Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | உரைநடை: பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

உ.வே. சாமிநாதர் | இயல் 4 | 12 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் | 12th Tamil : Chapter 4 : Chalvathul ellam thalai

   Posted On :  01.08.2022 09:05 pm

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : செல்வத்துள் எல்லாம் தலை

உரைநடை: பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : செல்வத்துள் எல்லாம் தலை : உரைநடை: பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் - உ.வே. சாமிநாதர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

உரைநடை உலகம்

கல்வி – ச 

பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

- உ.வே. சாமிநாதர்


நுழையும்முன்

கல்வியும் அதன் நோக்கமும் கல்விக்கூட அமைப்பும் கற்பிக்கும் முறைகளும் காலந்தோறும் இலக்கியங்களில் தடங்களாகப் பதிவு பெற்றிருக்கின்றன. அவ்வகையில் அக்கால அறிஞர்கள் 19ஆம் நூற்றாண்டின் திண்ணைப் பள்ளிக்கூட விளைச்சல்கள். அந்நாளைய கற்பித்தல் முறைகளைப் பழையன என்று புறந்தள்ளிவிடாமல், தேவையானவற்றைத் தேர்ந்து பயன்படுத்தினால் அவை இன்றைய கல்விக்கு ஏற்ற உரமாக ஆகத்தக்கவை.


(சென்னை புரசைவாக்கம் சர்.எம்.சி.டி. முத்தையா உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் முதற் சொற்பொழிவாக 20.07.1936இல் நிகழ்த்தப்பட்டு 16.08.1936 சுதேசமித்திரன் வார இதழில் வெளியான கட்டுரை.)

காலநிலை மாறுபாடு அடைய அடைய ஜனங்களுடைய பழக்கங்களும் மாறுதலடைகின்றன. இக்காலத்துப் பள்ளிக்கூடங்களில் இக்கால வாழ்க்கைக்கேற்ற முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பழைய காலத்துப் பாடசாலைகளில் வழங்கிவந்த முறைகளோ வேறுவகை. நம்முடைய நாட்டில் மிகப் பழைய காலத்தில் உபாத்தியாயருடைய வீடே பள்ளிக்கூடமாக இருந்தது. அதைக் குருகுலம் என்பார்கள். கணக்காயரென்பது உபாத்தியாயருக்குப் பெயர். கணக்கு என்பது நூலின் பெயர்.

திண்ணைப் பள்ளிக்கூடங்களும் அண்ணாவிகளும்

மில்டனின் சுவர்க்க நீக்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவரும் உயிரின மருத்துவருமான வெள்ளக்கால் ப. சுப்பிரமணியனார் திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 4 வருடங்கள் படித்திருக்கிறார். வரலாற்றாய்வாளரும் தமிழறிஞருமான டாக்டர் மா. இராசமாணிக்கனார் மௌனகுருவிடம் படித்திருக்கிறார். நற்றிணை நூலின் உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி, பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இலவசமாகப் படித்தார். சுப்பிரமணிய பாரதியின் நண்பரும் வழக்குரைஞரும் தமிழறிஞருமான நாவலர் சோமசுந்தர பாரதியார் எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும், சிலப்பதிகார உரையாசிரியர் வேங்கடசாமி வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணைப் பள்ளியிலும் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த டாக்டர் வ. சுப. மாணிக்கம் மகிபாலன் பட்டி நடேசனார் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் படித்தனர்.

பேராசிரியர் அ.கா. பெருமாள் 

(இரட்டை அர்த்தங்கள் மாண்டுபோகவில்லை)


மன்றங்கள்

ஊர்தோறும் பொதுவான இடத்தில் ஒரு பெரிய மரத்தினடியே மேடையொன்று அமைக்கப்பட்டிருக்கும். அதனை மன்றமென்றும் அம்பலமென்றும் கூறுவர். மன்றமென்பது மரத்தடியில் உள்ள திண்ணையே; அதுவே பிறகு திண்ணைப் பள்ளிக்கூடமாக மாறியதென்று தோன்றுகிறது.

