Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | உரைநடை: சட்டமேதை அம்பேத்கர்

இயல் 9 | 8 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: சட்டமேதை அம்பேத்கர் | 8th Tamil : Chapter 9 : Kuntraena nimirnduneel

   Posted On :  17.07.2023 07:13 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில்

உரைநடை: சட்டமேதை அம்பேத்கர்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில் : உரைநடை: சட்டமேதை அம்பேத்கர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஒன்பது

உரைநடை உலகம்

சட்டமேதை அம்பேத்கர்


நுழையும்முன்

தன்னலமற்ற தலைவர்கள் பலர் இந்திய விடுதலைக்குப் பாடுபட்டனர். அவர்கள் தமது தொண்டினால் மக்களின் மனத்தில் நீங்கா இடம் பெற்றனர். இந்திய மக்களுக்கு அரசியல் விடுதலையோடு, சமூக விடுதலையும் கிடைக்கும்போதுதான் இந்தியா முழுமையான விடுதலைபெற்ற நாடாக இருக்க முடியும் என்று கருதி உழைத்த தலைவர் ஒருவரைப் பற்றி அறிவோம்.


விடுதலைபெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும் விளங்கியவர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர். இவர் சமூகச் சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும் அரசியல் தத்துவமேதையாகவும் பகுத்தறிவுச் சிந்தனையாளராகவும் விளங்கினார். சிறந்த எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் மக்களால் போற்றப்பட்டார்.

பிறப்பு

அம்பேத்கர் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 14 ஆம் நாள் ராம்ஜி சக்பால் - பீமாபாய் இணையருக்குப் பதினான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவரது ஊர் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள இரத்தினகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்பவாதே என்பதாகும். இவருடைய தந்தை இராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.

கல்வி

அம்பேத்கர் சதாராவில் உள்ள பள்ளியில் தமது கல்வியைத் தொடங்கினார். இவர் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் பள்ளிப் பருவத்திலேயே பல அவமதிப்புகளுக்கு ஆளானார். மகாதேவ் அம்பேத்கர் என்ற ஆசிரியர், இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் என்னும் தம் பெயரைப் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார்.

1904 ஆம் ஆண்டு, இவருடைய குடும்பம் மும்பைக்குக் குடிபெயர்ந்தது. அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும் கல்வியை விடாமல் தொடர்ந்த அவர், 1997 ஆம் ஆண்டு தமது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு, பரோடா மன்னரின் உதவியுடன் மும்பைப் பல்கலைக்கழகத்தில் படித்து 1912 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் உயர்அலுவலராகவும் பணியாற்றினார்.

அமெரிக்காவில் உயர்கல்வி

பரோடா மன்னர் சாயாஜிராவ் உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா சென்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம், சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார். 1915 இல் பண்டைக்கால இந்திய வணிகம் என்ற ஆய்விற்காக முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றைப் படைத்தளித்தார். அதைச் சிறுபுத்தகமாகவும் வெளியிட்டார். அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல் இதுவே. பின்னர் இந்தியாவின் தேசியப்பங்கு வீதம் என்ற ஆய்வுக்காக, கொலம்பியா பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.

1920 ஆம் ஆண்டு பொருளாதாரப் படிப்பிற்காக இலண்டன் சென்றார். அங்கிருந்த பல நூலகங்களில் தமது பெயரைப் பதிவு செய்துகொண்டார்; நூலகம் திறக்கும் போது முதல்ஆளாக நுழைந்து மூடும்போது கடைசி ஆளாக வெளியேறுவார்; இத்தகைய அயராத உழைப்பின் பயனாக 1921 ஆம் ஆண்டு முதுநிலை அறிவியல் பட்டமும் 1923 ஆம் ஆண்டு ரூபாய் பற்றிய பிரச்சனை என்னும் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக முனைவர் பட்டமும் பெற்றார்; அதே ஆண்டில் சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.

சமூகப்பணிகள்

படிப்பை முடித்து இந்தியா திரும்பினார் அம்பேத்கர், இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்கப் போராட வேண்டும் என்றும் முடிவு செய்தார். 1924 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை என்ற அமைப்பை நிறுவினார். இவ்வமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும்

தெரிந்து தெளிவோம்

அம்பேத்கரின் பொன்மொழி

"நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு: இரண்டாவது தெய்வம் சுயமரியாதை: மூன்றாவது தெய்வம் நன்னடத்தை*

1930 ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் புறப்படும் முன் "என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ அதற்காகப் போராடுவேன்; அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனத்துடன் ஆதரிப்பேன்" என்று கூறினார்.

பூனா ஒப்பந்தம்

ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்படவேண்டும் என்று இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக, ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் ஒடுக்கப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த காந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக 1931 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் இருபத்து நான்காம் நாள் காந்தியடிகளும் அம்பேத்கரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாகப் பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தமே பூனா ஒப்பந்தம் எனப்பட்டது.

சுதந்திரத் தொழிலாளர் கட்சி

1935 ஆம் ஆண்டில் மாநில சுயாட்சி வழங்குவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலனைப் பாதுகாக்கத் தேர்தலில் போட்டியிட அம்பேத்கர் விரும்பினார்; சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கித் தேர்தலில் போட்டியிட்டார். அவர் வெற்றி பெற்றதுடன் அவரின் கட்சி வேட்பாளர்கள் பதினைந்து பேரும் வெற்றிபெற்றனர்.

தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர்

அம்பேத்கர் இந்தியச் சமூக அமைப்பில் நிலவிய சாதியமைப்பையும் தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்துத் தீவிரமாகப் போராடினார். ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழை 1927 ஆம் ஆண்டு துவங்கினார். சமத்துவச் சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் இவர் சமாஜ் சமாத சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார்: 1030 ஆம் ஆண்டு நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தினை நடத்தி வெற்றி கண்டார்.

தெரிந்து தெளிவோம்

இரட்டைமலை சீனிவாசன்

இந்தியர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதைப் பற்றி முடிவு செய்ய 1930 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் இங்கிலாந்தில் முதலாவது வட்டமேசை மாநாடு நடைபெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாளராக அம்பேத்கருடன் தமிழகத்தைச் சேர்ந்த இராவ்பகதூர் இரட்டைமலை சீனிவாசனும் கலந்துகொண்டார்.

அரசியல் அமைப்பில் அம்பேத்கரின் பங்கு

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் பதினைந்தாம் நாள் இந்தியா விடுதலை பெற்றது. ஜவகர்லால் நேரு தலைமையில் அமைந்த அரசில் அம்பேத்கர் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 29 ஆம் நாள் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafti committee) உருவாக்கப்பட்டது. இக்குழுவில், கோபால்சாமி, அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம்.முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி. பி. கைதான் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றனர். இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21-இல் ஒப்படைத்தது. அம்பேத்கர் தலைமையிலான சட்ட வரைவுக்குழு, அப்போது மக்களாட்சி நடைபெற்ற நாடுகள் பலவற்றிலிருந்து இந்திய நடைமுறைக்குப் பொருந்தும் சட்டக்கூறுகளை, இந்திய அரசியலமைப்பு வரைவில் சேர்த்தது.

தெரிந்து தெளிவோம்

அரசியல் அமைப்புச் சட்டம்

உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாக இந்தியா விளங்குகிறது. இந்நாட்டில் பல்வேறுபட்ட இன, மொழி, சமயங்களைச் சார்ந்த மக்கள் வாழ்கின்றனர். இவர்களை ஒன்றிணைக்க, ஆட்சி நடத்த அடிப்படையான சட்டம் தேவைப்படுகிறது. இச்சட்டத்தினையே அரசியலமைப்புச் சட்டம் என்பர். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அந்தந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டே இயங்குகின்றன. அஃது எழுதப்பட்டதாகவோ அல்லது எழுதப்படாததாகவோ இருக்கக்கூடும்.

இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, சோவியத்யூனியன், ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா முதலிய நாடுகளின் சட்டங்களையும் ஆராய்ந்து இந்திய நாட்டிற்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்புச் சட்டம், குடிமக்களின் உரிமைகளுக்குப் பலவகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்தது. இது மிகச்சிறந்த சமூக ஆவணம் என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்படுகிறது.

புத்த சமயம் மீது பற்று

அம்பேத்கர் புத்த சமயக் கொன்கைகளின் மீது ஈடுபாடு கொண்டார். இலங்கையில் நடைபெற்ற புத்தத் துறவிகள் கருத்தரங்கில் கலந்துகொண்ட அவர், உலகப் பௌத்த சமய மாநாடுகளிலும் கலந்துகொண்டார். 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் நாக்பூரில் இலட்சக்கணக்கான மக்களோடு புத்த சமயத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் எழுதிய புத்தரும் அவரின் தம்மமும் என்னும் புத்தகம் அவரது மறைவுக்குப் பின் 1957 ஆம் ஆண்டு வெளியானது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் உழைத்த அம்பேத்கர், 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் காலமானார். அவருடைய மறைவிற்குப் பின், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

Tags : Chapter 9 | 8th Tamil இயல் 9 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 9 : Kuntraena nimirnduneel : Prose: Sattamethai Ambedkar Chapter 9 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில் : உரைநடை: சட்டமேதை அம்பேத்கர் - இயல் 9 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில்