நகுலன் | இயல் 6 | 12 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள்: கவிதைகள் | 12th Tamil : Chapter 6 : Sirugai alaviya cool
கவிதைப்பேழை
கலை – சு
கவிதைகள்
- நகுலன்
நுழையும்முன்
பாரதிக்குப் பின்னர் வந்த காலகட்டத்துக் கவிதைகள், பலவற்றையும் பற்றிய சிந்தனைகளைச் செறிவாக, குறிப்பாக, முரணாக, அழகிய தொடராகத் தருவதற்கு முயன்றன. புதுக்கவிதை வடிவம் இதற்கு ஏற்றதாக இருந்தது; இருக்கிறது. புதுக்கவிதை, புதிய வடிவம் கொண்ட கவிதை என்ற பொருள் மட்டும் கொண்டதல்ல. புதிய சிந்தனைகளையும் புதிய கருத்துகளையும் புதுமையாகச் சொல்வதையும் குறிப்பது.
1. இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்.
2. மூச்சு நின்று விட்டால்
பேச்சும்
அடங்கும்.
3. அவர் பல உண்மைகளைச் சொல்கிறார்.
ஒரு உண்மையைச் சொல்லாமல்
இருப்பதற்கு
4. ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மௌனம்; மகா மௌனம்.
5. அலைகளைச் சொல்லிப்
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிற வரை.
உள் நின்று
சலிக்கும் காற்று
உள்ளவரை.
நூல்வெளி
நம்பாடப் பகுதியிலுள்ள கவிதைகள் 'நகுலன் கவிதைகள்' என்னும் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. கவிஞர் நகுலன் (டி.கே. துரைசாமி). கும்பகோணத்தில் பிறந்தவர்; கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர்; அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்; தமிழின் அனைத்துச் சிற்றிதழ்களிலும் எழுதி வந்தவர். புதுக்கவிதை வடிவம் தமிழ் மொழியில் தடம் பதித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், புதுக்கவிதை மூலம் வாழ்வியலுக்குத் தேவையான கருத்துகளை நறுக்கென்று கூறியுள்ளார். இவர், சொல் விளையாட்டுகளோ, வாழ்க்கை பற்றிய எந்தக் குழப்பமோ இன்றித் தெளிவான சிந்தனையோடு கருத்துகளை உரைத்துள்ளார். இவருடைய கவிதைகள் மூன்று, ஐந்து, கண்ணாடியாகும் கண்கள், நாய்கள், வாக்குமூலம், சுருதி உள்ளிட்ட சிறு சிறு தொகுதிகளாக வந்துள்ளன. இவர் 7 புதினங்களை எழுதியுள்ளார்; பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.