உராய்வின் வகைகள், உராய்வைப் பாதிக்கும் காரணிகள்,உராய்வின் நன்மைகள், உராய்வின் தீமைகள், உராய்வை அதிகரித்தல் மற்றும் குறைத்தல் - உராய்வு | 8th Science : Chapter 2 : Force and Pressure

   Posted On :  27.07.2023 12:29 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : விசையும் அழுத்தமும்

உராய்வு

1. உராய்வின் வகைகள் 2. உராய்வைப் பாதிக்கும் காரணிகள் 3. உராய்வின் நன்மைகள் 4. உராய்வின் தீமைகள் 5. உராய்வை அதிகரித்தல் மற்றும் குறைத்தல்

உராய்வு

நாம் தரையின் மீது நடக்கும்போது கீழே விழாமல் நடக்கிறோம். ஆனால், ஈரமான தளங்களின் மீது நடக்கும்போது கீழே விழ வாய்ப்பு உள்ளது. ஏன்? நமது கால்களுக்கும் தரைக்கும் இடையே காணப்படும் உராய்வு விசை காரணமாகவே. நாம் கீழே விழாமல் நடக்க முடிகிறது. ஆனால், ஈரமான தளத்தின்மீது நடக்கும்போது இந்த உராய்வு விசை குறைவாக இருக்கும். எனவே, நாம் கீழே விழுவதற்கு வாய்ப்பு உள்ளது.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒன்றையொன்று தொடும் பொருள்கள் ஒன்றைச் சார்ந்து மற்றொன்று இயங்கும்போது அல்லது இயங்க முயற்சிக்கும்போது அவற்றிற்கு இடையே உராய்வு அல்லது உராய்வு விசை உருவாகிறது. உராய்வு விசையானது எப்போதும் பொருளின் இயக்கத்திற்கு எதிர்த்திசையில் செயல்படும். ஒப்புமை இயக்கத்தில் இருக்கும் பொருள்களின் ஒழுங்கற்ற வடிவியல் பரப்பின் காரணமாக இந்த உராய்வு விசை உருவாகிறது. உராய்வு பின்வரும் விளைவுகளை ஏற்படுத்துகிறது.

•  உராய்வு இயக்கத்தை எதிர்க்கிறது.

•  உராய்வு தேய்மானத்திற்குக் காரணமாக இருக்கிறது.

•  உராய்வு வெப்பத்தை உருவாக்குகிறது.

 

1. உராய்வின் வகைகள்

உராய்வானது இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது. அவை, நிலை உராய்வு மற்றும் இயக்க உராய்வு ஆகும்.

நிலை உராய்வு

ஓய்வு நிலையில் இருக்கும் பொருள்களில் காணப்படும் உராய்வு நிலை உராய்வு எனப்படும். எ.கா: புவியிலுள்ள பொருள்கள் அனைத்தும் ஓய்வுநிலையில் நிலையாக உள்ளன.

இயக்க உராய்வு

பொருள்கள் இயக்கத்தில் இருக்கும்போது ஏற்படும் உராய்வு இயக்க உராய்வு எனப்படும். இயக்க உராய்வானது நழுவு உராய்வு மற்றும் உருளும் உராய்வு என மேலும் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது.

ஒரு பொருள் மற்றொரு பொருளின் மேற்பரப்பில் நழுவும்போது இரண்டு பொருள்களின் பரப்புகளுக்கு இடையே உருவாகும் உராய்வு நழுவு உராய்வு எனப்படும். ஒரு பொருள் மற்றொரு பொருளின் மேற்பரப்பில் உருளும் போது அந்த இரண்டு பொருள்களின் மேற்பரப்புகளுக்கு இடையே உருவாகும் உராய்வு உருளும் உராய்வு எனப்படும். உருளும் உராய்வு நழுவு உராய்வை விட குறைவாக இருக்கும். இதன் காரணமாகவே வாகனங்கள்,தள்ளுவண்டிகள்மற்றும் பெட்டிகளில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 

2. உராய்வைப் பாதிக்கும் காரணிகள்

உராய்வைப் பாதிக்கும் காரணிகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


அ. பரப்பின் தன்மை

சொரசொரப்பன பரப்பின்மீது ஒரு பொருளை நகர்த்துவது கடினமாக இருக்கும். ஆனால், வழவழப்பான பரப்பின்மீது அதனை எளிதாக நகர்த்த முடியும். ஏனெனில், பரப்பைப் பொருத்து உராய்வு வேறுபடுகிறது.


ஆ. பொருளின் எடை

மிதி வண்டியின் பின்புறம் எவ்வித பளுவும் எளிது. ஆனால், பளு ஏற்றப்பட்டவுடன் எடை ஏற்றப்படாதபோது மிதிவண்டியை ஓட்டுவது இதனால் மிதிவண்டியின் சக்கரத்திற்கும் சாலைக்கும் இடையேயான உராய்வு அதிகரிக்கிறது. எனவே, மிதிவண்டியை ஓட்டுவது கடினம்.


இ. தொடு பரப்பு

ஒரு குறிப்பிட்ட எடை உள்ளபோது, உராய்வானது ஒன்றையொன்று தொடும் ஒரு பரப்புகளின் பரப்பளவைப் பொருத்து உள்ளது. தொடு பரப்பு அதிகமாக இருந்தால் உராய்வும் அதிகமாக இருக்கும்.

சாலை உருளியின் (Road roller) உருளை அதிக தொடுபரப்பைப் பெற்றுள்ளதால், அது அதிக உராய்வைத் தருகிறது. ஆனால், மிதி வண்டியின் மெல்லிய சக்கரத்தின் தொடு பரப்பு சிறியதாக இருப்பதால் அது குறைவான உராய்வைப் பெறுகிறது.

 

3. உராய்வின் நன்மைகள்

உராய்வானது நமது அன்றாட செயல்பாடுகளில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அன்றாட வாழ்வின் பெரும்பாலான நிகழ்வுகளில் உராய்வு விரும்பத்தக்கதாக உள்ளது.

• உராய்வின் காரணமாகவே எந்தவொரு பொருளையும் நம்மால் பிடிக்க முடிகிறது.

• உராய்வின் காரணமாகவே நம்மால் சாலைகளில் நடக்க முடிகிறது. காலணி மற்றும் தரைக்கு இடையிலான உராய்வு விசை, நாம் கீழே விழாமல் நடக்க உதவுகின்றது.

• உராய்வின் காரணமாகவே பேனா மூலம் நாம் காகிதத்தில் எழுத முடிகிறது.

• சக்கரத்திற்கும் சாலைக்கும் இடையேயான உராய்வு விசை காரணமாகவே வாகனங்கள் பாதுகாப்புடன் நகர்கின்றன. இயங்கும் வாகனத்தை நிறுத்த தடையைச் செலுத்தும் போது உராய்வின் காரணமாகவே வாகனம் ஓய்வு நிலைக்கு வருகிறது.

• தீக்குச்சியை உரசிப் பற்றவைப்பது, துணியைத் தைப்பது, முடிச்சுக்களைப் போடுவது, சுற்றில் ஆணியை அடிப்பது அனைத்திற்கும் உராய்வே காரணமாக உள்ளது.

உராய்வின் உதவியால் அன்றாட வாழ்வில் பெரும்பாலான வேலைகளை எளிதாக செய்ய முடிந்தாலும், இதனால் சில தீய விளைவுகளும் ஏற்படுகின்றன. எனவே, உராய்வை தேவையான தீமை என்றழைக்கின்றனர்.

 

4. உராய்வின் தீமைகள்

• இயந்திரங்களின் பற்சட்ட அமைப்பு, திருகுகள் மற்றும் காலணிகளின் அடிப்பாகம் போன்றவை பிறபொருள்களின்மீது உரசி தேய்க்கப்படுவதால் அவை தேய்மானம் அடைகின்றன.

• உராய்வைத் தவிர்ப்பதற்காக கூடுதல் திறன் கொண்ட இயந்திரங்களை இயக்குவதால் அதிகமான ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது.

• உராய்வு வெப்பத்தை உருவாக்குவதால் கருவிகள் உடைந்து பழுது ஏற்படுகிறது.

 

5. உராய்வை அதிகரித்தல் மற்றும் குறைத்தல்


அ. தொடுபரப்பு

தொடுபரப்பை அதிகரிப்பதன் மூலம் உராய்வை அதிகரிக்கலாம். உதாரணமாக, மிதிவண்டியின் சக்கரத்தின் உள்விளிம்பிற்கு மிகவும் அருகில் தடைக் கட்டைகளை அமைப்பதன் மூலம், தடையைச் செயல்படுத்தப்படும்போது உராய்வு அதிகரித்து மிதிவண்டி உடனே ஓய்வு நிலையை அடையும்.


ஆ. உயவுப் பொருள்களைப் பயன்படுத்துல்

உராய்வைக் குறைக்க பயன்படுத்தப்படும் பொருள் உயவுப் பொருள் எனப்படும். எ.கா: கிரீஸ், தேங்காய் எண்ணெய், கிராஃபைட், விளக்கெண்ணெய் முதலியன. ஒன்றையொன்று தொடர்புகொண்டுள்ள இரண்டு பொருள்களின் ஒழுங்கற்ற பரப்புகளுக்கு இடையில் உயவுப் பொருள்கள் சென்று அவற்றிற்கிடையே ஒரு வழவழப்பான உறை உருவாகிறது. இது இரு பரப்புகளுக்கு இடையேயான நேரடித் தொடர்பைத் தடுத்து உராய்வைக் குறைக்கிறது.


இ. பந்து தாங்கிகளைப் பயன்படுத்துதல்

உருளும் உராய்வு நழுவு உராய்வை விட குறைவாக இருப்பதால் பந்து தாங்கிகளைக் கொண்டு நழுவு உராய்வை உருளும் உராய்வாக மாற்றலாம். இந்தக் காரணத்திற்காகவே மிதிவண்டிகளின் சக்கர அச்சில் காரீயத்தினாலான பந்துத் தாங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.

Tags : Types, Factors affecting, Advantages, Disadvantages, Increasing and decreasing Friction உராய்வின் வகைகள், உராய்வைப் பாதிக்கும் காரணிகள்,உராய்வின் நன்மைகள், உராய்வின் தீமைகள், உராய்வை அதிகரித்தல் மற்றும் குறைத்தல்.
8th Science : Chapter 2 : Force and Pressure : Friction Types, Factors affecting, Advantages, Disadvantages, Increasing and decreasing Friction in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : விசையும் அழுத்தமும் : உராய்வு - உராய்வின் வகைகள், உராய்வைப் பாதிக்கும் காரணிகள்,உராய்வின் நன்மைகள், உராய்வின் தீமைகள், உராய்வை அதிகரித்தல் மற்றும் குறைத்தல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : விசையும் அழுத்தமும்