Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | துணைப்பாடம்: பாதுகாப்பாய் ஒரு பயணம்

இயல் 4 | 12 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: பாதுகாப்பாய் ஒரு பயணம் | 12th Tamil : Chapter 4 : Chalvathul ellam thalai

   Posted On :  01.08.2022 09:15 pm

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : செல்வத்துள் எல்லாம் தலை

துணைப்பாடம்: பாதுகாப்பாய் ஒரு பயணம்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : செல்வத்துள் எல்லாம் தலை : துணைப்பாடம்: பாதுகாப்பாய் ஒரு பயணம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

விரிவானம்

கல்வி – ச 

பாதுகாப்பாய் ஒரு பயணம்



நுழையும்முன்

வாழ்வை முழுமையாக்கும் கூறுகளுள் முதன்மையானது பயணம். அதிலும் சாலைவழிப் பயணம் மனதிற்கு இன்பத்தை அளிக்கக் கூடியது. அத்தகைய பயணத்தை அனைவரும் பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும். சாலை விதிகளைத் தெரிந்துகொள்வதும் பிறருக்குச் சொல்வதும் விழிப்புணர்வு கொள்வதும் ஒருவகைக் கல்விதான். இதனை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட்டால் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும்.


காட்சி - 1


(வாரத்தின் முதல் வேலைநாள் திங்கட்கிழமை, காலை. பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் எட்டு மணிக்கு வரும் பேருந்தினைப் பிடித்து விடும் முனைப்பில் அவ்வூரின் பேருந்து நிறுத்தத்திற்குப் பத்து நிமிடம் முன்பாகவே வந்து சேர்ந்தனர். பேருந்து வந்தவுடன் அனைவரும் பேருந்தில் ஏறினர். அவர்களில் மாணவர்கள் சிலர் பேருந்தின் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்தனர். அப்பொழுது நடைபெறும் நிகழ்ச்சி.)

ஓட்டுநர்: யாருப்பா அது? படிக்கட்டுல நிக்கிறது? உள்ளே ஏறி வாங்க. உள்ளே ஏறி வரலன்னா பேருந்தை நிறுத்திடுவேன். (பேருந்தை மெதுவாக ஓட்டுகிறார்)

பயணி-1: ஏம்பா! உள்ளே ஏறி வாங்கப்பா. 'படியில் பயணம் நொடியில் மரணம்' எனப் படிக்கட்டின் மேல் எழுதிப் போட்டிருப்பது உங்களுக்குத்தான்.

பயணி-2: உங்கள் நல்லதுக்குத்தான் சொல்றாங்க! இப்படிப் படிக்கட்டுல நின்றுகொண்டு அபாயகரமா பயணம் செய்யுறதுல அப்படி என்னதான் கிடைக்குதோ? தெரியலையே.....

(படிக்கட்டில் பயணித்த மாணவர்கள் பேருந்தின் உள்ளே வந்தனர். ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் இப்பேச்சு, தொடர்கதையாய் நீள்கிறது. பதினைந்து நிமிடப் பயணத்திற்குப் பிறகு பேருந்து ஓரிடத்தில் நிற்கிறது. போக்குவரத்து முடங்கி நிறைய வாகனங்கள் நின்றன. எதிர்த்திசையிலிருந்து சிலர் பதற்றத்துடன் வந்தனர்)

பயணி -1: (அவர்களில் ஒருவரிடம்) என்னாச்சு? ஏன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது?

எதிரில் வருபவர்: பள்ளிக்கூடப் பசங்க மூன்றுபேர், ஒரே இருசக்கர ஊர்தியில் வேகமாய்ப் போய், எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளாகிட்டாங்க. அவங்க கடுமையாகக் காயம்பட்டு, நிலைமை மோசமா இருக்கு.

நடத்துநர்: எப்போ பார்த்தாலும் இதேதாங்க நடக்குது. மனசெல்லாம் வலிக்குது.

பயணி-1: பள்ளிக்கூடத்துப் பசங்க எதுக்கு வண்டி ஓட்டணும்? அதுவும் ஒரு வண்டியில மூன்றுபேரா பயணிப்பது?

பயணி-2: 18 வயதிற்கு உட்பட்டோர் வண்டியை ஓட்ட அனுமதிக்கக் கூடாதுன்னு சட்டம் இருப்பது இந்தப் பெற்றோர்க்குத் தெரியாதா?

பயணி-3: அப்படிப் போறவங்க சாதாரண வேகத்திலியா போறாங்க? இளம் வயசுல அடுத்தவங்க கவனத்தை ஈர்க்க வேண்டுமென்று நினைத்து அதிக வேகமா போறாங்க.

(பயணிகள் பேருந்தினுள் பலவாறாகப் பேசிக்கொண்டிருந்தனர். அதற்குள் நோயாளர் ஊர்தியினர், காவல்துறையினர் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தனர். போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டுப் பேருந்துகள் பயணிக்கத் தொடங்கின.)


காட்சி - 2


(ஒரு மணி நேர கால தாமதத்திற்குப் பிறகு பதினைந்து மாணவர்கள் பள்ளிக்குள் நுழைந்து தலைமையாசிரியர் அறைக்கு முன்பாக நிற்கின்றனர்)

தலைமையாசிரியர்: ஏன் காலம் தாழ்த்தி வருகிறீர்கள்? என்ன காரணம்?

பகலவன்: அம்மா, நாங்கள் தினமும் பேருந்தில் பயணம் செய்து பள்ளிக்கு வருகிறோம். அவ்வாறு இன்று வரும்போது சாலையில் விபத்து ஏற்பட்டுவிட்டது. அருகிலுள்ள பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த மாணவர்கள் மூன்று பேர், இரு சக்கர ஊர்தியில் அதிவேகத்தில் பயணம் செய்து சாலையில் எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்தில் சிக்கிவிட்டனர். படுகாயம் அடைந்த அவர்களைப் பார்ப்பதற்கே அச்சமாகவும் வேதனையாகவும் இருந்தது. இவ்விபத்தினால் போக்குவரத்தில் முடக்கம் ஏற்பட்டுவிட்டது. எனவே பள்ளிக்குக் குறித்த நேரத்தில் வர முடியவில்லை அம்மா.

தலைமையாசிரியர்: அடடா ! நாள்தோறும் இத்தகைய விபத்துகள் நடப்பது பெருகிக்கொண்டே இருக்கின்றது. இன்றைக்கு வேறுபள்ளி மாணவர்கள். நாளை நம் பள்ளி மாணவர்களுக்குக் கூட நேரலாம். எனவே நம் மாணவர்களுக்குச் சாலைப் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால்தான் எதிர்காலத்தில் இத்தகைய விபத்துகளைத் தவிர்க்க முடியும்.

பகலவன்: சாலைப் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வை நமது பள்ளி மாணவர்களுக்கு அளிக்க முடியுமா அம்மா?

தலைமையாசிரியர்: ஏன் முடியாது? அதற்கான விழிப்புணர்வுக் கூட்டத்தினை விரைவில் நம் பள்ளியில் நடத்தலாம். இப்போது நீங்கள் வகுப்புகளுக்குச் செல்லுங்கள்.


காட்சி - 3


சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்

கூட்டம்

இடம் : கலையரங்கம்

(வட்டாரப் போக்குவரத்து அலுவலர்பள்ளிக்கு வருகிறார். தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அவரை வரவேற்கின்றனர். சாலைப் பாதுகாப்புக் கண்காட்சி மாணவர் பார்வைக்குத் திறந்து வைக்கப்படுகிறது.)

தலைமையாசிரியர் உரை: மனித வாழ்வு பயணங்களால் நிறைந்தது. அன்றாட வாழ்வில் சாலைகளில்தான் நாம் அதிகமாகப் பயணம் செய்கிறோம். சாலையில் பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்கு விதிமுறைகள் உள்ளன. சாலைப் பாதுகாப்பு என்றால் சாலையை நன்றாகப் பாதுகாப்பது என்பது பொருளல்ல. சாலையில் நாம் பாதுகாப்புடன் பயணம் செய்வது என்பது பொருள். நம்முடைய பள்ளிக்கு வருகை தந்திருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அவர்கள், சாலைப் பயணத்தைப் பாதுகாப்பாக மேற்கொள்ளும் வழிமுறைகள் பற்றி உங்களிடையே பேசுவார்.

(மாணவர்கள் கரவொலி எழுப்புகின்றனர்)

சாலைப்போக்குவரத்து உதவிக்குத்தொலைபேசி எண் 103ஐ தொடர்பு கொள்ளலாம்.

வ . போ. அலுவலர் : பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்க்கு இனிய வணக்கம்.

நம் நாடுதான் உலகிலேயே அதிக சாலைப் போக்குவரத்து வசதிகளைக்கொண்ட இரண்டாவது பெரிய நாடு. ஏறக்குறைய 55 இலட்சம் கி.மீ. சாலைகள் நம் நாட்டில் உள்ளன. நம் நாட்டில் 21 கோடிக்கும் மேற்பட்ட ஊர்திகள் உள்ளன. அதனால் விபத்துகள்  மிகுதியாக நடக்கின்றன. ஓர் ஆண்டிற்கு ஏறக்குறைய ஐந்து இலட்சம் விபத்துகள் நடக்கின்றன. அதில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். சுமார் 2 இலட்சம் பேர் தங்கள் உடலுறுப்புகளை இழந்து துன்பத்தில் வாடுகின்றனர். சரியாகக் கணக்கிட்டால் நாளொன்றுக்கு நேரும் விபத்துகளில் மூன்றில் ஒரு பங்கினர் உயிரிழக்கின்றனர். குறிப்பாகத் தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே மிகுந்த சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாக இருக்கிறது. இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகளில் 15 விழுக்காடு விபத்துகள் தமிழ்நாட்டில் நடப்பது வேதனைக்குரியது. மாணவர்களாகிய நீங்கள் சாலைப் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வைப் பெறுவதன் மூலம் எதிர்காலத்தில் சாலை விபத்துகளே இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும்.

விபத்துகள் எதிர்பாராமல், ஏற்படுகின்றன. மனிதத் தவறுகளே மிகுதியான விபத்துகளுக்குக் காரணங்களாக அமைகின்றன. தவறுகளைத் திருத்திக் கொள்ளுதல், விதிகளைப் பின்பற்றுதல் வாயிலாக மட்டுமே சாலை விபத்துகளைத் தடுக்க முடியும்.

தமிழ்நாட்டில் நடைபெறும் மொத்த விபத்துகளில் 35 விழுக்காடு இருசக்கர ஊர்திகளால் ஏற்படும் விபத்துகளாக உள்ளன. பதினெட்டு வயது நிறைந்தவர்கள் மட்டுமே முறையான பயிற்சியின் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற்று, இருசக்கர ஊர்தியை இயக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். 

பாரிஸ் நகரத்தில் 1909ஆம் ஆண்டு. நடந்த முதல் 'பன்னாட்டுச் சாலை அமைப்பு' International Road Congress) மாநாட்டில் ஒரு பொதுவான சாலை விதி வேண்டும். என்னும் உடன்படிக்கை ஏற்பட்டது. பல மொழிகளில் எழுதப்படும் அறிவிப்புப் பலகைகளை விட மொழிவேறுபாடற்ற குறியீடுகள் எளிதில் மக்களுக்குப் புரியும் என்பதற்காக இவை உருவாக்கப்பட்டன. அபாய முன்னறிவிப்பு, முக்கியத்துவத்தைச் சுட்டும் குறியீடுகள், தடை செய்யப்பட்டதைத் தெரிவிக்கும் குறியீடுகள், கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய குறியீடுகள். சிறப்பு அறிவிப்புக் குறியீடுகள். திசை காட்டும் குறியீடுகள் போன்ற பல பிரிவுகளில் இவை வடிவமைக்கப்பட்டன. அவையாவன:

• சாலையின் வகைகள். மைல் கற்களின் விவரங்கள் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

• போக்குவரத்தினை முறைப்படுத்தும் குறியீடுகளுக்கும் போக்குவரத்துக் காவலர்களின் சாலை உத்தரவுகளுக்கும் ஏற்பச் சாலையைப் பயன்படுத்த வேண்டும்.

• நடைமேடை, நடைபாதையைப் பயன்படுத்துபவர்களையும் சாலையைக் கடப்பவர்களையும் அச்சுறுத்தக் கூடாது.

• சாலைச் சந்திப்புகளில் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை. தேவையான இடங்களில் சரியான சைகையைச் செய்ய வேண்டும்.

• எதிரில் வரும், கடந்து செல்ல முற்படும் ஊர்திகளுக்கு வழிவிட வேண்டும். தேவையெனில் வேகம் குறைத்து இதர வாகனங்களுக்குப் பாதுகாப்புடன் வழிவிட வேண்டும்.

• பிற ஊர்தி ஓட்டிகளுக்கு விட்டுக்கொடுப்பது சிறந்தது.

• இதர சாலைப் பயனாளிகளை நண்பராக எண்ண வேண்டும்.

மோட்டார் வாகனச் சட்டம் 2017-குறிப்பிடுவன:

• 18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தி இயக்கினாலோ, விபத்தினை ஏற்படுத்தினாலோ அக்குழந்தைகளின் பெற்றோர்க்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும். 

• ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் ரூ.5000 தண்டத்தொகையோ, மூன்று மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும். 

• அபாயகரமான முறையில் ஊர்தியை ஓட்டினால் ரூ. 5000 தண்டத்தொகை பெறப்படும். 

• மது குடித்து விட்டு ஊர்தியை இயக்கினால் ரூ.10,000 தண்டத்தொகை கட்ட நேரும். 

• மிகுவேகமாக ஊர்தியை இயக்கினால் ரூ. 5000 தண்டத்தொகை கட்ட நேரும். 

• இருவருக்கு மேல் இரண்டு சக்கர ஊர்தியில் பயணித்தால் ரூ. 2000 தண்டத்தொகையுடன் மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் நீக்கம் செய்யப்படும்.

• தலைக்கவசம் அணியாமல் இருசக்கர ஊர்தியை இயக்கினால் ரூ. 1000 தண்டத்தொகையுடன் மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் நீக்கம் செய்யப்படும்.

ஊர்திகளுக்குக் காப்பீடு இல்லாமல் இயக்கினால் ரூ. 2000 தண்டத்தொகை கட்ட நேரும்.

மேலும் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் செல்வது, இரண்டு பேருக்கும் மேற்பட்டோர் பயணிப்பது, கைபேசியில் பேசிக்கொண்டே செல்வது, சாலையில் ஊர்தியைக் குறுக்கும் நெடுக்குமாக இயக்குவது, போட்டி, பந்தயம் எனச் சொல்லிப் பொதுவழியில் உச்ச வேகத்தில் ஓட்டுவது, காதணி கேட்பிகள் பொருத்திக் கொண்டு ஊர்திகளை ஓட்டுவது எனப் பல காரணங்களால் இருசக்கர வாகன விபத்துகள் பெருமளவில் நடக்கின்றன. இத்தகைய ஒழுங்கீனச் செயல்களைத் தவிர்த்தால் விபத்துகள் ஏற்படாது.


மேலும், சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததுதான் விபத்துகள் ஏற்படக் காரணங்களாக அமைகின்றன. இன்றைய நவீன உலகில் 'அவசரம்' என்கிற நோய் எல்லோரையும் பீடித்திருக்கிறது. வாகன ஓட்டுநரின் கவனக் குறைவு, போதிய பயிற்சியின்மை, தட்பவெப்பநிலை, இயந்திரக் கோளாறு, மிகுதியான ஆட்களையோ சரக்குகளையோ ஏற்றிச் செல்வது, தொடர்வண்டி இருப்புப் பாதைகளைக் கவனிக்காமல் கடப்பது போன்ற பல காரணங்களால் விபத்துகள் மிகுதியாக நடக்கின்றன. குறிப்பாக மது குடித்துவிட்டு ஊர்தி ஓட்டுவதால் நிறையவே விபத்துகள் நடக்கின்றன. இவைதான் பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன.

பள்ளி மாணவர்களிடம் சாலை விதிகள் மற்றும் விபத்துகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். மாணவர்கள் சிலர் சாலைகளில் விளையாடுவது, கவனிக்காமல் திடீரென்று சாலையைக் கடப்பது, சாலையின் நடுவே செல்வது, சாலையை அடைத்துக்கொண்டு செல்வது, வேகமாகச் செல்லும் வாகனத்தின் பின்புறத்தைப் பிடித்துக்கொண்டு மிதிவண்டியில் செல்வது, ஓடும் பேருந்தில் ஏறுவது இறங்குவது, பேருந்தின் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் மாணவர்கள் தங்கள் உயிரையும் உடலுறுப்புகளையும் இழக்க நேரிடுகிறது. இது அவர்களின் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பெரிய இழப்பு. இந்த நிலை எதிர்வரும் காலங்களில் முற்றிலும் மாற வேண்டும்.

சாலைகளில் இடம் பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாகப் பயணிக்கவும் உதவுகின்றன. அவற்றை 1. உத்தரவுக் குறியீடுகள் 2. எச்சரிக்கைக் குறியீடுகள் 3. தகவல் குறியீடுகள் என மூன்றாகப் பிரித்து அறியலாம். அக்குறியீடுகள் அனைத்தும் உங்கள் பள்ளியில் உருவாக்கப்பட்டிருக்கும் கண்காட்சி அரங்கில் விளக்கமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் அனைவரும் அவற்றைக் கண்டுணர்ந்து பின்பற்ற வேண்டும். அப்படிச் சாலை விதிகளைப் பின்பற்றிப் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது விபத்தில்லாத தமிழ்நாடு உருவாகும்.

(நிறைவாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சாலைப் பாதுகாப்பிற்கான உறுதிமொழியைக் கூறுகிறார். மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று சாலைப் பாதுகாப்பினை வலியுறுத்தும் உறுதிமொழி ஏற்கின்றனர். நாட்டுப் பண்ணோடு நிகழ்ச்சி முடிவடைகிறது.)


Tags : Chapter 4 | 12th Tamil இயல் 4 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 4 : Chalvathul ellam thalai : Supplementary: Pathukhapai oru payanam Chapter 4 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : செல்வத்துள் எல்லாம் தலை : துணைப்பாடம்: பாதுகாப்பாய் ஒரு பயணம் - இயல் 4 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : செல்வத்துள் எல்லாம் தலை