இயல் 6 | 12 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: காப்பிய இலக்கணம் | 12th Tamil : Chapter 6 : Sirugai alaviya cool
இனிக்கும் இலக்கணம்
கலை – சு
காப்பிய இலக்கணம்
காப்பியம் என்று சொன்னதும் ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்களை மடமடவென்று சொல்லி விடுவீர்கள். காப்பியங்கள் என்பவை நீண்ட கதைப்போக்கு உடையவை என்பதை அறிந்திருப்பீர்கள். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி முதலிய நூல்களைக் கீழ்வகுப்புகளில் படித்தும் கதைகளைக் கேட்டும் இருப்பீர்கள். ஐம்பெருங்காப்பியங்களைப் போலவே ஐஞ்சிறுகாப்பிய வகைகளும் தமிழில் உண்டு என்பதை அறிவீர்கள? எதன் அடிப்படையில் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என வகைப்படுத்தப்படுகிறது?
பெயர்க்காரணமும் சொல்லாட்சியும்
காப்பியத்தை ஆங்கிலத்தில் EPIC என்பர். இது EPOS என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து தோன்றியது. EPOS என்பதற்குச் சொல் அல்லது பாடல் என்பது பொருள். இது வடமொழியில் காவியம் என வழங்கப்படுகிறது. காப்பியம் என்னும் சொல்லை, காப்பு + இயம் எனப் பிரித்து மரபைக் காப்பது, இயம்புவது, வெளிப்படுத்துவது என்றும் மொழியைச் சிதையாது காப்பது என்றும் காரணம் கூறுவர்.
சொல்லாட்சியும் நூல்களும்
ஐம்பெருங்காப்பியங்கள் என்ற வகைமை எப்போது தோன்றியது என்று அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. எனினும், உரைகளிலும் இலக்கிய நூல்களிலும் பஞ்சகாப்பியம், பஞ்சகாவியம் ஆகிய சொற்றொடர்களும் பெருங்காப்பிய நூல் வகைகளும் குறிக்கப்பட்டுள்ளன.
நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர், தம் உரையில் ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரையும் தமிழ்விடுதூது பாடிய புலவர் அந்நூலில் பஞ்சகாப்பியம் என்னும் சொற்றொடரையும் குறிப்பிடுகின்றனர். பொருள் தொகை நிகண்டு', திருத்தணிகை உலா ஆகிய நூல்கள், பெருங்காப்பியம் ஐந்து எனக் குறிப்பிட்டு அவற்றின் பெயர்களையும் வழங்கியுள்ளன. சிறுகாப்பியங்கள் ஐந்து என்று வழங்கும் வழக்கம் சி. வை. தாமோதரனார் காலத்திற்கு முன்பே இருந்துள்ளது என்பது அவர் பதிப்பித்த சூளாமணி (1895) பதிப்புரையிலிருந்து அறிய முடிந்தது.
காப்பியத்தைக் குறிக்கும் பிறபெயர்கள்
பொருட்டொடர்நிலைச் செய்யுள், கதைச்செய்யுள், அகலக்கவி, தொடர்நடைச் செய்யுள், விருத்தச் செய்யுள், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், மகாகாவியம்.
காப்பிய அமைப்பு முறை
காப்பியச் சிற்றுறுப்புகளாக காதை, சருக்கம், இலம்பகம், படலம் முதலானவை சிற்றுறுப்புகளாக அமைந்திருக்கின்றன. காண்டம் என்பது பல சிற்றுறுப்புகளின் தொகுதியாக உள்ள பேருறுப்பைக் (பெரும்பிரிவு) குறிக்கும்.
காதை - சிலப்பதிகாரம்,
மணிமேகலை சருக்கம் - சூளாமணி, பாரதம்
இலம்பகம் - சீவக சிந்தாமணி
படலம் - கந்தபுராணம், கம்பராமாயணம்
காண்டம் - சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
தண்டியலங்காரம் கூறும் காப்பிய இலக்கணம்
வடமொழியில் 'காவ்யதரிசம்' என்ற நூலைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட அணியிலக்கண நூல், 'தண்டியலங்காரமாகும்'. இந்நூலில் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்று இருவகையாகப் பிரிக்கப்பட்டுக் காப்பிய இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
காப்பியங்கள் ஒரேவகைச் செய்யுளாலும் அமையும்; பல்வகைச் செய்யுட்களாலும் அமையும்.
"பாவிகம் என்பது காப்பியப் பண்பே " (தண்டி. நூற்பா. 89) :
பெருங்காப்பியம்
1. வாழ்த்துதல், தெய்வத்தை வணங்குதல், வருபொருள் உரைத்தல் என்ற மூன்றில் ஒன்றினைத் தொடக்கத்தில் பெற்று வரும். அவற்றுள் இரண்டோ மூன்றோ வரலாம்.
2. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் பெருங்காப்பியத்தின் திரண்ட பொருளாக அமைந்திருக்க வேண்டும். எனினும் இவற்றுள் பாவிகத்திற்கு ஏற்றவண்ணம் ஒன்றும் பலவும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும்.
3. தன்னிகர் இல்லாத் தன்மை உடையவனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டிருத்தல்வேண்டும்.
4. மலை (1), கடல் (2), நாடு(3), நகர் (4), சிறுபொழுது (5-10), பெரும்பொழுது (11-16), கதிரவன் தோற்றம் (17), சந்திரனின் தோற்றம் (18) ஆகிய பதினெட்டு உறுப்புகளும் இயற்கை வருணனைகளாக அமைதல் வேண்டும்..
5. திருமணம் புரிதல், மக்களைப் பெற்றெடுத்தல், முடி சூடல் முதலான நிகழ்வுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
6. அமைச்சர்களுடன் கலந்துரையாடல், தூது செல்லல், போர்ப் புரிய படைகள் அணிவகுத்தல், போர்நிகழ்ச்சி, வெற்றி பெறுதல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெறுதல் வேண்டும்.
7. சந்தி எனப்படும் கதைப்போக்கு (தொடக்கம், வளர்ச்சி, விளைவு, முடிவு என்பவை ) வரிசைப்படி அமைந்திருக்க வேண்டும்.
8. அமைப்பு முறையில் பெருங்காப்பிய உட்பிரிவுகளுள் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்ற பெயர்களில் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.
9. எண்வகைச் சுவையும் மெய்ப்பாட்டுக் குறிப்புகளும் கேட்போர் விரும்பும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
சிலப்பதிகாரம் முதலான ஐம் பெருங்காப்பியங்களும் சிறப்பு வாய்ந்தவையே. எனினும், பெருங்காப்பியத்திற்குரிய நான்குவகை உறுதிப் பொருள்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அமையப்பெற்று விளங்கும் காப்பியம் சீவகசிந்தாமணியே என்பர்.
சிறுகாப்பியம்
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வருவது சிறுகாப்பியம் ஆகும்.
பாவிகம்
காப்பியத்தின் பண்பாகப் 'பாவிகம்' என்பதைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது காப்பியத்தில் கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்தினையே பாவிகம் என்பர். "பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப" என்பது கம்பராமாயணத்தின் பாவிகம். "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்" என்பது சிலப்பதிகாரத்தின் பாவிகம்.
ஒரு மொழியின் வளத்தைக் காப்பியங்களே புலப்படுத்தும் என்பர். எளிய நடை, இனியகதை, அழகியல், கற்பனை ஆகியவை ஒருசேர அமைந்த இலக்கிய வடிவமே காப்பியமாகும். காவியமானாலும் ஓவியமானாலும் இன்பம் தந்து வாழ்க்கையை உயர்த்த வேண்டும். இன்றைக்கு மனிதனுடைய எண்ணங்களும் சுவையுணர்ச்சியும் கற்பனை ஆற்றலும் விரிந்திருக்கின்றன. பண்பாட்டிற்கேற்ற மரபைத் தெரிந்துகொண்டு பழமைக்குப் புதிய உருவமும் புதுமைக்குப் பழைய உரமும் இணைந்த காப்பியங்கள் காலந்தோறும் தோன்றவேண்டும்.
அணிகளின் இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் முதன்மையானது தண்டியலங்காரம். இந்நூல் முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை ஆகிய செய்யுள் வகைகளைக் கூறுகிறது. இந்நான்கனுள் தொடர்நிலை என்னும் வகை, காப்பியத்தைக் குறிப்பதாகும்.
தொடர்நிலை ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள்வகையைக் குறிக்கும். இது பொருள்தொடர்நிலை, சொல்தொடர்நிலை என்று இருவகைப்படும்.
எ.கா. பொருள்தொடர்நிலை - சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
சொல்தொடர்நிலை - அந்தாதி இலக்கியங்கள்
✔ விருத்தம் என்னும் ஒரேவகைச் செய்யுளில் அமைந்தவை சீவக சிந்தாமணி, கம்பராமாயணம்.
✔ பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகைச் செய்யுள்களில் அமைந்தது சிலப்பதிகாரம்.
இருபதாம் நூற்றாண்டில் காப்பிய இலக்கணங்களுள் சிலவற்றைப் பின்பற்றி இயற்றப்பட்டதைக் குறுங்காப்பியம் அல்லது குறுங்காவியம் என்பர். இவற்றுள் சில, பிறமொழித் தழுவலாகவும் மொழிபெயர்ப்பாகவும் அமைந்துள்ளன.
பாரதியார்
பாஞ்சாலி சபதம்
குயில்பாட்டு
பாரதிதாசன்
பாண்டியன் பரிசு, தமிழச்சியின் கத்தி, இருண்ட வீடு, எதிர்பாராத முத்தம், சஞ்சீவி பர்வதத்தின் சாரல், வீரத்தாய், புரட்சிக்கவி
கவிமணி
மருமக்கள் வழி மான்மியம்
கண்ணதாசன்
ஆட்டனத்தி ஆதிமந்தி மாங்கனி, ஏசுகாவியம்
கவியோகி சுத்தானந்த பாரதியார்
பாரதசக்தி மகா காவியம்
புலவர் குழந்தை
இராவண காவியம்