Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | இலக்கணம்: பா இயற்றப் பழகலாம்

இயல் 4 | 12 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: பா இயற்றப் பழகலாம் | 12th Tamil : Chapter 4 : Chalvathul ellam thalai

   Posted On :  01.08.2022 09:25 pm

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : செல்வத்துள் எல்லாம் தலை

இலக்கணம்: பா இயற்றப் பழகலாம்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : செல்வத்துள் எல்லாம் தலை : இலக்கணம்: பா இயற்றப் பழகலாம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இனிக்கும் இலக்கணம்

கல்வி – ச 

பா இயற்றப் பழகலாம்


தமிழ்மொழி கவிதைவளம் உடையது. காலத்திற்கு ஏற்ப யாப்பிலக்கணமும் வளர்ச்சி பெறுகிறது. போட்டி போட்டுக்கொண்டு புதுக்கவிதைகள் பெருகினாலும் மரபுக் கவிதைகளும் மிகுதியாக எழுதப்படுகின்றன.

சங்கம் மருவிய காலத்திலிருந்து வெண்பா இலக்கியங்கள் பெருகத் தொடங்கின. நீதி இலக்கியங்கள் வெண்பா வடிவத்திலேயே பெரும்பாலும் தோன்றின. அறங்கள் மனிதர் மனத்தில் நின்று நிலைக்க வேண்டியவை. அறங்களை வெண்பாவில் தந்தால் மறந்துவிடாமல் நினைவில் வைக்க ஏதுவாக இருக்கும். அதனால் அறம் வலியுறுத்தப்பட்ட சங்கம் மருவிய காலத்தில் வெண்பா யாப்பு செல்வாக்குப் பெற்றது.

சொல்லுதலை (செப்பல்) அடிப்படையாகக் கொண்டு தோன்றியது வெண்பாவாகும். ஆகவே, இது செப்பலோசை உடையதாயிற்று. இத்தகு சிறப்புகள் கொண்ட வெண்பாக்களைச் செப்பமாக எழுதுவதால் கருத்தை வெளிப்படுத்தும் ஆற்றலைப் பெறமுடியும். இப்பகுதி, வெண்பாவிற்குரிய இலக்கணங்களைக் கூறி மாணவர்கள் எளிமையாகப் பாடல்கள் எழுதுவதற்குரிய பயிற்சிகளையும் தருகிறது.


வெண்பா எழுதும் முறை

வெண்பா எழுதுவதற்கெனப் பொதுவான சில இலக்கணங்கள் உண்டு. செய்யுள் எழுத அடிப்படையாய் விளங்கும் இவ்விதிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனைய பாக்களைவிட வரையறுத்த இலக்கணக் கட்டுக்கோப்பு உடையது வெண்பா. இதனாலேயே வெண்பாவை 'வன்பா என்பார்கள்.

வெண்பாவை இலக்கணக் கட்டுப்பாடு குலையாமல் இயற்ற வேண்டும். வெண்பா வெண்டளையால் அமைய வேண்டும் என்பது இன்றியமையாத விதி. வெண்பாவிற்கான தளையே வெண்டளை. இத்தளை இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை என இரண்டு வகைப்படும்.

தளைத்தல் என்பதற்குக் கட்டுதல், பிணித்தல் என்று பொருள். நண்பர்கள் கைகோத்தபடி நடப்பதைப் போல, சீர்கள் வெண்டளையால் கட்டுக்குலையாதபடி யாக்கப்படுவது வெண்பா. மா முன் நிரை - விளம் முன் நேர் - காய் முன் நேர் என்பதே வெண்பாவிற்கான எளிய தளை இலக்கணம்.


மா முன் நிரை விளம் முன் நேர் : இயற்சீர் வெண்டளை 

காய் முன் நேர் : வெண்சீர் வெண்டளை

மா, விளம் என்னும் இரண்டும் ஈரசைச் சீர்கள். காய் மூவசைச்சீர்.


மா : தேமா, புளிமா

விளம் : கூவிளம், கருவிளம்

காய் : தேமாங்காய், புளிமாங்காய் கூவிளங்காய், கருவிளங்காய்

முதற்சீர் மாச்சீர் என்றால் வரும் சீரின் முதல் அசை நிரையாக இருக்க வேண்டும். முதற்சீர் விளச்சீர் அல்லது காய்ச்சீர் என்றால் வரும் சீரின் முதல் அசை நேர் என்பதாக இருக்க வேண்டும். வரும் சீரின் முதல் அசையை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாடு ஒன்றில் முடிய வேண்டும். நாள், மலர் என்பவை ஓரசைச்சீர்கள். காசு, பிறப்பு என்பவை குற்றியலுகர ஓசையோடு முடியும் சீர்கள். ஈற்று அயற்சீர், மாச்சீர், என்றால் மலர்

(அ) பிறப்பு வரும். விளச்சீர், காய்ச்சீர் எனில் நாள் (அ) காசு என்னும் வாய்பாடு வரும்.


முதற்சீர் (அ) நின்ற சீர் : வரும்சீர்

மா : புளிமா, கருவிளம், புளிமாங்காய், கருவிளங்காய், மலர், பிறப்பு

விளம் : தேமா, கூவிளம்,  

காய் : தேமாங்காய், கூவிளங்காய், நாள், காசு

வெண்பா அடிவரையறை

இரண்டடி வெண்பா - குறள் வெண்பா 

மூன்றடி வெண்பா - நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா 

நான்கடி வெண்பா - நேரிசை வெண்பாவும் இன்னிசை வெண்பாவும் 

நான்கடிமுதல் பன்னிரண்டடிவரை - பஃறொடை வெண்பா 

பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – கலிவெண்பா


நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து 

மறைமொழி காட்டி விடும்

இந்தக் குறளுக்கான வெண்டளை அமைப்பு முறையினைக் காணலாம்.

நிரைநிரை நேர்நேர் நிரைநேர் நிரைநேர் 

நிரைநிரை நேர்நேர் மலர்


வெண்பாவிற்கான இலக்கணம் 

1. இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை பிறழாது பா அமைய வேண்டும்.

2. ஈற்றடி முச்சீராகவும் ஏனையவை நாற்சீராகவும் இருக்கும்.

3. ஈரசைச்சீர்கள் மாச்சீரும் விளச்சீரும் (தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்) மூவசைச்சீரில் காய்ச்சீரும் (தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்) வரும்.

4. ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு ஆகிய வாய்பாடுகளுள் ஒன்றைக்கொண்டு முடியும்.

வெண்பாக்கள் குறள்வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, பஃறொடை வெண்பா, கலிவெண்பா என எழுவகைப்படும்.

நேரிசை வெண்பா - இன்னிசை வெண்பா

நாற்சீர் - முச்சீர் - இடையிலே தனிச்சீர் என்று இதன் இலக்கணத்தைச் சுருக்கமாகச் சொல்லலாம். இரண்டு நாற்சீர் முச்சீருக்கு இடையில், இரண்டாவது அடியின் ஈற்றுச் சீரை ஒரு சிறு கோடிட்டு எழுதப்படும். இதனையே தனிச்சீர் என்பர். பாட்டின் முதற்சீருக்குரிய எதுகை இந்தத் தனிச்சீருக்கும் இருக்கும்.

"எட்டெடை செம்பில் இரண்டெடை ஈயமிடில் 

திட்டமாய் வெண்கலமாம் சேர்ந்துருக்கில் - இட்டமுடன் 

ஓரேழு செம்பில் ஒருமூன்று துத்தமிடில் 

பாரறியப் பித்தளையாம் பார்".

நான்கு - மூன்று - தனிச்சீர் - நான்கு - மூன்று சீர்கள் என்கிற முறையில் நேரிசை வெண்பா எழுதப்படும்.

கீழ்வரும் பாடலில் நேரிசை வெண்பா இலக்கணம் பொருந்துதலைக் காணலாம். 

“ஆழ வமுக்கி முகக்கினும் மாழ்கடனீர் 

தேமா புளிமா கருவிளம் கூவிளங்காய் 

நாழி முகவாது நானாழி - தோழி  

தேமா புளிமாங்காய் தேமாங்காய் - தேமா 

நிதியுங் கணவனும் நேர்படினுந் தந்தம் 

புளிமா கருவிளம் கூவிளங்காய் தேமா

விதியின் பயனே பயன்”

புளிமா புளிமா மலர்

இந்தப் பாட்டில் இரண்டாவது அடியின் முதற்சீர் நாழி; நான்காவது சீர் அதனோடு எதுகையில் ஒன்றிய தோழி; தோழி என்பது தனிச்சீர்.

இந்த வெண்பாவில் முதல் இரண்டடியும் ஓரெதுகையாகவும் பின் இரண்டடியும் ஓரெதுகையாகவும் உள்ளன. இதுவும் நேரிசை வெண்பாவின் இலக்கணங்களில் ஒன்று. நான்கடியும் ஓரெதுகையாகவும் வரும்.

மேலே காட்டிய பாடலில் வெண்டளை பிறழாமல் வந்திருப்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும். 

1. ஆழ - தேமா; அமுக்கி - புளிமா = மா முன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை. 

2. அமுக்கி - புளிமா; முகக்கினு - கருவிளம் = மா முன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை. 

3. முகக்கினும்- கருவிளம்;ஆழ்கடனீர்-கூவிளங்காய் = விளமுன் நேர் வந்த இயற்சீர் வெண்டளை. 

4. ஆழ்கடனீர் - கூவிளங்காய்; நாழி - தேமா = காய் முன் நேர் வந்த வெண்சீர் வெண்டளை. 

5. நாழி - தேமா; முகவாது - புளிமாங்காய் = மா முன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை. 

6. முகவாது - புளிமாங்காய்; நானாழி - தேமாங்காய் = காய் முன் நேர் வந்த வெண்சீர் வெண்டளை. 

7. நானாழி - தேமாங்காய்; தோழி - தேமா = காய் முன் நேர் வந்த வெண்சீர் வெண்டளை. 

8. தோழி - தேமா; நிதியுங் - புளிமா = மா முன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை. 

9. நிதியுங் - புளிமா; கணவனு(ம்) - கருவிளம் = மா முன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை.

10. கணவனு(ம்) - கருவிளம்; நேர்படினுந் - கூவிளங்காய் = விளம் முன் நேர் வந்த இயற்சீர் வெண்டளை .

11. நேர்படினுந் - கூவிளங்காய்; தந்தம் - தேமா = காய் முன் நேர் வந்த வெண்சீர் வெண்டளை.

12. தந்தம் - தேமா; விதியின் - புளிமா = மா முன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை.

13. விதியின் - புளிமா; பயனே - புளிமா = மா முன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை.

14. பயனே - புளிமா; பயன் – மலர் = மா முன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை.


இன்னிசை வெண்பா

நேரிசை வெண்பாவில் இரண்டாமடியில் தனிச்சீர் வரும். தனிச்சீரில்லாமல் நான்கு சீரோடு அமைக்கப்படுபவை இன்னிசை வெண்பா.

"இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்

தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால் 

எம்மை உலகத்தும் யாம்காணேம் கல்விபோல் 

மம்மர் அறுக்கும் மருந்து"

எடுத்துக்காட்டப்பட்டுள்ள வெண்பாக்கள், வெண்டளை பிறழாமல் பாடப்பட்டுள்ளதைக் காணலாம். முதல் இரண்டு வெண்பாக்கள் இருவிகற்ப நேரிசை வெண்பாக்கள். (முதலிரு அடிகளும் ஈற்றிரு அடிகளும் வேறு வேறான எதுகை) மூன்றாவது வெண்பா ஒருவிகற்ப இன்னிசை வெண்பா (நான்கடிகளும் ஒரே எதுகை).


மாணவர்களுக்கான பயிற்சி

நாள், மலர் காசு, பிறப்பு என முடிவன

• நல்லார் புகழும் நலம்பெறலும் அல்லாமல்

  பல்லோர் இகழும் பழிபெறலும் - எல்லாம்

  வழக்கத்தால் அல்ல வகைபெறும் நம் நட்பாம்

  பழக்கத்தால் வாய்ப்பதுதான் பார்.    (நாள்)


 • அல்லும் பகலும் அயரா(து) உழைத்திடின் 

   நல்ல மதிப்பெண்கள் நாம் பெறலாம் - இல்லை

   படியேன் எனத்திரிந்தால் பாக்குமரம் போலே

   நெடிதவையில் நிற்பாய் நினை.    (மலர்)


• கற்பிப்ப தோடு கலைத்திறனைக் கண்டறிந்து 

  பொற்புடனே வாழப் புரிந்திடுதல் - நற்பெருமை

  ஆசான் முதற்கடமை ஆகும்; இமைக்கடமை

   கூசாமல் கண்காத்தல் கூறு.    (காசு)


• பெற்றோர் மகிழப் பெரியோர்கள் பாராட்டும்

  வற்றாத நற்குணங்கள் வாய்ப்பதற்குக் - குற்றமிலா

  வாயால்சொன் னால்நன்மை வாய்க்காது செய்கையினால்

  ஓயாமல் நீயும் உணர்த்து.   (பிறப்பு)


உவமையுடன் எழுதுதல் 

• கல்வி பயிலுவது கண்ணாகும்; எந்நாளும் 

செல்வம் வரும்போகும் செய்கையது; - நல்ல

ஒழுக்கம் உயிராகும்; உவந்து கொடுக்கும்

பழக்கம் உயர்வுதரும் பார்



பயிற்சிப் பகுதி 

1. விண்ணின் மழைநீரை வீணாக்கா மல்தேக்கி _____ சிறந்த மரம் நட்டுக் - கண்ணின் மணி போல் மொழி காத்து மாநிலத்து வாழ்வாய் நினைவெல்லாம் ஈடேறி நீ 

(மண்ணில்).


2. முன்னாள் புரிவினைகள் முற்றும் தவறாமல் ______ நமைவந்த பீடிக்கும் - அன்று தினையிட்டால் இன்று தினைவிளையும் அன்றிப் ____ வாய்க்கும் பனை.   

(பின்னாள், பனையிட்டால்)


3. உண்ணும் ----- ஒருபோதும் கொட்டாதே _____ பசியால் மடிபவர்கள் - விண்ணின் கடவுளென உன்னைக் ______ அன்பாய் இடுவதற்(கு) ஏதுவழி எண்.  

(உணவை, மண்ணில், கருதுவர்)

4. வேற்றுயிரால்___ விளையா திருப்பதற்(கு) ஏற்றவண்ணம் -----இயற்றாமல் - ஆற்றலுறும் -------- இனம்வருந்தப் பேரிடர்செய் கின்றாயே நண்பா ! ____ நவில்? 

(தொல்லை, காவல், பெண்பால், சரியோ )


Tags : Chapter 4 | 12th Tamil இயல் 4 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 4 : Chalvathul ellam thalai : Grammar: Pa iyatra palakalam Chapter 4 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : செல்வத்துள் எல்லாம் தலை : இலக்கணம்: பா இயற்றப் பழகலாம் - இயல் 4 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : செல்வத்துள் எல்லாம் தலை