அரசியல் அறிவியல் - சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்கள் | 11th Political Science : Chapter 10 : Election and Representation
சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்கள்
சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் நடைமுறையை உறுதிப்படுத்துவதே ஓர் அரசியல் முறைமையின் உண்மையான சோதனையாகும். நாம் மக்களாட்சியை நடைமுறைப்படுத்த விரும்பினால் அதற்கு தேர்தல் முறையானது நடுநிலையாகவும், வெளிப்படையானதாகவும் இருத்தல் முக்கியமானதாகும். வாக்காளர்களின் விருப்பங்கள் தேர்தல் முடிவுகளின் மூலம் சட்டபூர்வமாக வெளிப்படுவதற்குத் தேர்தல் முறை அனுமதிக்க வேண்டும். இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள் அடிப்படையில் , சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுகின்றன. தேர்தலில் வெற்றிபெறும் கட்சி ஆட்சி அமைக்கிறது. இதற்கு எதிர்க் கட்சிகளை விட இக்கட்சியினை மக்கள் தேர்ந்தெடுத்ததே அதற்குக் காரணமாகும். ஒவ்வொரு தொகுதியிலும் இது உண்மையாக இருக்காது. ஒரு சில வேட்பாளர்கள் பண பலம் மற்றும் நியாயமற்ற வழிமுறைகளின் மூலமாக வெற்றி பெறுகின்றனர். இருப்பினும் பொதுமக்களின் விருப்பத்தை பிரதிபலிப்பதாகவே ஒட்டுமொத்த பொதுத்தேர்தல் முடிவுகள் இதுவரை இருந்துள்ளன.
❖ அதிக பணபலமுள்ள வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் தங்களின் வெற்றியைப் பற்றி உறுதியற்ற நிலையில் இருப்பினும் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளை விட மிகப்பெரிய மற்றும் நியாயமற்ற சாதகமான நிலையில் இருப்பர்.
❖ குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் தேர்தல் போட்டியில் பிறரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பெரிய கட்சிகளின் சார்பாகப் போட்டியிடும் வாய்ப்பினைப் பெறுகின்றனர்.
❖ சில குடும்பங்கள் அரசில் கட்சிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனால் அக்கட்சியின் சார்பாகப் போட்டியிடும் வாய்ப்புகள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், உறவினர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
❖ சாதாரண குடிமக்களுக்குத் தேர்தல்கள் குறைவான வாய்ப்புகளையே வழங்குகிறது. ஏனெனில் பெரும்பான்மையான கட்சிகள் ஏறத்தாழ ஒரேமாதிரியான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளைக் கொண்டுள்ளன.
❖ பெரிய கட்சிகளை ஒப்பிடுகையில் சிறிய கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் பெரும் பின்னடைவைச் சந்திக்கின்றனர்.
உங்களுக்குத் தெரியுமா?
இந்தியாவின் முதலாவது பொதுத் தேர்தல்கள் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை.
இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் 1951-52ம் ஆண்டில் பொதுத்தேர்தல்கள் நடைபெற்று முதலாவது மக்களவை தேர்ந்தெடுக்கப்பட்டது. மொத்தமுள்ள 489 மக்களவை இடங்களில் காங்கிரஸ் கட்சி 364 இடங்களில் வெற்றி பெற்றது. இது மொத்த வாக்குப்பதிவில் 45 சதவீதமாகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாமிடம் பெற்றது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றார். இத்தேர்தலில் 67.6 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது. 54 கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன. ஏறத்தாழ நான்கு மாதங்கள் தேர்தல் நடைபெற்றது. அக்டோபர் 25, 1951, முதல் பிப்ரவரி 21, 1952 வரை இத்தேர்தல்கள் நடந்தன. 26 இந்திய மாநிலங்கள் மற்றும் 401 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தகைய சவால்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் பல வலுவான மக்காளட்சிகளிலும் காணப்படுகின்றன. இவ்வாறான ஆழமான பிரச்சனைகள் பற்றி மக்களாட்சியின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் கவனம் செலுத்துகின்றனர். இதனால் தான் குடிமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்கள் நமது தேர்தல் முறைமையில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ள கோரிக்கை வைக்கின்றன. ஓர் மக்களாட்சியில், தேர்தல் நடைமுறை என்பது யுக்தி அடிப்படையில் பங்காற்றுகிறது. ஓர் சாதாரண மனிதனுக்கு தனது பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்குச் சென்று தனது சுதந்திரம் மற்றும் சொத்துக்களை கட்டுப்படுத்தக்கூடிய வகையிலான சட்டங்களை இயற்றுபவரைப் பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொள்ளும் அடிப்படையான உரிமை உள்ளது.
மக்களாட்சியில் தகவல்களைப் பெறும் உரிமை என்பது முழுவதுமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் அது மக்களாட்சி எனும் கருத்தாக்கத்திலிருந்து வெளிப்படகூடிய இயற்கை உரிமையாகும்.
இந்திய அரசமைப்பின் உறுப்பு 19(1) (அ) பேச்சு மற்றும் கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்திற்கான உரிமையினை வழங்குகிறது. வாக்காளர்களின் பேச்சு மற்றும் கருத்தை வெளிப்படுத்தும் சுதத்திரமானது வாக்களித்தலின் மூலமாக வெளிப்படுகிறது. அதாவது வாக்காளர்கள் தங்கள் வாக்கினை செலுத்துவதன் மூலமாக தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்துகின்றனர். இதற்காக தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளரைப் பற்றிய தகவல்கள் அவசியமாகும். பொதுமக்கள் தங்களின் பிரதிநிதியாக சட்டத்தினை மீறுபவர்களை சட்டத்தினை உருவாக்குபவர்களாக தேர்ந்தெடுப்பதற்கு முன் சிந்தித்து செயல்பட வேண்டும்.