Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | ஹர்ஷரின் படையெடுப்புகள்

வரலாறு - ஹர்ஷரின் படையெடுப்புகள் | 11th History : Chapter 8 : Harsha and Rise of Regional Kingdoms

   Posted On :  18.05.2022 05:36 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 8 : ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

ஹர்ஷரின் படையெடுப்புகள்

ஹர்ஷரின் உடனடித் தேவை சசாங்கனைப் பழி வாங்குவதாக இருந்தது.

ஹர்ஷரின் படையெடுப்புகள்

ஹர்ஷர் பொ.. 606இல் ஆட்சியில் அமர்ந்ததும் முதலில் அவரது சகோதரியான ராஜ்யஸ்ரீயின் விவகாரத்தில் கவனம் செலுத்தினார். ராஜ்யஸ்ரீ தன்னை அடைய முயன்ற மாளவ அரசன் தேவகுப்தரின் தீய திட்டங்களுக்கு அஞ்சி விந்திய மலைப் பகுதிக்குத் தப்பிச் சென்றார். ஹர்ஷர் அந்தப் பகுதிக்குச் சென்று தேவகுப்தரைக் கொன்று தீக்குளிக்க முயன்ற தனது சகோதரியைக் காப்பாற்றினார். ஹர்ஷர் ராஜ்ய ஸ்ரீக்கு ஆறுதல் அளித்து தன்னுடன் கன்னோசி அரசிற்கு அழைத்து வந்தார். பின்னர் ராஜ்யஸ்ரீ பௌத்த மதத்தைத் தழுவினார். ஹர்ஷர் பௌத்த மதத்தைத் தழுவுவதற்கும் அவரே காரணமாக விளங்கினார்.


பாணரின் கூற்றின்படி பேரரசு ஒன்றை உருவாக்கும் முயற்சியாக ஹர்ஷர் பின் வரும் அரசர்களுக்கு சரணடையவோ அல்லது எதிர்த்துப் போரிடவோ வாய்ப்பினை அளித்து இறுதி எச்சரிக்கை ஒன்றை அனுப்பினார்.

1. வங்காளத்தை ஆண்ட கௌட அரசன் சசாங்கன்

2. வல்லபியை ஆண்ட மைத்ரேயர்கள்; புரோச் பகுதியை ஆண்ட கூர்ஜரர்கள்

3. தக்காணத்தை ஆண்ட சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி

4. சிந்து, நேபாளம், காஷ்மீர், மகதம், ஒத்ரா (வடக்கு ஒடிசா), கொங்கோடா (பண்டைய ஒடிசாவின் ஒரு பகுதி) ஆகிய பகுதிகளை ஆண்ட அரசர்கள்.

ஹர்ஷரின் உடனடித் தேவை சசாங்கனைப் பழி வாங்குவதாக இருந்தது. தற்போதைய அஸ்ஸாம் நிலப் பகுதியான காமரூபத்தின் அரசனான பிரகியோதிஷருடன் அவர் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார். இருந்தாலும், ஹர்ஷருக்கும் சசாங்கனுக்குமிடையில் நடந்த போர் குறித்த விவரம் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. எனினும் சசாங்கனின் மறைவிற்குப் பிறகே மகதம், கௌடம், ஒத்ரா, கொங்கோடம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கௌடப் பேரரசை ஹர்ஷர் வெற்றிகரமாகத் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்திருக்க வேண்டுமெனத் தெரிகிறது.


ஹர்ஷருக்கும் மைத்ரேயர்களுக்கும் இடையில் நிலவி வந்த பகைமை ஹர்ஷரின் மகளுக்கும் துருவபட்டருக்கும் நடந்த திருமண உறவின் மூலம் முடிவிற்கு வந்தது. பின்னர் வல்லபி அரசு ஹர்ஷரின் ஆட்சியின் கீழ் கூட்டணி துணை அரசாக மாறியது.

 

சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசி

ஹர்ஷர் தனது ஆட்சியதிகாரத்தை தெற்கில் தக்காணப் பகுதிக்கு விரிவுப்படுத்த முனைந்தார். தக்காணத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசி ஹர்ஷரைத் தோற்கடித்தார். ஹர்ஷரை வெற்றி கொண்டதன் நினைவாகப் புலிகேசிபரமேஷ்வரர்" என்ற பட்டத்தைப் பெற்றார். புலிகேசியின் தலைநகரான வாதாபியில் காணப்படும் கல்வெட்டுக் குறிப்புகள் இந்த வெற்றிக்குச் சான்றாக விளங்குகின்றன.


 

ஹர்ஷப் பேரரசின் எல்லைகள்

ஹர்ஷர் நாற்பத்தோரு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவரது ஆட்சிப் பகுதி, ஜலந்தர் (பஞ்சாபில் உள்ளது), காஷ்மீர், நேபாளம், வல்லபி ஆகியவற்றை உள்ளடக்கியது. வங்காளத்தை ஆண்ட சசாங்கன் ஹர்ஷருடன் பகைமை கொண்டிருந்தார். ஹர்ஷரது பேரரசு அஸ்ஸாம், வங்காளம், பீகார், கன்னோசி, மாளவம், ஒரிசா, பஞ்சாப், காஷ்மீர், நேபாளம், சிந்து ஆகிய பகுதிகளைக் கொண்டிருந்தது எனக் கூறப்பட்டாலும் அவரது உண்மையான ஆளுகை கங்கை, யமுனை ஆகிய நதிகளுக்கிடையில் அமைந்திருந்த பிரதேசத்தைக் கடந்து செல்லவில்லை. அவரது மறைவிற்குப் பிறகு ஹர்ஷரின் பேரரசு சிற்றரசுகளாக சிதறியது.

 

ஹர்ஷரின் சீன உறவு

ஹர்ஷர் சீனாவுடன் நேசமான உறவைக் கொண்டிருந்தார். அவரது சமகால டான்ங் (Tang) பேரரசர் டாய் சுங், பொ.. 643ஆம் ஆண்டிலும் அடுத்து 647ஆம் ஆண்டிலும் ஹர்ஷரது அரசவைக்கு தனது தூதுக்குழுவை அனுப்பினார். இரண்டாவது முறை வந்த போது ஹர்ஷர் அண்மையில் இறந்திருந்ததை சீனத் தூதுவர் அறிந்தார். ஹர்ஷருக்குப் பிறகு ஆட்சியதிகாரம் தகுதியற்ற ஒரு நபரால் கைப்பற்றப்பட்டதை அறிந்த சீனத் தூதர் அபகரித்த அரசனை அகற்றும் பொருட்டுப் படை திரட்ட நேபாளத்திற்கும் அஸ்ஸாமிற்கும் விரைந்தார். பின்னர் அந்த அரசன் சிறைப்பிடிக்கப்பட்டுச் சீனாவிற்குக் கொண்டு செல்லப்பட்டார்.

 

நிர்வாகம்

வரலாற்றாசிரியர் பர்ட்டன் ஸ்டெய்னின் கூற்றுப்படி, மையப்படுத்தப்பட்ட அரசு நிர்வாகம் என்பது வல்லமை மிக்கவர்களாக இருந்த குப்தர்களின் ஆட்சிக் காலத்திலும் கூட இருந்திருக்கவில்லை. அது பாடலிபுத்திரம், மதுரா ஆகிய நகரங்களுக்கிடையிலிருந்த கங்கைச் சமவெளிக்குள்ளாகச் சுருக்கப்பட்டிருந்து. அந்தப் பகுதிக்கு அப்பால் மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் காணப்படவில்லை. குப்தர்களுக்கும் வர்த்தனர்களுக்கும் இடையில் காணப்பட்ட ஒரே வேறுபாடு குப்தர்களுக்கு ஹூணர்கள் போன்ற வலுவான எதிரிகள் இருந்தனர்; வர்த்தனர்களுக்கு அத்தகைய எதிரிகள் இருக்கவில்லை என்பதுதான்.

 

பொ.. 632ஆம் ஆண்டின் செப்புப் பட்டயக் குறிப்புகள் இரண்டு பிராமணருக்கு நிலம் கொடையாக அளிக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றன. அளிக்கப்பட்ட கொடைக்குப் பாதுகாவலர்கள் எனச் சில அரசதிகாரம் பெற்ற பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சிலர் மஹாசமந்தர்கள் எனப்பட்டனர். அவர்கள் அரசருக்கு அணுக்கமாக இருந்தபோதிலும் கீழ்நிலையில் வைத்தே அறியப்பட்டனர். ஏனையோர் சுயேச்சையான மகாராஜாக்களாக இருந்த போதிலும் அவர்கள் ஹர்ஷருக்குக் கப்பம் கட்டக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட சிற்றரசர்களே ஆவர். இவர்களைத் தவிர மற்றொரு வகையான ஆட்சியாளர்களும் இருந்தனர். அவர்கள் ஹர்ஷருக்குத் தங்கள் விசுவாசத்தை உறுதி செய்ததுடன் அவருக்குச் சேவை புரியத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துக் கொண்டனர். வட இந்தியாவில் ஹர்ஷரது ஆட்சியதிகாரத்தின் தன்மை இவ்வாறாகவே இருந்தது.


அமைச்சரவை

ஹர்ஷரின் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையின் அமைப்பு குப்தர்களின் காலத்தை ஒத்திருந்தது. பேரரசருக்கு அவரது கடமைகளை ஆற்றுவதில் அமைச்சரவை உதவி செய்தது. அரசரைத் தேர்ந்தெடுப்பதிலும் அரசின் அயலுறவுக் கொள்கையை வகுப்பதிலும் அமைச்சரவை முக்கியப் பங்காற்றியது. முதன்மை அமைச்சர் பதவியே அமைச்சரவையில் மிக முக்கியமான பதவியாகும்.

முக்கிய நிர்வாக அதிகாரிகள்

1. அவந்தி - அயலுறவு மற்றும் போர் விவகாரங்களுக்கான அமைச்சர்

2. சிம்மானந்தா - படைத் தளபதி

3. குந்தலாகுதிரைப்படைத் தலைவர்

4. ஸ்கந்தகுப்தர் - யானைப் படைத் தலைவர்

5. திர்கத்வஜர் - அரச தூதுவர்கள்

6. பானு - ஆவணப் பதிவாளர்கள்

7. மஹாபிரதிஹரர்அரண்மனைக் காவலர்களின் தலைவர்

8. சர்வகதர் - உளவுத் துறை அதிகாரி

 

வருவாய் நிர்வாகம்

பாகா, ஹிரண்யா, பலி என மூன்று வகையான வரிகள் ஹர்ஷரின் ஆட்சிக் காலத்தில் வசூலிக்கப்பட்டன. பாகா என்ற நிலவரி பொருளாகச் செலுத்தப்பட்டது. விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு நில வரியாக வசூலிக்கப்பட்டது. ஹிரண்யா என்பது விவசாயிகளாலும் வணிகர்களாலும் பணமாக செலுத்தப்பட்ட வரியாகும். பலி என்ற வரியைப் பற்றி குறிப்புகள் ஏதும் இல்லை. அரசுக்குச் சொந்தமான நிலம் நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.


 

நீதி நிர்வாகம்

குற்றவியல் சட்டங்கள் குப்தர்கள் காலத்தைக் காட்டிலும் கடுமையானதாக இருந்தன. இச்சட்டங்களை விசாரித்து நீதி வழங்க மீமாம்சகர்கள் எனப்பட்டோர் நியமிக்கப்பட்டனர். நாடு கடத்தப்படுவதும் உடல் உறுப்புகள் வெட்டப்படுவதும் வழக்கமான தண்டனைகளாக இருந்தன. கடும் சோதனைகளின் அடிப்படையிலான வழக்கு விசாரணை நடைமுறையில் இருந்தது. சட்ட மீறல்களுக்கும் அரசனுக்கு எதிராக சதி செய்வதற்கும் ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சீனப் பயணியான யுவான் சுவாங் ஏறத்தாழ பதிமூன்று ஆண்டு காலம் (பொ.. 630 - 643) இந்தியாவில் கழித்தார். சீனாவிற்குக் கொண்டு செல்வதற்கெனப் புனித நூல்களையும் பழைய நினைவுச் சின்னங்களையும் சேகரித்தார். “பயணிகளின் இளவரசர்" என அறியப்பட்ட அவர் புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய முக்கியமான புனித மையங்களுக்கு சென்றார். அவரது முக்கியமான நூலான சி - யூ - கி ஹர்ஷரின் ஆட்சிக் காலத்தின் போது நிலவிய சமூகம், பொருளாதாரம், மதம், பண்பாடு ஆகியவை குறித்த விரிவான தகவல்களை அளிக்கிறது.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புகள் வலுவாக இருந்ததால் நாடு முழுவதும் சட்டம், ஒழுங்கு பராமரிக்கப்பட்டது. ஹர்ஷரின் ஆட்சிக் காலத்தில் நடைமுறையில் இருந்த முக்கியமான தண்டனைகளையும் நீதி விசாரணை முறைகளையும் யுவான் சுவாங் பதிவு செய்துள்ளார். கடுமையான குற்றங்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்கப்படுவதே நடைமுறையாக இருந்தது. ஆனால் மரணதண்டனை தவிர்க்கப்பட்டது. சமூக ஒழுக்கத்திற்கு எதிரான சட்டத்தை மதிக்காத குற்றங்களைப்புரிந்தோரது உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டன. மக்களோடு தன்னை அணுக்கப்படுத்திக் கொள்வதற்காக ஹர்ஷர் அடிக்கடி பயணங்களை மேற்கொண்டார். மக்கள் அவரை எளிதாகச் சந்திக்கக் கூடிய நிலை இருந்தது. அவர் தனக்குக் கப்பம் கட்டும் சிற்றரசர்களைக் கண்காணித்து வந்தார்.

படை நிர்வாகம்

தமது இராணுவத்தின் ஒழுங்கு மற்றும் பலத்தின் மீது ஹர்ஷர் நேரடி கவனம் செலுத்தினார். அவரது சேனை யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகியவற்றைக் கொண்டிருந்தது. குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன. சாதாரண படை வீரர்கள் சாடர், பாடர் என அழைக்கப்பட்டனர். குதிரைப்படை அதிகாரிகள் பிரகதிஷ்வரர் என அழைக்கப்பட்டனர். காலாட்படை அதிகாரிகள் பாலதிக்ரிதர் எனவும், மகாபாலதிக்ரிதர்கள் எனவும் அழைக்கப்பட்டனர். ஹர்ஷரின் சேனை நான்கு பிரிவுகளாக (சதுரங்கம்) பிரிக்கப்பட்டிருந்தது என யுவான் சுவாங் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு படைப் பிரிவின் பலம், படைக்கு ஆளெடுக்கும் முறை, படை வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் ஆகியவை குறித்து அவர் விவரங்களை அளித்துள்ளார்.

பேரரசின் பிரிவுகள்

ஹர்ஷரது பேரரசு பல மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மாகாணங்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. ஒவ்வொரு மாகாணமும் பலபுக்திகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. புக்திகள் 'விஷ்யங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. மாவட்டங்களை ஒத்த விஷ்யங்கள்பாதகாக்களாகவும் பாதகாக்கள் பல கிராமங்களாகவும் நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்பட்டிருந்தன. உள்ளாட்சி நிர்வாகத்தை மேற்கொண்ட அதிகாரிகள் பலர் குறித்து ஹர்ஷ சரிதம் குறிப்பிடுகிறது. அந்நூலின் வழி அவர்களின் பட்டங்களை அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவர்களின் அதிகாரங்கள் என்ன என அறிய முடியவில்லை . எடுத்துக்காட்டாக அவர்கள் போகபதி, ஆயுக்தா, பிரதிபாலக - புருஷா போன்ற பட்டங்களைக் கொண்ட உள்ளாட்சி நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டார்கள். ஆனால் இவர்களின் பணிகள் குறித்து ஷர்ஷசரிதம் ஏதும் குறிப்பிடவில்லை.

நகரங்கள், சிறு நகரங்கள்

இந்தியாவின் நகரங்கள், சிறு நகரங்கள், கிராமங்கள் ஆகியவற்றின் அமைப்பு, அழகியல், பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியன பற்றி யுவான் சுவாங் தனது நூலில் விவரிக்கிறார். அவரது நோக்கில் ஹர்ஷப் பேரரசு சீனாவைப் போன்றே எண்ணற்ற கிராமங்களையும், எண்ணற்ற சிறு நகரங்களையும், பெரு நகரங்களையும் கொண்டிருந்தது. பாடலிபுத்திரம் அதன் செல்வாக்கை இழந்த நிலையில் கன்னோசி அதன் இடத்தைப் பிடித்துக்கொண்டதை யுவான் சுவாங் குறிப்பிடுகிறார். கன்னோசியின் கம்பீரமான தோற்றம் அதன் கவின்மிகு கட்டிடங்கள், அழகிய பூங்காக்கள், அரிய பொருள்களின் இருப்பிடமாக விளங்கிய அருங்காட்சியகம் ஆகியன குறித்து அவர் விவரித்துள்ளார். அங்கு வாழ்ந்த மனிதர்களின் பொலிவான தோற்றம், அவர்கள் அணிந்திருந்த விலை உயர்ந்த ஆடைகள், கல்வி மற்றும் கலைகளின்பால் அவர்கள் கொண்டிருந்த நாட்டம் ஆகியவை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

யுவான் சுவாங்கின் கூற்றுப்படி, பெரும்பாலான நகரங்கள் வெளிப்புற மதில்களையும் உட்புற நுழைவாயில்களையும் கொண்டிருந்தன. மதில்கள் அகலமாகவும், உயரமாகவும் இருந்தபோதிலும் வீதிகளும் தெருக்களும் குறுகியிருந்தன. வசிப்பிட இல்லங்களும் மாடங்களும் மரத்தால் செய்யப்பட்டு சுண்ணாம்புக் கலவையால் பூசப்பட்டிருந்தன. சுத்தத்திற்காகவும், சுகாதாரத்திற்காகவும் தரைகள் பசுவின் சாணத்தால் மெழுகப்பட்டிருந்தன. பெரும் சாத்திரங்கள், பொதுக் கட்டிடங்கள், பௌத்த மடாலயங்கள், விகாரைகள் ஆகியவை பெரிதாகவும், அடுக்கு மாடிக் கட்டிடங்களாகவும் அமைந்திருந்தன. அவை சூளையில் சுட்ட செங்கற்கள், சிவப்பு நிற மணல் கற்கள், சலவைக் கற்கள் கொண்டு கட்டப்பட்டன. ஹர்ஷர் கங்கையாற்றின் கரையில் பல விகாரைகளையும் மடாலயங்களையும் ஸ்தூபிகளையும் கட்டுவித்தார்.

யுவான் சுவாங் :பயணிகளின் இளவரசன்என்று புகழப்படும் யுவான் சுவாங் ஹர்ஷரின் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார். பொ.. 612இல் பிறந்த யுவான் சுவாங் தனது இருபதாம் வயதில் துறவு பூண்டார். அவர் இந்தியாவில் தங்கியிருந்தபோது, வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் பல்வேறு புனிதத் தலங்களைப் பார்வையிட்டார். நாளந்தா பல்கலைக்கழகத்திலும் பயின்றார். புத்தர் மீதான யுவான் சுவாங்கின் ஆழமான பற்றும் பௌத்த மதத்தில் அவருக்கு இருந்த பரந்த அறிவும் ஹர்ஷரின் பாராட்டுக்குரியதாக இருந்தன. புத்தர் நினைவுச் சின்னங்களாக 150 பொருள்கள், தங்கத்திலும் வெள்ளியிலும் சந்தனத்திலும் ஆன புத்தரின் உருவச்சிலைகள், 657 தொகுதிகள் கொண்ட அரிய கையெழுத்துப் பிரதிகள் ஆகியவற்றை யுவான் சுவாங் இந்தியாவிலிருந்து எடுத்துச் சென்றார்.


 

பயணிகள், நோய்வாய்ப்பட்டோர், ஏழைகள் ஆகியோரின் நலனுக்காக ஹர்ஷர் தர்ம நிறுவனங்களைக் கட்டினார். சத்திரங்கள், மருத்துவமனைகள் ஆகியனவற்றையும் அவர் கட்டினார். சிறு நகரங்களில் இலவச மருத்துவமனைகளும், தர்மசாலைகளும் இருந்தன. பயணிகளும் வெளியாள்களும் அங்குத் தங்கி இலவச மருத்துவ சிகிச்சை பெற்றனர்.

மதக் கொள்கை

ஹர்ஷர் பொ.. 631ஆம் ஆண்டு வரை சிவ வழிபாடு செய்பவராகவே இருந்துள்ளார். ஆனால் அவரது சகோதரி ராஜ்யஸ்ரீ, பௌத்தத் துறவி யுவான் சுவாங் ஆகியோரின் செல்வாக்கினால் அவர் பௌத்த மதத்தைத் தழுவினார். பௌத்த மதத்தின் மகாயானா பிரிவைப் பின்பற்றினார். ஆனாலும் அவர் எல்லா மதங்களையும் ஆதரித்தார். அம்மதங்களைச் சார்ந்த அறிஞர்களின் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்தார். விலங்குகளைக் கொல்வதும், மாமிசம் உண்பதும் தடை செய்யப்பட்டிருந்தன. ஹர்ஷர் பொ.. 643ஆம் ஆண்டில் இரண்டு பௌத்த மதக் கூட்டங்களைக் கூட்டினார். முதலாவது கன்னோசியிலும், இரண்டாவது பிரயாகையிலும் கூட்டப்பட்டது.

கன்னோசி கூட்டத்தில் காமரூபத்து அரசன் பாஸ்கர வர்மன் உள்ளிட்ட இருபது அரசர்கள் பங்கு கொண்டனர். பௌத்தம், சமணம், வேதம் கற்ற பல மாநிலங்களைச் சேர்ந்த அறிஞர்கள் பலரும் பெரும் எண்ணிக்கையில் அங்கு கூடினர். தங்கத்தாலான புத்தரின் சிலை ஒரு மடாலயத்தில் புனிதச் சடங்குடன் நிறுவப்பட்டு, புத்தரின் மூன்றடி உயர சிறிய சிலை ஒன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தில் பாஸ்கரவர்மன் உள்ளிட்ட அரசர்களும் ஹர்ஷரும் கலந்து கொண்டனர்.

பிரயாகையில் பௌத்த மதக் கூட்டம்

ஹர்ஷர் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நிகழும்மகாமோட்ச பரிஷத்என அழைக்கப்பட்ட பௌத்த மதக் கூட்டத்தை பிரயாகையில் கூட்டினார். தான் சேகரித்த செல்வத்தை பெளத்த மதத்தினர், வேத அறிஞர்கள், ஏழைகள் ஆகியோருக்கு பகிர்ந்தளித்தார். கூட்டம் நடந்த நான்கு நாள்களும் புத்தத் துறவிகளுக்கு எண்ணற்ற பரிசுப் பொருள்களை வழங்கினார்.

பௌத்த மதக் கொள்கைகள் இந்து சமூகத்தில் ஆழமாக ஊடுருவியிருந்ததை யுவான் சுவாங் உற்றுநோக்கிப் பதிவு செய்துள்ளார். மக்களுக்கு முழுமையான வழிபாட்டுச் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது என்று அவர் குறிப்பிடுகிறார். வேறுப்பட்ட மதங்களைப் பின்பற்றுவோர் மத்தியில் சமூக நல்லிணக்கம் நிலவியது. ஹர்ஷர் புத்த பிட்சுக்களையும் வேதம் கற்ற அறிஞர்களையும் சமமாகப் பாவித்து கொடைகளையும் சமமாகப் பகிர்ந்தளித்தார்.

சாதி அமைப்பு முறை

இந்து சமூகத்தில் சாதி அமைப்பு வலுவாக காலூன்றியிருந்தது. யுவான் சுவாங்கின் கூற்றுப்படி சமுதாயத்தின் நான்கு பிரிவினருக்கான தொழில்கள் முற்காலத்தில் இருந்ததைப் போலவே தொடர்ந்தன. மக்கள் பிறரை வஞ்சிக்காமல் நேர்மையுடன் நடந்து கொண்டனர். கசாப்புக் கடையினர், மீனவர், நடனக்காரர்கள், துப்புரவுப் பணியாளர் ஆகியோர் நகரத்திற்கு வெளியே வசித்தனர். சாதி அமைப்பு இறுக்கமாகக் காணப்பட்ட போதிலும் சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர் மத்தியில் மோதல்கள் எதுவும் நிகழவில்லை.

பெண்கள் நிலை

யுவான் சுவாங்கின் பதிவு, அக்காலத்தில் பெண்களின் நிலை குறித்தும், திருமண முறைகள் குறித்தும் தகவல்களை அளிக்கிறது. பெண்கள் முகத்திரை அணியும் வழக்கம் இருந்தது. எனினும் உயர் வகுப்பினர் மத்தியில் முகத்திரை அணியும் வழக்கம் காணப்படவில்லை . தனது சொற்பொழிவுகளைக் கேட்கும் போது ராஜ்யஸ்ரீ முகத்திரை அணிந்திருக்கவில்லை என்று யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். உடன் கட்டை ஏறும் (சதி) வழக்கமும் நடைமுறையில் இருந்திருக்கிறது. பிரபாகரவர்த்தனரின் மனைவி யசோமதி தேவி தனது கணவன் இறந்த பிறகு இவ்வாறு உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக்கொண்டார்.

வாழ்க்கை முறை

யுவான் சுவாங்கின் குறிப்புகளிலிருந்து ஹர்ஷரின் ஆட்சிக் காலத்தில் மக்களின் வாழ்க்கை முறை குறித்தும் அறிய முடிகிறது. மக்கள் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தனர். பருத்தி, பட்டினாலான வண்ண வண்ண ஆடைகளை அணிந்தனர். மெல்லிய ரக துணிகளைத் தயாரிக்கும் கலை செம்மை பெற்றிருந்தது. ஆண்கள், பெண்கள் என இரு சாராரும் தங்களை அலங்கரித்துக் கொள்ளத் தங்கம், வெள்ளி அணிகலன்களைப் பயன்படுத்தினர். அரசர்கள் சிறப்பான அணிகலன்களை அணிந்தனர். மலர் மாலைகள், அரியவகைக்கல் பதித்த மாலைகள், மோதிரங்கள், காப்புகள், பதக்கங்கள் முதலியவை அரச அணிகலன்களில் சில. செல்வ வணிகர்கள் கைகளில் காப்புகளை அணிந்தனர். பெண்கள் அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தினர்.

உணவுப் பழக்கங்கள்

இந்தியர்கள் பெரும்பாலும் மரக்கறி உணவுப் பழக்கத்தைக் கொண்டிருந்ததாகவே யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். சமையலில் வெங்காயம், பூண்டு ஆகியவை அரிதாகவே பயன்படுத்தப்பட்டன. உணவுத் தயாரிப்பில் சர்க்கரை, பால், நெய், அரிசி ஆகியவற்றின் பயன்பாடு சாதாரணமாக வழக்கத்தில் இருந்தது. சில தருணங்களில் மீனும், ஆட்டு இறைச்சியும் உட்கொள்ளப்பட்டன. மாட்டிறைச்சி உண்பதும், வேறு சில விலங்குகளின் இறைச்சியை உண்பதும் தடை செய்யப்பட்டிருந்தன.

கல்வி

மடாலயங்களில் கல்வி போதிக்கப்பட்டது. கற்றல் என்பது மதம் சார்ந்த ஒன்றாக இருந்தது. மதம் சார்ந்த பல நூல்கள் இயற்றப்பட்டன. வாய்மொழியாகவே வேதங்கள் கற்பிக்கப்பட்டன. அவை ஏட்டில் எழுதப்படவில்லை. சமஸ்கிருதமே கற்றறிந்தோரின் மொழியாக இருந்தது. கல்வி கற்கும் வயது 9 முதல் 30 வயது வரையாக இருந்தது. பலர் கல்வி கற்பதிலேயே தங்கள் வாழ்நாளைக் கழித்தனர். அலைந்து திரியும் பிட்சுக்களும் சாதுக்களும் அவர்களது அறிவுத் திறத்திற்கும் பண்பாட்டிற்கும் பெயர் பெற்று விளங்கினர். ஒழுக்கமும் அறிவுத்திறமும் கொண்டிருந்த அத்தகைய மனிதர்களை மக்கள் பெரிதும் மதித்தனர்.

கலை, இலக்கியப் புரவலராக ஹர்ஷர்

ஹர்ஷர் இலக்கிய பண்பாட்டு செயல்பாடுகளை ஆதரித்தவர். அரசு தன் வருவாயில் கால் பங்கினை அத்தகைய செயல்பாடுகளுக்குச் செலவழித்தது. ஹர்ஷ சரிதத்தையும், காதம்பரியையும் இயற்றிய பாணர் ஹர்ஷரின் அரசவைக் கவிஞராக இருந்தார். பேரரசர் ஹர்ஷருமே புகழ் பெற்ற இலக்கியவாதி ஆவார். பிரியதர்சிகா, ரத்னாவளி, நாகானந்தா ஆகிய அவரது நாடக ஆக்கங்கள் அவரது புலமையை எடுத்துக் காட்டுகின்றன. கல்வியை ஊக்குவிக்க ஹர்ஷர் தாராளமாகக் கொடையளித்தார். கோவில்களும், மடாலயங்களும் கல்வி மையங்களாக விளங்கின. கன்னோசி, கயா, ஜலந்தர், மணிப்பூர் ஆகிய இடங்களில் இருந்த மடாலயங்களில் புகழ் பெற்ற அறிஞர்கள் கல்வி போதித்தனர். இதே காலகட்டத்தில் நாளந்தா பல்கலைக் கழகம் அதன் புகழின் உச்சத்தை அடைந்தது.

நாளந்தா பல்கலைக்கழகம்

யுவான் சுவாங் தனது நூலில் நாளந்தா பல்கலைக்கழகம் எந்த அளவிற்கு புகழ் பெற்றிருந்தது என்பதைப் பதிவு செய்துள்ளார். பௌத்த மதத்தைப் பின்பற்றும் சீனா, ஜப்பான், மங்கோலியா, இலங்கை, திபெத் ஆகிய நாடுகளிலிருந்தும், மேலும் மத்திய, தென் கிழக்காசிய நாடுகள் சிலவற்றிலிருந்தும் மாணவர்கள், அறிஞர்கள் வந்து அங்கே தங்கி கல்வி கற்றனர். யுவான் சுவாங் வருகையின் போது சிலாபத்ரர் என்ற புகழ் பெற்ற பௌத்த மத அறிஞர் நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்துள்ளார். சர்வதேச அளவில் புகழ் பெற்ற கல்வி மையமாக விளங்கிய நாளந்தா பல்கலைக்கழகம், பத்தாயிரம் மாணவர்களைக் கொண்டிருந்தது. தர்மபாலர், சந்திரபாலர், சீலபத்ரர், பத்ரிஹரி, ஜெயசேனர், தேவாகரர், மாதங்கர் ஆகியோர் அரசின் ஆதரவு பெற்ற முக்கியமான ஆசிரியர்களாக விளங்கினர்.

II பாலர்கள்

ஹர்ஷரின் மறைவிற்குப் பின்னர் கங்கை - யமுனை நதிகளுக்கு இடைப்பட்ட வடிநீர்ப் பகுதி, அதனைச் சூழ்ந்துள்ள நிலப்பகுதி ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டிற்கு பிரதிகாரர்கள் (ஜலோர் ராஜஸ்தான்), பாலர்கள் (வங்காளம்), ராஷ்டிரகூடர் (தக்காணம்) ஆகியோர் மத்தியில் மும்முனைப் போட்டி நிலவியது கிழக்கு கங்கைச் சமவெளியின் பரந்து விரிந்த பகுதிகளை பாலர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். வேளாண்மையின் மூலம் ஈட்டிய வருவாய் தவிர, பாலர்கள் தென் கிழக்கு ஆசியாவில் தங்களது வணிகத் தொடர்புகள் மூலமாகவும் வருவாய் ஈட்டினர். வங்காளத்தில் பரவியிருந்த பௌத்த மதம் கிழக்கு இந்தியாவிற்கும் ஜாவா, சுமத்ரா ஆகிய நாடுகளுக்கும் இடையிலான இணைப்பாக விளங்கியது

Tags : History வரலாறு.
11th History : Chapter 8 : Harsha and Rise of Regional Kingdoms : Harsha's Military Conquests History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 8 : ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி : ஹர்ஷரின் படையெடுப்புகள் - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 8 : ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி