Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | வாழ்வியல்: திருக்குறள்

இயல் 9 | 8 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள் | 8th Tamil : Chapter 9 : Kuntraena nimirnduneel

   Posted On :  17.07.2023 07:24 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில்

வாழ்வியல்: திருக்குறள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில் : வாழ்வியல்: திருக்குறள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

திருக்குறள்

 

12. நடுவுநிலைமை

 

1. தகுதிஎன ஒன்று நன்றே பகுதியான்

பாற்பட்டு ஒழுகப் பெறின்.

2. செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி

எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.

3. நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே ஒழிய விடல்.

4. தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும்.

5. கேடும் பெருக்கமும் இல்அல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க்கு அணி.

6. கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்

நடுவொரீஇ அல்ல செயின்.

7. கெடுவாக வையாது உலகம் நடுவாக

நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

8. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி.

9. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறின்.

10. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்.

 

28. கூடா ஒழுக்கம்

1. வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் தங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.

2. வான்உயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்

தான்அறி குற்றப் படின்.

3. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

4. தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

5. பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றுஎற்றுஎன்று

ஏதம் பலவும் தரும்.

6. நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணார் இல்.

7. புறம்குன்றி கண்டனைய ரேனும் அகம்குன்றி

மூக்கில் கரியார் உடைத்து.

8. மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி

மறைந்துஒழுகு மாந்தர் பலர்.

9. கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன

வினைபடு பாலால் கொளல்.

10. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்.

 

41. கல்லாமை

1. அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய

நூல்இன்றிக் கோட்டி கொளல்.

2. கல்லாதான் சொல்கா முறுதல் முலைஇரண்டும்

இல்லாதாள் பெண்காமுற்று அற்று.

3. கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லாது இருக்கப் பெறின்.

4. கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்

கொள்ளார் அறிவுடை யார்.

5. கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

சொல்லாடச் சோர்வு படும்.

6. உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களர்அனையர் கல்லா தவர்.

7. நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவை அற்று.

8. நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார்கண் பட்ட திரு.

9. மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு.

10. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்.

 

44. குற்றங்கடிதல்

1. செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம் பெருமித நீர்த்து.

2. இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா

உவகையும் ஏதம் இறைக்கு.

3. தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்

கொள்வர் பழிநாணு வார்.

4. குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

அற்றம் தரூஉம் பகை.

5. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.

6. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்

என்குற்றம் ஆகும் இறைக்கு.

7. செயற்பால செய்யாது இவறியான் செல்வம்

உயற்பாலது அன்றிக் கெடும்.

8. பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்

எண்ணப் படுவதுஒன்று அன்று.

9. வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை.

10. காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

ஏதில ஏதிலார் நூல்

 

50. இடனறிதல்

1. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடங்கண்ட பின்அல் லது.

2. முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்

ஆக்கம் பலவும் தரும்.

3. ஆற்றாரும் ஆற்றி அடுப இடன்அறிந்து

போற்றார்கண் போற்றிச் செயின்.

4. எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன்அறிந்து

துன்னியார் துன்னிச் செயின்.

5. நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற.

6. கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்

நாவாயும் ஓடா நிலத்து.

7. அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை

எண்ணி இடத்தால் செயின்.

8. சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்

ஊக்கம் அழிந்து விடும்.

9. சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர்

உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.

10. கால்ஆழ் களரின் நரிஅடும் கண்அஞ்சா

வேல்ஆழி முகத்த களிறு.

 

52. தெரிந்து வினையாடல்

1. நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையான் ஆளப் படும்.

2. வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

ஆராய்வான் செய்க வினை.

3. அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்

நன்குடையான் கட்டே தெளிவு.

4. எனைவகையால் தேறியக் கண்ணும் வினைவகையால்

வேறாகும் மாந்தர் பலர்.

5. அறிந்துஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்

சிறந்தான்என்று ஏவற்பாற்று அன்று.

6. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு

எய்த உணர்ந்து செயல்.

7. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து

அதனை அவன்கண் விடல்

8. வினைக்குஉரிமை நாடிய பின்றை அவனை

அதற்குஉரியன் ஆகச் செயல்.

9. வினைக்கண் வினையுடையான் கேண்மைவேறு ஆக

நினைப்பானை நீங்கும் திரு.

10. நாள்தோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்

கோடாமை கோடாது உலகு.

 

55. செங்கோன்மை

1. ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை.

2. வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழும் குடி.

3. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்.

4. குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு.

5. இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட

பெயலும் விளையுளும் தொக்கு.

6. வேல்அன்று வென்றி தருவது மன்னவன்

கோல்அதூஉம் கோடாது எனின்.

7. இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின்.

8. எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

தண்பதத்தான் தானே கெடும்.

9. குடிபுறம் காத்துஓம்பிக் குற்றம் கடிதல்

வடுஅன்று வேந்தன் தொழில்.

10. கொலையின் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனோடு நேர்.

 

57. வெருவந்த செய்யாமை

1. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

2. கடிதுஓச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம்

நீங்காமை வேண்டு பவர்.

3. வெருவந்த செய்துஒழுகும் வெங்கோலன் ஆயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

4. இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்

உறைகடுகி ஒல்லைக் கெடும்.

5. அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்

பேஎய்கண்டு அன்னது உடைத்து.

6. கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் நெடுஞ்செல்வம்

நீடுஇன்றி ஆங்கே கெடும்.

7. கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்

அடுமுரண் தேய்க்கும் அரம்.

8. இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்

சீறின் சிறுகும் திரு.

9. செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்

வெருவந்து வெய்து கெடும்.

10. கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுஅல்லது

இல்லை நிலக்குப் பொறை.

 

65. சொல்வன்மை

1. நாநலம் என்னும் நலன்உடைமை அந்நலம்

யாநலத்து உள்ளதூஉம் அன்று.

2. ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்

காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு.

3. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்

4. திறன்அறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனினூஉங்கு இல்.

5. சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை

வெல்லும்சொல் இன்மை அறிந்து.

6. வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

மாட்சியின் மாசற்றார் கோள்.

7. சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

8. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்துஇனிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

9. பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற

சிலசொல்லல் தேற்றா தவர்.

10. இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது

உணரவிரித்து உரையா தார்.

 

72. அவையறிதல்

1. அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகைஅறிந்த தூய்மை யவர்.

2. இடைதெரிந்து நன்குஉணர்ந்து சொல்லுக சொல்லின்

நடைதெரிந்த நன்மை யவர்.

3. அவைஅறியார் சொல்லமேற் கொள்பவர் சொல்லின்

வகைஅறியார் வல்லதூம் இல்.

4. ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்

வான்சுதை வண்ணம் கொளல்.

5. நன்றஎன்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்

முந்து கிளவாச் செறிவு.

6. ஆற்றின் நிலைதளர்ந்து அற்றே வியன்புலம்

ஏற்றுஉணர்வார் முன்னர் இழுக்கு.

7. கற்றுஅறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்

சொல்தெரிதல் வல்லார் அகத்து.

8. உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்

பாத்தியுள் நீர்சொரிந்து அற்று.

9. புல்அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்அவையுள்

நன்கு செலச்சொல்லு வார்.

10. அங்கணத்துள் உக்க அமிழ்துஅற்றால் தம்கணத்தார்

அல்லார்முன் கோட்டி கொளல்.

 

78. படைச்செருக்கு

1. என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்ஐ

முன்நின்று கல்நின் றவர்.

2. கான முயல்எய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

3. பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால்

ஊராண்மை மற்றுஅதன் எஃகு.

4. கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா நகும்.

5. விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்துஇமைப்பின்

ஒட்டன்றோ வன்கண் அவர்க்கு.

6. விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்

வைக்கும்தன் நாளை எடுத்து.

7. சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்

கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

8. உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்

செறினும்சீர் குன்றல் இலர்.

9. இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே

பிழைத்தது ஒறுக்கிற் பவர்.

10. புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு

இரந்துகோள் தக்கது உடைத்து.

 

79. நட்பு

1. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு.

2. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்நீர பேதையார் நட்பு.

3. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு.

4. நகுதல் பொருட்டுஅன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தல் பொருட்டு.

5. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாம் கிழமை தரும்.

6. முகம்நக நட்பது நட்புஅன்று நெஞ்சத்து

அகம்நக நட்பது நட்பு.

7. அழிவின் அவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு.

8. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

9. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி

ஒல்லும்வாய் ஊன்று நிலை.

10. இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று

புனையினும் புல்லென்னும் நட்பு.

 

80. நட்பு ஆராய்தல்

1. நாடாது நட்டலின் கேடுஇல்லை நட்டபின்

வீடுஇல்லை நட்புஆள் பவர்க்கு.

2. ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும்.

3. குணனும் குடிமையும் குற்றமும் குன்றா

இனனும் அறிந்தியாக்க நட்பு.

4. குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்

கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

5. அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய

வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.

6. கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்.

7. ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்

கேண்மை ஒரீஇ விடல்.

8. உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க

அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

9. கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

உள்ளினும் உள்ளம் சுடும்.

10. மருவுக மாசற்றார் கேண்மை ஒன்றுஈத்தும்

ஒருவுக ஒப்பிலார் நட்பு.

 

97. மானம்

1. இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்

குன்ற வருப விடல்.

2. சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடு

பேராண்மை வேண்டு பவர்.

3. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய

சுருக்கத்து வேண்டும் உயர்வு.

4. தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை.

5. குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின்.

6. புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று

இகழ்வார்பின் சென்று நிலை.

7. ஒட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின் அந்நிலையே

கெட்டான் எனப்படுதல் நன்று.

8. மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை

பீடுஅழிய வந்த இடத்து.

9. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்.

10. இளிவரின் வாழாத மானம் உடையார்

ஒளிதொழுது ஏத்தும் உலகு.

 

100. பண்புடைமை

1. எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப யார்மாட்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.

2. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.

3. உறுப்புஒத்தல் மக்கள்ஒப்பு அன்றால் வெறுத்தக்க

பண்புஒத்தல் ஒப்பதாம் ஒப்பு.

4. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு.

5. நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்

பண்புள பாடறிவார் மாட்டு.

6. பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்.

7. அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கள்பண்பு இல்லா தவர்.

8. நண்பாற்றார் ஆகி நயம்இல செய்வார்க்கும்

பண்பாற்றார் ஆதல் கடை.

9. நகல்வல்லர் அல்லார்க்கு மாஇரு ஞாலம்

பகலும்பாற் பட்டுஅன்று இருள்.

10. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலம்தீமை யால்திரிந்து அற்று.

வான்புகழ் வள்ளுவரின் அறக்கருத்துகள் மாணவரிடம் சென்று சேர வேண்டும். அதன்வழி நன்னெறிப் பண்புகள் மாணவரிடையே வளர வேண்டும் என்ற நோக்கில் திருக்குறளின் 150  பாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் எளிதில் படித்துப் பொருள் புரிந்துகொள்வதற்கு ஏற்றவகையில் குறட்பாக்களின் சிர்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன; அலைகிடுவதற்காக அல்ல.

 

திருக்குறள் கருத்துகளை மாணவர்களிடையே பரப்புவதற்கான வழிகாட்டுதல்கள்

நாள்தோறும் வழிபாட்டுக் கூட்டத்தில் திருக்குறளைப் பொருளுடன் கூறலாம்.

வகுப்பு வாரியாகத் திருக்குறன் ஒப்புவித்தல் போட்டி நடத்தவாம்.

இலக்கிய மன்றக் கூட்டங்களில் குறட்பாக்கள் தொடர்பான கதைகளைக் கூறலாம்.

திருக்குறள் கருத்துகளை விளக்கும் நாடகங்களை நடத்தச் செய்யலாம்.

திருக்குறள் கருத்துகனை விளக்கும் ஓவியப் போட்டியை நடத்தலாம்.

குறட்பாக்கள் தொடர்பான வினாக்களைத் தொகுத்து வினாடி வினா நடத்தலாம்.

சான்றோர் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்ச்சிகள் மூலம் திருக்குறன் கருத்துகளை விளக்கலாம்.

திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பை ஒரு மாணவர் கூற மற்றொருவர் அந்தக் குறளைச் சரியாக அடையாளம் கண்டு கூறுமாறு போட்டி வைக்கலாம்.

Tags : Chapter 9 | 8th Tamil இயல் 9 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 9 : Kuntraena nimirnduneel : Valviyal: Thirukkural Chapter 9 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில் : வாழ்வியல்: திருக்குறள் - இயல் 9 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில்