சுரதா | இயல் 4 | 12 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள்: இதில் வெற்றி பெற | 12th Tamil : Chapter 4 : Chalvathul ellam thalai
கவிதைப்பேழை
கல்வி – ச
இதில் வெற்றிபெற
- சுரதா
நுழையும்முன்
உரைநடை எழுதும் முறையும் கவிதை எழுதும் முறையும் வேறு வேறு. உரைநடை என்பது மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவது. கவிதை என்பது அச்சொற்கள் எதுகை, மோனை, இயைபு, முரண், சந்தம் முதலிய யாப்பிலக்கண நெறிகளுக்கு உட்பட்டு அமைவது. சிறந்த படைப்புகள் உருவாகக் கல்வி பெரும் துணையாக நிற்கிறது.
விண்வேறு; விண்வெளியில் இயங்கு கின்ற
வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு;
மண்வேறு; மண்ணோடு கலந்தி ருக்கும்
மணல்வேறு ; பனித்துளியும் மழையும் வேறு;
புண்வேறு; வீரர்களின் விழுப்புண் வேறு;
புகழ்வேறு; செல்வாக்கு வேறு; காணும்
கண்வேறு; கல்விக்கண் வேறு; கற்றார்
கவிநடையும் உரைநடையும் வேறு வேறு.*
ஆக்கும் வரை நாமதனை அரிசி என்றும்,
ஆக்கியபின் சோறென்றும் சொல்லு கின்றோம்
பூக்கும்வரை அரும்பென்றும் பூத்த பின்பே
பூவென்றும் சொல்லுகின்றோம் அதுபோல் சொல்லைச்
சேர்க்கின்ற நேரத்தில், எதுகை மோனை
சேர்க்காமல், அடியளவை அறிந்தி டாமல்
வார்க்கின்ற வடிவந்தான் வசனம் ; யாப்பில்
வந்தடங்கும் வார்த்தைகளே கவிதை யாகும்
பழுத்திருந்தால் சாறுவரும்; வயலில் தண்ணீர்
பாய்ந்திருந்தால் ஏர்கள்வரும்; அதுபோல் இங்கே
எழுத்திருந்தால் அசைகள்வரும்; இரண்டு சீரின்
இடைவெளியில் தளைகள்வரும்; தளைகள் சென்றே
அழைத்திருந்தால் அடிகள்வரும்; அடியின் கீழே
அடியிருந்தால் தொடைகள்வரும்; தொடைகள் நன்கு
செழித்திருந்தால் பாக்கள் வரும்; இவற்றை யெல்லாம்
தெரிந்துகொண்டு கவியெழுதத் தொடங்க வேண்டும்.
தேமாவும் புளிமாவும் மரத்தில் காய்க்கும்;
சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும்.
ஏமாந்தால் தளைதட்டும்; வெள்ளைப் பாட்டின்
இறுதிச்சீர் காசுதரும்; செடியில் பூத்த
பூமீது வண்டுவந்து தங்கும்; நல்ல
புலவர்களின் பாடல்களில் கீர்த்தி தங்கும்.
சாமான்ய மக்களுக்கும் விளங்கும் வண்ணம்
தமிழ்க்கவிதை தரவேண்டும் இந்த நாளில்
எருவினிலே பயிர்விளையும்; சிறந்த கேள்வி
எழுப்புவதால் ஆராய்ச்சிவிளையும்; அந்தி
இரவினிலே குளிர்விளையும் ; நுணுக்கத் தோடே
எழுத்தெண்ணி முன்னோர்போல் கற்று வந்தால்,
அறம்பொருள்கள் உள்ளத்தில் விளையும்; மிஞ்சும்
அறிவினிலே புகழ்விளையும் ; இவற்றை யெல்லாம்
பெரும்பாலும் அறியாமல் எழுது வோர்க்குப்
புகழெங்கே சிறப்பெங்கே விளையக் கூடும்?
பாவகை : எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
நூல்வெளி
இப்பாடப்பகுதி, கவிஞர் சுரதாவின் 'துறைமுகம்' என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படும் 'சுரதா'வின் இயற்பெயர் இராசகோபாலன். அப்பெயரைப் பாரதிதாசன்மீது கொண்ட பற்றுதலால் சுப்புரத்தினதாசன் என்று மாற்றி, அதன் சுருக்கமான சுரதா என்னும் பெயரில் மரபுக் கவிதைகள் எழுதினார்; முழுக்க முழுக்கக் கவிதைகளையே கொண்ட காவியம் என்ற இதழை நடத்தியதோடு இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியுள்ளார்; "தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும்" உள்ளிட்ட பல நூல்களைப் படைத்துள்ளார். இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.