Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | துணைப்பாடம்: பால் மனம்

இயல் 9 | 8 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: பால் மனம் | 8th Tamil : Chapter 9 : Kuntraena nimirnduneel

   Posted On :  17.07.2023 07:19 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில்

துணைப்பாடம்: பால் மனம்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில் : துணைப்பாடம்: பால் மனம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஒன்பது

விரிவானம்

பால் மனம்


 நுழையும்முன்

குழந்தை மனம் எல்லா உயிர்களையும் சமமாகக் கருதுவது; பிறர் துன்பம் கண்டு இரங்குவது; அதனை நீக்க முயல்வது. குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். சமூகம், பெற்றோர்களின் தாக்கத்தால் குழந்தைகனின் மன இயல்புகளில் ஏற்படும் மாற்றத்தை விளக்கும் கதை ஒன்றை அறிவோம்.

படைப்பின் நேர்த்தி வெகு விசித்திரமானது. அதில் மனிதனின் ஆரம்பக்கட்டமான குழந்தைப் பிராயம்தான் எத்தனை அழகு!

"கிருஷ்ணா!" என்று குரல் கொடுத்தவாறே குழந்தையைத் தேடினாள் மன்னி,

பிஞ்சு விரல்களால் ஜன்னலைப் பிடித்தவாறே நின்று தெருவைப் பார்த்துக்கொண்டிருந்த குழந்தை கிருஷ்ணா, தன் முகத்தைத் திருப்பிப் பார்த்தாள். ஈரம் பிதுங்கும் வெள்ளரிப் பிஞ்சாக முகம். சிறகுகளாகப் படபடக்கும் இமைகன். கண்ணாடி மணிகளாக உருளும் விழிகள். பூ தயம் போல் உதடுகள். ஒனியரும்புகளான பற்கள். நுங்கு நீரின் குளிர்ச்சியாகக் குரல். தெய்வ வடிவைச் சின்ன உடலில் சிறைப்பிடித்த களை. முகத்தில் எந்த நேரமும் உலகைப் புரிந்துகொள்ள முயலும் மனவளர்ச்சிக்கான ஒரு சிந்தனைச் சாயல்.

"அம்மா! அதோ பாரம்மா, நாய்க்குட்டி!" அவள் பிஞ்சு விரல் காட்டிய இடத்தில் குப்பைத் தொட்டியோரம் ஒரு சொறிநாய் படுத்திருந்தது.

"சீ! அது அசிங்கம்! நம்ம நாய்க்குட்டி 'டாமி'யைப் பார். அழகாக, சுத்தமாக.."

"அம்மா! அந்த நாய்க்கும் சோப்புப் போட்டுக் குளிப்பாட்டினா என்னம்மா?"

"அது தெரு நாய். அதைத் தொடப்படாது."

"ஏன் தொடப்படாது? நம்ப நாயை மட்டும் தொடலாமா?"

"அப்பா திட்டுவாங்க" என்று முத்தாய்ப்பு வைக்க முயன்றாள் மன்னி.

குழந்தையா விடுவாள்? "அப்பா, திட்டாட்டா தொடலாமா அம்மா?" என்று தன் கேள்வியைத் தொடர்ந்ததும் நான் அடக்க முடியாமல் சிரித்துவிட்டேன்.

மன்னி என்னிடம் குறைப்பட்டுக் கொண்டாள். "பாரேன் ராமு! இவன் கேள்விக்குப் பதில்சொல்லவே ஒரு தனி ஆள் போட வேண்டியதுதான்! உம்! நீ படி. இவள் இப்படிப் பேசினால் நீ படிக்கிறதெங்கே?... வாம்மா, கிருஷ்ணா! உள்ளே போகலாம். சித்தப்பா படிக்கட்டும்."


எனக்குப் படிக்க ஓடவில்லை. குழந்தைக்குத் தெரு நாயும் வீட்டு நாயும் வேறில்லை என்ற சமரச நோக்கா? அல்லது இத்தகு சந்தேகங்களின் மூலம் உலகை அறிய முயலும் ஆவலா?

காலையில் கீரை கொண்டு வரும் பாட்டியைக் கண்டதும் கிருஷ்ணா உற்சாகமாக ஓடினாள்.

'கிருஷ்ணா! கிழவியைப் போய்த் தொடாதே. உடம்பு சரியில்லாதவள்" என்று மன்னி கூவினாள்.

அவள் குரலிலிருந்த கண்டிப்பால் திகைப்படைந்த குழந்தை என்னைப் பார்த்தாள். "அப்பாவுக்கு உடம்பு சரியில்லாதப்போ நீ தொடலியா சித்தப்பா?"

நான் கிருஷ்ணாவைத் தூக்கிக் கொண்டேன். "சமர்த்தா அம்மா சொன்னபடி கேட்டா, சாயந்திரம் காந்தி மண்டபம் அழைச்சுக்கிட்டு போவேன்."

"நிஜம்மாவா சித்தப்பா?"

"ஆமாம்!"

சொன்னபடியே அன்று மாலை கிருஷ்ணாவைக் காந்தி மண்டபத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தேன். கைவண்டியை நிறைந்த பாரத்துடன் நெம்பி இழுத்தவாறே சென்றுகொண்டிருந்தார் ஒருவர்.

"சித்தப்பா! பாவம் அவர்! காலிலே செருப்பே போடலை சித்தப்பா! கல் குத்துமே, வெயில் சுடுமே! என்னோட செருப்பு அவருக்குச் சின்னது! உன் செருப்பைக் குடுத்துடு சித்தப்பா! நீதான் பூட்ஸ் வச்சிருக்கியே...!"

குழந்தையின் குரலிலிருந்த உருக்கத்தையும், துன்பம் கண்டு பொறாத மனத்தையும் கண்டு நான் நெகிழ்ந்தேன். அவளை அப்படியே வாரி அணைத்துக் கொண்டேன். குழந்தையா பேசுகிறாள்?

"செருப்பைக் குடுத்திடு சித்தப்பா."

"அவர் தூரப்போயிட்டார். இன்னொரு நாள் குடுத்துக்கலாம்" என்று அவளைச் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தேன்.

கோடைமழை கொட்டிக்கொண்டிருந்தது. தெருவெல்லாம் ஈர நசநசப்பு. மரங்களும் செடிகளும் மண்ணும் குளிர்ந்து கிடந்தன. இரவின் அமைதியை மழையும் சில்வண்டுகளின் ரீங்காரமும் தவளைகளின் சத்தமும் அவ்வப்போது கலைத்த வண்ணம் இருந்தன.

தெருவை ஒட்டிய வராந்தாவில் மழையின் குளிர் நடுக்கத்தைக் குரலில் பிரதிபவித்தவாறு இரண்டு சிறு ஆட்டுக்குட்டிகள் நின்றிருந்தன.

பொழுது விடிந்தது.

மன்னியின் குரல் பல் விளக்கிக்கொண்டிருந்த என்னை உசுப்பியது. "எங்கே, கைக்குழந்தைகிட்டே இருந்த பால் புட்டியைக் காணோம்? பால் வாங்கணும்னு போனேன். இரண்டுவாய் பால்தான் குழந்தை குடிச்சிருப்பான். புட்டியைக் கீழே வச்சிட்டுப் போயிருந்தேன். இங்கே காணோமே?"

எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. தெருக் கதவருகே ஓசையிடாது எட்டிப் பார்த்தேன். என் ஊகம் பொய்யாகவில்லை. என்ன விந்தை? உணர்ச்சியைக் கூறுபோட்டுக்கொள்ள அண்ணாவையும், மன்னியையும் ஓசையிடாது வரவழைத்துவிட்டுக் காமிராவையும் எடுத்து வந்தேன்.

மழைச்சாரலில் ஒன்றி நின்றதால் உரோமங்கள் நனைந்து கரும்பட்டாகப் படிந்திருக்க, இளம் குழவிகளாக நின்ற அந்த இரு அட்டுக்குட்டிகளில் ஒன்றின் வாயில் பால்புட்டியின் குமிழை வைத்துக் குழந்தை கிருஷ்ணா அதற்குப் பாலை ஊட்டிக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் அருள் வெள்ளம். முகத்தில் அன்பு நிழல். மனத்திலோ பொங்கிப் பெருகும் கருணைப்பரிவு. அந்த இரு சின்ன உயிர்களுக்கும் அவள் ஒரு தாயாகி விட்டாளா? அந்த உணர்ச்சிக்கு வேறு என்ன பெயர் சூட்டலாம்? வியப்புடன் நிற்கிறோம் நாங்கள்.

என் ஃபினாஷ் அந்தக் காட்சிக்கு நிரந்தர உருவம் தருகிறது. அப்போதும் குழந்தையின் ஈடுபாடு சிதறவில்லை.

"பாவம்மா ஆட்டுக்குட்டி! அதுக்கு யாரம்மா பால் தருவா? ராத்திரி பூரா சாப்பிடாமே இந்த ஆட்டிக்குட்டிக்கு ரொம்பப் பசிக்கும்மா?"


"நீதான் இருக்கியேடி!" என்று கிருஷ்ணாவை ஆரத் தழுவிக் கொண்டே மன்னி அவள் கன்னங்களில் மாறி மாறி முத்தமழை பொழிந்தாள்.

அதே சமயம் குழந்தை கிருஷ்ணா தனக்கென்று பெற்றிருந்த இரக்க சுபாவம். கருணைமனம் இவற்றைக் கண்டு மன்னி ரொம்பவும் வருத்தப்பட ஆரம்பித்தாள். இப்படியிருக்கிறாளே, தம்பிக்கு வைத்திருந்த பாலை வீணாக்குகிறோமே என்று தெரியவில்லையே, எப்படி இந்த உலகத்திலே பேர் சொல்லப் போகிறாள்? ஓரொரு குழந்தைக எப்படிச் சமர்த்தாக இருக்கிறதுகள்!" என்று பேச ஆரம்பித்துவிட்டாள்.

"குழந்தைதானே அவன்! வளர்ந்தால் சரியாகிவிடும்" என்றேன் நான். மனதுக்குள் மட்டும் அவனைப் பற்றிய பெருமிதம் தங்கியிருந்தது.

காலப்பூங்காவில் ஐந்து வசந்தங்கள் வண்ண ஜாலம் செய்து மறைந்தன. அண்ணா ஊர் ஊராக மாறிக்கொண்டிருந்தார், நான் சென்னையிலேயே தங்கிப் படிப்பை முடித்தேன். அதன்பின் வாழ்க்கைக்கு நிலைத்த ஒரு வருமானம் தரும் உத்தியோகத்தையும் ஏற்றேன். என் முதல் சம்பளத்தைப் பெற்றுக்கொண்ட நான், அதை என் அண்ணாவின் கையில் தந்து வாழ்த்துப் பெறத் திருச்சிக்குப் புறப்பட்டேன்.

முதலில் என் நினைவுக்கு வந்தவள் குழந்தை கிருஷ்ணா. இப்போது எட்டு வயதிருக்குமே, பள்ளியில் படிப்பாள். எப்படிப் பேசுவாள்! எப்படி நடப்பாள்? என்னுள் இனிய கற்பனையாக அவள் நடையுடை பாவனைகள் பொங்கிப் பிரவகித்தன. என் டயரியில் பத்திரப்படுத்தியிருந்த அவள் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தேன். என்ன அழகான காட்சி! குழந்தை கிருஷ்ணா ஆட்டுக்குட்டிக்குப் பாலூட்டும் காட்சி நேற்று நடந்தாற்போல் தோன்றுகிறது.

கிருஷ்ணா என்னிடம் உடனே ஓடி வராமல் வெட்கத்துடன் நின்றிருந்தாள். சிறிது நேரத்திலேயே, பிரிந்திருந்ததால் ஏற்பட்ட வெட்கம் நீங்கப் பெற்றவளாய்ச் சகஜ பாவத்துடன் என்னுடன் பழகினாள்.

அன்று மாலை கிருஷ்ணாவை அழைத்துக்கொண்டு கடைத்தெருப்பக்கம் போனேன். தன் பள்ளியைப் பற்றி, கூடப் படிக்கும் மாணவிகளைப் பற்றி, அப்பாவும் அம்மாவும் வாங்கித் தந்த உடைகளைப் பற்றி அவள் கலகலப்பாகப் பேசிக்கொண்டே வந்தாள். நான் மகிழ்ச்சியாகக் கேட்டுக்கொண்டே வந்தேன். கிருஷ்ணா தொடர்ந்தாள். "ரவியைப் பாரு சித்தப்பா! பால்சாதத்தைத் தெருநாய்க்குப் போடறான், நம்ம 'டாமி'க்குத்தானே போடனும்?"

நான் குழந்தையைப் பார்த்தேன். அவள் வளர்ந்துவிட்டாள். உலகைப் போலவே மற்றவர்களைப்பற்றி நினைக்கக் கற்றுக்கொண்டாள். ஆனால் என்னுள் மகிழ்ச்சி எழவேயில்லை. சிரிப்பதைவிடச் சிந்திப்பதில் அதிகம் ஈடுபட்டிருந்த குழந்தை எப்படித்தான் மாறிவிட்டாள்?

தெருவில் கிருஷ்ணாவின் அட்டகாசச் சிரிப்பொலி கேட்கிறது. என்னவென்று எட்டிப்பார்த்தேன். எனக்கு அதிர்ச்சி! கல்லடிபட்ட ஆட்டுக்குட்டி, "ம்மே! ம்மே!" என்ற வேதனை முனகலோடு நொண்டியவாறே தத்தித் தத்தி ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்துக் கைகொட்டி நகைக்கிறாள் கிருஷ்ணா.

"கிருஷ்ணா! இப்படித்தான் ஆட்டுக்குட்டியைக் கல்லால் அடிக்கிறதா? நொண்டுகிறது பார்! முட்டாள்! இங்கே வா, சின்னக் குழந்தையில் இரக்கத்துடன் நடப்பாய். வளர வளர எல்லாம் போய்விட்டதா? உள்ளே போ!"

இயல்புக்கு மாறான சூழ்நிலையில் அகப்பட்டுக்கொண்டாற்போல் அவள் முகம் வாடியது.

வாசலில் சாலைவேலை செய்யும் கூலியாள் குடிக்கத் தண்ணீர் கேட்கிறார். அவரைப் 'போ போ' வென்று விரட்டுகிறாள் கிருஷ்ணா. "எப்பவும் இங்கேதான் கேட்பே, போ, நான் தர மாட்டேன்."

நான் கண்டிக்கக் குரவெடுக்கும்முன் மன்னியின் குரல் கேட்கிறது. "நேத்திக்கு வந்தவர் தானே? தினமும் ஒரு ஆள் தண்ணீர் கொடுக்க நிற்க வேண்டியதுதான். வேறே வேலை இல்லை."

"நான் விரட்டிட்டேன்மா!"

"அதுதான் சரி. சமர்த்து! உள்ளே வா!"

குழந்தை தெய்வீக மனம் படைத்திருந்தபோது சலித்த தாயார், சாதாரண உணர்வை ஏந்தியதும் புகழ்கிறாள். மலையருவி இமயப்போர்வையிலிருந்து விடுபட்டுப் பூமித் தூசியில் கலந்து விட்டதற்கு இத்தனை மகிழ்வா?

இப்பத்தான் சமர்த்தாமே! எம்மாதிரி பழக்குகிறோமோ அம்மாதிரிதான் பண்பு வளர்கிறது. இயற்கை உணர்வையே செயற்கை உணர்வாகத் திசை திருப்பிவிடும் நம் பழக்க வழக்கங்களுக்கு நாம்தான் பொறுப்பென்றால், நம்மைத் திசை மாற்றி அமைத்த பெற்றோர், நம் சமூகம் எல்லாம் பொறுப்பேற்க வேண்டியதுதான். குழந்தைகள் குப்பைகள் கலக்காத மாணிக்கங்கள்! அவற்றின் மனமொழி மெய்யைச் சூழலுக்கு ஏற்ப நாம்தான் திருத்தியமைக்கிறோம். அப்படி மாறாதவர்களை வெகுளி, அசடு என்கிறோம்.

அன்று ஆட்டுக்குட்டிக்குப் பசிக்குமே என்று பரிதாபப்பட்டுத் தம்பிக்கு வைத்திருந்த பால்புட்டியை எடுத்து ஊட்டிய குழந்தை இன்று கல்லால் அடித்து, அது நொண்டுவதைக் கண்டு கைகொட்டிச் சிரிக்கிறாள். தெருநாயையும் குளிப்பாட்டலாம் என்றவள், அதற்கு ஏன் பால்சோறு,நம் நாய்க்கே போடலாம் என்கிறாள். செருப்பில்லாமல் வண்டி இழுக்கும் கூலியாளைக் கண்டு மனம் வெதும்பி என் செருப்பைத் தரும்படி தூண்டியவன், சாலையில் வேலைசெய்யும் தொழிலாளியின் தாகத்துக்குத் தண்ணீர் தராமல் விரட்டுகிறாள்.

இனி, மன்னி பயப்பட வேண்டாம்! கிருஷ்ணா தனியே பஸ்ஸில் பள்ளிகூடம் சென்று படித்து வருகிறாள். சின்ன டிபன் பாத்திரத்தில் ஓர் உருண்டை தயிர்சாதம் மட்டும்

எடுத்துப்போய்ச் சாப்பிட்டுப் பசியை அடக்கக் கற்றுக்கொண்டான். இயந்திரமாக நாம் நிர்ணயித்த சட்டதிட்டங்களுக்குள் எவ்வித எதிர்ப்பும் இன்றி வயித்துக் கலந்து பழகிய

பசுவாகிவிட்டாள்!

"நீ பார்த்த கிருஷ்ணா ரொம்ப வளர்ந்துடலை? கெட்டிக்காரி ஆகிவிட்டான்!" அண்ணன் பெருமைப்படுகிறார்.

அருள் வடிவானவள், வெறும் லோகாயதச் சேற்றில் முனைத்த பூண்டாகிவிட்டாளே... அதை வளர்ச்சி என்று எப்படி ஏற்பது?

நான் என் கிருஷ்ணாவை, எனக்குப் பிடித்த உணர்வுகளை ஏந்தி நின்ற குழந்தையைக், காண வந்தேன். அவளைக் காணமுடியாத ஏமாற்றத்தோடு திரும்பிப் போகிறேன். அப்படிப்பட்டவளைக் காணமுடியாது என்ற உண்மை, என் கண்டத்துள் ஓர் இரகசிய வேதனையாக முட்டுகிறது.

கடவுளின் பிரதிநிதியாகக் குழந்தை பூமியில் ஜனிக்கிறது. ஆனால் மனிதனின் பிரதிநிதியாக உலகை விட்டு நீங்குகிறது!

 

நூல் வெளி


கோமகளின் இயற்பெயர் இராஜலட்சுமி, சிறுகதைகள், புதினங்கள், குறும்புதினங்கள், வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் முதலியவற்றை எழுதியுள்ளார். இவரது அன்னை பூமி என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருதினையும் பெற்றுள்ளார். உயிர் அமுதாய், நிலாக்கால நட்சத்திரங்கள், அன்பின் சிதறல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

பால் மனம் எனும் இக்கதை அ. வெண்ணிலா தொகுத்த மீதமிருக்கும் சொற்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Chapter 9 | 8th Tamil இயல் 9 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 9 : Kuntraena nimirnduneel : Supplementary: Paul manam Chapter 9 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில் : துணைப்பாடம்: பால் மனம் - இயல் 9 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில்