Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | துணைப்பாடம்: நடிகர் திலகம்

பாலச்சந்திரன் சுள்ளிக்காடு | இயல் 6 | 12 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: நடிகர் திலகம் | 12th Tamil : Chapter 6 : Sirugai alaviya cool

   Posted On :  02.08.2022 02:13 am

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ்

துணைப்பாடம்: நடிகர் திலகம்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ் : துணைப்பாடம்: நடிகர் திலகம் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

விரிவானம்

நடிகர் திலகம்

- பாலச்சந்திரன் சுள்ளிக்காடுநுழையும்முன்

நடிப்புலகின் சக்கரவர்த்தி என எல்லோரும் வியக்கின்ற மகத்தான நடிகர் சிவாஜிகணேசன். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிர் அளித்துத் தன் வசனத்தாலும் உடல் அசைவுகளாலும் உருட்டுவிழி நகர்வாலும் காண்பவர்களைக் கட்டிப்போட்டுவிடுகின்ற கலைஞர். நவரச உணர்வுகளைத் தன் முகக் குறிப்புகளாலும் உடல் மொழிகளாலும் சிறப்பாக வெளிப்படுத்தி நடித்த மகா நடிகன். இத்தகைய சிறப்புகளைப் பெற்றுத் தமிழ்த் திரையுலகின் அடையாளமாக விளங்கும் செவாலியே சிவாஜி கணேசன் பற்றி அறிவது நடிப்புக்கலையைப் பற்றி அறிவதாகும்.


"இன்று மதியம் மிகச் சரியாக மூன்று மணிக்கு ராதா பிக்சர்ஸ் பேலசின் வெள்ளித் திரையில் தென்னிந்தியத் திரைப்பட நடிப்புச் சக்ரவர்த்தி, தமிழ்நாட்டின் நாட்டியப் பெருமையின் புகழ்க்கொடி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்கும் தங்கப் பதக்கம்".

நீங்கள் இப்போது கேட்ட விளம்பரம் முப்பது வருடங்களுக்கு முன்பு கேரளத்தின் மிக முக்கியமான நகரத்தின் தெருக்களில் ஆட்டோ ரிக்சாவின் மேல் தடித்த உச்சஸ்தாயில் முழங்கிய ஒரு இளைஞனின் குரல். ஒரு நேரச் சாப்பாட்டுக்காகவும் ஐந்து ரூபாய்க் கூலிக்காவும் சினிமா விளம்பரம் செய்து, உதய அஸ்தமனம் வரை ஊர் சுற்றிக் கொண்டிருந்த அந்த 18 வயது பையனின் பெயர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.

இருபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் அரண்மனை போன்ற சிவாஜி கணேசனின் வீட்டிற்குள் அவரோடு ஒன்றாக உணவு அருந்தியபோது, கேரள நகரின் வீதிகளில் குரல் விற்றுப் பிழைத்த அந்தப் பழைய பையன் என் நினைவலைகளில் மிதந்தான்.

1986 இல் நான் 'ருது பேதம்' என்ற திரைப்படத்தின் ஐம்பதாம் நாள் விழாவில்தான் முதன் முதலில் அவரைச் சந்தித்தேன். சிவாஜிகணேசன் தலைமை ஏற்றிருந்த அந்நிகழ்ச்சியில் நானும் ஒரு பேச்சாளராக இருந்தேன்.

1995 இல் நண்பர் வி. பி .கெ. மேனன் ஒரு படம் எடுக்கத் தீர்மானித்தார். அதில் முக்கியமான வேடமேற்று நடிக்க சிவாஜி கணேசனும் மோகன்லாலும் சம்மதித்திருந்தார்கள். திரைக்கதை ஜான்பால்; 'ராஜீவ்நாத்’ தான் படத்தின் இயக்குநர்.

ஒரு நாள் காலையில் ராஜீவ்நாத் என்னிடம் சொன்னார்: "இன்னைக்குச் சாயங்காலம் சிவாஜிகணேசன், அவருடைய வீட்டுக்கு இரவு விருந்துக்கு நம்மைக் கூப்பிட்டிருக்கார்". அன்று மாலை ஜான்பாலும் நானும் ராஜீவ்நாத்துடன் சிவாஜி கணேசனின் வீட்டுக்குப் போனோம்.

"என்னைப் போல் சிவாஜி நடிப்பார். ஆனால் என்னால்தான் சிவாஜிபோல் நடிக்க முடியாது"

- மார்லன் பிராண்டோ (ஹாலிவுட் நடிகர்)

வீடென்றா சொன்னேன்; இல்லை அது ஓர் அரண்மனை. சிற்ப வேலைப்பாடுகள் செய்த மிகப் பெரிய கதவைத் தாண்டி உள்ளே நடந்ததும் விசாலமான ஒரு தளம் நம்மை வரவேற்கிறது. அங்கே தங்கத்தால் இழைத்த இரண்டு பெரிய யானைத் தந்தங்கள் இருந்தன. இடப்புறத்தில் மேலே செல்ல, பெரிய மாடிப்படிகள்.
வேலைக்காரர் எங்களை மேலே வருமாறு பணித்தார். இயல்பாய் மாடி ஏறிய நான் ஒரு திருப்பத்தில் நடுங்கிப்போய்க் கையெடுத்துத் தலைகுனிந்து வணங்க முற்பட்டேன். அங்கே சுவரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வேடத்தில் வீரத்தையும் கம்பீரத்தையும் கொட்டி முழங்கிய சிவாஜிகணேசனின் ஆயில் பெயிண்ட் செய்யப்பட்ட படம். அடுத்த திருப்பத்தில் உடைவாள் உருவின நிலையில் சத்ரபதி சிவாஜி. வலது பெருவிரலால் மீசை முறுக்கி மந்தகாசப் புன்னகையுடன் நிற்கும் ராஜராஜசோழன் ஒரு புறம். ஒரு புறம் கண்ணாடி அறைக்குள் பிரெஞ்சு அரசு சிவாஜி கணேசனின் நடிப்பைப் பாராட்டி அளித்த செவாலியர் விருதுடன் கூடிய மிகப் பெரிய வெள்ளைக் குதிரை.

எல்லாம் பார்த்து இரசித்தபடியே நாங்கள் சோஃபாக்களில் அமர்ந்தோம். மாம்பழச் சாறு வந்தது. அதைக் குடித்து முடித்தபோது மனைவியும் வேலை ஆட்களும் இருபுறமும் நடந்து வர சாட்சாத் சிவாஜி கணேசன் எங்களைப் பார்த்து வந்துகொண்டிருந்தார்.

ஒரே சீராய் அடி எடுத்து வைத்து, ஒவ்வொரு பாத அடி வைக்கும் போதும், மறுதோள் முன்னோக்கிச் சாய, தலை நிமிர்ந்து, நெஞ்சு விரித்து, இசைக்கு அசைப்பது போலக் கைகள் வீசி, பார்வை இமை அசையாது மெல்ல மெல்லச் சிங்க நடை நடந்து வரும் அந்த மகாநடிகனைப் பார்த்தபொழுது ராஜராஜ சோழனின் வருகையைப் பார்த்த தமிழ்நாட்டுத் தெருப்பிள்ளைகளைப் போல நான் துள்ளி எழுந்தேன். அவர் ஒரு ராஜநடை நடந்து வந்து சிம்மாசனத்தில் அமர்ந்தார். நானும் ராஜீவ்நாத்தும் அவரின் காலில் விழுந்து வணங்கினோம்.

வலது கையால் ஆசீர்வாதம் செய்த சிவாஜிகணேசன் "உட்காருங்கோ" என்றார். நாங்கள் உட்கார்ந்தோம்." என்ன ராஜீவ் என்ன சமாச்சாரம்? கதை ரெடியாயிடிச்சா?" என்றார்.

அவர்கள் கதையைப் பற்றியும் கதாபாத்திரத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்க நான் சிவாஜிகணேசனின் புருவங்களையும் கண்களையும் முக அபிநயங்களையும் உதடுகளையும் கைவிரல்களையும் தாள், லய அபிநயங்களையும், சலனங்களையும் பார்த்துக்கொண்டு நிசப்தனாய் அமர்ந்திருந்தேன்.

ஊழித் தாண்டவமாடும் ருத்ரன், கவச குண்டலம் கொடுத்த கர்ணன், காளமேகத்தில் கவிதை ததும்பச் செய்த கவிகுல குரு காளிதாசன். அமிழ்தத் தமிழ்மொழியின் உன்னதக் கவியான பாரதி, தாய்த் தமிழ் மண்ணின் வீர தீரச் சந்ததியான வீரபாண்டிய கட்டபொம்மன், சோழ குலோத்துங்கச் சூரியனான ராஜராஜசோழன் என சிவாஜிகணேசனின் கதாபாத்திரங்கள் என் மன அடுக்குகளில் மின்னி மறைந்தனர்.


திரைக்கதை பற்றிய அவர்களின் உரையாடல் முடிந்ததும் ராஜீவ்நாத்திடம் கேட்டார்

"இந்தப் பையன் யாரு?" நான் ஒரு மலையாளக் கவிஞன் என்று ராஜீவ்நாத் என்னை அறிமுகப்படுத்தினார். சட்டென என் முன்னால் இருகைகளையும் கூப்பி அவர் மென்மையாய்ச் சொன்னார்.

"கவிஞரா? வணக்கம்"

எனக்கான மரியாதை அல்ல அது, காவியக் கலையிடம் மூத்த திராவிடனுக்கு இருக்கும் ஆழ்ந்த ஆதரவையும் மரியாதையையும்தான் அவர் காண்பித்தது என்பதைப் புரிந்துகொள்ளும் தெளிவு எனக்கு இருந்தது.

" உள்ளே போகலாம் "அவர் எழுந்தார். நாங்கள் பின் தொடர்ந்தோம்.

எகிப்தின் முன்னாள் அதிபரான நாசர், நடிகர்களான பால் ம்யூனி, ஓமர்ஷெரீப், ரிச்சர்ட் பர்ட்டன், ப்ரதீப், ராஜ்கபூர் போன்ற உன்னதமான நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைச் சிவாஜிகணேசன் எங்களுக்கு ஒவ்வொன்றாய்க் காண்பித்தார். அவர் வாழ்வினில் நடந்த சில விஷயங்கள் குறித்து எங்களோடு பகிர்ந்துகொண்டார்.

கணேசன் பிறந்த ஊர் விழுப்புரம். சின்னையா கணேசன் என்பதுதான் அவர் பெயர். ஆங்கிலேயரால் சிறை சென்ற தனது தந்தையை ஒன்பதாவது வயதில் தான் கணேசன் முதன்முதலில் பார்த்தார். அவர் பள்ளிக்கூடத்தில் படித்ததேயில்லை. ஐந்து வயதாகும் போதே குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக நாடகக் கம்பெனியில் சேர்ந்தார். இளம்பருவத்திலேயே தமிழ்நாட்டின் மிகச்சிறந்த நாடக நடிகன் என்று பெயரெடுத்தார்.

அண்ணாதுரையின் நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக வேடமேற்று நடித்தார். அதைப் பார்த்த பெரியார், வி.சி. கணேசனுக்கு 'சிவாஜிகணேசன்' என்று பெயரிட்டார். அந்தப் பெயரே அவருக்கு நிலைத்தும்விட்டது.

அந்தக் காலத்தில் பாலக்காடு, கொச்சின், திருவனந்தபுரம் போன்ற கேரள நகரங்களிலெல்லாம் சிவாஜி கணேசன் நாடகம் நடித்துள்ளார்.

அவர், 'பராசக்தி' என்ற திரைப்படத்தில் நடிக்க, முதன்முதலில் ஏ.வி.எம். ஸ்டுடியோவுக்கு வருகிறார். பராசக்தியின் வெற்றி அவரைத் திரைப்படத்துறையின் உச்சாணிக்கொம்பில் மலரச்செய்து அழகுபார்த்தது. மிகவும் பிஸியான திரைப்பட நடிகனாக இருந்தபோதும் ஐம்பதுவயது வரை சொந்தமாக நாடகக் கம்பெனி நடத்தி, அரங்கங்களில் நடித்தும் வந்தார். 

அரங்கத்து நடிப்போடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது என்னுடைய சினிமா நடிப்பு ஒண்ணுமேயில்ல. சரித்திரத்திலும் புராணங்களிலும் வரும் வீரபுருஷர்களைத் தத்ரூபமாய் நடித்து அவர்களை எங்கள் நாட்டின் சாமானியப்பட்டவர்களும் ஏழைகளுமான மக்களின் இதயத்தில் குடிபுகச் செய்தேன். இதுதான் இந்த நாட்டிற்கு நான் செய்த கலாச்சாரப் பங்களிப்பு. என் நாடு என்னை ஒரு நாளும் மறக்காது". இப்படிப் பேசி நிறுத்தியபோது அறுபத்து ஐந்து ஆண்டுகளாக அபிநயக் கலையின் அபார சமுத்திரத்தில் கப்பலோட்டிய அந்தத் தமிழனின் முகத்தில் தெரிந்த ஆத்ம திருப்தியை வர்ணிக்க என்னுடைய எளிய வார்த்தைக்குச் சக்தியில்லை .

வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற திரைப்படம்தான் சிவாஜிகணேசனை உலக பிரசித்தி பெற்ற நடிகனாய் மாற்றியது. ஆனாலும் அவர், கட்டபொம்மன் நாடகம்தான் பிரமாதம். படம் ஒண்ணுமேயில்லை என்றார்.

பல நாடகங்களில் அதிக வேலையுள்ள பெரும் பாத்திரங்களை ஏற்று நான் நடித்திருக்கிறேன். ஆனாலும், இந்த கட்டபொம்மனில் எனக்கு இயற்கையாக எழும் உணர்ச்சி நாடக முடிவில் எத்தகைய களைப்பை, சிரமத்தை உண்டாக்குகின்றது என்பதை நினைக்க எனக்குப் பயமாகவே இருக்கிறது. என்றாலும் எனது குழுவினர்களோடு நாடக நாள்களில் ஒன்றுபட்டுச் செயல்படுவதில் காணும் இன்பமும், மக்களின் பாராட்டுதலை நேருக்குநேர் பெறும் வாய்ப்பும், எனக்கு எதிலும் பெற முடியாத ஒரு தனி மகிழ்ச்சியைத் தருகிறதென்ற உண்மை ஒன்றே எனக்குக் கிடைக்கும் பெரும் ஆறுதலாகும். 

- நடிகர் திலகம் சிவாஜிகணேசன்

“அந்த நாடகத்தின் வசனம் ஏதும் ஞாபகம் இருக்கிறதா"? ராஜீவ்நாத்தான் அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டார்.

"தலைபோனாலும் மறக்கமுடியுமா?"

ஒரு வசனம் எங்களுக்காகச் சொல்லமுடியுமா?

ராஜீவ்நாத் கேட்ட கேள்வியால் நான் பயந்துபோனேன். யாரிடம் இதைக்கேட்கிறோம் என்று ராஜீவ் யோசிக்கவில்லையா? அவரை சிவாஜி கணேசன் கோபித்துக் கொள்வார் என்றே நான் நினைத்தேன். ஆனால் நம்பமுடியாத அந்த அதிசயம் அப்பட்டமாய் நிகழ்ந்தேறியது.

சிவாஜிகணேசன் சிறிது நேரம் கண்மூடிக் கைகூப்பி அமர்ந்திருந்தார். பிறகு மெதுவாகக் குனிந்து, இடது கையால் வேட்டியின் தலைப்பைப் பிடித்து, மெதுவாக நிமிர்ந்து சட்டென விஸ்வரூபமெடுத்தது போலத் திரும்பி நின்றார். நாங்கள் மிரண்டு போனோம். உயரம் குறைவான, வயதான. எங்களிடம் இவ்வளவு நேரம் இயல்பாய் பேசிக்கொண்டிருந்த சிவாஜிகணேசனல்ல அது. மனித ஆத்மாவை நடுநடுங்க வைத்த வீரபாண்டிய கட்டபொம்மன்தான் அது. சூரியன் அஸ்தமனம் ஆகாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியான ஜாக்சன் துரைக்கு நேராக ஆதித் தமிழக வீர பௌருஷத்தின் சிங்கக் கர்ஜனை முழங்கியது.

"நீ ஏர் பிடித்தாயா? களை வெட்டினாயா? கஞ்சிக்கலயம் சுமந்தாயா ? அங்கு கொஞ்சி விளையாடும் எங்கள் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? நீ என்ன எனக்கு மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே",

தமிழக மக்களைச் சிலிர்த்தெழச் செய்த உலகப் பிரசித்தி பெற்ற அந்த வசனத்தைக் கொஞ்சமும் மறக்காமல் ஏற்ற இறக்கத்துடன் ஒரே மூச்சில் சொல்லி முடித்து, நெற்றியில் வியர்வையை வடித்துவிட்டு சிவாஜி கணேசனாய்ச் சுருங்கி சோஃயாவில் திரும்பி வந்து உட்கார்ந்து எங்களை ஆழமாக ஒரு முறை பார்த்தார். ஜான்பாலும் ராஜீவ் நாத்தும் மௌனத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.

சிவாஜிகணேசன் பெற்ற விருதுகள் 

ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் 

(கெய்ரோ) சிறந்த நடிகருக்கான விருது 

கலைமாமணி விருது 

பத்ம ஸ்ரீ விருது (தாமரைத் திரு) 

பத்ம பூஷன் விருது (தாமரை அணி) 

செவாலியர் விருது 

தாதாசாகெப் பால்கே விருது

"மலையாளத்தில் சரித்திர புராண நாடகங்கள் இல்லையா?"

சிவாஜி கணேசன் கேட்டபோது ஜான்பாலும் ராஜீவ்நாத்தும் நானும் ஒரு நிமிடம் தலைகுனிந்து உட்கார்ந்தோம்.

“இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு சி.என். ஸ்ரீகண்டன் சாகேதம் கஞ்சன சீதா, லங்காலக்ஷ்மி என்று மூன்று நாடகங்கள் எழுதியிருக்கிறார்". மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள ராஜீவ்நாத் சொன்னார் "லங்காலக்ஷ்மியில் இராவணின் வசனம் முழுவதும் பாலன் பாக்காம சொல்வான்" என்னைப் பார்த்து ஜான்பால் சொன்னார்.

"ராவணனின் இரண்டு வசனத்தை எடுத்துவிடுடாபாலா, சிவாஜி சார் கேட்கட்டும்" 

ராஜீவ்நாத் ஆவேசத்தோடு சொன்னார். 

நான் பதறிப்போனேன். சிவாஜிகணேசனின் வீட்டிற்குப்போய் அவரிடமே நாடக வசனம் சொல்வதா?"

"சும்மா எடுத்துவிடடா இங்க என்ன பாக்கறே"

ராஜீவ்நாத் மறுபடியும் என்னைத் தூண்டினார். நான் பதுங்கிப் பதுங்கி அமர்ந்து பார்த்தேன்.

"சொல்லப்பா, இங்க நாம நண்பர்கள் மட்டும்தானே இருக்கோம். எதுக்கு வெட்கப்படறே?" சிவாஜி கணேசன் உற்சாகப்படுத்தினார். வாத்சல்யத்தோடு அதில் எனக்குத் தைரியம் வந்தது. எழுந்து நடிப்புச் சக்ரவர்த்தி சிவாஜி கணேசனின் காலைத் தொட்டு வணங்கினேன். அவர் என் தலையில் கை வைத்து வாழ்த்தினார்.

திருவிளையாடலில் ருத்ர தாண்டவமாடிய சிவாஜி கணேசனை இதயத்தில் தியானித்து , சிவபக்தனான இராவணனின் ஆக்ரோஷமான உத்தரவுகளைக் கீழ்ஸ்தாயில் நான் ஆரம்பித்தேன். மெல்ல மெல்ல இராவணன் என்னை ஆகர்ஷித்து ஆவேசப்படுத்தினான்.

"இலங்கையில் போர்க்கொடிகள் பறக்கட்டும். எதிரிகளைத் தடுக்க ஆயத்தமாகலாம். கோட்டை வாயிலில் மகரட்சன். கிழக்கிலும் மேற்கிலும் சுகசாரணர்கள் நிற்கட்டும். தெற்கில் நிகும்பன், அகம்பானன் முன்னணியில் படை போக ஆரம்பிக்கட்டும். பிரகஸ்தன் படையின் பின்னால் வந்து யுத்த நிலையைக் கணிக்கட்டும் தூம்ராட்சன் எதிரிப்படைகளின் பின்னாலிருந்து அழித்து வரட்டும். வலத்தில் மகா பார்ஷ்வன். இடத்தில் மகோதரன். யானை ஆயிரம், ரதம் ஆயிரம்,குதிரைகள் இரண்டாயிரம், காலாட்படை ஒரு கோடி, ஆ......... நானே வெல்வேன்."

நான் சொல்லி முடித்ததும் தான் ஒரு மாபெரும் நடிகன் என்பதையெல்லாம் ஒதுக்கிவிட்டு முதன் முதலாய் ஒரு நாடக வசனத்தைக் கேட்கும் சாதாரண மனிதனைப் போலக் கைதட்டினார் சிவாஜிகணேசன். என் குரல் நன்றாக இருப்பதாகப் பாராட்டவும் செய்தார்.

"இராவண வேடத்தில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும்." ராஜீவ்நாத் சிவாஜியிடம் சொன்னார். "என்ன பண்றது ? மலையாளம் தெரியாதே; வயசும் ஆயிடுச்சு?"

ஒரு கதாபாத்திரத்தை இழந்த நடிகனின் நிராசை உதட்டிலும் குரலிலும் படர சிவாஜிகணேசன் சொன்னார். பிறகு அவர் எங்களை விசாலமான சாப்பாட்டு அறைக்கு அழைத்துச்சென்றார். அங்கே அவர் மனைவி கமலா அம்மா பலவிதமான, தரமானதொரு விருந்தினை ஏற்பாடு செய்துவிட்டு எங்களுக்காய்க் காத்திருந்தார். சிவாஜி கணேசனும் எங்களோடு அமர்ந்தார். அவர் மனைவி, உணவை எங்களுக்குப் பரிமாறினார்.

திரும்பி வரும்போது வாசல் வரை வந்து அந்தத் திராவிடத் தம்பதிகள் எங்களை வழியனுப்பினார்கள். இரவு வணக்கம் சொல்லிக் கையசைத்து நிற்கும் சிவாஜிகணேசனையும் அவரின் மனைவியையும் பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டே வந்தேன்.

சீறிப்பாயும் காரில் உட்கார்ந்திருந்திருக்கும் போது என் இதயத்தில் தெருக்களில் குரல் விற்றுப் பிழைத்த அந்தப் பழைய பையனின் சப்தம்.

"தென்னிந்திய நடிப்புச் சக்கரவர்த்தி, தமிழ்நாட்டின் நாட்டியப் பெருமையின் புகழ்க் கொடி, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிக்கும்......"


நூல்வெளி

இப்பாடப்பகுதி, மலையாளக் கவிஞரும் நடிகருமான பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய சிதம்பர ஸ்மரண என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. இவர் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர். இவரின் இந்நூலை கே.வி.சைலஜா 'சிதம்பர நினைவுகள்' என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.


Tags : by BalaChandran sullikkadu | Chapter 6 | 12th Tamil பாலச்சந்திரன் சுள்ளிக்காடு | இயல் 6 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 6 : Sirugai alaviya cool : Supplementary: Nadigar thilagam by BalaChandran sullikkadu | Chapter 6 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ் : துணைப்பாடம்: நடிகர் திலகம் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு | இயல் 6 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ்