படும் ஒளியின் செறிவிற்கு நேர்த்தகவில் அமையும்.
* நிறுத்து மின்னழுத்தம் என்பது பெரும் இயக்க
ஆற்றலைக் கொண்ட ஒளி எலக்ட்ரான்களை நிறுத்தி, ஒளி மின்னோட்டத்தை சுழியாக்குவதற்கு ஆனோடிற்கு
அளிக்கப்படும் எதிர் (எதிர் முடுக்கு) மின்னழுத்தத்தின் மதிப்பாகும்
* நிறுத்து மின்னழுத்தம் படு ஒளியின் செறிவைப்
பொருத்தது அல்ல.
* ஒளி எலக்ட்ரான்களின் பெரும் இயக்க ஆற்றல்
படுஒளியின் செறிவைப் பொறுத்தது அல்ல.
* கொடுக்கப்படும் உலோகப் பரப்பிற்கு , படுகதிரின்
அதிர்வெண் ஒரு குறிப்பிட்ட சிறும் அதிர்வெண்ணை விட அதிகமாக இருந்தால் மட்டுமே ஒளி எலக்ட்ரான்
உமிழ்வு ஏற்படும். இந்தச் சிறும் அதிர்வெண் பயன்தொடக்க அதிர்வெண் எனப்படும்.
* பிளாங்க் கொள்கைப்படி, ஒரு பொருளானது அதிக
எண்ணிக்கை கொண்ட வெவ்வேறு அதிர்வெண்ணில் அதிர்வடையும் துகள்களை (அணுக்கள்) கொண்டிருக்கும்.
* ஐன்ஸ்டீனின் கொள்கைப்படி, ஒளி ஆற்றலானது
அலை முகப்புகளில் பரவியில்லாமல், சிறு சிப்பங்கள் அல்லது குவாண்டாவில் குவிக்கப்பட்டிருக்கும்.
* வரையறுக்கப்பட்ட ஆற்றல் மற்றும் உந்தத்தை
பெற்ற ஒவ்வொரு ஒளி குவாண்டமும் துகள் பண்பைக் கொண்டிருக்கும். துகளாகச் செயல்படும்
இந்த ஒளி குவாண்டம் ஃபோட்டான் எனப்படும்.
* ஒளி பரவும் போது அலையாகவும், பொருள்களுடன்
இடைவினை புரியும் போது துகளாகவும் செயல்படுகிறது.
* ஒளி மின்கலம் என்பவை ஒளி ஆற்றலை மின் ஆற்றலாக
மாற்றும் சாதனம் ஆகும்.
* இயக்கத்தில் உள்ள எலக்ட்ரான்கள், புரோட்டான்கள்
மற்றும் நியூட்ரான்கள் போன்ற அனைத்து பருப்பொருள் துகள்களும் அலைப்பண்பைப் பெற்றுள்ளன.
இந்த அலைகள் டிப்ராய் அலைகள் அல்லது பருப்பொருள் அலைகள் எனப்படுகின்றன.
* எலக்ட்ரானின் அலை இயல்பு எலக்ட்ரான் நுண்ணோக்கியின்
வடிமைப்பில் பயன்படுத்தப்படுகிறது.
* 1927 இல் கிளின்டன் டேவிசன் மற்றும் லெஸ்ட்
ஜெர்மர் ஆகியோர் டி ப்ராயின் பருப்பொருள் அலைகள் பற்றிய எடுகோளை சோதனை வாயிலாக உறுதி
செய்துள்ளனர்.
* வேகமாக இயங்கும் எலக்ட்ரான்கள் குறிப்பிட்ட
சில பொருள்களின் மீது விழும்போது, அதிக ஊடுருவும் திறன் கொண்ட கதிர்வீச்சு , X- கதிர்கள்,
வெளிவிடப்படுகின்றன.
* தொடர் நிறமாலை என்பது குறிப்பிட்ட சிறும்
அலைநீளம் λ0 முதல்
தொடர்ச்சியாக அனைத்து அலைநீளங்களை கொண்ட கதிர்வீச்சுகளால் ஆக்கப்பட்டுள்ளது.
* உயர் வேக எலக்ட்ரான்களால் இலக்குப் பொருள்
தாக்கப்படும் போது, நன்கு வரையறுக்கப்பட்ட சில அலைநீளங்களில் குறுகிய முகடுகள் X- கதிர்
நிறமாலையில் தோன்றுகின்றன. இந்த முகடுகளுடன் தோன்றும் வரி நிறமாலை ஆனது சிறப்பு X-
கதிர் நிறமாலை எனப்படும்.