இயற்கையாக உள்ள மரத்தடியிலும், வனங்களிலும் சென்று பழைய காலத்து மாணக்கர்கள் கல்வி கற்றனர். இப்பொழுது பள்ளிக்கூடம் இருக்குமிடத்தில் செடி கொடிகளை வருவித்து வனம் உண்டாக்குகி்றோம். நாடகத்தில் வனங்களைத் திரையில் எழுதித் தொங்கவிடுவது போலப் பள்ளிக்கூடங்களில் சட்டியிலும் வாயில்களிலும் செடி கொடிகளை வளர்க்கிறோம் 

பள்ளிகள்

மரத்தடியில் இருந்த பள்ளிக்கூடங்கள் நாளடைவில் சிறு குடிசைகளாக மாறின. பல இடங்களிலே மடங்களிற் பாடசாலைகள் உண்டாயின. பள்ளியெனும் சொல் ஜைன மடங்களுக்கும் பாடசாலைகளுக்கும் பொதுவான பெயர். பாடசாலைகள் வேறு, மடங்கள் வேறு என்ற வேறுபாடின்றி இரண்டும் ஒன்றாகவே கருதப்பட்டமையின், பள்ளியென்னும் பெயர் இரண்டிற்கும் பொதுவாக வழங்கியதென்று தோற்றுகின்றது.


தெரிந்து தெளிவோம்

வித்தியாரம்பம்  - கல்வித் தொடக்கம்

வித்தியாப்பியாசம் - கல்விப் பயிற்சி

உபாத்தியாயர் - ஆசிரியர்

அக்ஷராப்பியாசம் - எழுத்துப் பயிற்சி 

கீழ்வாயிலக்கம் - பின்ன எண்ணின் கீழ்த்தொகை

மேல்வாயிலக்கம் - பின்ன எண்ணின் மேல்தொகை

குழிமாற்று - பெருக்கல் வாய்பாடு

சீதாள பத்திரம் - தாழை மடல்

நவத்வீபம் - வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்


வித்தியாரம்பம்

முதன்முதலில் ஐந்தாம் பிராயத்தில் வித்தியாப்பியாசம் செய்யும்பொழுது தாய் தந்தையர் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுத்து வந்தார்கள்.

பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் வைக்கும் காலம் ஒரு பெரிய விசேட நாளாகக் கொண்டாடப் பெறும். ஏட்டின் மீது மஞ்சட் பூசிப் பூசித்துப் பையனிடம் கொடுத்து வாசிக்கச் செய்வார்கள். உபாத்தியாயர் நெடுங்கணக்கைச் சொல்லிக்கொடுக்க, மாணாக்கன் அதனைப் பின்பற்றிச் சொல்லுவான். இப்படி உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல அதை மாணாக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை 'முறை வைப்ப' தென்று கூறுவார்கள். உபாத்தியாயருக்குப் பிரதியாகச் சில சமயங்களிற் சட்டாம்பிள்ளை முறை வைப்பதுண்டு.

மையாடல்

சுவடிகளிலுள்ள எழுத்துக்கள் செவ்வனே தெரிவதற்காகச் சுவடியில் வசம்பு, மஞ்சள், மணத்தக்காளியிலைச்சாறு அல்லது ஊமத்தையிலைச்சாறு, மாவிலைக்கரி, தர்ப்பைக்கரி முதலியவற்றைக் கூட்டிச் செய்த மையை அதில் தடவுவார்கள். அந்த மை எழுத்துக்களை விளக்கமாகக் காட்டுவதோடு கண்ணுக்கும் குளிர்ச்சியைத் தரும். இங்ஙனம் மை தடவிப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்குவதனால் அக்ஷராப்பியாசத்தை 'மையாடல் விழா' என்று சொல்வார்கள்.

‘ஐயாண் டெய்தி மையாடி அறிந்தார் கலைகள் என்பது சிந்தாமணி.

மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்

மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய் - தமிழ்விடு தூது

பிள்ளைகள் முதலில் மணலில் எழுதிப் பழகுவார்கள். அதனால் அவர்களுடைய எழுத்துக்கள் வரிசையாகவும் நன்றாகவும் அமையும். உபாத்தியாயர் முதலில் தரையில் எழுத அதன் மேல் பிள்ளைகள் விளம்புவார்கள். பிறகு தாமே எழுதி எழுதிப் பழகுவார்கள்.

கையெழுத்து

"கொம்புசுழி கோணாமல் கொண்டபந்தி சாயாமல்

அம்புபோல் கால்கள் அசையாமல் - தம்பி

எழுதினால் நன்மை யுண்டு"

என்று வரும் பழைய வெண்பா ஒன்று உண்டு. எழுத்துகள் ஒன்றோடொன்று படாமல் வரிகோணாமல் பழைய காலத்தில் எழுதி வந்தார்கள். பழைய ஏட்டுச்சுவடிகளைப் பார்த்தால் இது விளங்கும்.

எழுத்தின் வடிவம்

எழுத்துக்களின் உருவங்கள் பல காலமாக மாறாமல் இருந்து வந்தன. புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியவை வரியெழுத்தின் உறுப்புக்கள். பெரியோர்கள் பழக்கி வந்த பழக்கத்தால் பல நூறு வருஷங்களாகியும் எழுதும் வழக்கத்தில் பெரிய மாறுபாடுகள் ஏற்படவில்லை .

மனனப் பயிற்சி

அக்காலத்துப் பாடமுறைக்கும் இக்காலத்துப் பாட முறைக்கும் பெரிய வேறுபாடு உண்டு. அடிப்படையான நூல்களெல்லாம் பிள்ளைகளுக்கு மனனமாக இருக்கும். தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள் முதலியன பாடமாக இருக்கும். கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள் பாடமாக வேண்டும். 'தலைகீழ்ப் பாடம்' என்று சொல்வதை அம்முறைகளில் காணலாம்.

சிறுவர்கள் படிக்கும் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் என்பவை அகராதி வரிசையில் அமைந்தமை அவர்களுடைய ஞாபகத்தில் அவை பதிவதன் பொருட்டேயாகும். இப்படியே அந்தாதி முறையைக் கொண்டும் எதுகை மோனைகளைக் கொண்டும் செய்யுட்களை ஞாபகப்படுத்திக் கொள்வார்கள்.

கற்பிக்கப்பட்ட நூல்கள்

கதைப்பாடல்கள், மாணவர்களுக்குக் கற்பித்த நூற்களைப் பட்டியலிடுகின்றன. இவை பெரும்பாலும் நீதி நூல்கள் (ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி). நிகண்டுகளை மனப்பாடம் செய்யும் மாணவனுக்கு மதிப்பிருந்தது. வியாபாரம் செய்வதற்கும் கோவிலில் பணி செய்வதற்கும் ஏற்றவாறமைத்த கணிதமுறை கட்டாயமாகக் கற்பிக்கப்பட்டதைக் கதைப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று, நெல் இலக்கம் முதலியவாய்பாடுகளைக் கட்டாயம் மனப்பாடம் செய்யவேண்டும். இதற்காக பிரபவாதி சுவடி என்ற புத்தகம் கூட இருந்தது.

பேராசிரியர் அ.கா. பெருமாள் 

(இரட்டை அர்த்தங்கள் மாண்டு போகவில்லை)

பள்ளிக் கூடப் பிள்ளைகள் தமக்குத் தெரிந்த பாடங்களை அடிக்கடி சிந்தித்து வருவார்கள். பலர் ஒருங்குகூடிக் கேள்விகள் கேட்டும் விடை கூறியும் கற்று வருவார்கள். இதனால் அவர்களுடைய கல்வி எந்த வேளையிலும் தடையின்றிப் பயன்பட்டது.

சுவடிகள்

இளம் பிள்ளைகளுக்கு உபாத்தியாயர் ஓலையை வாரி ஒழுங்காக நறுக்கித் துளையிட்டுக் கயிறு கோத்துத் தருவார். ஒரு துளையிடுவதும் இரண்டு துளையிடுவதும் உண்டு. மற்றப் பிள்ளைகள் தாங்களே செய்து கொள்ளுவார்கள். பனையேடு, சீதாள பத்திரம் முதலியவற்றில் எழுதுவது வழக்கம். மேலே சட்டமாகப் பனை மட்டையின் காம்பை நறுக்கிக் கோர்ப்பார்கள்; மரச் சட்டங்களையும் அமைப்பார்கள்; செப்புத் தகட்டாலும் சட்டஞ் செய்து கோர்ப்பார்கள். அந்தச் சட்டங்களின் மேல் வர்ண மையினாற் பல வகையான சித்திரங்கள் எழுதுவதுண்டு. இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் செருகிக் கட்டுவார்கள். அதற்கு 'நாராசம்' என்று பெயர்.

சுவடியைக் கோக்கும் கயிற்றின் ஒரு தலைப்பில் தடையாக , பனையோலையை ஈர்க்கோடு கிளிமூக்குப் போலக் கத்தரித்து அமைப்பார்கள். அதற்குக் கிளிமூக்கென்று பெயர்.

இப்போது அச்சுப் புத்தகங்களின் அளவில் எவ்வளவு வேறுபாடுகள் உண்டோ அவ்வளவு பனையோலைச் சுவடிகளிலும் உண்டு.

எழுத்தாணிகள்

ஓலையில் எழுதுவதற்குரிய எழுத்தாணியில் பல பேதங்கள் உண்டு. எழுத்தாணியை ஊசியென்றும் கூறுவதுண்டு. மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி என்பன எழுத்தாணியின் வகைகள். ஒரு பக்கம் வாருவதற்குக் கத்தியும் மறுபக்கம் எழுதுவதற்கு எழுத்தாணியும் அமைந்ததைப் பார்த்தே பேனாக்கத்தி என்ற பெயர் வந்ததென்று தோற்றுகின்றது. ஒரு பக்கத்தில் இரண்டு கத்தியும் ஒரு பக்கம் இரண்டு எழுத்தாணியும் உள்ள மடக்கெழுத்தாணிகளும் இருந்தன.

ஏடெழுதும் வழக்கம்

ஒரு பக்கத்தில் மிக நுண்ணிய எழுத்துக்களாக இருபது முப்பது வரி வரையில் எழுதுவதற்குரிய மெல்லிய எழுத்தாணிகள் இருந்தன. நாம் இக்காலத்தில் காகிதத்தில் எழுதுவதைப் போன்ற வேகத்தோடே ஏட்டில் எழுதுவதுண்டு. மாணாக்கர்களுக்கு எழுதும் பழக்கம் நன்றாக உண்டாகவேண்டுமென்று ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் அவர்களைத் தனித்தனியே ஏடுகளில் தாம் மேலே எழுதி அதைப்போல் எழுதிவரச் சொல்வார்கள். இதற்குச் சட்டமென்று பெயர்.

சுவடிகளை வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் உபயோகப்படும் கருவிக்குத் தூக்கு என்று பெயர். அதனை அசை என்றும் சொல்வதுண்டு.

அன்பினால் அடக்குதல் 

முற்காலத்தில் கொடிய தண்டனைகள் இல்லை. ஆசிரியர்கள் மாணாக்கர்களை அன்பினால் வழிப்படுத்தி வந்தார்கள். அவர்கள்பால் இருந்த மரியாதை மாணாக்கர்களுக்குப் பயத்தை உண்டாக்கியது. பிழைகளை மறந்தும் புரியாத நிலையில் அவர்கள் இருந்தனர்.

வாதம் புரிதல்

கல்வியில் வாதம் செய்தல் நம் நாட்டுப் பள்ளிக்கூடங்களில் இருந்தது. மிகச் சிறந்த நூற்பயிற்சியுடையவர்கள் அரசவைகளில் வாது புரிந்து தம் கல்வித் திறமையை நிலைநாட்டுவர். அதன் பொருட்டு அவர்கள் கொடிகட்டியிருப்பரென்று மதுரைக்காஞ்சி முதலிய நூல்களால் அறிகிறோம். இந்த வாதம்புரியும் பழக்கம் பாடசாலைகளிலிருந்தே வளர்ச்சியுற்று வந்தது. பள்ளிக்கூடத்தில் மாணாக்கன் நூல்பயிலும் இயல்பை விளக்க வந்த பழைய சூத்திரமொன்று பலவற்றைச் சொல்லிவிட்டு,

"வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை 

கடனாக் கொளினே மடநனி இகக்கும்" - நன்னூல் 41

என்று முடிக்கின்றது. ஆட்சேப சமாதானங்கள் சொல்லிப் பழகிய பழக்கங்களே முதிர்ந்த நிலையில் வாதங்களாக வளர்ச்சியுறுகின்றன.

சாந்துணையும் கற்றல்

பல நூல்களையும் பள்ளிக்கூடத்தில் பயின்றதோடு நில்லாமல் வாழ்நாள் முழுதும் நம் நாட்டார் படித்து வந்தார்கள். 'என் ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு!' என்ற குறளினால் திருவள்ளுவர், ஒருவன் இறக்குமளவும் படிக்கவேண்டுமென்பதை விதிக்கின்றார். பள்ளிக்கூடத்திலிருந்து கற்கும் காலம் கடந்த பின்னர், பழைய காலத்தவர்கள் பின்பும் எங்கெங்கே கலைகளைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் இருந்தார்களோ, அங்கங்கே சென்று அவர்களிடம் தாம் முன்பு கல்லாதவற்றைக் கற்று வந்தார்கள்.

தெரியுமா?

மாணாக்கர்களுள் பழையவர்கள் புதியவர்களுக்குக் கற்பிப்பது பள்ளிக்கூட வழக்கங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு நாளும் பாடங்கள் முடிந்தவுடன் பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்பும்போது அவர்களது ஞாபகசக்தியை விருத்தி செய்விப்பதற்காக ஒவ்வொருவருக்கும் பூ, மிருகம், பட்சி, ஊர் இவற்றின் பெயர்களில் வகைக்கு ஒவ்வொன்றை உபாத்தியாயர் சொல்லி அனுப்புவார். அந்தப் பெயர்களை மறுநாள் மறவாமல் வந்து சொல்ல வேண்டும். 

பள்ளிக்கூடத்திற்குக் காலையில் ஐந்து மணிக்கே வந்துவிட வேண்டுமாகையால், பிள்ளைகள் பெரியவர்களை அழைத்து வருவதே வழக்கம். முதலில் வருபவனை வேத்தான் என்று சொல்வார்கள். மற்றவர்களை விட வேறான தனிப்பெருமை உடையவன் என்பது அதன் பொருள்.

பிள்ளைகளுக்கு மணல்தான் சிலேட்டின் நிலையிலிருந்தது. பனையேடுதான் புத்தகம். : எழுத்தாணியே பேனா.

உ.வே.சா.


ஓதற்பிரிவு

இல்லறம் நடத்துங் காலத்திற்கூட, வேற்று நாட்டுக்குச் சென்று அங்கங்கே உள்ளாருக்குத் தம்முடைய கல்வியைக் கற்பித்தும் வாதம் புரிந்து வென்றும் தாம் முன்பு அறியாதவற்றைக் கற்றும் வந்தார்கள். தொல்காப்பியமென்னும் பழைய இலக்கண நூலிலும் பிறவற்றிலும் இங்ஙனம் பிரியுங் காலம் ஓதற் பிரிவென்று சொல்லப்பட்டிருக்கின்றது. இதற்கு மூன்று வருஷம் கால எல்லையென்று அந்நூல்கள் விதிக்கின்றன.

இவ்வாறே தமிழ்நாட்டிற்கும் நவத்வீபம் முதலிய இடங்களிலிருந்து வந்து படித்துச் சென்ற பண்டிதர்கள் பலர். தஞ்சாவூரில் இருந்த ஆகம சாஸ்திர பண்டிதராகிய சர்வசிவ பண்டிதரென்பவரிடத்தில் பல அன்னிய தேசத்து மாணாக்கர்கள் வந்து கற்றுச் சென்றார்களென்னும் செய்தியொன்று, முதல் இராஜராஜ சோழன் காலத்தில், தஞ்சையிற் பொறிக்கப்பட்ட சாஸனம் ஒன்றால் தெரிகின்றது. திருவாவடுதுறை மடம், தருமபுரம் மடம் முதலியன பல வருஷகாலம் தமிழ்க் கல்லூரியாகவும், வடமொழிக் கல்லூரியாகவும் விளங்கி வந்தன.

இப்படியே பாலர்களுக்குரிய பள்ளிக்கூடங்கள் முதல் பழுத்த கிழவர்கள் இருந்து கற்கும் பள்ளிக்கூடங்கள் வரையிற் பல பாடசாலைகள் தமிழ்நாட்டில் இருந்து வந்தன. தமிழ்ச் சங்கமென்று சொல்லப்படுவனவும் ஒருவகை ஆராய்ச்சிப் பள்ளிக்கூடங்களே அல்லவா?

பின்னுரை

காலத்தின் வேகம் அந்தப் பழைய காலத்துப் பள்ளிக்கூடங்களை மாற்றியமைத்து விட்டாலும், அவற்றால் உண்டான நற்பயன்களையும் அவற்றிற் படித்த பேரறிஞர்கள் நமக்கு ஈட்டி வைத்துள்ள நூற்செல்வத்தையும் நினைக்கும் போது, நம்மையறியாமல் நமக்கு ஒரு பெருமிதம் உண்டாகின்றது. அக்காலத்து முறைகளே மீளாவிடினும், அப்பள்ளிக்கூடங்களின் அடிப்படையான உண்மைகளையேனும் நாம் அறிந்துகொண்டு வாழ முயலுவோமாக!


நூல்வெளி

இப்பாடப்பகுதி உயிர்மீட்சி என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்ட உ.வே.சா.வின் இலக்கியக் கட்டுரைகளிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. ‘தமிழ்த் தாத்தா' என அழைக்கப்பெற்ற உ.வே.சா. இணையற்ற ஆசிரியர்; புலமைப் பெருங்கடல்; சிறந்த எழுத்தாளர்; பதிப்பாசிரியர்; பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர். மகாமகோபாத்தியாய, 'திராவிட வித்தியா பூஷணம்', 'தாக்ஷிணாத்திய கலாநிதி' உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றுள்ளவர்; கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1932இல் சென்னைப் பல்கலைக்கழகத்தினால் ‘டாக்டர்’ பட்டம் பெற்ற பெருமைக்குரியவர். அவரது திருவுருவச் சிலை, சென்னை மாநிலக் கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது. சென்னையில் திருவான்மியூரில் இவர் பெயரால் உ. வே. சா. நூலகம் அமைந்துள்ளது.



Tags : by ou.ve. Swaminathar | Chapter 4 | 12th Tamil உ.வே. சாமிநாதர் | இயல் 4 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 4 : Chalvathul ellam thalai : Prose: Pandaya kaalaithu palli kudangal by ou.ve. Swaminathar | Chapter 4 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : செல்வத்துள் எல்லாம் தலை : உரைநடை: பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் - உ.வே. சாமிநாதர் | இயல் 4 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : செல்வத்துள் எல்லாம் தலை