இந்தியாவில் தேர்தல் முறை
இந்திய தேர்தல் முறை, இங்கிலாந்தில் பின்பற்றப்படும் தேர்தல் முறையினைப் பின்பற்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியா ஒரு சமத்துவ,
மதச்சார்பற்ற, மக்களாட்சி, குடியரசு நாடாகும், மற்றும் உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடாகும். தற்போதைய நவீன இந்தியாவானது ஜனவரி மாதம் 26ஆம் நாள் 1950ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தது.
இந்திய அரசியலமைப்பின் XVம் பகுதியில் காணப்படும், 324 முதல் 329 வரையிலான பிரிவுகளில் கூறப்பட்டுள்ள பின்வரும் விதிமுறைக்கேற்ப நம் நாட்டின் தேர்தல் முறை அமைக்கப்பட்டிருக்கிறது.
(i)
நாட்டின் சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதி செய்திட தன்னிச்சையான தேர்தல் ஆணையம் அமைத்திட இந்திய அரசியலமைப்பின்பிரிவு 324ன்படி வழிவகைச் செய்கிறது. தற்போது தேர்தல் ஆணையமானது ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களை உள்ளடக்கியுள்ளது.
(ii)
பாராளுமன்ற தேர்தல் சம்மந்தமான வாக்காளர்களின் பட்டியல் தயாரித்தல், தொகுதிகளை வரையறை செய்தல் உட்பட அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டப் பிற அனைத்து விவகாரங்களைப் பெறுவதற்கான சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றலாம்.
உங்களுக்குத் தெரியுமா?
தமிழ்நாட்டில் சோழர்கள் காலத்தில் குடவோலை என்னும் வழக்கப்படி கிராமச்சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
(iii) மாநில சட்டசபைத் தேர்தல் சம்மந்தமான வாக்காளர்களின் பட்டியல் தயாரித்தல், தொகுதிகளை வரையறை செய்தல் போன்றவற்றை அரசியலமைப்பிற்குட்பட்டு தேவையான மாற்றங்களை மாநில சட்ட சபை சட்டங்களை இயற்றலாம்.
தேசிய அளவில் அரசாங்கத்தின் தலைவர் பிரதமர் ஆவார். இவர் இந்திய பராளுமன்றத்தின் கீழவையான மக்களவை (லோக்சபா) உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். நம்மை போன்ற மக்களாட்சிப் பிரதிநிதித்துவ நாடுகளில் தேர்தல் முறை முக்கிய பங்கு வகிக்கிறது.
உங்களுக்குத் தெரியுமா?
இந்தியாவில் ஜனவரி 25ஆம் நாளினை தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடுகிறோம்.
ஒரு மக்களாட்சி நடைபெறும் நாட்டில் உள்ள வாக்காளர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும் தேர்வு செய்ய விருப்பம் இல்லை எனில் வாக்காளர்கள் மேற்கண்ட எவரும் இல்லை (NOTA
- Nane Of The Above) எனும் ஓர் பொத்தானை வாக்கு இயந்திரத்தில் தேர்வு செய்யலாம். இந்திய தேர்தல் நடத்தை விதிகள்,
(1961-இல் எனும் சட்டத்தின் விதி எண் 49-O இம்முறை பற்றி விவரிக்கிறது.
உங்களுக்குத் தெரியுமா?
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயருக்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்தி வாக்குச் செலுத்தப்படுகிறது.
ஒருவர் தாம் செலுத்திய வாக்குச் சரியான படி பதிவாகி உள்ளதா என்று தெரிந்து கொள்ளும் வாய்ப்பை 2014ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது.
இதை ஆங்கிலத்தில் சுருக்கமாக VVPAT (Voters Verified
Paper Audit Trial) என்று குறிப்பிடுகிறார்கள்.
உங்களுக்குத் தெரியுமா?
2014ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முதல் முறையாக NOTA அறிமுகப்படுத்தப்பட்டது. உலகில் NOTA-வை அறிமுகப்படுத்திய 14வது நாடு இந்தியா ஆகும்.
இந்தியாவில் இரண்டு வகையான தேர்தல்கள் நடைபெறுகின்றன. அவை நேரடித் தேர்தல் மற்றும் மறைமுகத் தேர்தல் ஆகும்.
நேரடித் தேர்தல்
நேரடித் தேர்தலில் வாக்காளர்கள் தமது பிரதிநிதிகளைத் தாங்களே நேரடியாக தேர்ந்தெடுக்கிறார்கள். 18 வயது பூர்த்தியடைந்த மக்கள் நேரடித் தேர்தல் முறையில் பங்கு பெற்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்கின்றனர். நேரடித் தேர்தல் முறைக்குப் பின்வரும் சில எடுத்துக்காட்டுக் காணலாம்.
(i)
மக்களவை தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களை (MP)
தேர்ந்தெடுத்தல்
(ii)
சட்டமன்றத் தேர்தல்களில் சட்டப்பேரவை உறுப்பினர்களை (MLA)
தேர்ந்தெடுத்தல்.
(iii) ஊராட்சி, பேரூராட்சி,
நகராட்சி மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தல்.
நிறைகள்
(i)
வாக்காளர்கள் தங்களது பிரதிநிதிகளை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதால் நேரடித் தேர்தல் முறையானது வலுவான மக்களாட்சி கொண்டதாகக் கருதப்படுகிறது
(ii)
அரசாங்க நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வும், தகுதியான பிரதிநிதிகளைக் தேர்ந்தெடுக்கவும் மக்களுக்குக் கற்பிக்கிறது. மேலும் மக்கள் அரசியலில் முக்கிய பங்குவகிக்க ஊக்கமளிக்கிறது.
(iii)
மக்களைத்தீவிரமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டுகிறது.
குறைகள்
(i)
நேரடித் தேர்தல் முறை அதிக செலவு கொண்டதாக உள்ளது.
(ii)
எழுத்தறிவற்ற வாக்காளர்கள், பொய்யானப் பரப்புரைகளால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். சில நேரங்களில் சாதி,
மதம் மற்றும் இன்ன பிற பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் பிரச்சாரங்கள் மற்றும் பொய்யானப் பரப்புரைகளாலும் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.
(iii)
நேரடித் தேர்தல் நடத்துவது மிகப்பெரும் பணியாக இருப்பதால், ஒவ்வொரு வாக்கு மையங்களிலும் சுதந்திரமான, நியாயமான தேர்தல் முறையை உறுதி செய்வது என்பது தேர்தல் ஆணையத்திற்கு மிக பெரும் சவாலாக உள்ளது.
(iv)
சில அரசியல் கட்சி வேட்பாளர்கள், வாக்காளர்கள் மீது பணம், பொருள் (அ) பணிகள் மூலமாக தங்களது செல்வாக்கைச் செலுத்துவது என்பது ஒருமற்றொரு சவாலாகும்.
(v)
தேர்தல் பரப்புரைகளின்போது சில நேரங்களில் வன்முறைகள் பதற்றங்கள்,
சட்டம் -
ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை முறை பாதிக்கப்படுகிறது.
மறைமுகத் தேர்தல்
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் வாக்களித்துத் தேர்வு செய்யும் முறையே மறைமுகத் தேர்தல் ஆகும். குடியரசுத் தலைவர் தேர்தலில் இத்தகைய முறையானது கடைபிடிக்கப்படுகிறது.
நிறைகள்
(i)
மறைமுகத் தேர்தல்கள் நடத்த செலவு குறைவானதாகும்.
(ii)
மறைமுக தேர்தல் முறையானது பெரிய நாடுகளுக்கு உகந்தது.
குறைகள்
(i)
வாக்காளர் எண்ணிக்கைக் குறைவாக இருப்பதால் ஊழல் கையூட்டு, குதிரை பேரம் ஆகியவற்றிற்கு வாய்ப்புகள் அதிகம் காணப்படும்.
(ii) மக்கள் தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க நேரடியாக பங்கு பெறாமல், மாறாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகளே இம்முறையில் பங்குபெறுவதால், மக்கள் பிரதிநிதித்துவம் குறைந்த மக்களாட்சி முறையாக காணப்படுகிறது. எனவே மக்களின் உண்மையான விருப்பத்தை பிரதிபலிக்காமல் இருக்க நேரிடுகிறது.