Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | இந்திய தேர்தல் ஆணையம்

அரசியல் அறிவியல் - இந்திய தேர்தல் ஆணையம் | 11th Political Science : Chapter 10 : Election and Representation

   Posted On :  04.10.2023 01:28 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : பொதுக்கருத்து மற்றும் கட்சி

இந்திய தேர்தல் ஆணையம்

இந்திய அரசமைப்பின் உறுப்பு 324 ஓர் தேர்தல் ஆணையத்தினை அமைப்பதை பற்றி விளக்குகிறது. இது சுதந்திரமாகவும், நடுநிலையாகவும், ஒழுங்கான முறையிலும் தேர்தல்களை நடத்துகிறது.

இந்திய தேர்தல் ஆணையம்

இந்திய அரசமைப்பின் உறுப்பு 324 ஓர் தேர்தல் ஆணையத்தினை அமைப்பதை பற்றி விளக்குகிறது. இது சுதந்திரமாகவும், நடுநிலையாகவும், ஒழுங்கான முறையிலும் தேர்தல்களை நடத்துகிறது. இவ்வாணையமானது நாடாளுமன்றம், சட்டமன்றம், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்களை மேற்பார்வையிட்டு, வழிகாட்டுவதுடன் தேர்தலையும் நடத்துகிறது


தேர்தல் ஆணையம்-ஓர் சுதந்திரமான அமைப்பு

இந்திய தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கமே ஒர் நிரந்தரமான மற்றும் சுதந்திரமான தேர்தல் அமைப்பு அவசியம் என்பதுடன் ஆட்சியாளர்கள் மற்றும் ஆளுங்கட்சியின் அரசியல் அழுத்தத்திலிருந்து விடுபட்டு சுதந்திரமாகத் தேர்தலை நடத்துவதற்காகும். அத்துடன் நாடாளுமன்றம், சட்டமன்றம், குடியரசுத்தலைவர் மற்றும் துணைக்குடியரசுத் தலைவர் தேர்தல்களை நடத்தும் பொருப்பும் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.


இந்திய தேர்தல் ஆணையத்தின் அமைப்பு



உங்களுக்குத் தெரியுமா?

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் விவரங்கள்



இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் 

வாக்காளர் பட்டியல் தயாரித்தல்

வாக்காளர் பட்டியலை திருத்துதல்

தொகுதிக்கான இடங்களை ஒதுக்கீடு செய்தல்

தேர்தல் நடத்துதல்

தேர்தலை மேற்பார்வையிட்டு வழிகாட்டுவதுடன் அது தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கட்டுப்படுத்துதல்

அரசியல்கட்சிகளுக்கு அங்கீகாரம் அளித்தல்

கட்சிகளுக்கான சின்னங்களை ஒதுக்கீடு செய்தல் 

சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலை உறுதி செய்தல்.

தேர்தல் விவகாரங்கள் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் குடியரசுத்தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில ஆளுநர்களுக்குத் தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்குதல்

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதியிழப்பினை முடிவு செய்தல்

இந்திய குடியரசுத் தலைவர் அல்லது மாநில ஆளுநரால் பரிசீலனைக்கு அனுப்பப்படும் மனுக்கள் மற்றும் பிரச்சனைகளைத் தீர்த்தல்

ஓர் அரசியல் கட்சியில் பிளவு ஏற்பட்டால் எழும் தேர்தல் சின்னம் தொடர்பான சச்சரவுகளில் முடிவெடுத்தல்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களின் உச்சவரம்பினை இறுதி செய்யும் அதிகாரம்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்துக்கள் தொடர்பான ஆவணப் பத்திரங்களை கேட்டுப் பெறும் பணி

தேர்தல் செலவினக் கணக்கினை ஓர் வேட்பாளர் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவில்லையெனில் அவரை தகுதியிழப்பு செய்யும் அதிகாரமும், கடமையும்.

தேர்தல் முடிந்த பின்னர் முறைப்படி அவை அமைக்கப்பட்டதற்கான அறிவிப்பினை வெளியிடுதல்


உங்களுக்குத் தெரியுமா?


அரசியலைத் தூய்மைப்படுத்துவதற்கான உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு 

 ஜூலை 11, 2013 ல் உச்சநீதிமன்றம் வெளியிட்ட ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பில் சிறை அல்லது காவல் துறையினரின் விசாரணையில் இருக்கும் ஒருவர் சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது என தீர்ப்பளித்துள்ளது. ஒரு நாள் முன்னதாக, ஜூலை 10, 2013-ல் அதே அமர்வு வழங்கிய தீர்ப்பில் தங்களின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பின், நாடாளுமன்ற, சட்டப்பேரவை அல்லது சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் குற்றங்களுக்கான தண்டனை பற்றிய தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் அப்பொதுப் பதவிகளை வகிப்பதிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவர்.

இப்பிரிவு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தம்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனைக்கான தீர்ப்பு வழங்கப்பட்டால் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(4) இந்த அமர்வு நிராகரிப்பு.

நன்றி:தி இந்து நாளிதழ், பெட்டிச் செய்தி 3.5.2004



தலைமைத் தேர்தல் அதிகாரி (Chief Electoral Officer)

ஓர் மாநிலம்/ஒன்றிய பிரதேசத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி அம்மாநில / ஒன்றியப் பிரதேசத்தின் தேர்தல் பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரத்துடன் தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வை, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டில் செயல்படுகிறார். இந்தியத் தேர்தல் ஆணையமே ஓர் மாநிலம்/ ஒன்றியப் பிரதேசத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியை நியமிக்கிறது. அந்நியமனத்தின் போது மாநில/ஒன்றியப் பிரதேச அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பின்னரே தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுத்து செயல்படுத்துகிறது


மாவட்ட தேர்தல் அதிகாரி (District Election Officer)

தலைமைத் தேர்தல் அதிகாரியின் மேற்பார்வை, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் மாவட்ட தேர்தல் அதிகாரி செயல்படுவதுடன் மாவட்டத்தின் தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுகிறார். மாநில அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பின்னர் ஓர் மாநில அரசு அதிகாரியை மாவட்ட தேர்தல் அதிகாரியாக நியமிக்கவோ அல்லது பதவியளிக்கவோ தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.


தேர்தல் நடத்தும் அலுவலர் (Returning Officer)

ஓர் நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அக்குறிப்பிட்ட நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற தொகுதியில் தேர்தலை நடத்தும் பொறுப்பு உள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட மாநில/ஒன்றிய பிரதேச அரசாங்கங்களுடன் கலந்தாலோசித்து ஒவ்வொரு நாடாளுமன்ற சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரை நியமிக்கிறது. அவர் அரசாங்க அதிகாரியாகவோ அல்லது உள்ளாட்சி அதிகாரியாகவோ இருக்கலாம். மேலும் கூடுதலாக அவருக்கு தேர்தல் பணிகளில் உதவுவதற்கு ஒன்று அல்லது இரண்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் ஒவ்வொரு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளிலும் நியமிக்கப்படுவதுடன் தேர்தல் நடத்தும் அலுவலரின் பணிகளை செயல்படுத்துவதில் பேருதவியாக இருப்பர்.


வாக்காளர் பதிவு அலுவலர் (Electoral Registration Officer)

ஓர் நாடாளுமன்ற/ சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணி வாக்காளர் பதிவு அலுவலருடையதாகும். இந்திய தேர்தல் ஆணையம் மாநில/ஒன்றியப் பிரதேச அரசாங்கங்களுடன் கலந்தாலோசித்த பின்னர் வாக்காளர் பதிவு அலுவலரை நியமிக்கிறது. இவர் அரசாங்க அல்லது உள்ளாட்சி அதிகாரியாக இருக்கலாம். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் இவருக்கு உதவி செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படுகின்றனர்.


வாக்குச் சாவடி தலைமை அலுவலர் (Presiding Officer)

வாக்குச் சாவடி தலைமை அலுவலர் பிற வாக்குப்பதிவு அலுவலர்களின் உதவியுடன் வாக்குச் சாவடியில் தேர்தலை நடத்துகிறார். மாவட்ட தேர்தல் அதிகாரியே வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களை நியமிக்கிறார். ஒன்றியப் பிரதேசங்களைப் பொறுத்தவரை அந்தியமனங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் (RO) மேற்கொள்கிறார்


தேர்தல் பார்வையாளர்கள் (Election Observers)

இந்திய தேர்தல் ஆணையம் அரசாங்க அதிகாரிகளைத் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கிறது. (பொதுப்பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் செலவினைப் பார்வையாளர்கள்). இவர்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் தேர்தல் ஆணையத்தால் தங்களுக்கு தரப்பட்ட பணிகளை நிறைவேற்றுகின்றனர். இவர்கள் ஆணையத்திற்கு நேரடி பொறுப்பாகின்றனர்.

Tags : Political Science அரசியல் அறிவியல்.
11th Political Science : Chapter 10 : Election and Representation : Election Commission of India Political Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : பொதுக்கருத்து மற்றும் கட்சி : இந்திய தேர்தல் ஆணையம் - அரசியல் அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : பொதுக்கருத்து மற்றும் கட்சி