Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 6 | 12 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 12th Tamil : Chapter 6 : Sirugai alaviya cool

   Posted On :  03.08.2022 08:43 pm

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ்

கேள்விகள் மற்றும் பதில்கள்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ் : கேள்விகள் மற்றும் பதில்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் - 6

சிறுகை அளாவிய கூழ்

கலை, அழகியல், புதுமைகள்


• உரைநடை - திரைமொழி 

• செய்யுள் - கவிதைகள் - நகுலன் 

செய்யுள் - சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்

செய்யுள் - மெய்ப்பாட்டியல் - தொல்காப்பியர் 

• துணைப்பாடம் - நடிகர் திலகம் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு 

• வாழ்வியல் - காப்பிய இலக்கணம்இயல் - 6

உரைநடை உலகம்

திரைமொழி


பாடநூல் வினாக்கள்


பலவுள் தெரிக

1. வேறுபட்டதைக் குறிப்பிடுக. 

அ) அண்மைக் காட்சித் துணிப்பு

ஆ) சேய்மைக் காட்சித் துணிப்பு 

இ) நடுக்காட்சித் துணிப்பு 

ஈ) காட்சி மறைவு

[விடை : ஈ) காட்சி மறைவு]


குறுவினா


1. பின்னணி இசை படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும்? சான்று தருக.

• திரைப்படத்தின் உணர்வுகளை வெளிக்கொணர உதவுவது பின்னணி இசையே. 

• பின்னணி இசைச் சேர்ப்பு, மவுனம் இவ்விரண்டும் சில வேளைகளில் திரையில் உணர்வுகளை வெளிக்கொணர உதவுகின்றன. 

• இசை பாத்திரங்களின் மனக்கவலைகள் அலைக்கழிப்புகள் ஆகியவற்றை எதிரொலிப்பதாகவும் இருத்தல் அவசியமானது.


சிறுவினா 


1. திரைப்படத்தின் காட்சியின் ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.

காட்சியின் முக்கியத்துவம்: 

• காட்சி என்பது கதை நகர்வுக்கு உதவுவது. 

• திரைப்படத்தின் காட்சிகள் சிறப்பாக அமைந்தால் வசனத்திற்கு இரண்டாம் இடம்தான். 

• திரைப்படத்தில் வசனம் இன்றிக் காட்சிகளை அடுத்தடுத்து வைப்பதன் மூலம் கதை சொல்லப்படும்.

சான்று: 

• முதல் காட்சியில் தோழி ஒருத்தி கதாநாயகியிடம் தொடர்வண்டிப் பயணச்சீட்டைக் கொடுப்பாள். 

• அடுத்தக் காட்சியில் கதாநாயகி தொடர்வண்டியில் இருப்பாள். 

• முதல் காட்சியில் எண் 7, வீரையா தெரு... என்று ஒருவர் முகவரியைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அந்த முகவரியில் சென்று காட்சி நிற்கும். 

இவ்விரண்டு தரவுகளிலும் காட்சி அமைப்பே ஆற்றல் உள்ளதாக வரையறுக்கப்பட்டுள்ளது. நெடுவினா 


1. திரைப்படத்துறை என்பது ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலா? அல்லது கலைகளின் சங்கமமா? உங்கள் பார்வையைக் கட்டுரையாக்குக. 

திரைப்படத்துறை - ஒரு கலை:

புதுமை வாழ்வில் எத்தனையோ அற்புதங்களைக் கண்டு மகிழ்கிறோம். நாடகத்தின் மறுமலர்ச்சியாக, மக்களை மயக்கும் கலையாக திரைப்படத்துறை தவிர்க்கமுடியாத ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இந்தத் துறை வளர்ச்சியின் பின்னால் எத்தனைத் துறைகள் அடங்கியிருப்பது பற்றி யாரும் திரும்பிப் பார்ப்பது கிடையாது.

சான்றாக, கதை, கதை-உணர்த்தும் நீதி, எண்ணத்தை ஈர்க்கும் வசனம், கதாநாயகன், நாயகிகள் தேர்வு, ஆடை அலங்காரம், இடங்கள் தேர்வு, புகைப்படக் கருவி, நடனக் குழுக்கள் என்று பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும். இதற்குள் எத்தனையோ நிகழ்வுகள் உள்ளன.

எல்லாக் கலைஞர்களும் அருகி வரும் நிலையில் இத்துறையின் வளர்ச்சி உயர்ந்த நிலையில் உள்ளது. ஒரு திரைப்படம் எடுக்க எத்தனை கோடிகள், எவ்வளவு செலவீனங்கள் என வளர்ந்து கொண்டே போகும். இதற்கு இடையில் குடும்பப் படங்கள், அரசியல் படங்கள், பக்திப் படங்கள் என்றும் பற்பல பிரிவுகளில் எடுக்கப்படுகின்றன.

இவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு பிரிவிலும் விற்பன்னர்கள் தேவைப்படுகிறார்கள். அதற்கென்று திரைப்படத்துறை சார்ந்த படிப்புகளும் உருவாகி உள்ளன. இத்துறையில் முழு ஈடுபாடு கொண்டால்தான் சிறக்கும்.

இதைப் பலகலைகளின் சங்கமம் என்றே கூறலாம். நடிகர்களின் நடிப்புக்கலை, ஒப்பனைக்கலை, வசனம் (பேச்சுக்கலை), (கேமரா) படமெடுப்பதில் கலையம்சம், ஒலிப்பதிவுக்கலை, ஒளிப்பதிவுக் குழு நடனக் கலை என ஒட்டுமொத்த கலைஞர்களால் மட்டும்தான் இது நடந்தேறி வருகிறது.

கணினி சம்பந்தப்பட்ட ஒத்துழைப்புகளாலும் உதவியாலும் இத்துறை மெருகூட்டப்படுகிறது. கண்டுபிடிப்புகள் அதிகமானாலும் கலையம்சம் நிறைந்தது திரைப்படத்துறையே. எனவே கலைகளின் சங்கமம் என்பது பொருத்தமானதே.

திரைப்படத்துறை ஆயிரம் பேரையல்ல, ஆயிரம் குடும்பங்களை வாழவைக்கிறது. கேளிக்கைகள் நிறைந்த இவ்வுலகில் திரைப்படத்துறைக்கு மட்டும் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஒப்பனைக்காரர்கள், ஆடை அலங்கார வல்லுநர்கள், ஆண்-பெண் நடனக் குழுக்கள், சண்டைக் காட்சிகளில் பங்குபெற எதிர்த்தலைவன் மற்றும் துணைவர்கள், உதவியாளர்கள் என எத்தனையோ ஆட்கள் இதை நம்பி இருக்கிறார்கள்.

திரைப்படத்துறையில் மட்டும் கால் வைத்து விட்டால் அவர்களுக்கு மற்ற தொழில் மறந்துவிடுகிறது. எல்லாம் இருந்தவர்கள் ஏன் இத்துறைக்கு வருகிறார்கள் என்று தெரிவதில்லை. சென்னை-கோடம்பாக்கத்தில் கலைத்துறை சார்ந்த குடும்பங்கள் ஆயிரக்கணக்கில் இதை நம்பியே  வாழ்ந்து வருகின்றன.

"ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் இறைப்பணி” என்பது போல அனைத்துக் கலைஞர்களுக்கும் வாழ்க்கையும் வாய்ப்பும் கொடுக்கும் துறையாக திரைப்படத்துறை திகழ்கிறது. இந்தக் கலையைக் கற்க முடியாது. பயிற்சியால்தான் பெற முடியும். மறவோம் கலைஞர்களை! மதிப்போம் கலைஞர்களை!
இயல் 6

செய்யுள்

கவிதைகள்

- நகுலன்


பாடநூல் வினாக்கள்


பலவுள் தெரிக

1. ஆர்ப்பரிக்கும் கடல் 

அதன் அடித்தளம் 

மௌனம்; மகாமௌனம் - அடிகள் புலப்படுத்துவது 

அ) இரைச்சல்

ஆ) குறைக்கும் கூத்தாடும் 

இ) நிரைகுடம் நீர்தளும்பல் இல்

ஈ) புற அசைவுகள் அகத்தினை அசைக்க இயலாது.

[விடை: இ) நிரைகுடம் நீர்தளும்பல் இல்]  


குறுவினா 


1. மூச்சு நின்றுவிட்டால் 

பேச்சும் அடங்கும் - கவிதைக்குப் பொருத்தமான பழமொழி ஒன்றை எழுதுக. 

• "எரிவதை நிறுத்தினால் கொதிப்பது தானே அடங்கும்" 

• “சான்றோர் கொள்கையும் மாண்டால் அடங்கும்”


சிறுவினா


1. கவிதை என்பது கண்முன் நிகழ்வதையும் மனதில் நிகழ்வதையும் தொடர்புபடுத்திச் சொற்சிமிழில் அடைக்கும் முயற்சியே என்பதை நகுலன் கவிதையைக் கொண்டு நிறுவுக. 

1. நிரந்தரமாக இருக்க எண்ணினோம்.

நிரந்தரமில்லாமல் சென்றுவிடுகிறோம். 

2. உயர்ந்த கொள்கைகளும் உயிர்போனால்

உதாசினப்படுத்தப்படும். 

3. உண்மைகள் எல்லாம் சில உண்மைகளைத் 

திரைமறைவு செய்வதற்கே. 

4. ஆர்ப்பரிப்பில் அடங்காத மனம் 

அமைதியில் அடங்கிவிடும். 

5. கடலின் உள்நிகழ்வே கடல் அலைகள்

மனதின் வெளிப்பாடே புறச்செயல்கள் 

• நகுலனின் கவிதைகளே இங்கே பேசப்பட்டுள்ளன. நகுலனின் கவிதையின் முழங்கு பொருளே இவை. 

• எனவே, கவிஞன் தான் நினைத்தவற்றைச் சொல்வடிவத்தில் சுருக்கிச் சொல்ல முற்படும்போது உதிர்ந்த முத்துக்களே இவை.


கற்பவை கற்றபின்


உங்களுக்குப் பிடித்த புதுக்கவிதைகள் சிலவற்றைத் தொகுத்து வகுப்பறையில் படித்துக் காட்டுக.

கடலில் புயல் சின்னம் 

மீனவர்க்குக் கவலை 

மாணவர்க்கு மகிழ்ச்சி


பகல் முழுவதும் கவலைகள் 

இரவு முழுவதும் கனவுகள்

மனிதன்


மண்ணின் மௌனத்தைக்

கலைத்தது 

மழைச்சாரலின் சத்தம்.இயல் 6

செய்யுள்

சிலப்பதிகாரம்

- இளங்கோவடிகள்


பாடநூல் வினாக்கள்


பலவுள் தெரிக

1. ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல் ________ தொடர்களில் வெளிப்படும் செய்திகள். 

1. மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள். 

2. ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள். 

அ) 1-சரி, 2-தவறு

ஆ) 1-தவறு, 2-சரி 

இ) 1-தவறு, 2-தவறு

ஈ) 1-சரி, 2-சரி 

[விடை : ஈ) 1-சரி, 2-சரி] 


2. பொருத்துக. 

அ) ஆமந்திரிகை - 1. பட்டத்து யானை 

ஆ) அரசு உவா - 2. மூங்கில் 

இ) கழஞ்சு - 3. இடக்கை வாத்தியம் 

ஈ) கழை - 4. எடை அளவு 

அ) 3, 1, 4, 2 

ஆ) 4, 2, 1, 3

இ) 1, 2, 3, 4 

ஈ) 4, 3, 2, 1 

[விடை : அ) 3, 1, 4, 2]


குறுவினா


1. ஒருமுக எழினி, பொருமுக எழினி குறிப்பு எழுதுக. 

ஒருமுக எழினி: 

நாட்டிய மேடையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்குச் செல்லுமாறு அமைக்கப்படும் ஒரு முகத்திரை 

பொருமுக எழினி: 

மேடையின் இருபுறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படும் பொருமுகத்திரை.


சிறுவினா


1. நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தைக் கூறுக. 

சிலம்பு காட்டும் நாட்டிய அரங்கத்திற்கான இடம் :

“எண்ணிய நூலோர் இயல்பினில் வழாஅது

மண்ணகம் ஒருவழி வகுத்தனர்” 

கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்பு மாறாத நன்னிலத்தை ஆடல் அரங்கிற்காகத் தேர்ந்தெடுத்தனர்.

மூங்கில் கொணர்தல் : 

பொதிகைமலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களில், ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கில்களைக் கொண்டு வந்தனர். 

ஆடல் அரங்கம் அமைத்தல் :

"நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்.” 

நூல்களில் கூறப்பட்ட முறையில் மூங்கில் கோல் அளவுகொண்டு அரங்கம் அமைத்தல். 

மூங்கில் அளவுகோல் : 

கைப்பெருவிரலில் இருப்பத்து நான்கு அளவு கொண்டதாக அம்மூங்கிலை வெட்டினர். அதை அரங்கம் அமைக்கும் கோலாகக் கொண்டனர். அதில் ஏழுகோல் அகலமும் எட்டுகோல் நீளமும், ஒருகோல் உயரமும் உடையதாக நாட்டிய அரங்கம் அமைக்கப்பட்டது.


கற்பவை கற்றபின்


பள்ளி விழாக்கள், ஊர்த்திருவிழா, பட்டிமன்றம், தொலைக்காட்சி நிகழ்வுகளுக்கான அரங்கம், அரசு விழாக்களுக்கான மேடை போன்றவற்றின் அரங்க அமைப்பு, ஒலி, ஒளி அமைப்பு, திரை அலங்காரம் குறித்துக் கலந்துரையாடுக.

பங்கு பெறுவோர் : நேசன், வாசன், ராசன்

நேசன் : நான் நேற்று எனது பள்ளியின் ஆண்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். அங்கு நான் கண்ட மேடை பற்றிக் கூறுகிறேன். தரையிலிருந்து பத்து அடி உயர மேடை போடப்பட்டிருந்தது. மேடையானது இருபது அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்டதாக இருந்தது. இருபுறத்திலிருந்து வருமாறும், மேலே ஏறுமாறும் திரைச்சீலைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேடையின் பின்பக்கமும் மற்ற இரண்டு பக்கங்களும் ஒரு தெருவுக்குள் நடந்து செல்வது போன்ற ஒரு (தெருக்களின்) ஓவியம் வரையப்பட்டிருந்தது. மேடையின் மேல் பக்கத்தில் வட்ட வடிவிலான ஓவியம் இருந்தது. மேடையின் முன்பக்க ஓரத்தில் இரண்டு ஒலி வாங்கிகள், மேடையின் முன் பக்கத்தில் வண்ண வண்ண ஒளிகளைப் பாய்ச்சும் சுழல் விளக்குகள், மேடையை ஒட்டி, இரு பெரும் ஒலி பெருக்கிகள் என அற்புதமாக மேடை அமைக்கப்பட்டிருந்தது.

வாசன் : இரண்டு நாட்களுக்கு முன் எங்கள் ஊர்த்திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். அங்கே பரதநாட்டிய மேடை அமைத்திருந்தார்கள். நான்கு அடி உயரத்தில் ஒரு மேடை. முன் பக்கம் தவிர மற்ற மூன்று பக்கங்களும் ஓவியம் தீட்டப்பட்ட துணிகளால் மறைக்கப்பட்டிருந்தன. மேலும் வண்ண விளக்குகளால் மேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேடையின் மேல் இருபுறமும் நட்டு வாங்கும், வாய்பாட்டு, மிருதங்கம், மோர்சிங், வீணை  வாசிப்பவர்களுக்கு எனக் கலைஞர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தன. 

ராசன் : எங்கள் ஊரில் பட்டிமன்ற நிகழ்வைப் பார்க்க நேற்று சென்றிருந்தேன். மிக உயரமான மேடை, கீழே தரை விரிப்பு, மேடையின் பின்பக்கம் அடைப்பில் நடுவர் மற்றும் பேச்சாளர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. மேடையின் இருபக்கங்களிலும் ஆயத்த ஒலிவாங்கி மேடைகள், கண்ணைப் பறிக்கும் ஒளி விளக்குகள், நடுவர் அமர்வதற்கு மிகப் பெரிய அமர்வு இருக்கை என்று பார்க்க அழகாக இருந்தது. 

நேசன் : ஆமாம் நண்பர்களே! முற்காலங்கள் போல் இல்லாமல் இன்று மேடைகள் அலங்காரமாகவும், விளக்கின் ஒளியில் பகல் போலவும், மேடையில் கண்ணைக் கவரும் சில ஓவியங்களும் தெளிவாக ஒலி வாங்கியினின்று வெளிவிடும் ஒலிப்பெருக்குப் பெட்டிகள் என இதைப் பற்றிய ஒரு பார்வை நம்மை வியக்க வைக்கிறது. அதுமட்டுமா, இத்தனையையும் அமைக்க அந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற கைவினைக் கலைஞர்கள், இவர்களின் ஒத்துழைப்பாலேயே இத்தகைய மேடைகள் கண்ணைக் கவருகின்றன. தெருக்கூத்தாக இருந்த மேடை இன்று திரைப்படத்தை நேரில் பார்க்கும் உளப்பாங்கினை உண்டாக்கும் அளவிற்கு மேடையில் வடிவமைக்கப்படுகின்றன. 

"ஆடத் தெரியாதவனுக்கு தெருக் கோணல் என்பானாம்” இந்தப் பழமொழி பொய்த்துவிட்டது இந்த நாளில்.இயல் 6

செய்யுள்

மெய்ப்பாட்டியல்

- தொல்காப்பியர்


பாடநூல் வினாக்கள்


குறுவினா


1. எண்வகை மெய்ப்பாடுகள் யாவை? 

• நகை (சிரிப்பு)

• அழுகை 

• இளிவரல் (சிறுமை)

• மருட்கை (வியப்பு) 

• அச்சம் (பயம்)

• பெருமிதம் (பெருமை) 

• வெகுளி (சினம்)

• உவகை (மகிழ்ச்சி) 

என்பன எண்வகை மெய்ப்பாடுகளாகும் - தொல்காப்பியர்.


சிறுவினா


1. ஏதேனும் இரண்டு மெய்ப்பாடுகள் தோன்றுவதற்கான சூழ்நிலையைக் கற்பனையாகப் படைக்க. 

வியப்பு : 

நீண்ட நாளாக எனக்கு கால் முட்டியில் வலி தீரவில்லை . என் உறவுக்காரர் பக்கத்து ஊர் தர்காவில் மௌலவி ஒருவர் ஓதுகிறார். உடல் நோயெல்லாம் தீர்ந்து விடுகிறது போய் பார் என்றார். நம்பிக்கையோடு சென்றேன். வரிசையில் நின்றேன். என் முறை வந்தது. ஒரே வியப்பு! அழுகையும் வந்தது. அங்கே ஓதுகின்ற மௌலவி என் வாப்பா (தந்தை). வெட்கமும் வேதனையும் வந்தது. வாப்பாவிடம் இப்படியொரு மகத்துவமா! 

பெருமை :

2004 ஆம் ஆண்டு கடலூரில் சுனாமியால் பாதிக்கப்பட்டு தன் தாய் தந்தையரை இழந்து அனாதையாக அரசுக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டாள். அந்தப் பெண் குழந்தையை மாரியப்பன் என்ற உடற்கல்வி ஆசிரியர் இனங்கண்டு அரசு உதவியோடு தன் இல்லத்திற்கு அழைத்துவந்து தன் குழந்தைபோல் வளர்த்தார். கல்வியோடு சேர்ந்து கால் பந்திலும் அந்தப் பெண்ணை ஈடுபடுத்தினார். பட்டம் முடித்த அந்தப் பெண் கால் பந்தில் முழுக் கவனம் செலுத்தி ஆசிய அளவில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடி வெற்றி பெற்றாள். தன் தாய் தந்தையரை இழந்தாலும் வளர்ப்புத் தந்தையால் அடையாளம் கண்டு அவருக்கும் கடலூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தாள். 


கற்பவை கற்றபின்


1. நீவிர் பார்த்த திரைப்படம் ஒன்றில், வெளிப்பட்ட மெய்பாடுகள் குறித்து எழுதுக.

திரைப்பட உலகில், கலை வெளிப்பாட்டிற்காகவே தயாரிக்கப்பட்ட படங்களில் தில்லானா மோகனாம்பாள் போன்ற ஒரு படத்தைக் காவியமாகவே மக்கள் பார்க்கின்றனர். இப்படத்தில் நடிப்புக்கலையில் பிரசித்திப் பெற்ற ஜோடிகளான சிவாஜி - பத்மினி இணை நவரசத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகளில் நலந்தானா பாடல் காட்சி மெய் மயக்கச் செய்துவிடும். 

• நலந்தானா, நலந்தானா, உடலும் உள்ளமும் நலந்தானா என்ற பாடல் காட்சியில் பத்மினியின் கண்களில் எண்வகை மெய்ப்பாடுகளையும் தாண்டிய ஒரு வெளிப்பாடு, அவரது புருவம் தவிக்கும் பாவனை எழுத்தில் விவரிக்க இயலாது. 

• இந்தப் பெண்பட்ட பாட்டை யார் அறிவார் - என்ற பாடல் காட்சியில் கண்களில் பனிக்கும் கண்ணீர் அழுகையை நமக்கிடையே வரவழைக்கும். 

• சிவாஜியின் புண்பட்ட கைகளை துண்டு மறைத்திருக்கும். தனது முந்தானையால் விசிறிவிட்டுப் பார்க்கும் பத்மினியின் பார்வையில் வெளிப்படும் அச்சவுணர்வு நம்மைச் சிலிர்க்க வைக்கும். 

திரைப்படம் சொல்லாத கதையுமில்லை

கதை சொல்லாத காதலுமில்லை. 


2. எண்வகை மெய்ப்பாடுகளுக்கு ஏற்ற திரையிசைப் பாடல்களின் தொகுப்பு ஒன்றை உருவாக்குக. 

எண்வகை மெய்ப்பாடுகள்: 

நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை 

நகை - சிரிப்பு வருது சிரிப்பு வருது

சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது 

அழுகை - உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்

தங்கமே! ஞானத் தங்கமே! 

இளிவரல் - பாட்ஷா பாரு! பாட்ஷா பாரு!

படை நடுங்கும் பாட்ஷா பாரு! 

மருட்கை - நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்

நல்ல அழகி என்றேன் நல்ல அழகி என்றேன் 

அச்சம் - சூரகாளி போல வாராடா

சுத்தி சுத்தி வாராடா 

பெருமிதம் - வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்

அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும் 

வெகுளி - குயிலைப் புடிச்சி கூண்டில் அடைச்சி

பாடச் சொல்லுகிற உலகம் 

உவகை - சந்தோஷம் காணாத நாள் உண்டா

சங்கீதம் பாடாத நாள் உண்டாஇயல் 6

துணைப்பாடம்

நடிகர் திலகம்

- பாலச்சந்திரன் சுள்ளிக்காடு


பாடநூல் வினாக்கள்


நெடுவினா 


1. மகாநடிகரைக் கண்ட பாலசந்திரனின் மனவோட்டத்தை நயத்துடன் எழுதுக.

சுள்ளிக்காட்டுப் பாலச்சந்திரன், முப்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு கூலி. திரையரங்கில் வெளியாகும் திரைப்படத்தை ஆட்டோ ரிக்சாவில் விளம்பரப்படுத்தும் பையன் . 

இருபது வருடங்களுக்குப் பின்:

இருபது வருடங்களுக்குப் பின், கேரள வீதிகளில் அன்று குரல் விற்றுப்பிழைத்த பையன் சிவாஜிகணேசன் வீட்டில் அவரோடு உணவருந்தும் அற்புதச் சூழல் இன்று. 

சிவாஜியும் மோகன்லாலும் :

1995 இல் வி.பி.கெ.மேனன் படத்தில் சிவாஜியும் மோகன்லாலும் நடிக்க சம்மதித்தனர். அப்படத்தின் இயக்குநர் ராஜிவ் நாத். ஜான்பால் என்பவர் திரைக்கதை. படம் பற்றிப் பேச நடிகர் திலகம் வீட்டிற்குச் செல்ல நேரிட்டது.

வீட்டின் தோற்றம் :

ஒரு நாள் சிவாஜியின் வீட்டிற்கு விருந்துக்குச் சென்றோம். சிவாஜியின் வீடல்ல அது அரண்மனை. கதவில் அழகிய வேலைப்பாடுகள்; தங்கத்தால் இழைத்த வேலைப்பாடுகள்; தங்கத்தால் இழைத்த இரண்டு பெரிய யானைத் தந்தங்கள். மாடிக்குச் சென்றோம். மாடி ஏறும்போது கட்டபொம்மனின் கம்பீரத் தோற்றத்தில் சிவாஜி. அடுத்து சத்ரபதி சிவாஜி. இன்னொரு புறத்தில் பிரஞ்சு அரசு வழங்கிய செவாலிய விருது கண்ணாடிப் பெட்டியில் இருந்தது. 

சிவாஜியின் வரவேற்பும் உபசரிப்பும் :

மாடியில் ரசித்தபடியே சென்ற எங்களை மாம்பழச் சாறு கொடுத்து வரவேற்றனர் தலைவனும், தலைவியும். அப்போது அங்கே சிங்க நடை நடந்து வரும் ராஜராஜ சோழனைப் பார்த்து அவர் கால்தொட்டு வணங்கினோம். பதிலுக்கு ஆசிர்வாதம் செய்தார். உட்காரச் சொன்னார். ராஜிவ் நாத்தும் ஜான்பாலும் சிவாஜியிடம் கதை - கதாபாத்திரம் பற்றிப் பேசினர். 

சிவாஜியின் அங்க அசைவுகள் :

அவர்களிடம் பேசும்போது புருவ அசைவு, கண்நோக்கு, முக அபிநயம், உதடு, கைவிரல், இவற்றின் செயல்பாடு கண்டு பாலச்சந்திரன் மெய்மறந்தார் ருத்ரன், கர்ணன், காளிதாசன், பாரதி, கட்டபொம்மன், ராஜராஜசோழன் இன்னபிற கதாபாத்திரங்களில் சிவாஜி பாலச்சந்திரனின் கண்களில் மின்னினார். 

சிவாஜி விசாரித்தல் :

ராஜிவ் நாத்திடம் பாலச்சந்திரனைக் காட்டி “இந்தப்பையன் யாரு என்றார் சிவாஜி. மலையாளக் கவிஞன் என்று அறிமுகப்படுத்தப்பட்டார். சுள்ளிக்காட்டுப் பாலசந்திரன் சிவாஜி பாலச்சந்திரனைப் பார்த்து வணக்கம் என்றார். எங்களை உள்ளே அழைத்தார்.

சிவாஜியின் புகைப்படங்கள் :

எகிப்தின் முன்னாள் அதிபர் நாசர் முதல் ராஜ்பூர் வரை உள்ள முன்னோடிகளுடன் சிவாஜி எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் கண்டோம். 

சிவாஜி - பட்டம் :

விழுப்புரத்தில் ஏழையாகப் பிறந்த சிவாஜி ஐந்து வயதிலேயே நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்தவர். அண்ணாதுரையின் சத்ரபதி சிவாஜியாக நடித்ததன் காரணமாக சிவாஜி பட்டம் கிடைத்தது. பராசக்திக்குப் பிறகு வெற்றியாளரானார் சிவாஜி. வீரபாண்டியகட்டபொம்மனால் உலகப் பிரசித்திப் பெற்றார். 

சிவாஜியிடம் ராஜிவ்நாத்தின் கேள்வி :

சிவாஜியிடம் கட்டபொம்மனின் வசனம் ஞாபகம் இருக்கிறதா என்றார். ஒரு வசனம் சொல்ல முடியுமா என்றார். 

சிவாஜியின் வசனம் :

ஏர்பிடித்தாயா, களை வெட்டினாயா... மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே என்று சிங்கக் கர்ஜனை செய்தார் சிவாஜி. எல்லாம் ஒரே மூச்சில் மயங்கிப் போனோம் நாங்கள். 

சிவாஜியின் கேள்வி :

மலையாளத்தில் சரித்திர புராணம், நாடகங்கள் இல்லையா என்றார் சிவாஜி, இருக்கிறது என்றனர். உடனே ராஜிவ், பாலச்சந்திரனை ராவணனின் வசனத்தைச் சொல்லச் சொன்னார். சிவாஜியை வணங்கி, இராவணனாக மாறினார் பாலன். இலங்கையின் போர்க்கொடிகள் பறக்கட்டும்.... நானே வெல்வேன் என்று முடித்தார் பாலன். கைதட்டிப் பாராட்டினார். இராவண வேடத்தில் நீங்கள் (சிவாஜி) நடித்தால் நன்றாக இருக்கும். ராஜிவ்நாத் சிவாஜியிடம் சொன்னார். என்ன பண்றது எனக்கு மலையாளம் தெரியாதே என்றார் சிவாஜி. வயசும் ஆயிடுச்சி என்றார் சிவாஜி. அதன்பிறகு அன்னை கமலாவின் கைகளால் விருந்து சாப்பிட்டோம். எல்லாம் முடிந்து புறப்பட்டோம். வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தனர் சிவாஜி-கமலா தம்பதியினர். வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டே திரும்பினோம். 


2. உங்கள் ஊர்ப்பகுதியில் வாழும் கலைஞர் ஒருவரை நேரில் பார்த்த அனுபவத்தை விவரித்துக் கட்டுரையாக்குக

வாழும் கலைஞர் :

இன்றும் இசை மும்மூர்த்திகளின் ஒருவரான தியாகராஜருக்கு இசை விழா தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் நிகழ்ந்து வருகிறது. தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறைப் பகுதிகளில் இசையின் பற்பல துறைகளில் கலைஞர்கள் இன்றும் இருக்கிறார்கள். தஞ்சை மாவட்டம் என்றாலே நன்செய் மட்டுமல்ல. நல்லிசையிலும் கலைஞர்கள் இருப்பது சிறப்பு. 

திருவிசநல்லூர் ஜெயராமன் :

கும்பகோணத்தின் கிழக்கே 5 கி,மீட்டர் தொலைவில் உள்ள ஊர் திருவிசநல்லூர். அவ்வூரில் எல்லாராலும் அறியப்பட்ட திரு.ஜெயராமன். நாதஸ்வரக் கலைஞரைப் பார்க்கச் சென்றேன். ஓட்டு வீடு, வீட்டின் முற்பகுதியில் இரண்டு நாற்கலிகள், ஒரு நீண்ட மேசை அவ்வளவுதான். வீட்டின் முன்புறச் சுவரில் காருக்குறிச்சி அருணாச்சலம், மதுரை M.P.M. பொன்னுச்சாமி சகோதரர்கள், ராஜரத்தினம் பிள்ளை இவர்களின் புகைப்படங்கள், பார்த்துக் கொண்டிருக்கும் போதே வணக்கம், வாங்க தம்பி என்ற குரல். நானும் எழுந்து வணங்கி நின்றேன். எழுபது வயதிருக்கும். வறுமையின் சாயல் தெரிந்தது. ஐயா, உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன் என்றேன். எங்கள் வீட்டில் நாதஸ்வரம் செய்வது தொழிலாக இருந்தது. எனது தாத்தா காலத்தில் இருந்தே நாதஸ்வரத்தைக் கையில் எடுத்து விட்டேன். எனக்கு என் தந்தை மூச்சை அடக்கும் பயிற்சியை நீருக்குள் மூழ்கிக் கற்றுக் கொடுத்தார். பலூன்களில் காற்றை ஒரே மூச்சில் ஊதப் பயிற்சி அளித்தார். நாதஸ்வரத்தைப் பிடிக்கும் முறையைச் சொன்னார். மன ஒருமைப்பாடு பற்றிக் கூறினார். கீர்த்தனங்களில் ஏற்ற இறக்கம், ஒவ்வொன்றிற்கும் இடைவெளி நேரம் சொல்லிக் கொடுத்தார்.

எனது தந்தை சொல்லிக்கொடுத்த அடிப்படைப் பயிற்சியும், எனக்குள் இருந்த இசை அறிவும், ஆவலும் என்னை மக்களுக்குப் பரிச்சயம் ஆக்கின. வருமானம் என்பது போதுமானதாக இருந்தாலும் தேவைகளை பூர்த்திச் செய்ய பற்றாக்குறைதான். இப்பொழுது எனக்குள்ளே ஒரே ஒரு ஏக்கம்தான் என்னவென்றால் நான் கற்ற கொஞ்சம் அதாவது குறைவான கலையை யாருக்காவது சொல்லிக் கொடுக்கணும். அதுதான் என் ஜீவனுடைய ஆவல் என்றார். தில்லானா மோகனாம்பாள் படத்தின் நலம்தானா வாசித்துக்காட்டினார். அதிசயித்து விட்டோம். அப்படியொரு வாசிப்பு. எங்களாலான ஒரு அன்பளிப்பை அவருக்கு அளித்து வீடு திரும்பினோம். அந்த இசைமேதை - நாமெல்லாம் படிக்காத ஒரு மேதை.


கற்பவை கற்றபின்


1. பராசக்தி, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், திருவிளையாடல் போன்ற திரைப்படங்களில் இடம் பெற்ற சிவாஜிகணேசனின் வசனங்களை உரிய உச்சரிப்புடன் பேசி வகுப்பறையில் நடித்துக் காட்டுக. 

பராசக்தி - வசனம் :

கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்

பூசாரியைத் தாக்கினேன்

குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படி எல்லாம்

நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்

இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று

இல்லை இல்லவே இல்லை நிச்சயமாக இல்லை.

கோவிலில் குழப்பம் விளைவித்தேன்

கோவில் கூடாது என்பதற்காக அல்ல

கோவில் கொடியவரின் கூடாரமாக

இருக்கக்கூடாது என்பதற்காக.

வீரபாண்டிய கட்டப்பொம்மன் – வசனம் : 

கிஸ்தி, திறை, வரி, வட்டி  

வானம் பொழிகிறது, பூமி விளைகிறது 

உனக்கு ஏன் கொடுப்பது கிஸ்தி 

எங்களோடு வயலுக்கு வந்தாயா 

ஏற்றம் இறைத்தாயா

நீர்ப்பாய்ச்சினாயா 

நாற்று நட்டாயா 

களை பறித்தாயா 

கழனி வாழ்உழவருக்குக் 

கஞ்சிக்கலயம் தூக்கினாயா 

அங்கு கொஞ்சி விளையாடும் 

எம்குல மங்கையர்க்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா 

அல்லது மாமனா மச்சானா

மானங்கெட்டவனே....... 

கப்பலோட்டிய தமிழன் - வசனம் : 

விஞ்ச்துரை : நெருப்பைக் கக்கும் எரிமலை நீங்கள். நீங்க நடந்தா பூமியே நடக்குது. பேசினா புரட்சியே வருது. எழுதினா கலகம் வருது. மந்திரவாதிங்க மாதிரி ஜனங்கள ஆட்டிவைக்கிறீங்க. என்னாமேன் என்ன? நான்ஸென்ஸ். 

வ.உ.சி : அப்படி நான் என்னய்யா பேசினேன்? எந்நாட்டு மக்கள் சுதேசி பக்தி கொள்ளச் சொன்னேன். 

விஞ்ச்துரை : சொன்னே மேன். சொன்னே. சுதேசி பொருளை வெறுக்கச் சொன்னே. 

வ.உ.சி : ஆம். வியாதிக்கு மருந்தொன்று சொன்னேன். 

விஞ்ச்துரை : சும்மாகிடந்த ஜனங்கள் தூண்டிவிட்ட மேன். தூண்டிவிட்ட மேன். 

வ.உ.சி : இல்ல. பயமென்னும் பள்ளத்தை தாண்டச் சொன்ன. 

விஞ்ச்துரை : அதிகாரத்தை அவமானப்படுத்துன. 

வ.உ.சி. : இல்ல. அகம்பாவத்தை அழிக்கச்சொன்ன.

திருவிளையாடல் - வசனம் 

கூத்தன் : கேள்விகளை நீ கேட்கிறாயா.......? அல்லது நான் கேட்கட்டுமா.....?

தருமி : நீ கேக்காதே. நான் கேக்கிறேன். எனக்கு கேக்கத்தான் தெரியும். 

கூத்தன் : கேளும்....

தருமி : சற்று பொறும். 

கூத்தன் : ம்ம்ம் ...... கேளும்......

தருமி : பிரிக்கமுடியாதது என்னவோ...? 

கூத்தன் : தமிழும் சுவையும்.

தருமி : பிரியக்கூடாதது...?

கூத்தன் : எதுகையும் மோனையும்.

தருமி : சேர்ந்தே இருப்பது....? 

கூத்தன் : வறுமையும் புலமையும். 


2. உங்கள் பகுதியில் வாழ்ந்து வரும் கலைஞர் ஒருவரை நேரில் கண்ட அனுபவத்தை எழுதுக.

கலைகளை வளர்த்த பெருமைக்கு உரிய ஊர் கும்பகோணம். அவ்வூரில் பரதம், இசை, கருவி இசை முதலான கலைகள் இன்றளவும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த ஊரில்தான் மாபெரும் கலைஞர்கள் கே.ஆர். இராமசாமி, எம்.ஜி.இராமச்சந்திரன், காளி.என். இரத்தினம் போன்றவர்கள் வாழ்ந்தார்கள். இது கும்பகோணத்திற்கே பெருமை தரக்கூடிய ஒன்று. கும்பகோணம் பக்தகோடித் தெருவில் வசிக்கும் பரதநாட்டிய கலைஞர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவர் பெயர் மாலா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). அப்பா இல்லை; அம்மா மட்டும் உண்டு. கும்பகோணம் பள்ளிகளில் படிக்கின்ற பிள்ளைகளுக்கு பரதம் கற்றுக்கொடுத்து வருகிறார்.

எனது மகளுக்குக் பரதம் கற்றுத்தர அனுமதி கேட்டு, அவரிடம் சென்றிருந்தேன். ஒத்துக்கொண்ட அவர் தான் நாட்டியம் ஆடியபொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை என்னிடம் காட்டினார்.

எண்வகை மெய்ப்பாடுகளையும் வெளிக்கொணர்ந்து அவர் பரதம் ஆடிய அழகு பாராட்டுதற்குரியது. அபிநயம், பாவனை, புருவ வளைவுகள், கைவிரலின் அசைவுகள் முதலானவற்றைப் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. இப்படியொரு நல்ல கலைஞர் சாதாரண வீட்டில் வாழ்கிறாரா என்ற கேள்வி எங்களுக்குள் எழுந்தது.

தில்லானா மோகனாம்மாள் என்ற திரைப்படத்தில் கதாநாயகி பத்மினி ஆடிய ‘மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன' என்ற பாடல் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றோம். ஒரு பத்து நிமிடம் எங்களை அமரச் சொல்லிவிட்டு அந்த அறையிலேயே அபிநயம் பிடித்து அழகாக ஆடினார். அத்தகைய ஆட்டத்தை நாங்கள் இதுவரை பார்த்ததேயில்லை.

வாழும் கலைஞர் அவர். இவர் போன்ற கலைஞர்களை வாழ வைக்க நமது அரசு ஒரு அறக்கட்டளை அமைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இத்தகைய கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பது எனது வேண்டுகோளும் கூட. அரசு நாட்டியப் பள்ளிகள் தொடங்க வேண்டும். கலையையும், கலைஞரையும் போற்ற வேண்டும்.

இறுதியாக, அந்தக் கலை ஞானி கொடுத்த கும்பகோணம் டிகிரி காபியோடு வீடு திரும்பினோம்.


இயல் 6

இலக்கணம்

காப்பிய இலக்கணம்


இலக்கணத் தேர்ச்சி கொள்

1. ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர் 

அ) சிவஞான முனிவர்

ஆ) மயிலை நாதர் 

இ) ஆறுமுக நாவலர்

ஈ) இளம்பூரணர்

[விடை: ஆ) மயிலை நாதர்] 


2. கூற்று 1 : காப்பியம் என்னும் சொல் காப்பு + இயம் எனப் பிரிந்து மரபைக் காப்பது, இயம்புவது, வெளிப்படுத்துவது, மொழியைச் சிதையாமல் காப்பது என்றெல்லாம் பொருள் தருகிறது. 

கூற்று 2 : ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று நீலகேசி. 

அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

ஆ) கூற்று 2 சரி, கூற்று 1 தவறு 

இ) இரண்டும் சரி

ஈ) இரண்டும் தவறு

[விடை : அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு] 


3. சரியானவற்றைப் பொருத்தித் தேர்க : 

அ) காதை - 1. கந்தபுராணம் 

ஆ) சருக்கம் - 2. சீவகசிந்தாமணி

 இ) இலம்பகம் - 3. சூளாமணி 

ஈ) படலம் - 4. சிலப்பதிகாரம் 

அ) 4, 3, 2, 1 

ஆ) 3, 4, 1, 2 

இ) 3, 4, 2, 1

 ஈ) 4, 3, 1, 2

[விடை : அ) 4, 3, 2, 1] 

 

4. தவறான இணையைத் தேர்க : 

    பாவகை   -   இலக்கியம்

அ) விருத்தப்பா - நாலடியார் 

ஆ) ஆசிரியப்பா - அகநானூறு 

இ) கலிவெண்பா - தூது

ஈ) குறள் வெண்பா - திருக்குறள்

[விடை : அ) விருத்தப்பா – நாலடியார்]குறுவினா


5. காப்பியம் எத்தனை வகைப்படும்? அவை யாவை ? 

காப்பியம் இரு வகைப்படும். அவை, ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறுகாப்பியம். 

ஐம்பெருங்காப்பியங்கள் : 

சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவகசிந்தாமணி. 

ஐஞ்சிறுகாப்பியங்கள் : 

நீலகேசி, சூளாமணி, உதயணகுமார காவியம், யசோதர காவியம், நாககுமார காவியம். 


6. காப்பியத்தைக் குறிக்கும் வேறு பெயர்கள் யாவை ? 

இதிகாசம், புராணம், இலக்கியம், சரிதம், காவியம் முதலான பெயர்கள் காப்பியத்தின் வேறு பெயர்கள்.


7. காப்பியத்தின் சிற்றுறுப்புகள் சிலவற்றை எழுது.

காதை, சருக்கம், இலம்பகம், படலம் முதலானவை காப்பியத்தின் சிற்றுறுப்புகள் ஆகும்.


8. பாவகம் - விளக்குக

• காப்பியத்தின் பண்பாகப் பாவகம் என்பதைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது. 

• காப்பியக் கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்தைப் பாவகம் என்பர். 

எ.கா: பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப என்பது கம்பராமாயணத்தின் பாவகம்.


கற்பவை கற்றபின்


சிலப்பதிகாரப் பாடப்பகுதியில் அமைந்துள்ள காப்பிய இலக்கணக்கூறுகளைக் கட்டுரையாக எழுதுக. 

வியப்பு: 

அரங்கேற்ற காதை நிகழ்வுகளின் போக்கு :

மாதவி அரங்கில் தோன்றி நாட்டிய நூலில் சொல்லப்பட்ட முறைமைத் தவறாது, பாவம், அபிநயம் இவற்றைச் சரியாகக் கடைபிடித்து நன்மை பெறுகவும் தீமை நீங்கவும் வேண்டி 'ஓரொற்றுவாரம்' ‘ஈரொற்று வாரம்' என்னும் தெய்வப் பாடலை முறையாகப் பாட பாடலுக்கு ஏற்ப இசை அமைக்க மாதவி ஆடியதைக் கண்டு அனைவரும் வியந்தனர். 

கொடை:

மன்னன் பட்டமும் பரிசும் மாதவிக்கு அளித்தது: 

• மாதவியின் ஆடல் கண்டு அகமகிழ்ந்தான் மன்னன். 

• மாதவிக்கு ‘தலைக்கோல் அரிவை' என்னும் பட்டத்தை வழங்கினான். 

• ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் மாலையை மன்னன் பரிசாக வழங்கினான்.

• பாடப்பகுதிக்கும் காப்பிய இலக்கணத்திற்கும் உள்ள பொருத்தம் 

பெருமிதம்:

அரங்கேற்று காதையில் தலைமகளாக உள்ள மாதவியின் நாட்டியம், அரங்கேற்றம் போன்றவற்றைக் கண்டு பரிசு பெறுதல், இன்பம் காணுதல் ஆகியவைக் காப்பிய இலக்கணத்திற்கு பொருத்தமாக உள்ளது. 

மன்னனின் போர்:

சோழ மன்னன் பகைமன்னனுடன் நிகழ்த்திய போரில் பறித்த வெண்கொற்றக் கொடையின் காம்பில் செய்யப்படுவது தலைக்கோல். இவ்விடத்தில் போர் வெற்றிச் செய்தி காணப்படுகிறது. இவ்வெற்றிச் செய்தி காப்பிய இலக்கணத்திற்குப் பொருத்தமானது.


நம்மை அளப்போம்


பலவுள் தெரிக.

1. ஆர்ப்பரிக்கும் கடல் 

அதன் அடித்தளம் 

மௌனம்; மகா மௌனம் - அடிகள் புலப்படுத்துவது 

அ) இரைச்சல்

ஆ) குறைகுடம் கூத்தாடும் 

இ) நிறைகுடம் நீர்த்தழும்பல் இல் 

ஈ) புற அசைவுகள் அகத்தினை அசைக்க இயலாது. 


2. ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல்.... தொடர்களில் வெளிப்படும் செய்திகள் 

1. மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள். 

2. ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள். 

அ) 1 சரி 2 தவறு

ஆ) 1 தவறு 2 சரி 

இ) 1 தவறு 2 தவறு

ஈ) 1 சரி 2 சரி


3. பொருத்துக.

அ) ஆமந்திரிகை - 1) பட்டத்து யானை

ஆ) அரசு உவா -  2) மூங்கில்

இ) கழஞ்சு -  3) இடக்கை வாத்தியம்

ஈ) கழை -  4) எடை அளவு

அ) 3142 

ஆ)4213

இ)1234 

ஈ) 4321


4. வேறுபட்டதைக் குறிப்பிடுக.

அ) அண்மைக் காட்சித் துணிப்பு 

ஆ) சேய்மைக் காட்சித் துணிப்பு 

இ) நடுக் காட்சித் துணிப்பு

ஈ) காட்சி மறைவு 


குறுவினா 


1. எண்வகை மெய்ப்பாடுகள் யாவை? 

2. பின்னணி இசை படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும்? சான்று தருக 

3. ஒருமுக எழினி, பொருமுக எழினி - குறிப்பு எழுதுக. 

4. 'மூச்சு நின்று விட்டால் பேச்சும் அடங்கும்' - கவிதைக்குப் பொருத்தமான பழமொழி ஒன்றை எழுதுக. 


சிறுவினா


1. நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தை எழுதுக. 

2. ஏதேனும் இரண்டு மெய்ப்பாடுகள் தோன்றுவதற்கான சூழ்நிலையைக் கற்பனையாகப் படைக்க. 

3. திரைப்படத்தின் காட்சியின் ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக. 

4. கவிதை என்பது கண்முன் நிகழ்வதையும் மனதில் நிகழ்வதையும் தொடர்புபடுத்திச் சொற்சிமிழில் அடைக்கும் முயற்சியே என்பதை நகுலன் கவிதையைக் கொண்டு நிறுவுக.


நெடுவினா 


1. திரைப்படத்துறை என்பது ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலா? அல்லது கலைகளின் சங்கமமா? உங்கள் பார்வையைக் கட்டுரையாக்குக. 

2. மகாநடிகரைக் கண்ட பாலசந்திரனின் மனவோட்டத்தை நயத்துடன் எழுதுக. 

3. உங்கள் ஊர்ப் பகுதியில் வாழும் கலைஞர் ஒருவரை நேரில் பார்த்த அனுபவத்தை விவரித்துக் கட்டுரையாக்குக.


மொழியை ஆள்வோம்


சான்றோர் சித்திரம்


வை.மு. கோதைநாயகி (1901-1960)

ஐந்தரை வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண் ஒருவர், தன் குடும்பத்தாரிடமே கல்வி கற்றார். கதை கூறுவதில் ஆர்வம் கொண்டிருந்த அவர் தன் கற்பனை ஆற்றலால் தோழியர்களுக்கும் புதிய கதைகளை உருவாக்கிக் கூறினார். அதைக் கண்ட அவரது கணவர் அப்பெண்ணின் படைப்பாற்றலை ஊக்குவிக்கப் பல நாடகங்களுக்கு அழைத்துச் சென்றார். அப்பெண்ணுக்கு நாடகம் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் ஓரளவு மட்டும் எழுதத் தெரிந்த தன்னால் நாடகம் எப்படி எழுத முடியும் என்று அவர் வருந்திய போது, அவரது தோழி, நாடகத்தை அவர் சொல்லச் சொல்லத் தான் எழுதுவதாகக் கூறி ஊக்கப்படுத்தினார். இப்படித்தான் அப்பெண் தன்னுடைய முதல் நூலான 'இந்திர மோகனா என்ற நாடக நூலை வெளியிட்டார். அவர்தான் 'நாவல் ராணி', கதா மோகினி', ஏக அரசி' என்றெல்லாம் தம் சமகால எழுத்தாளர்களால் அழைக்கப்பட்ட வை.மு.கோ. ('வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி அம்மாள்) ஆவார். 

இவர் 'ஜகன் மோகினி' என்ற இதழை முப்பத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். பெண் எழுத்தாளர்களையும், வாசகர் வட்டத்தையும் உருவாக்கினார். காந்தியத்தின் மீது பற்றும் உறுதியும் கொண்டிருந்த இவர் தம் எழுத்துகளால் மட்டுமன்றி மேடைப் பேச்சின் மூலமும் காந்தியக் கொள்கைகளைப் பரப்புரை செய்ததோடு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைக்கும் சென்றார். தமிழகப் பெண் வரலாற்றில் தனித்து அடையாளம் காட்டப்பட வேண்டிய சிறப்புக்குரியவரான வை.மு.கோ. அவர்கள் 115 நாவல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பமே உலகம் என்று பெண்கள் வாழ்ந்த காலகட்டத்தில், வீட்டிற்கு வெளியே உலகம் உண்டு என்பதைப் பெண்களுக்குத் தன் வாழ்வின்மூலம் இனம் காட்டிய பெருமைக்கு உரியவர் வை.மு.கோ. அம்மையார். 

அவருடைய எழுத்தாற்றலுக்கொரு சான்று :

"என்ன வேடிக்கை! அடிக்கடி பாட்டி 'உலகானுபவம்... உலகம் பலவிதம்... என்றெல்லாம் சொன்னதைக் கேட்டபோது எனக்கு ஒண்ணுமே புரியாது விழித்தேனே... பாட்டி சொல்லிய வசனங்களைவிடக் கடிதங்கள் பலவற்றைப் படித்தால் அதுவே மகத்தான லோகானுபவங்களை உண்டாக்கிவிடும் போலிருக்கிறதே! பாவம்! பேசுவது போலவே தன்னுடைய மனத்தினுள்ளதைக் கொட்டி அளந்துவிட்டாள் .... நான் கிராமத்தை வெறுத்துச் சண்டையிட்டு வீணாக அவர் மனதை நோவடிக்கிறேன். இவள் பட்டணத்தை வெறுத்துத் தன் கொச்சை பாஷையில் அதன் உண்மை ஸ்வரூபத்தை படம் பிடித்துக் காட்டி விட்டாளே!.. என்ன உலக விசித்திரம்!... என்று கட்டுமீறிய வியப்பில் சித்ரா மூழ்கினாள்."

('தபால் வினோதம்' குறுநாவலில் இருந்து)

வினாக்கள் : 

1. வை.மு. கோதைநாயகியின் முதல் நூல் எது? 

2. தொடர்ந்து உறுப்பிலக்கணம் தருக: தொடர்ந்து 

3. இப்பகுதியில் இடம்பெற்றுள்ள உவம உருபினை எடுத்து எழுதுக. 

4. பிரித்தறிக: பங்கேற்று 

5. புணர்ச்சி விதி கூறுக: தன்னுடைய 


விடைகள் : 

1. இந்திர மோகனா

2. தொடர்ந்து - தொடர் + த்(ந்) + த் + உ 

தொடர் - பகுதி

த் - சந்தி (ந் ஆனது விகாரம்) 

த் - இறந்தகால இடைநிலை

உ - வினையெச்ச விகுதி 

3. போலவே (போல) 

4. பங்கேற்று - பங்கு + ஏற்று 

5. தன்னுடைய - தன் + உடைய 

• தனிக்குறில் முன் ஒன்று உயிர்வரின் காட்டும் என்ற விதிப்படி, தன்ன் + உடைய என்றானது. 

• உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (ன் + உ = னு) தன்னுடைய என்று புணர்ந்தது.


தமிழாக்கம் தருக.

Popular as the 'Cultural Capital’of India, Tamil Nadu is extremely well-known for its marvellous temples and other architectural gems. The state rose to prominence primarily because of its well-known and outstanding Tanjore Paintings that flourished at the time of Chola dynasty in ancient Tanjavoor. In this traditional art form, the paintings showcase the embellished form of the sacred deities of the region. The deities in the paintings are festooned with glass pieces, pearls, semi-precious stones, and gold and other vibrant colours. In the modern times, Tanjore paintings look up to human figures, animals, floral motifs and birds as muses.

தமிழாக்கம்:

இந்தியாவில் தமிழகம் கலாச்சாரத் தலைநகரமாகத் திகழ்கிறது. தமிழ்நாடு பிரம்மாண்டமான கோவில்களுக்கும் மற்றும் கட்டடக்கலைகளுக்கும் புகழ்பெற்றது. குறிப்பாக, தஞ்சாவூர் ஓவியங்கள் சோழவம்சத்தின் கலாச்சாரங்களையும் பண்டைய தஞ்சாவூரின் பாரம்பரிய கலை, ஓவியங்கள் மற்றும் புனித தெய்வங்கள் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றது. தெய்வங்களின் உருவங்கள் கண்ணாடித் துண்டுகள் ஓவியங்கள், முத்துக்கள், விலை உயர்ந்த கற்கள் மற்றும் தங்கம் ஆகியவற்றில் பல வண்ணங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. நவீன காலத்தில் தஞ்சாவூர் ஓவியங்கள் மனித உருவங்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் பறவைகள் - உருவங்கள் கொண்டதாகப் புதிய பரிணாமம் பெற்றுள்ளன. 


கீழ்க்காணும் தொடர்களில் அடைப்புக்குள் உள்ள பெயர்ச்சொல்லைத் தொடர்களுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதுக.

எ.கா: கபிலன் திறமையானவர் என்று _________ (குமரன்) தெரியும்.

கபிலன் திறமையானவர் என்று குமரனுக்குத் தெரியும். 

1. நேற்று முதல் _________ (அணை) நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 

விடை: அணையின் 

2. உங்களுக்கு _________ (யார்) நன்மை என நினைக்கிறீர்கள்.

விடை: யாரால் 

3. முருகன் _________ (வேகம்) சென்றும் பேருந்தைப் பிடிக்க இயலவில்லை. 

விடை: வேகமாகச் 

4. நம்முடைய _________ (தேவை) அளவு குறைந்தால் மகிழ்ச்சி பெருகும். 

விடை: தேவையின் 


பொருள் வேறுபாடு அறிந்து தொடர் அமைக்க. 

எ.கா: களம் - கலம் : போர்க்களத்தில் புண்பட்ட வீரர்களுக்குக் கலத்தில் நீர் தரப்பட்டது.

வலம், வளம் : ஆற்றின் வலப்புறம் உள்ள வயல்கள் நீர்வளத்தால் செழித்திருந்தன. 

புல் - புள் 

புல் தரையில் புட்கள் (புள்கள்) கூட்டம் அமர்ந்து விளையாடின. 

உழை - உளை 

தனது முதலாளிக்காக உழைக்கும் குதிரையின் உளை (பிடரி மயிர்) மிகவும் அழகாக இருக்கிறது. 

கான் - காண் 

கானகத்தில் வாழும் விலங்குகளைக் காண்பது மகிழ்ச்சி தரக்கூடியது. 

ஊண் - ஊன் 

ஊண் (மாமிசம்) உணவை உண்டு ஊனை (உடலை) வளர்ப்பது பாவம். 

தின்மை - திண்மை 

திண்மை (வலிமை) கொண்ட ஒருவன் எளியவருக்கு தின்மை (தீமை) செய்தல் மறமாகாது.


மொழியோடு விளையாடு


எண்ணங்களை எழுத்தாக்குக.


உன்னை நீயே உற்றுப்பார்

நீ ஒரு நிலா, 

கூர்மையான முட்கள்

மூடியிருக்கின்றது உன்னை 

அவைகளை விலக்கி விட்டுப்பார்

உன்னை சுவாசம் செய்ய 

நந்தவனமாய் நான்


இலக்கிய நயம் பாராட்டுக. 

அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்

அவ்வாறே வான் கண்டேன், திசைகள் கண்டேன்

பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ?

பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்

சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்

சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி

இந்தாவென் றேஇயற்கை அன்னை வானில்

எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானோ?

- பாரதிதாசன்

தலைப்பு : வெண்ணிலவு. 

ஆசிரியர் குறிப்பு :

பெயர் : பாராதிதாசன் (கனகசுப்புரத்தினம்) 

பெற்றோர் : கனகசபை – இலக்குமி 

பிறப்பு : 29-4-1891) 

சிறப்பு : புரட்சிக்கவி 

நூல்கள் : குடும்பவிளக்கு, இருண்ட வீடு, பாண்டியன் பரிசு, சேரதாண்டவம்,

அழகின் சிரிப்பு... இன்னும் பல. 

திரண்டக் கருத்து:

மாலை இருளினால் கருமையாகும் உலகினைக் கண்டேன். அதுபோல வானமும் இருளாவதைக் கண்டேன். திசைகள் எட்டும் இருளில் மறைவதைக் கண்டேன். பின்னர் கருமையான இருள் சிரிப்பதில்லை. பெருஞ்சிரிப்பு ஒளியின் முத்துக்களாகிய முழு நிலவே நீதான் அழகெல்லாம் ஒன்று சேர்த்துக் காட்சி தருகிறாய். உலகிற்குக் குளிர் ஏற்றி, ஒளியும் ஊட்டுகிறாய். இயற்கையாகிய அன்னை தனது எழில்வாழ்வைச் சித்தரிக்கும் அழகோ நீ நிலவே - என்கிறார் பாரதிதாசன். 

மோனை நயம் : 

நாட்டுக்கு அழகு சேனை 

பாடலுக்கு அழகு மோனை 

முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை. 

சான்று:

ந்தியிருளால் வ்வாறே

பிந்தியந்த பெருஞ்சிரிப்பின்

எதுகை நயம் : 

பெண்ணுக்கு அழகு புன்னகை 

பாடலுக்கு அழகு எதுகை 

பாடல் அடிகளின் சீர்களின் முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை. 

சான்று:

ந்தியிருளால் 

பிந்தியந்த 

சிந்தாமல்

சிந்தாவென்று 

அணி நயம் :

இயற்கை அன்னைத் தனது எழில் வாழ்வைக் காட்டவே நிலவாகச் சித்தரித்துக் காட்டுகிறாள் என்னும் அடிகளில் இயற்கையை உயர்வாகப் பாடியிருப்பதால் உயர்வு நவிற்சி அணி இடம்பெற்றுள்ளது. 

கற்பனை நயம் : 

கவிஞர்க்குக் கற்பனை கைவந்தக் கலை. இருளால் மூழ்கும் இவ்வுலகைப் படம் பிடித்துக் காட்டுகிறார், பாரதிதாசன். வானில் தோன்றும் வெண்ணிலவை இயற்கையின் அழகு என்று வர்ணிக்கிறார் பாரதிதாசன்.


நான்கரைச் சக்கர வடிவம் 

மேனி திடமே விடுமே! 

மேடு விளையா டுவமே! 

மேவ டுவோட சாருமே! 

மேரு சாதுதூ தினிமே!


விளக்கம் : 

காடு மேடு என்று பாராமல் நன்றாக

விளையாடுவோம். அதனால், நம் உடம்பு (மேனி)

திடமாகும். மேவிவரும் நோய்களும் (வடு)

ஓட, இமயமலை (மேரு) போன்ற சான்றோர்

பாராட்டும்படியான செய்தியும் (தூது) இனி

மேவிவரும்.

உரிய இடத்தில் எழுதுக. 

தேடு தேனீயோ லாவதே 

தேவ லாமென நாடுதே! 

தேடு நாநய மாடுதே! 

தேடு மாநிலை தேடுதே!


விளக்கம் :

பூக்கள் தோறும் தேனைத் தேடி அலைகின்ற 

தேனீயைப் போல, சுறு சுறுப்பாகும் 

நிலைதான் சிறந்ததென்று நாட வேண்டும். 

எவரிடமும் நயத்தோடு பேச வேண்டும். 

எவரிடமும் நயத்தோடு பேச வேண்டும். 

இவ்வாறிருந்தால் உயர்ந்தோர் நம்மைத் தேடிவருவர்.


கதையைத் தொடர்ந்து நிறைவு செய்க:

வேப்பமரத்தால் ஆன மரப்பாச்சி பொம்மை ஒன்று என் வீட்டில் நெடுங்காலமாக இருந்தது. மிகுந்த அன்போடு அதற்கு என் பெயரை வைத்திருந்தேன். எத்தனையோ வாசனைகளை அதன்மீது பூசினேன். ஆனாலும் அந்தக் கசப்பின் வாசம் போகவில்லை. இரவில் அதன் மெல்லிய விம்மல் ஓசை கேட்கும்...

நாம் ஒரு நாள் விம்மலோசைக் கேட்டவுடன் நான் எழுந்து பார்த்தேன் மேரியை. என் படுக்கை அறையின் ஒரு மூலையில் கிடந்தாள் மேரி. மெதுவாக மேரியின் அருகில் சென்றேன். என் வருகையைச் சற்றும் எதிர்பாராத மேரி அழுகையை நிறுத்திக் கொண்டது. முதலில் நான்தான் மேரியிடம் பேச்சுக் கொடுத்தேன். உனக்கும் பேசத் தெரியுமா, அழக்கூடத் தெரியுமா என்றேன். எனக்கும் உணர்வுகள் உண்டு. நானும் பேசுவேன் என்றது மேரி. நீ மனிதராக இருப்பதால் உனக்கு எல்லாம் கிடைக்கிறது. மரமாக நான் இருப்பதால் கேட்பாரற்றுக் கிடக்கிறேன் என்றது மேரி. உனக்கு என்ன வேண்டும்? என்னிடம் நீ என்ன எதிர்பார்க்கிறாய் என்று மேரியிடம் கேட்டேன். முதலில் எங்கள் பெற்றோரிடமிருந்து எங்களைப் பிரிக்காதீர்கள். நாங்கள் மனிதர் வாழ நல்ல காற்றினைத் தருகிறோம். எங்களிடமிருந்து கிடைக்கும் எண்ணெய் நல்ல நாட்டு மருந்து ஆகும். அப்படியிருக்க எங்களை வெட்ட மனிதருக்கு அரக்கக் குணம் எப்படி வந்தது என்று கேட்டது மேரி. இனிமேல் எங்களை வெட்டமாட்டோம் என்று உறுதி அளித்தால்தான் அழுகையை நிறுத்துவேன் என்றது மேரி. மேலும் எனது பாராம்பரிய கசப்பு வாசனையைப் போக்க என் மீது ஏதேதோ தடவுகிறாய். என்னிடமிருந்து எனது மணத்தைப் பிரிக்கமாட்டேன் என்று உத்திரவாதம் கொடு என்றது மேரி. அத்தனைக்கும் ஒப்புக் கொண்ட நான் மேரியிடம் வாக்குறுதி அளித்தேன். இதற்கிடையே என்னை யாரோ அழைப்பது போல் இருந்தது. விழித்துப் பார்த்தேன். அம்மா அழைத்திருந்தாள். கனவாக இருந்தாலும் மேரிக்கு நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன்.

வேம்பு தரும் நற்காற்று 

வேம்புக்குத் தருவோம் பாதுகாப்பு.


அண்மையில் நீங்கள் பார்த்த சமூகக் கருத்துள்ள திரைப்படம் ஒன்றின் திரைவிமர்சனத்தை அப்படத்தின் இயக்குநருக்கு கடிதமாக எழுதுக.

20-6-2019

திருநெல்வேலி. 


உயர்திரு இயக்குநர் அவர்களுக்கு, 

வணக்கம்.

சென்ற வாரம் தாங்கள் இயக்கிய படம் பார்த்தேன். படங்களுக்கு இப்போதெல்லாம் படங்களுக்கு வசனங்களை விட விமர்சனங்களே பக்க பலமாக இருக்கிறது. இதோ எனது விமர்சனம்.

மாணவர்களுக்கு ஊக்கம் தரும் படம். அம்மா கதாபாத்திரம் - உணவகத்தில் வேலை பார்க்கும் பெண். மகளுக்குத் தெரியாது என்ன வேலை என்று. மகள் பள்ளிக்கூடத்தில் படிக்கிறாள். அனைத்துப் பாடங்களிலும் சராசரி மதிப்பெண்கள். கணிதத்தில் மிகக் குறைவு. அம்மா கேட்டாள் காரணத்தை, நீ சொல்லிக் கொடு என்றாள் மகள். மகள் வகுப்பில் அம்மா சேர்ந்து படிக்கிறாள் சலனமின்றி.

நல்லா படிக்கும் மாணவன் அம்மாவிற்குக் கணிதம் சொல்லிக் கொடுக்கிறான். கணிதத்தில் நல்ல மதிப்பெண் அம்மாவுக்கு. மகளின் வேண்டுகோள் நீ பள்ளிக்கு வரவேண்டாம். இனிமேல் நான் நன்றாகப் படிக்கிறேன் என்றாள் மகள்.

இறுதியில் மகள் (இ.ஆ.ப) மாவட்ட ஆட்சியர் ஆகிறாள். ஒரு பேட்டியில் கணிதத்தில் உச்சத்தில் இருக்கும் நீங்கள் ஆட்சியர் பணிக்கு வந்ததன் நோக்கம் பற்றிக் கேட்டதற்கு, இது என் அம்மாவின் ஆசை. நான் வேலைக்காரி ஆகக்கூடாது. இதுவே மகளின் பதில்.

மாணவர் மத்தியில் ஒரு உற்சாகம் ஊட்டும் விதமாக திரைப்படம் அமைந்துள்ளது. பாராட்டுக்கள். கீதை உபதேசம் இல்லை இது. அம்மா உபதேசம். அம்மா கணக்குத் தப்பாது. அது லாப கணக்குதான். 80 / 100 மதிப்பெண். 


கீழ்க்காணும் நான்கு சொற்களைக் கொண்டு தொடர் எழுதுக.

எ.கா: வானம், பற, நிலவு, தொடு - வானத்தில் பறப்போம்.

பறந்து நிலவைத் தொடுவோம். 

1. சருகு, விழு, மண், அலை  

காய்ந்த இலைச்சருகுகள் மண்ணில் கிடந்தன.

மண்ணில் கிடந்த சருகுகள் அலைபோல அசைந்தன. 

2. விண்மீன், ஒளிர், எரி, விழு  

விண்மீன் வானத்தில் அழகாக ஒளிர்ந்தது.

ஒளிர்ந்த விண்மீன் எரிந்து விழுந்தது. 

3. குதிரை, வேகம் ஓடு, தாவு  

குதிரை அதிவேகமாக ஓடியது.

ஓடிய குதிரையைத் தாவிப்பிடிக்க இயலாது. 

4. குழந்தை, நட, தளிர்நடை, விழு  

குழந்தை தளிர்நடை நடந்தது.

நடந்த குழந்தை தடுமாறி விழுந்தது. 

5. திரை, காண், கைதட்டல், மக்கள் 

திரை அரங்கில் திரை விலகியதைக் கண்டார்கள்.

திரைவிலகுவதைக் கண்ட மக்கள் கைதட்டினார்கள். 


செய்து கற்போம் 

பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்களைத் தொகுத்துப் படத்தொகுப்பு உருவாக்குக.


நிற்க அதற்குத் தக


குறிப்பேடுகள் உருவாக்குதல், சேகரிப்பு, ஏதேனும் கலை பயிலல்

கலைகளில் உங்களுக்குப் பிடித்த வடிவங்கள் எவை? காரணம் என்ன?

சிலை வடிவம் பிடிக்கும். உயிர்ப்புள்ளதாக இருப்பதால். 

நீங்கள் எந்தக் கலையில் வல்லவர்?

பேச்சுக்கலை 

ஏதேனும் கலை பயில நினைத்தால் உங்கள் தேர்வு எதுவாக இருக்கும்?

ஹார்மோனியம்  

பொழுதுபோக்காகப் பொருள்களைச் சேகரிப்பதில் ஆர்வம் உண்டா ? ஆம் எனில் எவையெவை எனக் குறிப்பிடுக.

(எ-கா) அஞ்சல் தலை, நாணயங்கள்

உண்டு. உள்நாட்டு, வெளிநாட்டுப் பழைய புதிய நாணயங்கள்  

பொன்மொழிகள், குறிப்புகள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதிக் குறிப்பேடு தயாரிக்கும் வழக்கம் உண்டா? ஆம் எனில் அவை எத்தகையவை எனக் குறிப்பிடுக.

பொன்மொழி குறிப்பேடு உண்டு. “இருட்டறையில் உள்ளதடா உலகம். சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே (சமூக நீதி) 

நாட்குறிப்பு எழுதுவீர்களா? எனில் எத்தகை குறிப்புகளை எழுதுவீர்கள்?

நாட்குறிப்பு எழுதுவேன். என் நெஞ்சைத் தொட்ட நிகழ்வுகளை எழுதுவேன். 


படிப்போம் பயன்படுத்துவோம் (திரைத்துறை)

Artist - கவின்கலைஞர் 

Animation - இயங்குபடம் 

Newsreel - செய்திப்படம்

Cinematography - ஒளிப்பதிவு 

Sound Effect - ஒலிவிளைவு 

Multiplex Complex - ஒருங்கிணைந்த திரையரங்க வளாகம்


அறிவை விரிவு செய்

• எனது சுயசரிதை - சிவாஜி கணேசன் 

• மெய்ப்பாடு - தமிழண்ணல் 

• காப்பியத்தமிழ் - இரா. காசிராசன் 

• அம்ஷன்குமார் - சினிமா இரசனை

• அஜயன்பாலா - உலகத் திரைப்பட வரலாறு I, II, III 

• செழியன் - உலக சினிமா I, II, பேசும் படம் 

• கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன்இயல் 6

வாழ்வியல்

திருக்குறள்

- திருவள்ளுவர்


கற்பவை கற்றபின்


1. படத்திற்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக. 


அ) எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின் 

ஆ) உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து. 

இ) வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்டம்

மற்றைய எல்லாம் பிற. 

[விடை : ஆ) உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து.]2. கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைக் கண்டறிக. 

மனமோ மாட்டுவண்டி

பாதையொழுங்கில் போக நினைக்கும் மாடு

இப்படி இருந்தால் எப்படி நகரும்

வாழ்க்கைச் சக்கரம்

ஊர் போகும் பாதையில்

சக்கரம் உருண்டால்

அதுவே அறிவு; அதுவே தெளிவு.

அ) எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு 

அவ்வது உறைவது அறிவு. 

ஆ) சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ 

நன்றின்பால் உய்ப்பது அறிவு. 

இ) அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் 

உள்ளழிக்கல் ஆகா அரண். 

[விடை : ஆ) சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ 

நன்றின்பால் உய்ப்பது அறிவு.] 


3. பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக. 

சீரியர் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய் 

மாரிபோல் மாண்ட பயத்ததாம் - மாரி

வறந்தக்கால் போலுமே வாலருவி நாட!

சிறந்தக்கால் சீரியார் நட்பு.

அ) பழையம் எனக்கருதிப் பண்பு அல்ல செய்யும் 

கெடுதகைமை கேடு தரும். 

ஆ) எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை 

அதிர வருவதோர் நோய். 

இ) நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்

அல்லல் படுப்பதூஉம் இல்.

[விடை : இ) நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்

அல்லல் படுப்பதூஉம் இல்] 


4. அல்லல் படுப்பதூம் இல் - எவரோடு பழகினால்? 

அ) வான்போல் பகைவர்

ஆ) மெய்ப்பொருள் காண்பவர் 

இ) எண்ணியாங்கு எய்துபவர்

ஈ) தீயினத்தார்

[விடை : ஈ) தீயினத்தார்] 


5. திண்ணியர் என்பதன் பொருள் தருக. 

அ) அறிவுடையார்

ஆ) மன உறுதியுடையவர் 

இ) தீக்காய்வார்

ஈ) அறிவினார்

[விடை : ஆ) மன உறுதியுடையவர்] 


6. ஆராய்ந்து சொல்கிறவர் 

அ) அரசர்

ஆ) சொல்லியபடி செய்பவர் 

இ) தூதுவர்

ஈ) உறவினர்

[விடை : இ) தூதுவர்]


7. பொருத்துக. 

அ) பாம்போடு உடன் உறைந்தற்று - (i) தீக்காய்வார் 

ஆ) செத்தார் - (ii) சீர் அழிக்கும் சூது 

இ) வறுமை தருவது - (iii) கள் உண்பவர் 

ஈ) இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் - (iv) உடன்பாடு இல்லாதவர் 

அ) 1, 2, 3, 4 

ஆ) 2, 3, 4, 1

இ) 4, 1, 3, 2 

ஈ) 4, 3, 2, 1

[விடை : ஈ) 4, 3, 2, 1] 


8. நடுங்கும்படியான துன்பம் யாருக்கில்லை? 

அ) வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ள கூடியவர் 

ஆ) மனத்திட்பம் உடையவர் 

இ) அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர் 

ஈ) சூதாடுமிடத்தில் காலம் கழிப்பவர் 

[விடை : அ) வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ள கூடியவர்]


9. எளியது, அரியது எது? 

அ) தீயினத்தின் துணை - நல்லினத்தின் துணை 

ஆ) சொல்வது - சொல்லியபடி செய்வது 

இ) சிறுமை பல செய்வது - பகைவர் தொடர்பு 

ஈ) மெய்ப்பொருள் காண்பது - உருவுகண்டு எள்ளாதது 

[விடை : ஆ) சொல்வது - சொல்லியபடி செய்வது]


குறுவினா 


1. மனத்தை அதன் போக்கில் செல்லவிடக்கூடாது என்று வள்ளுவம் கூறுவது ஏன்?

• “சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ” 

• மனத்தை, அது போகும் போக்கில் செல்லவிடக் கூடாது.

• மேலும் மனத்தினைத் தீமை வழியிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவது அறிவாகும். 


2. உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து - இக்குறட்பாவின் உவமையைப் பொருளோடு பொருத்துக. 

உவமை : ஒருவரின் எளிய தோற்றத்தைக் கண்டு இகழக் கூடாது. உவமேயம் : பெரிய தேருக்குச் சிறிய அச்சாணி இன்றியமையாதது. பொருத்தம் : சிறிய அச்சாணிதான் என்று எளிமையாக எண்ணக் கூடாது. அதுபோல ஒருவரின் தோற்றத்தை வைத்து எளிமையாக எண்ணக்கூடாது. 


3. மன உறுதியின் தேவை பற்றித் திருக்குறள் யாது கூறுகிறது? 

 “வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்”,,, 

• நல்ல செயல்பாட்டிற்கு மன உறுதியே வேண்டும்.

• மற்றவை எல்லாம் பயன்படாது. 


4. நஞ்சுண்பவர் என வள்ளுவர் யாரை இடித்துரைக்கிறார் ?

“நஞ்சு உண்பார் கள் உண்பவர்'' 

கள் உண்பவர் நஞ்சு உண்பவரே என வள்ளுவர் கள்ளுண்பவரை இடித்துரைக்கிறார். 


5. அரசரோடு நட்புப் பாராட்டினாலும் செய்யத்தகாதன யாவை? 

• “பழையம் எனக் கருதி பண்பு அல்ல செய்யும்” நான் அரசருடன் பழமையான நட்பு உடைவராய் உள்ளேன். 

• இத்தகைய எண்ணத்துடன் தகுதி அல்லாதவற்றைச் செய்தால் அந்த உரிமையானது துன்பத்தைத் தரும்.


7. அஞ்சத் தகுந்தன, அஞ்சத் தகாதன என வள்ளுவம் குறிப்பிடுவது யாது?

"வாள் போல் பகைவரை அஞ்சற்க'' 

அஞ்சத்தகாதன : 

வாளைப் போல வெளிப்படையாகத் துன்பம் செய்யும் பகைவருக்கு அஞ்சத் தேவையில்லை. 

அஞ்சத்தகுந்தன : 

அறிவுடையார் போல் நடித்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும். 


8. வறுமையும் சிறுமையும் தருவது எது? 

ஒருவருக்கு துன்பம் பல உண்டாக்கி அவருடைய புகழையும் கெடுக்கின்ற சூதுதான் வறுமையும் சிறுமையும் ஆகும். 


9. நீங்கள் படித்ததில் பிடித்த குறளை எழுதி, காரணத்தைக் குறிப்பிடவும். 

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு." 

பிடித்தற்குக் காரணம் :

ஒருவனுக்கு மூன்று காலத்திலும் உதவக்கூடிய கல்வியினை செய்ந்நன்றி என்ற வினைத்தொகையால் குறிப்பிட்டு, மறந்தவனுக்கு தப்பிப்பிழைக்க வழியில்லை என்று வள்ளுவன் வார்த்த வடிவம் அதிசயத்தக்கது. 


10. உலகத்தில் சிறந்த துணையாகவும், பகையாகவும் வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகிறார்?

• நல்ல இனத்தைவிடச் சிறந்த துணை உலகத்தில் இல்லை.

• தீய இனத்தைவிடத் துன்பத்தைத் தரும் பகையும் இல்லை. 


11. இலக்கணக் குறிப்பு தருக. 

ஒரீஇ - சொல்லிசை அளபெடை 

படுப்பதூஉம் - இன்னிசை அளபெடை 

சொல்லுதல் - தொழிற்பெயர் 


12. கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று - பொருள் கூறுக.

நீரில் மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது. 


13 பெருந்தேர் - புணர்ச்சி விதி கூறுக 

பெருந்தேர் - பெருமை + தேர் 

ஈறுபோதல் என்ற விதிப்படி, மை விகுதி கெட்டு பெரு + தேர் என்றானது.

இனமிகல் என்ற விதிப்படி, பெருந்தேர் எனப் புணர்ந்தது. 


சிறுவினா


1. அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க 

இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் - இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக. 

அணி விளக்கம் :

ஒரு பொருளின் தொழில் அல்லது செயல் காரணமாக அமையும் உவமை தொழில் உவமை எனப்படும். 

சான்று :

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க 

இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் - குறட்பா.

உவமை : தீயில் குளிர் காய்பவர் போல. 

உவமேயம் : அரசனைச் சார்ந்திருப்பவர் விலகாமலும் நெருங்காமலும் நடந்துகொள்ள வேண்டும். 

அணிப்பொருத்தம்:

அரசனைச் சார்ந்து இருப்பவர் குளிர்காய்பவர்களைப் போல தீயிலிருந்து அகலாது அணுகாது இருத்தல் வேண்டும். இதில் அகழுதல், அணுகுதல் போன்ற தொழில் ஒப்புமை எதிர்மறையில் வந்துள்ளதால் தொழில் உவமை எனப்படும். 


2. அறிவின் மேன்மை பற்றித் திருக்குறள் கருதுவன யாவை? 

 “அறிவற்றம் காக்கும் கருவி செறுவாருக்கு 

 உள்அழிக்கல் ஆகா அரண்." 

• அறிவு ஒருவனுக்கு அழிவு வராமல் காக்கும் கருவி. 

• மேலும் பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் ஆகும்.

“சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ 

நன்றின்பால் உய்ப்பது அறிவு.” 

• மனத்தினை, அது போகும் போக்கில் செல்ல விடாமல் தடுப்பது அறிவு. 

• மேலும் தீமையிலிருந்து விலக்கி நல்வழியில் செலுத்துவதும் அறிவு. 

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 

மெய்ப்பொருள் காண்ப தறிவு”

ஒரு பொருளைப் பற்றி யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதே அறிவாகும். இவையாவும் வள்ளுவன் வகுத்த அறிவின் மேன்மைகள் ஆகும். 


3. எடுத்துக்காட்டு உவமை அணியை விளக்கிக் கீழ்க்காணும் குறளுக்கு இவ்வணியைப் பொருத்தி எழுதுக. 

துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும் 

நஞ்சுஉண்பார் கள்உண் பவர். 

அணிவிளக்கம் :

உவமை ஒரு வாக்கியமாகவும் உவமேயம் ஒரு வாக்கியமாகவும் உவம உருபு மறைந்து வருவதால் எடுத்துக்காட்டு உவமை அணி எனப்படும். 

உவமை  : துஞ்சினார் செத்தாரின் வேறு 

உவமேயம் : நஞ்சுஉண்பார் கள்உண் பவர் 

உருபு : மறைந்துள்ளது. 

பொருத்தம்

உறங்கியவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர். அதுபோல கள் உண்பவரும் நஞ்சு உண்பவருக்குச் சமமே என்பதை விளக்குவதால் இப்பாடல் எடுத்துக்காட்டு உவமை அணி ஆகும். 


4. மனத்திட்பம் அவசியமான பண்பு என்பதைக் குறள்நெறி நின்று விளக்குக. 

“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற.” 

மனவலிமை :

செயலினது வலிமை என்பது அதனைச் செய்பவனின் மனவலிமையே ஆகும். ஏனைய வலிமைகள் எல்லாம் மனவலிமையிலிருந்து வேறுபட்டவை. 

''சொல்லுதல் யார்க்கும் எளிய அறியவாம் 

சொல்லிய வண்ணம் செயல்''

எளிது - அரிது : ஒரு செயலை இவ்வாறு செய்யலாம் என்று சொல்வது எளிது. ஆனால், சொல்லியபடிச் செய்து முடிப்பது அரிது.  

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் 

திண்ணியர் ஆகப் பெரின்” 

எண்ணத்தில் வலிமை :

ஒரு செயலை எண்ணியவர் எண்ணத்தில் வலிமை உடையவராக இருந்தால், எண்ணியதை எண்ணியபடியே செய்து முடிப்பர். 

"உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து.” 

உருவம் பொருட்டல்ல :

ஒருவரது உருவத்தைப் பார்த்து இகழ்ந்துரைக்கக் கூடாது. உருண்டு ஓடும் பெரிய தேருக்குச் சிறிய அச்சாணி போல இன்றியமையாதவராக அவர் இருக்கலாம். 


5. சிற்றினம் சேராமையும் நல்லினத்தின் துணையுமாக வள்ளுவர் உரைப்பன பற்றி நீவிர் அறிவனவற்றை எழுதுக. 

“மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம் 

இன்னான் எனப்படும் சொல்” 

இனத்தால்தான் தகுதி :

மக்களுக்கு உணர்ச்சி மனத்தின் வழி உண்டாகும். இவன் இப்படிப்பட்டவன் என்று அவன் சார்ந்திருக்கும் இனத்தை வைத்தே உலகம் சொல்லும். 

“நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்

அல்லர் படுப்பதூஉம் இல்.” 

நல்லவர் தீயவர் நட்பு :

நல்லவர் நட்பு போல சிறந்த துணை இல்லை; தீயவர் நட்புபோல் துன்பம் தருவதும் இல்லை. 


6. வாளையும் பாம்பையும் எவ்வகைப் பகைமைக்குச் சான்றாக வள்ளுவர் கூறுகிறார்? 

“வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக 

கேள்போல் பகைவர் தொடர்பு” 

வாள்போலும் பாம்பு போலும் பகை :

வாளினைப் போல் வெளிப்படையாகத் துன்பம் செய்யும் பகைவரிடம் அஞ்ச வேண்டியது இல்லை. ஆனால் உறவினர் போலப் பழகும் பகைவருக்குப் பயப்பட வேண்டும். 


7. சூதும் கள்ளும் கேடு தரும் - திருக்குறள் வழி விவரிக்க. 

“சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் 

வறுமை தருவதுஒன்று இல்" 

சூதின் சிறுமை :

இழிவைத் தந்து சிறப்பை அழிக்கும் சூது போல வறுமை தரத்தக்கது வேறு இல்லை. 

“பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் 

கழகத்துக் காலை புகின்” 

சூதால் செல்வம் அழியும் :

தொடர்ந்து சூதாடும் இடத்திற்குச் சென்று வந்தால் நீண்டநாள் சம்பாதித்த செல்வமும் பண்பும் கெட்டழியும்.

கள்ளும் விஷமும் ஒன்றே :

உறங்கினவர் இறந்தாரோடு வேறுபாடு உடையவர் அல்லர். அதுபோல எப்போதும் கள் உண்பவர் விஷம் உண்பவர் ஆவார். 

திருத்தமுடியாது :

கள்ளுண்டு மயங்கியவனை நல்லன சொல்லித் திருத்த முடியாது. அது நீரில் மூழ்கிய ஒருவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போலாகும். 


நெடுவினா


1. “அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணை நிற்கும்” என்பதை வள்ளுவம் வழிநின்று நிறுவுக.

அறிவுடைமை வாழ்வின் உயர்விற்கு துணை நிற்கும் : 

“அறிவுற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் 

உள்அழிக்கல் ஆகா அரண்."

அறிவானது உயிர்க்கு அழிவு வராமல் பாதுகாக்கும் கருவியாகும். மேலும் அறிவானது, பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும்.

“சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ 

நன்றின்பால் உய்ப்பது அறிவு."

மனத்தினை, அது போகும் போக்கில் போகவிடக் கூடாது. தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும். 

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 

மெய்ப்பொருள் காண்ப தறிவு"

எந்தப் பொருளை யார் வாயிலாகக் கேட்டாலும் அந்தப் பொருளின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதே அறிவு ஆகும். 

"எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு 

அவ்வது உறைவது அறிவு”

உலகம் எத்தகைய உயர்ந்த நெறியில் செல்கிறதோ அந்நெறியில் தாமும் உலகத்தாடு இணைந்து செல்வதே அறிவாகும். 

“எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை 

அதிர வருவதோர் நோய்”

பின்னால் வரப்போவதை முன்பே அறிந்து காத்துக் கொள்ளும் வல்லமை கொண்ட அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றில்லை.

இறுதியாக, அறிவு பாதுகாப்புத் தரும் கருவி, நல்வழியில் செலுத்தக்கூடியது அறிவு, உண்மையைக் கண்டறிய உதவும் அறிவு, வருமுன் காப்பது அறிவு என்று மனித வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் வாழ்க்கையின் உயர்வுக்குத் துணையாய் நிற்பது அறிவே என்பதை வள்ளுவன் வழியில் கண்டோம். 


2. திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் - நிறுவுக. 

தொடக்கமாக,

வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை ஒருங்கே தொகுத்து மானுடத்திற்கு அளித்து மங்காப் புகழ்பெற்றவன் மாதானுபாங்கி. வள்ளுவனின் கோட்பாடுகளுள் யாதானும் ஒன்றைக் கடைப்பிடித்து ஒழுகினாலும் வையத்துள் வாழ்வாங்கு வாழலாம்.

அறிவுடைமை : 

• இந்த அதிகாரத்தில் அறிவானது ஒருவனுக்கு அழிவு வராமல் காக்கும் கருவி என்றும், பகைவராலும் அழிக்க முடியாத அரண் என்றும் வள்ளுவர் கூறுகிறார். 

• மனதைப் போகும் போக்கில் விடாமல், தீமையிலிருந்து நம்மை விலக்குவதும் அறிவு ஆகும். 

• ஒரு பொருளைப் பற்றி எவர் கூறக் கேட்டாலும் அப்பொருளின் உண்மைத் தன்மையை ஆராய்வதே அறிவு என்கிறார் வள்ளுவர். 

மன உறுதி வேண்டும் :

அதிகாரத்தில் ஒரு செயலைச் செய்ய எண்ணியவர் மனவுறுதியுடையவராக இருந்தால், எண்ணியவாறே நடக்கும் என்று மனதில் உறுதி வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

மன்னரைச் சார்ந்து ஒழுகுதல் என்னுமிடத்தில், நான் அரசரிடம் நட்பு கொண்டவன் என்று தகுதி அல்லாதவற்றைச் செய்தால் கேடு உண்டாகும் என்றும் நல்லது அல்லாதவற்றைச் செய்தல் துன்பம் என்று வள்ளுவர் கண்டிக்கிறார்.

உட்பகை என்ற நிலையில் வெளிப்படையாகத் துன்பம் செய்பவரை விட உறவு போல் நடித்து உட்பகையாடுவார் தொடர்புக்கு அஞ்ச வேண்டும் என்று தெளிவுப்படுத்துகிறார் வள்ளுவர்.

கள் உண்ணாமையைக் கூறும் போது கள் உண்பவர் நஞ்சு உண்பரே என்றும் கள் உண் பவனைத் திருத்துவது என்பது நீரில் மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றதாகும் என்கிறார் வள்ளுவர்.

இறுதியாக ஒரு மனிதன், பின்னால் வரப்போவதை முன்னால் அறியக்கூடிய அறிவுடையவனாகவும், சிற்றினம் சேராமலும் திண்ணிய மனமுடையவராகவும், தீயில் குளிர் காய்பவர் போல மன்னனோடு சார்ந்திருக்க வேண்டும் என்றும், உட்பகை இன்றி, கள்ளுண்ணாமலும் வாழ்வதே வாழ்க்கை என்று வள்ளுவர் நம்மை வழிப்படுத்துகிறார். 


Tags : Chapter 6 | 12th Tamil இயல் 6 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 6 : Sirugai alaviya cool : Questions and Answers Chapter 6 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ் : கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 6 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ்