அரசியல் அறிவியல் - தேர்தல் சீர்திருத்தங்கள், கட்சித்தாவல் தடைச் சட்டம் | 11th Political Science : Chapter 10 : Election and Representation
தேர்தல் சீர்திருத்தங்கள், கட்சித்தாவல் தடைச் சட்டம்
மேற்கண்ட குழுக்கள் மற்றும் ஆணையங்கள் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் நமது தேர்தல் முறைமையில் அவ்வப்போது பல்வேறு சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
❖ 61 வது அரசமைப்புச் சட்டத்திருத்தம், 1988-ன் மூலமாக வாக்களிக்கும் வயது இருபத்தி ஒன்றிலிருந்து பதினெட்டு ஆக குறைக்கப்பட்டது.
❖ வாக்காளர் பட்டியல் தயாரித்தல், திருத்தியமைத்தல் போன்ற தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அயற்பணியில் சென்று தேர்தல் ஆணையத்தின் கீழ் பணிபுரிதல்.
❖ ஓர் தொகுதியில் வேட்பாளர்களை முன்மொழியும் நபர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் பத்து சதவீதம் அல்லது பத்து வாக்காளர்கள் இதில் எது குறைவானதோ அதனை அதிகரித்தல்.
❖ 1989-ம் ஆண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தேர்தலில் பயன்படுத்தப்படும் வகையில் அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டன.
❖ 1989-ம் ஆண்டு வாக்குச்சாவடியைக் கைப்பற்றுவதனைத் தடுப்பதற்கு தேர்தலை ஒத்திவைக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது.
❖ அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை என வகைப்படுத்தி வேட்பாளர்களை பட்டியலிடுதல்
❖ வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 48 மணிநேரம் முன்பிருந்து அப்பகுதியில் மதுபான விற்பனையினைத் தடைசெய்தல்
❖ தேர்தலில் போட்டியிடும் ஓர் வேட்பாளர் எதிர்பாராமல் மரணமடைந்தால் சம்பந்தப்பட்ட கட்சிக்கு மாற்று வேட்பாளரை பரிந்துரைப்பதற்கான வாய்ப்புடன் ஏழு நாட்கள் அவகாசம்.
❖ தேர்தல் தினத்தன்று பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு ஊதியத்துடனான விடுமுறை.
❖ ஆயுதங்கள் தடை.
❖ 1998-இல் ஓர் அம்சம் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாக உள்ளாட்சி அதிகாரிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பணியாளர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள், அரசு நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோர் தேர்தல் தினத்தன்று பணியில் ஈடுபடுத்தப்பட பணிக்கப்பட்டனர்.
❖ 1999-இல் வாக்காளர்களில் ஓர் பிரிவினர் தபால் வாக்கினைப் (Postal Ballot) பயன்படுத்தி வாக்களிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
❖ 2003-இல் இராணுவத்தில் பணிபுரிபவர்கள் தங்களின் சார்பாக பதிலி வாக்கு (Proxy vote) அளிக்கும் முறை கொண்டு வரப்பட்டு இராணுவச் சட்டத்திற்கு இசைவான வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
❖ 2003-இல் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் முந்தைய குற்றசம்பவங்கள் மற்றும் சொத்துக்கள் பற்றிய விபரங்களை பிரகடனப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
❖ 2003-இல் மாநிலங்களவைத் தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வேட்பாளரின் வசிப்பிடம் தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. மேலும் வெளிப்படையான வாக்கெடுப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
❖ 2003-இல் வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் பயணச்செலவினங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
❖ அரசாங்கமே இலவசமாக வாக்காளர் பட்டியலை வழங்குதல்
❖ 2009-இல் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்தி முடிவுகளை அறிவிப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
❖ 2009-இல் தேர்தலின் போது தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை தகுதியிழப்பு செய்வதுடன் மூன்று மாத காலத்திற்குள் குற்றம் சாட்டப்பட்டவரின் மீதான விபரங்களை குறிப்பிட்ட அதிகாரி சமர்ப்பிக்க வேண்டும்.
❖ தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகள் மிதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
❖ பிணைத்தொகை அதிகரிக்கப்பட்டது.
❖ மாவட்டத்தினுள் மேல் முறையிட்டு அதிகாரிகளை நியமித்தல்.
❖ 2010-இல் வெளிநாடு வாழ் இந்தியக் குடிமக்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.
❖ 2011-இல் தேர்தல் செலவினங்களுக்குக்கான உச்சசவரம்பு அதிகாரிக்கப்பட்டது.
விவாதம்
சமூக ஊடகங்கள்-ஓர் சிறந்த தேர்தல் கருவியா?
தேர்தல் பரப்புரையில் சமூக ஊடகங்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்களைப் பற்றி ஓர் விவாதத்தினை வகுப்பறையில் ஆசிரியர் நடத்தலாம்.
கட்சித் தாவல் தடைச் சட்டம்
52வது அரசமைப்புச் சட்டதிருத்தம், 1985-ன் மூலமாக ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறும் நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினரைத் தகுதியிழப்பு செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. இதற்காக இந்திய அரசமைப்பில் பத்தாவது அட்டவணை இணைக்கப்பட்டது. இச்சட்டமே 'கட்சித் தாவல் தடைச் சட்டம்' என அழைக்கப்படுகிறது. பின்னர் 91வது அரசமைப்புச் சட்டதிருத்தம், 2003ன் மூலமாக ஓர் சிறுதிருத்தம் செய்யப்பட்டது. அதாவது கட்சி பிளவுறும் சூழலில் கட்சித் தாவலின் அடிப்படைகள் பொருந்தாது என்பதாகும்.
அ. தகுதியிழப்பு
எக்கட்சியினைச் சார்ந்தவராக இருப்பினும் அவையின் ஓர் உறுப்பினர் தனது விருப்பத்தின் அடிப்படையில் உறுப்பினர் பதவியை விட்டு விலகுதல் அல்லது தான் சார்ந்த கட்சியின் வழிகாட்டுதலுக்கு எதிராக வாக்களித்தல் அல்லது வாக்களிப்பிலிருந்து கட்சியின் முன் அனுமதியின்றி விலகியிருத்தல் ஆகியவற்றால் தகுதியிழப்பு செய்யப்படலாம்.
ஓர் சுயேட்சை வேட்பாளர் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மற்றொரு அரசியல் கட்சியில் சேர்ந்தால் அவையிலிருந்து அவர் தகுதியிழப்பு செய்யப்படுவார்.
ஓர் நியமன உறுப்பினர் தான் பதவியேற்ற நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் ஏதேனும் அரசியல் கட்சியில் சேர்ந்தால் அவையின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்.
ஆ. விதிவிலக்குகள்
ஓர் கட்சி மற்றொரு கட்சியுடன் இணைக்கப்படும் போது கட்சித்தாவலின் அடிப்படையில் ஓர் உறுப்பினரின் மீது நடவடிக்கை எடுப்பதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. சபையை வழிநடத்தும் பொறுப்பிற்கு ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தனது கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து சுயவிருப்பத்தின் அடிப்படையில் வெளியேறினாலும் அப் பதவியிலிருந்து விடுபட்ட நிலையில் மீண்டும் கட்சியில் சேரலாம் என்பது மற்றொரு விதிவிலக்காகும்.
இ. தீர்மானிக்கும் அதிகாரம்
அவையை நடத்தும் பொறுப்பில் உள்ளவரே கட்சித் தாவல் தொடர்பான தகுதியிழப்பு பிரச்சனைகளை இறுதி செய்வார்.
ஈ. விதியை உருவாக்கும் அதிகாரம்
இந்திய அரசமைப்பின் பத்தாவது அட்டவணையில் உள்ள அம்சங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் விதிமுறைகளை உருவாக்கும் அதிகாரம் அவையை நடத்துபவருக்கே உள்ளது. அத்தகைய விதிகள் 30 நாட்களுக்குள் அவையில் தாக்கல் செய்யப்பட வேண்டும். அவற்றினை குறிப்பிட்ட அவை ஏற்றுக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ செய்யலாம். மேலும் ஓர் உறுப்பினர் தனது விருப்பத்தின் அடிப்படையில் அவ்விதிகளை மீறுவது என்பதனை அவையின் மரபுகளை மீறிய செயலாகக் கருதி நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவையை நடத்துபவருக்கு உள்ளது.
சட்டத்தினைத் திறனாய்வு செய்தல்
அ) பதவிகள் அல்லது பொருள் சார்ந்த ஆதாயங்களுக்காக அரசியலில் கட்சித்தாவலை மேற்கொள்ளும் செயல்களைத் தடுக்கும் வகையில் அரசமைப்பின் பத்தாவது அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆ) கொள்கையற்ற மற்றும் அறநெறிக்குப் புறம்பான வகையில் மேற்கொள்ளும் கட்சித்தாவல்களைக் கட்டுப்படுத்துவதன் மூலமாக இந்திய நாடாளுமன்ற மக்களாட்சியின் மாண்பினை இது வலுப்படுத்துகிறது.
இ) சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சிமாறும் மனப்பாங்கினைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசியல் கட்டமைப்பினை உறுதியாக வலுப்படுத்துகிறது
ஈ) கட்சிகளை இணைப்பதன் மூலம் சட்டமன்றத்தில் உள்ள கட்சிகளை மறுசீரமைப்பு செய்ய வாய்ப்பு ஏற்படுத்துகிறது.
உ) தற்போதுள்ள அரசியல் கட்சிகளுக்கு அரசமைப்பு அடிப்படையில் தெளிவாக அங்கீகாரம் வழங்குகிறது.
மாநிலங்களவைத் தேர்தல்
நமது மாநிலங்களவைத் தேர்தலில் மாற்றித்தரக்கூடிய வாக்கு முறை பின்பற்றப்படுகிறது. மாநிலங்களவையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிட்ட ஒதுக்கீடு உள்ளது. மாநிலங்களவையின் உறுப்பினர்கள் மாநில சட்டப்பேரவையின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்களே வாக்காளர்களாவர். ஒவ்வொரு வாக்காளரும் தங்களுக்கு விருப்பமான வேட்பாளரை வரிசைப்படுத்த வேண்டும். வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு வேட்பாளரும் குறிப்பிட்ட அளவிலான வாக்குகளைப் பெற வேண்டும். இதற்கென வகுக்கப்பட்ட விதிமுறை பின்வருமாறு:-
{ பதிவான மொத்த வாக்குள் / தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய மொத்த வேட்பாளர்கள் +1 } + 1
உதாரணமாக தமிழகத்தின் 200 சட்டப்பேரவை உறுப்பினர்களால் 4 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமெனில் அவர்கள் (200/4 + 1 = 40 + 1) 41 வாக்குகளைப் பெற வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற முதல் முன்னுரிமை வாக்குகள் (First Preference votes) எண்ணப்படுகின்றன. இவ்வாறு முதல் முன்னுரிமை வாக்குகள் எண்ணப்பட்ட பின்னரும் சில வேட்பாளர்கள் குறிப்பிட்ட அளவிலான வாக்குகளைப் பெறவில்லையெனில் குறைவான முதல் முன்னுரிமை வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் பெற்ற வாக்குகளில், அதாவது வாக்குச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாவது முன்னுரிமை வேட்பாளருக்கு அந்த வாக்குகள் மாற்றப்படுகின்றன. இந்நடைமுறை ஓர் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படும் வரை தொடர்கிறது.
தேர்தலில் முதலில் நிலையை கடந்தவரே வெற்றி பெற்றவர் என்ற முறையை இந்தியா பின்பற்றியது?
முதலில் நிலையைக் கடத்தல் முறை (FPTP) என்பது மிகவும் பிரபலமாகவும், வெற்றிகரமாகவும் இருப்பதற்கு அதன் எளிமையே காரணமாகும். இத்தேர்தல் முறை முழுவதையும் புரிந்து கொள்வதற்கு மிகவும் எளிமையாகவும், தேர்தல் மற்றும் அரசியலைப் பற்றி தெரியாத பொதுவான வாக்காளர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் அமைந்துள்ளது. தேர்தலின் போது வாக்காளர்களுக்கு தெளிவான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன தேர்தலின் போது வாக்காளர்கள் ஓர் வேட்பாளர் அல்லது கட்சியை அங்கீகரிக்க வேண்டும் அப்போதைய அரசியலின் தன்மைக்குத் தக்கவாறு வாக்காளர்கள் கட்சி அல்லது வேட்பாளருக்கோ அல்லது இரண்டிற்கும் சமமாகவோ முக்கியத்துவம் தரலாம்.
முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் என்னும் முறையானது கட்சிகளுக்கிடையே தேர்வு செய்யும் முறையாக இல்லாமல் குறிப்பிட்ட வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் முறையாகும். ஆனால் பிற தேர்தல் முறைகளில் குறிப்பாக விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் வாக்காளர்கள் ஓர் ஆட்சியைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன் பிரதிநிதிகளும் கட்சியின் பட்டியலில் இருந்தே தேர்ந்தேடுக்கப்படுகின்றனர். இதன் விளைவாக, ஓர் குறிப்பிட்ட பகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய மற்றும் பொறுப்பான ஓர் பிரதிநிதி இல்லாத நிலை ஏற்படுகிறது. ஆனால் முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் முறையைப் போன்றேதொகுதி அடிப்படையிலான முறையிலும் வாக்காளர்களுக்குத் தங்களின் பிரதிநிதி யார் என தெரிவதுடன் அவர்கள் வாக்காளர்களுக்குப் பதில் சொல்லகடமையும், பொறுப்பும் கொண்டுள்ளனர். முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் முறையில் பொதுவாக தனிப்பெரும் கட்சிக்கு அல்லது கூட்டணிக்கு சில இடங்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. இது அவர்களின் பங்கான வாக்குகளை விட அதிகமாக இருக்கும்.
இங்ஙனம் இம்முறையானது நிலையான அரசாங்கத்தை உருவாக்க வகை செய்வதுடன் நாடாளுமன்ற அரசாங்கம் அமைதியாகவும், திறம்பட செயலாற்றவும் வாய்ப்பளிக்கிறது. முதலில் நிலையை கடந்து செல்லுதல் (FPTP) முறையானது ஓர் பகுதியில் உள்ள சமூகக் குழுக்களைச் சேர்ந்த வாக்காளர்களை ஒன்றிணைத்து வெற்றி பெற வைக்கிறது. ஆகவே முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் (FPTP) முறையானது எளியதாகவும், சாதாரண வாக்காளர்களுக்கு அறிமுகமானதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
வெளிப்படையாக வாக்களிக்கும் முறை என்பது கைகளை உயர்த்துவதன் மூலம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையாகும்.
ரகசிய வாக்கெடுப்பு முறையில் ஓர் வாக்காளர் தனது வாக்கினைப் பிறர் அறியாதவாறு வாக்குப்பெட்டி அல்லது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் அளிக்கிறார்.