Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | இலக்கணம்: அணி இலக்கணம்

இயல் 9 | 8 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: அணி இலக்கணம் | 8th Tamil : Chapter 9 : Kuntraena nimirnduneel

   Posted On :  17.07.2023 07:21 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில்

இலக்கணம்: அணி இலக்கணம்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில் : இலக்கணம்: அணி இலக்கணம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஒன்பது

கற்கண்டு

அணி இலக்கணம்


செய்யுளுக்கு அழகு தருவனவாகிய அணிகள் சிலவற்றை முன் வகுப்புகளில் கற்றோம். இன்னும் சில அணிகளை இங்குக் கற்போம்.

பிறிது மொழிதல் அணி

மலையப்பன் சிறந்த உழைப்பாளி. ஆனால் தனது உடல்நலத்தில் அக்கறை காட்ட மாட்டான். அதனால் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். ஒருமுறை நோயுற்றிருந்த அவனைப் பார்க்கவந்த அவனது உறவினர் ஒருவர், "தம்பி சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். இதை நன்றாகப் புரிந்துகொள்" என்றார். மலையப்பன், "எனக்கும் இப்போதுதான் புரிகிறது. இனி நான் என் உடல்நலத்தில் போதிய அக்கறை செலுத்துவேன்" என்றான்.

இப்பகுதியைப் படித்துப் பாருங்கள். "சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அதுபோல உடல் நலமாக இருந்தால்தான் உழைக்க முடியும்"என்று சொல்லவந்த உறவினர் உவமையை மட்டுமே கூறினார். அவர் சொல்லவந்த கருத்தை மலையப்பன் தானாகப் புரிந்துகொண்டான். இவ்வாறு உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணரவைப்பது பிறிதுமொழிதல் அணி எனப்படும்.

(எ.கா) கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து

இத்திருக்குறள்,"நிலத்தில் ஓடும் தேர் கடலில் ஓடாது. கடலில் ஓடும் கப்பல் நிலத்தில் ஓடாது என்று உவமையை மட்டும் கூறுகிறது. இதன்மூலம் ஒவ்வொருவரும் தமக்கு உரிய இடத்தில் வெற்றி பெறமுடியும்; தமக்குப் பொருத்தமில்லாத இடத்தில் வெற்றிபெறுதல் இயலாது என்னும் கருத்தை நாம் உணர்ந்துகொள்கிறோம். எனவே இக்குறட்பாவில் பிறிதுமொழிதல் அணி இடம்பெற்றுள்ளது.

வேற்றுமை அணி

தேனும் வெள்ளைச்சர்க்கரையும் இனிப்புச்சுவை உடையவை. அவற்றுள், தேன் உடலுக்கு நன்மை செய்யும்; வெள்ளைச் சர்க்கரை உடலுக்குத் தீங்கு செய்யும்.

இப்பகுதியைக் கவனியுங்கள். வெள்ளைச்சர்க்கரைக்கும் தேனுக்கும் இடையே ஒற்றுமையும் உண்டு; வேற்றுமையும் உண்டு. இரண்டும் இனிப்புச்சுவை உடையவை என்பது ஒற்றுமை. ஒன்று உடலுக்கு நன்மை செய்யும்; இன்னொன்று தீங்கு செய்யும் என்பது வேற்றுமை. இவ்வாறு இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி எனப்படும்.

எ.கா.) தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு.

இத்திருக்குறளில் முதலில் நெருப்பு, கொடுஞ்சொல் ஆகிய இரண்டும் சுடும்தன்மை உடையவை என்று கூறப்படுகிறது. பின்னர், நெருப்பினால் சுட்ட காயம் ஆறிவிடும்; உள்ளத்தில் ஏற்பட்ட வடு ஆறாது என்று இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு கூறப்படுகிறது. எனவே இது வேற்றுமை அணி ஆகும்.

இரட்டுறமொழிதல்அணி

காலில் காயத்திற்குக் கட்டுப்போட்டிருந்த இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். "எந்த ஊருக்குப் பயணச்சீட்டு வேண்டும்?" என்று நடத்துநர் கேட்டார். அதேநேரம் அருகிலிருந்தவர், "உன் காலில் எதனால் காயம் ஏற்பட்டது?' என்று கேட்டார். அவன், "செங்கல்பட்டு" என்று கூறினான். அவன் கூறியது இருவரின் வினாக்களுக்கும் பொருத்தமான விடையாக அமைந்தது. அவன் செல்ல வேண்டிய ஊர் செங்கல்பட்டு என்று நடத்துநர் புரிந்துகொண்டார். அவன் காலில் செங்கல் பட்டதால் காயம் ஏற்பட்டது என மற்றவர் புரிந்துகொண்டார். இவ்வாறு ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது இரட்டுறமொழிதல் என்னும் அணியாகும். இதனைச் சிலேடை என்றும் கூறுவர்.

(எ.கா)

ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும்

நாடுங் குலைதனக்கு நாணாது - சேடியே

தீங்காயது இல்லா திருமலைரா யன்வரையில்

தேங்காயும் நாயும்நேர் செப்பு

இப்பாடலின் பொருள் தேங்காய், நாய் ஆகிய இரண்டுக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது.

தேங்காயில் ஓடு இருக்கும்; தேங்காயின் உட்பகுதி வெண்மை நிறத்தில் இருக்கும்; தேங்காய் கோணல் இல்லாமல் குலையாகத் தொங்கும்.

நாய் சிலசமயம் ஓடிக்கொண்டிருக்கும்; சிலசமயம் ஓரிடத்தில் படுத்து இருக்கும்; அதன் வாயின் உட்பகுதி வெண்மையாக இருக்கும்; குரைப்பதற்கு வெட்கப்படாது.

இவ்வாறு இப்பாடல் இரண்டு பொருள் தரும்படி பாடப்பட்டுள்ளதால் இஃது இரட்டுறமொழிதல் அணி ஆகும்.

Tags : Chapter 9 | 8th Tamil இயல் 9 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 9 : Kuntraena nimirnduneel : Grammar: Ani ilakkanam Chapter 9 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில் : இலக்கணம்: அணி இலக்கணம் - இயல் 9 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில்