Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | பிரதிநிதித்துவத்தின் வகைகள் / தொகுதிகளுக்கான இடஒதுக்கீடு தேர்தல் முறைமை-பன்மைத்துவம் / பெரும்பான்மை முறைமைகள்

அரசியல் அறிவியல் - பிரதிநிதித்துவத்தின் வகைகள் / தொகுதிகளுக்கான இடஒதுக்கீடு தேர்தல் முறைமை-பன்மைத்துவம் / பெரும்பான்மை முறைமைகள் | 11th Political Science : Chapter 10 : Election and Representation

   Posted On :  04.10.2023 01:20 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 11 : தேர்தல் மற்றும் பிரதிநிதித்துவம்

பிரதிநிதித்துவத்தின் வகைகள் / தொகுதிகளுக்கான இடஒதுக்கீடு தேர்தல் முறைமை-பன்மைத்துவம் / பெரும்பான்மை முறைமைகள்

பன்மைத்துவம் / பெரும்பான்மை முறைமைகளின் கொள்கைகள் மிகவும் எளிமையானவையாகும். மக்கள் வாக்களித்தபிறகு வாக்குகள் எண்ணப்பட்டு அதிக வாக்குகளைப் பெற்ற வெட்பாளர் அல்லது கட்சிகள் வெற்றி பெற்றவையாக அறிவிக்கப்படுகின்றன

பிரதிநிதித்துவத்தின் வகைகள் / தொகுதிகளுக்கான இடஒதுக்கீடு  தேர்தல் முறைமை-பன்மைத்துவம்பெரும்பான்மை முறைமைகள்

பன்மைத்துவம் / பெரும்பான்மை முறைமைகளின் கொள்கைகள் மிகவும் எளிமையானவையாகும். மக்கள் வாக்களித்தபிறகு வாக்குகள் எண்ணப்பட்டு அதிக வாக்குகளைப் பெற்ற வெட்பாளர் அல்லது கட்சிகள் வெற்றி பெற்றவையாக அறிவிக்கப்படுகின்றன. இருப்பினும் இதன் நடைமுறைகள் மாறுபடுகின்றனது. ஆகையால் ஐந்து வகையான பன்மைத்துவ பெரும்பான்மை முறைமைகளை அடையாளப்படுத்தலாம்.

செயல்பாடு

உனது மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தல் எப்பொழுது நடைபெற்றது என உனக்குத் தெரியுமா? கடந்த ஐந்து ஆண்டுகளில் உனது பகுதியில் வேறு ஏதேனும் தேர்தல்கள் நடைபெற்றனவா? அத்தேர்தல்களைப் பற்றி எழுதுக. (தேசிய, மாநில, உள்ளாட்சி மற்றும் பிற). அவை எப்பொழுது நடைபெற்றன? உனது பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினரின் விவரங்களைக் கண்டறிக.

) முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் (FPTP)

) தொகுதி வாக்கு (BV) 

) கட்சித் தொகுதி வாக்கு (PBV) 

) மாற்று வாக்கு (AV) 

) இரு சுற்று முறை (TRS) 


. முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் (FPTP)

முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் என்பது பன்மைத்துவம் / பெரும்பான்மை முறையின் எளிமையான வடிவமாகும். இது ஓர் உறுப்பினர் தொகுதிகள் மற்றும் வேட்பாளரை மையப்படுத்ததுவதுடன் வாக்களித்தலும் பயன்படுத்தப்படுகிறது. எப். பி.டி.பி. முறைகள் அடிப்படையில் இங்கிலாந்தில் காணப்பட்டன. அது தவிர இங்கிலாந்தின் வரலாற்று அடிப்படையிலான ஆதிக்கத்தில் இருந்த நாடுகளிலும் காணப்படுகின்றன. இங்கிலாந்து தவிர அமெரிக்கா, கரீபிய நாடுகள், வங்கதேசம், மியான்மர், இந்தியா, மலேசியா, நேபாளம் மற்றும் தெற்கு பசிபிக் பகுதியில் உள்ள சில நாடுகளிலும் இம்முறை காணப்படுகிறது.

உங்களுக்குத் தெரியுமா?

FPTP (எப்.பி.டி.பி) என்பது பன்மைவாத/ பெரும்பான்மைவாத வாக்காளர் முறையில் எளிமையான வடிவமாகும். இதில் ஒரு வேட்பாளர் செல்லத் தகுந்த வாக்குகளில் பிற வேட்பாளர்களை விட அதிக வாக்குகளை பெற்றிருந்தாலே வெற்றி பெற்றவர் ஆவார். அறுதிப் பெரும்பான்மை பெற வேண்டிய அவசியமில்லை . இந்த முறை ஒரு உறுப்பின் தொகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் வாக்காளர்கள் கட்சிக்காக அல்லாமல் வேட்பாளருக்காகவே வாக்களிக்கின்றோம்.


. தொகுதி வாக்கு (BV)

தொகுதி வாக்கு என்பது அரசியல் கட்சிகளே இல்லாத அல்லது பலவீனமாக உள்ள நாடுகளில் காணப்படுவதாகும். கேமன் தீவுகள், பாக்லாந்து தீவுகள், கர்ன்சே , குவைத், லாவோஸ், லெபனான், மாலத்தீவுகள், பாலஸ்தீனம், சிரிய அரபுக் குடியரசு ஆகியவை தொகுதிவாக்கு முறையிலான வாக்காளர் முறைமைகளைப் பின்பற்றுகின்றன.

தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் திறனை வாக்காளர்கள் தக்கவைத்துக் கொள்வதால் தொகுதிவாக்கு முறை பாராட்டப்படுகிறது. அத்துடன் தகுந்த முறையில் நில அமைப்பின் அமைக்கப்பட்ட மாவட்டங்களும் அனுமதிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் எப்.பி.டி.பியுடன் ஒப்பிடுகையில் அரசியல் கட்சிகளின் பங்கு அதிகரிப்பதுடன் அதிக இணக்கம் மற்றும் அமைப்பு ரீதியான கட்சிகளை வலுப்படுத்துவதாக உள்ளது.

உங்களுக்குத் தெரியுமா?

தொகுதி வாக்கு என்பது ஓர் பன்மைத்துவ பெரும்பான்மை முறைமையில் பல்உறுப்பினர் மாவட்டங்களில் பயன்படுத்தப்படுவதாகும். இதில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய வேட்பாளர்களுக்குத் தகுந்த வாக்குகள் வாக்காளர்களுக்கு இருக்கும். அதிகபட்ச எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் வெற்றி பெறுகிறார். பொதுவாக கட்சிகளைக் காட்டிலும் வேட்பாளருக்காக மக்கள் வாக்களித்தாலும் பெரும்பாலான முறைமைகளில் மக்கள் தங்களின் விருப்பத்திற்குத் தக்கவாறு வாக்களிக்கின்றனர்.


. கட்சித் தொகுதி வாக்கு (PBV)

பி.பி.வி என்பது பயன்படுத்துவதற்கு எளிதானதாகும். இது வலுவான கட்சி வேட்பாளர்களில் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் பெரும் வகையில் கலவையாக அமைந்துள்ளது. இது சமநிலையிலான இன அடிப்படை பிரதிநிதித்துவத்திற்கும் உதவுகிறது. டிஜிபௌடி, சிங்கப்பூர், செனகல், துனீசியா போன்ற நாடுகள் பி.பி.வி. முறையைப் பயன்படுத்துகின்றன.


. மாற்று வாக்கு (AV)

இம்முறையில் வாக்காளர்கள் தங்களின் முதல் விருப்பத்தேர்வை விட வேட்பாளர்களுக்கு இடையே முன்னுரிமை அளிக்கின்றனர். இதனால் இது 'முன்னுரிமை வாக்கு' எனவும் அழைக்கப்படுகிறது. மாற்றுவாக்கு முறை ஆஸ்திரேலியா, பிஜி, பாப்புவா கினியா ஆகிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது. பல வேட்பாளர்கள் மொத்தமாகப் பெற்ற வாக்குகளை மாற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த விருப்பமும் இணைக்கப்பட்டு பிரதிநிதித்துவப் படுத்தப்படுகிறது.

செயல்பாடு

மாற்று வாக்கு என்பது முன்னுரிமையான பன்மை முறையாகும். இது வாக்காளர்களின் ஓர் உறுப்பினர் மாவட்டங்களைக் கொண்டதாகும். வாக்காளர்கள் தமது வாக்குச் சீட்டில் உள்ள எண்ணைப் பயன்படுத்தி தமது முன்னுரிமையைக் குறிக்கின்றனர்.

உங்களுக்குத் தெரியுமா?

இருசுற்று முறை என்பது ஓர் பன்மைத்துவ / பெரும்பான்மை முறையாகும். இதில் முதல் சுற்றில் எக்கட்சி அல்லது வேட்பாளருக்கும் அறுதிப்பெரும்பான்மை (50 சதவீதத்திற்கு மேல் ஒரு சதவீதமேனும் பெற்றிருத்தல்) பெறாத நிலையில் இரண்டாவது சுற்று தேர்தல் நடைபெறும். இரு சுற்று முறை எப்போது பெரும்பான்மை, பன்மைத்துவ வடிவம் எடுக்குமெனில், ஒருவேளை இரண்டாம் சுற்றில் இரண்டு வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடும் நிலையில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுபவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இதில் அவர்கள் அறுதிப்பெரும்பான்மை பெற்றிருந்தாலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.


. இரு சுற்று முறை (Two Round System).

இரு சுற்று முறையின் முக்கிய இயல்பே அதன் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஒரே தேர்தலாக அல்லாமல் ஒரு வாரம் அல்லது பதினைந்து நாட்கள் இடைவெளியில் இரு சுற்றுகளாக நடைபெறுகிறது. இது தேசிய சட்டமன்ற உறுப்பினர் தேர்விற்கும், குடியரசுத் தலைவருக்கான நேரடி தேர்தலுக்கும் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இம்முறை மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, காங்கோ , கபோன், மாலி மௌரிடானியா, ஹைதி, ஈரான், வியட்நாம், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகிறது.



அரசியலில் போட்டி இருப்பது நன்மையானதா?

தேர்தல்கள் என்பவை அரசியல் போட்டி தொடர்பானவையாகும். இப்போட்டி பல்வேறு வடிவங்களை எடுக்கிறது. இதில் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான போட்டி மிகவும் வெளிப்படையான வடிவமாகும். தொகுதி அளவில் பல்வேறு வேட்பாளர்களுக்கு இடையேயான போட்டி எனும் அளவில் உள்ளது. போட்டிகள் இல்லையெனில் தேர்தல்கள் அர்த்தமற்றவையாகின்றன. தேர்தலில் ஏற்படும் போட்டியால் ஒவ்வொரு பகுதியிலும் ஒற்றுமையின்மை மற்றும் பிரிவினைவாத உணர்வுகள் தோன்றினாலும், சீரான தேர்தல் போட்டிகள் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கிறது. மக்கள் எழுப்ப விரும்பும் பிரச்சனைகளைத் தாங்கள் எழுப்பினால், தாங்கள் பிரபலமடைவதுடன் வரக்கூடிய தேர்தலில் தங்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும் என்பதை அரசியல் தலைவர்கள் அறிவர். இருப்பினும் தங்களது பணியின் மூலமாக வாக்காளர்களை திருப்திபடுத்தவில்லையெனில் மீண்டும் அவர்களால் வெற்றிபெற இயலாது


நமது தேர்தல் முறை என்ன?

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது. பின்னர் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை கலைக்கப்படுகிறது. அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே நேரத்திலோ, அதாவது ஒரே நாளிலோ அல்லது ஒருசில நாட்களிலோ தேர்தல் நடைபெறுகிறது. இதுவே பொதுத் தேர்தல் எனப்படுகிறது. சில நேரங்களில் ஒரு தொகுதியில் உள்ள உறுப்பினரின் மரணம் அல்லது பதவி விலகலால் ஏற்படும் காலியிடத்தை நிரப்ப தேர்தல் நடைபெறுகிறது. இது இடைத்தேர்தல் என அழைக்கப்படுகிறது.


தேர்தலுக்கான தொகுதிகள்

தமிழக மக்கள் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து மக்களவைக்கு அனுப்புகின்றனர். நமது நாட்டில் இடம் சார்ந்த பிரதிநிதித்துவ முறையை நாம் பின்பற்றுகிறோம். தேர்தலுக்காக நம் நாடு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளை நாம் தேர்தலுக்கான தொகுதிகள் என அழைக்கிறோம். ஓர் பகுதியில் வசிக்கும் மக்கள் வாக்களித்து தங்களுக்காக ஓர் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

மக்களவைத் தேர்தலுக்காக நமது நாடு 543 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி நாடாளுமன்ற உறுப்பினர் என அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு வாக்கிற்கும் சமமதிப்பு என்பதுமக்களாட்சியிலான தேர்தலின் இயல்புகளில் ஒன்றாகும். இதனால் தான் ஒவ்வொரு தொகுதியும் கிட்டத்தட்ட சமமான மக்கள் தொகை உள்ளதாக இருக்க வேண்டும் என அரசமைப்பு கூறுகிறது. அதேபோல ஒவ்வொரு மாநிலமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி சட்டப்பேரவை உறுப்பினர் அல்லது எம்.எல். (M.L.A) என அழைக்கப்படுகின்றார். அதே கொள்கை பஞ்சாயத்து மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தல்களில் பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு கிராமம் அல்லது நகரமும் தொகுதிகளைப் போன்று வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டும் கிராமம் அல்லது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிற்கு ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கிறது. சில சமயங்களில் இத்தொகுதிகள் ஓர் இடமாகக் கருதப்பட்டு, ஒவ்வொரு தொகுதியும் அவையில் ஓர் இடத்தின் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது


தனித்தொகுதி

ஓர் குடிமகனுக்கு தனது பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்கும், தான் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் உள்ள உரிமையை அரசமைப்பு வழங்குகிறது. வெளிப்படையான தேர்தல் போட்டியில் சில நலிந்த பிரிவினருக்கு மக்களவைமற்றும்மாநிலசட்டப்பேரவைகளுக்கு வாய்ப்புகள் சிறப்பாக அமைவதில்லை. அவர்களுக்கு பிறருக்கு எதிராகத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வளங்கள், கல்வியறிவு மற்றும் போட்டியிடுவதற்குத் தேவையான தொடர்புகள் இருப்பதில்லை. இவ்வாறு இருப்பின் நமது மக்கள் தொகையில் குறிப்பிடத்தகுந்த பிரிவினருக்கு நமது நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் அனைவருக்கும் இடமில்லாத நிலை ஏற்படுகிறது. இது நமது மக்களாட்சியை பிரதிநிதித்துவம் வழங்காததாகவும், குறைந்த மக்களாட்சித் தன்மையுடையதாகவும் மாற்றுகிறது.

செயல்பாடு

இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவின் நிலை என்ன?

மேற்கூறியவற்றால் நமது அரசமைப்பினை உருவாக்கியவர்கள் நலிந்த பிரிவினருக்கு சிறப்பு அமைப்பாக தனித்தொகுதிகளைப் பற்றி சிந்தித்தனர். சில தொகுதிகள் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வகை இடஒதுக்கீடு முறை பின்னர் பிற நலிந்த பிரிவினருக்கும் மாவட்ட மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் நீட்டிக்கப்பட்டுள்ளது


வரையறை

மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைக்கான தொகுதிகள் வரையறுக்கப்படுகின்றன. தொகுதிகளை வரையறை செய்யும் போது அதன் புவியமைப்பு, இயற்கையான இயல்புகள், நிர்வாக அமைப்புகளின் எல்லைகள், தகவல் தொடர்பு மற்றும் பொதுமக்களின் வசதி ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன


தொகுதி வரையறை சட்டங்கள் 

முதல் வரையறை ஆணையச் சட்டம், 1952. 

இரண்டாவது வரையறை ஆணையச் சட்டம், 1963. 

மூன்றாவது வரையறை சட்டம், 1973. 

நான்காவது வரையறை சட்டம், 2002. 


வாக்காளர் பட்டியல்

தொகுதிகள் முடிவு செய்யப்பட்ட பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கையாக யார் வாக்களிக்கலாம், யாரெல்லாம் வாக்களிக்க முடியாது என்பதனை முடிவு செய்ய வேண்டும். இம்முடிவினை யாரேனும் எடுப்பதற்கு கடைசி நாள் வரை காத்திருக்க இயலாது. ஆகவே மக்களாட்சி தேர்தலில் தகுதிவாய்ந்த வாக்காளர்களின் பட்டியல் தேர்தலுக்கு நெடுநாள் முன்னரே தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதுவே அதிகாரப்பூர்வமாக 'வாக்காளர் பட்டியல்' என அழைக்கப்படுகிறது.

உங்களுக்குத் தெரியுமா?

பஞ்சாயத்துகளைப் போன்று மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும் இருக்க வேண்டாமா?

செயல்பாடு

காலவரிசை முறை 

இக்காலவரிசை முறையின் இடது புறம் தரப்பட்டுள்ள தேர்தல் தொடர்பான செயல்பாடுகளை, முதல் செயல்பாட்டிலிருந்து கடைசிசெயல்பாடுவரை வரிசைப்படுத்தவும். அவைபின்வருமாறு


எவ்வகையான வேறுபாடுகளையும் தாண்டி தங்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சமவாய்ப்பு அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே மக்களாட்சியிலான தேர்தலின் முதல் நிபந்தனையாகும். நமது நாட்டில் பதினெட்டு வயது நிரம்பிய குடிமக்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்கலாம். ஒருவரின் சாதி, மதம் மற்றும் பாலின பாகுபாடின்றி அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது.

அனைத்து குடிமக்களின் பெயர்களையும் கேட்டுப் பெறுவது, அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது ஓர் அரசாங்கத்தின் பொறுப்பாகும். இடம் பெயர்ந்தோர் மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்காளர் பட்டியல் திருத்தியமைக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் இதனைதாங்கள் வாக்களிக்கச் செல்லும்போது எடுத்துச் செல்ல வேண்டும். இருப்பினும் வாக்காளர் அடையாள அட்டை என்பது கட்டாய ஆவணமல்ல. இதனைத் தவிர ஆதார் அட்டை, குடிமை வழங்கல் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றின் அசல் சான்று ஆகியவற்றினை வாக்களிப்பதற்கான ஆவணமாக காட்டலாம்.


இந்தியாவில் தேர்தல் நடைமுறை 

தொகுதிகளை மறுவரையறை செய்தல்

தேர்தல் அறிவிப்பு

வேட்பு மனுவினை தாக்கல் செய்தல் மற்றும் திரும்பப் பெறுதலைப் பற்றிய தேர்தல். ஆணையத்தின் அறிவிப்பு

போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தல்

வேட்பு மனுக்களை சரிபார்த்து ஏற்றல் அல்லது நிராகரித்தல்

தேர்தல் பரப்புரை

வாக்களித்தல் நடைமுறை

வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகளை அறிவித்தல்.


இந்தியாவில் நடக்கும் தேர்தல்கள் பற்றிய அம்சங்கள்.


உங்களுக்குத் தெரியுமா

எந்த அரசமைப்புச் சட்டதிருத்தத்தின் மூலமாக இந்திய குடிமக்களின் வாக்களிக்கும் வயது இருபத்தி ஒன்றிலிருந்து பதினெட்டாகக் குறைக்கப்பட்டது?


வேட்பாளர்கள் நியமனம்

ஓர் மக்களாட்சி அடிப்படையிலான தேர்தலில் உண்மையான விருப்பத் தேர்வை மேற்கொள்ள மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். எவரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு எவ்விதத் தடையும் இல்லாத சூழலில் இது நிகழும். இதனையே நமது அமைப்பும் வழங்குகிறது. வாக்காளராக இருப்பதற்காக தகுதியுடைய எவரும் தேர்தலில் வேட்பாளராகலாம். தேர்தலில் வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயது பதினெட்டு எனில், வேட்பாளராவதற்கான குறைந்தபட்ச வயது இருபத்து ஐந்து என்பதே இதிலுள்ள ஒரே வித்தியாசமாகும். அரசியல் கட்சிகள் வேட்பாளரை நியமிக்கும் போது அவர் கட்சியின் சின்னம் மற்றும் ஆதரவினைப் பெறுகிறார். கட்சியின் வேட்பாளர் நியமனத்தினை 'கட்சியின் நியமனச்சீட்டு' என அழைக்கின்றனர்.

செயல்பாடு

கீழ்க்கண்டவற்றின் முக்கியத்துவத்தினை கண்டறிக 

  மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 மற்றும் 1951. 

  மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1966. 

  வரையறை ஆணையச் சட்டங்கள், 1962 மற்றும் 1972.

வேட்பு மனு தாக்கல் செய்ய விரும்பும் ஒவ்வொருவரும் பிணைத்தொகையாகக் குறிப்பிட்ட தொகையினை செலுத்த வேண்டும். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி கீழ்க்கண்ட முழு விபரங்களைக் கொண்ட சட்டப்பூர்வ பிரகடனத்தினை ஒவ்வொரு வேட்பாளரும் மேற்கொள்ள வேண்டும்

வேட்பாளருக்கு எதிராக நிலுவையில் உள்ள கடுமையான குற்றவியல் வழக்குகள் ஏதேனும் இருந்தால் அவற்றின் விபரங்களைத் தருதல்

வேட்பாளர்கள் தங்களுடைய அல்லது தங்களது குடும்பத்தாருடைய சொத்துக்கள் மற்றும் கடன்கள் பற்றிய விளக்கங்கள் தருதல்

வேட்பாளரின் கல்வித் தகுதிகள்

இத்தகவல்கள் மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும். இவ்வாறு வேட்பாளர்களால் தரப்படும் தகவல்களின் அடிப்படையில் வாக்காளர்கள் தங்களின் முடிவுகளை எடுப்பதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.


தேர்தல் பரப்புரை

தேர்தலின் முக்கிய நோக்கமே மக்கள் தங்களுக்கு விருப்பமான பிரதிநிதிகள், அரசாங்கம் மற்றும் கொள்கைகளை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பளிப்பதாகும். ஆகவே யார் சிறந்த பிரதிநிதியாக இருப்பர், எக்கட்சி சிறந்த அரசாங்கத்தை அமைக்கும் அல்லது எது சிறந்த கொள்கை ஆகியவற்றினைப் பற்றிய சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விவாதம் அவசியமாகும். இதுவே தேர்தல் பரப்புரையின் போது நிகழ்கிறது.

நமது நாட்டில் இத்தகைய பரப்புரைகள் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடக்கும் நாள் வரை இரு வாரகாலத்திற்கு நடைபெறுகிறது. இக்கால கட்டத்தில் வேட்பாளர்கள் வாக்காளர்களிடம் சென்று வாக்கு சேகரித்தல், அரசியல் தலைவர்கள் தேர்தல் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுதல் மற்றும் அரசியல் கட்சிகள் தங்களின் ஆதரவாளர்களைத் திரட்டுதல் ஆகியவை நிகழும். இக்காலகட்டத்தில் தான் நாளேடுகள், சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் தேர்தல் தொடர்பான செய்திகள் மற்றும் விவாதங்கள் இடம் பெறுகின்றன.

தேர்தல் பரப்புரையின் போது அரசியல் கட்சிகள் முக்கியப் பிரச்சனைகளின் மீது பொது மக்களின் கவனத்தைத் திருப்புகின்றன. அவர்கள் மக்களிடம் அப்பிரச்சனைகளைப் பற்றி பேசுவதன் மூலம் அவர்களை ஈர்த்து அதனடிப்படையில் தங்கள் கட்சிக்கு வாக்களிக்குமாறு செய்வர். ஓர்மக்களாட்சியில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் விரும்பும் வகையில் தேர்தல் பரப்புரையை சுதந்திரமாக மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். இருப்பினும் சில நேரங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சியும், வேட்பாளரும் போட்டியிடுவதற்கு ஏற்ற நியாயமான மற்றும் சமமான வாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் பரப்புரைகளை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும்.

நமது தேர்தல் சட்டங்களின் படி ஓர் கட்சி அல்லது வேட்பாளர் கீழ்க்கண்டவற்றினை செய்ய முடியாது

வாக்காளர்களுக்கு கையூட்டு அளித்தல் அல்லது அச்சுறுத்துதல்.

சாதி மற்றும் மதத்தின் பெயரால் வாக்களிக்கும்படி வேண்டுதல்.

தேர்தல் பரப்புரைகளுக்கு அரசாங்கத்தின் வளங்களை பயன்படுத்துதல்.

இவ்வாறு ஒருவேளை அவர்கள் செய்யும்போது, அவர்கள் தேர்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட பின்னரும் நீதிமன்றம் அத்தேர்தலை நிராகரித்து உத்தரவிடலாம். சட்டங்களுடன் மேலும் கூடுதலாக, நமது நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளுக்கான நன்னடத்தை விதிமுறைகளை ஏற்றுக் கொண்டுள்ளன.

அதன்படி கீழ்க்கண்டவற்றினை ஓர் கட்சி அல்லது வேட்பாளர் செய்ய முடியாது.

தேர்தல் பரப்புரைக்காக மதவழிபாட்டுத் தலங்களைப் பயன்படுத்துதல்.

தேர்தலுக்காக அரசு வாகனங்கள், விமானங்கள் மற்றும் அரசு அலுவலர்களைப் பயன்படுத்துதல்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அமைச்சர்கள் எவ்வகைத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுதல், முக்கிய கொள்கை முடிவுகளை எடுத்தல், பொது சேவை வசதிகளுக்கான வாக்குறுதி அறிவித்தல் போன்றவற்றினை செய்ய கூடாது.

Tags : Political Science அரசியல் அறிவியல்.
11th Political Science : Chapter 10 : Election and Representation : Types of Representation/ Reservation of Constituencies Political Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 11 : தேர்தல் மற்றும் பிரதிநிதித்துவம் : பிரதிநிதித்துவத்தின் வகைகள் / தொகுதிகளுக்கான இடஒதுக்கீடு தேர்தல் முறைமை-பன்மைத்துவம் / பெரும்பான்மை முறைமைகள் - அரசியல் அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 11 : தேர்தல் மற்றும் பிரதிநிதித்துவம்