Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: உயிர்க்குணங்கள்

இறையரசன் | இயல் 9 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: உயிர்க்குணங்கள் | 8th Tamil : Chapter 9 : Kuntraena nimirnduneel

   Posted On :  17.07.2023 12:50 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில்

கவிதைப்பேழை: உயிர்க்குணங்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில் : கவிதைப்பேழை: உயிர்க்குணங்கள் - இறையரசன் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஒன்பது

கவிதைப்பேழை

உயிர்க்குணங்கள்


நுழையும்முன்

ஒவ்வொரு மனிதனிடமும் பலவகையான பண்புகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றுள் நற்பண்புகளும் உண்டு; தீய பண்புகளும் உண்டு. தீயனவற்றை விலக்கி, நல்லனவற்றை வளர்த்து வாழ்வாங்கு வாழ்வதே மனிதனின் கடமையாகும். மனிதனுக்குள் நிறைந்திருக்கும் பண்புகளைக் கன்னிப்பாவை என்னும் நூலின் பாடல்வழி அறிவோம்.

 

அறிவுஅருள் ஆசைஅச்சம்

அன்புஇரக்கம் வெகுளிநாணம்

நிறைஅழுக்காறு எளிமை

நினைவுதுணிவு இன்பதுன்பம்

பொறைமதம் கடைப்பிடிகள்

பொச்சாப்பு மானம் அறம்

வெறுப்புஉவப்பு ஊக்கம்மையல்

வென்றிஇகல் இளமைமூப்பு

மறவிஓர்ப்பு இன்னபிற

மன்னும்உயிர்க் குணங்கள்எல்லாம்

குறைவறப் பெற்றவள்நீ

குலமாதே பெண்ணரசி

இறைமகன் வந்திருக்க

இன்னும்நீ உறங்குதியோ

புறப்படு புன்னகைநீ

பூத்தேலோ ரெம்பாவாய்!

- இறையரசன்

 

சொல்லும் பொருளும்

நிறை - மேன்மை

பொறை - பொறுமை

பொச்சாப்பு - சோர்வு

மையல் - விருப்பம்

ஓர்ப்பு - ஆராய்ந்து தெளிதல்

அழுக்காறு - பொறாமை

மதம் - கொள்கை

இகல் - பகை

மன்னும் - நிலைபெற்ற

 

பாடலின் பொருள்

அறிவு, கருணை, ஆசை, அச்சம், அன்பு, இரக்கம், சினம், நாணம், மேன்மை, பொறாமை, எளிமை, நினைவு, துணிவு, இன்பம், துன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல், சோர்வு, மானம், அறம், வெறுப்பு, மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, பகை, இளமை, முதுமை, மறதி, அராய்ந்து தெளிதல் போன்றவை இவ்வுலகில் நிலைபெற்ற மனிதர்களிடம் உள்ள பண்புகளாகும். இவற்றையுடைய மனிதகுலத்தில் பிறந்த பெண்ணோ! நற்பண்புகள் எவையென அறிவுறுத்த இறைவனின் திருக்குமாரன் வந்தபின்னும் நீ உறங்கலாமா? உண்மையை உணர, புன்னகை பூத்து நீ புறப்படுவாயாக!

தெரிந்து தெளிவோம்

பாவை நூல்கள்

மார்கழித் திங்களில் பொழுது விடியும் முன்பே பெண்கள் துயிலெழுந்து, பிற பெண்களையும் எழுப்பிக்கொண்டு, ஆற்றுக்குச் சென்று நீராடி, இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு. இதனைப் பாவை நோன்பு என்பர் அவ்வாறு திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூலே திருப்பாவை.

இதேபோலச் சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் திருவெம்பாவை. இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்,

 

நூல் வெளி

இறையரசனின் இயற்பெயர் சே. சேசுராசா என்பதாகும். கல்லூரி ஒன்றில் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்தவர். ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி, கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியுள்ளார். அந்நூலில் இருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

Tags : by Irai arasan | Chapter 9 | 8th Tamil இறையரசன் | இயல் 9 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 9 : Kuntraena nimirnduneel : Poem: Uyir kunagal by Irai arasan | Chapter 9 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில் : கவிதைப்பேழை: உயிர்க்குணங்கள் - இறையரசன் | இயல் 9 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில்