வரலாறு - ராஷ்டிரகூட மரபின் எழுச்சி | 11th History : Chapter 8 : Harsha and Rise of Regional Kingdoms
ராஷ்டிரகூட மரபின் எழுச்சி
தொடக்கத்தில் ராஷ்டிரகூடர்கள் வாதாபியை ஆண்டுவந்த மேலைச் சாளுக்கியர்களுக்குக் கப்பம் கட்டுபவர்களாகவே இருந்தனர். அதற்கு முன்னர் அரசாண்டவர்கள் இருந்தபோதிலும் தந்திதுர்கர் என்பவரே ராஷ்டிரகூட வம்சத்தின் தலைசிறந்த அரசராவார். பிராரில் ஒரு சிறு பகுதியை ஆண்டுவந்த தந்திதுர்கர் சாளுக்கிய அரசன் இரண்டாம் விக்ரமாதித்யனின் (பொ.ஆ. 733-746) மறைவிற்குப் பின்னர் தன் அரசைச் சுற்றியிருந்த பகுதிகளுக்குப் படையெடுத்துச் சென்று அவற்றைத் தனது அரசுடன் இணைத்துக் கொண்டார். அவர் நந்தி புரியின் கூர்ஜர ராஜ்யத்தையும், மாளவம், கிழக்கு மத்திய பிரதேசம், பிரார் முழுவதையும் கைப்பற்றினார். பொ.ஆ. 750ஆம் ஆண்டு வாக்கில், மத்திய மற்றும் தெற்கு குஜராத் பகுதியிலும் மத்திய பிரதேசம், பிரார் ஆகிய பகுதிகளிலும் தன் ஆதிக்கத்தை நிறுவினார்.
தந்திதுர்கர் தனது நிலையை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர், வாதாபியை ஆண்ட கடைசி சாளுக்கிய அரசன் இரண்டாம் கீர்த்திவர்மனை (பொ.ஆ. 746-753) தோற்கடித்தார். அவர் மகாராஜாதிராஜர், பரமேஷ்வரர், பரமபட்டாரகர் ஆகிய பட்டங்களை ஏற்றார். பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மனுக்குத் தனது மகளைத் திருமணம் செய்து கொடுத்ததன் மூலம் பல்லவர்களுடன் உறவை வளர்த்துக் கொண்டார். பொ.ஆ. 756ஆம் ஆண்டில் தந்திதுர்கரின் மறைவிற்குப் பின்னர் அவரது சிற்றப்பாவான முதலாம் கிருஷ்ணர் ஆட்சிக்கு வந்தார்.
முதலாம் கிருஷ்ணரும் அவருக்குப் பின் வந்தவர்களும்
முதலாம் கிருஷ்ணர் (பொ.ஆ. 756-775) மைசூரை ஆண்ட கங்கர்களைப் போரில் வென்றவர். அவருக்கு அடுத்து அவரது மூத்த மகன் இரண்டாம் கோவிந்தர் பொ.ஆ. 775ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தார். அவர் கீழைச் சாளுக்கியர்களைத் தோற்கடித்தார். பின்னர் தனது சகோதரரான துருவரிடம் அரசுப் பொறுப்பை ஒப்படைத்தார். துருவர் (பொ.ஆ. 780-794) தனக்குத்தானே அரசராக முடிசூட்டிக் கொண்டார். அவரது ஆட்சிக்காலத்தில் ராஷ்டிரகூடர்களின் அரசு அதன் சிறப்பின் உச்சத்தை அடைந்தது. மேலைக் கங்கர் அரசனை வீழ்த்திய பின்னர் துருவர் பல்லவ அரசரான நந்திவர்மனைத் தோற்கடித்தார். வேங்கியை (தற்கால ஆந்திரம்) ஆண்ட அரசரும் துருவரின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. தெற்கில் தனது ஆதிக்கத்தை நிறுவிய பிறகு துருவர் கன்னோசியைச் சுற்றியுள்ள பகுதிகளின் மீது தன் கவனத்தைத் திருப்பினார். அந்தப் பகுதியில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டப் போட்டியிட்ட பிரதிகர வம்சத்து அரசரான வாத்சர்யர், பாலர் வம்சத்தின் தர்மபாலர் என இருவரையும் தோற்கடித்தார். வாரிசாக தனது மகன் மூன்றாம் கோவிந்தரை நியமித்தார்.
மூன்றாம் கோவிந்தர் (பொ.ஆ. 794-814) ஆட்சியில் அமர்ந்த காலம் முன்னெப்போதும் இருந்திராத விதத்தில் வெற்றிகரமான ஆட்சிக்கு வழி அமைத்தது. பல்லவ அரசர் தண்டிகர் வீழ்த்தப்பட்டார். வேங்கியை ஆண்ட விஷ்ணுவர்த்தனர் அவரது தாய்வழிப் பாட்டனாக இருந்ததால் அவர் மூன்றாம் கோவிந்தரின் ஆதிக்கத்தை எதிர்க்கவில்லை. கோவிந்தர் தக்காணத்தில் தனி ஆதிக்கம் செலுத்துபவராக ஆனார். ராஷ்டிரகூடர்களின் ராஜ்யம் அதன் புகழின் உச்சத்தை அடைந்தது.
மூன்றாம் கோவிந்தருக்குப் பின்னர் அவரது மகன் அமோகவர்ஷர் (சுமார் கி.பி. (பொ.ஆ) 814 - 878) ஆட்சிக்கு வந்தார். அமோகவர்ஷர் அறுபத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அதில் முதல் இருபது ஆண்டுகளுக்கு மேலைக் கங்கர்களுடன் போர் நீடித்தது. கங்கர் வம்சத்து இளவரசர் ஒருவருக்கு அமோகவர்ஷர் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்ததின் மூலம் அப்பகுதியில் அமைதி திரும்பியது. அமோகவர்ஷர் கலை, இலக்கியத்திற்கு ஆதரவளித்தார். புகழ் பெற்ற திகம்பர ஆச்சார்யரான ஜீனசேனர், சமஸ்கிருத இலக்கண ஆசிரியரான சகடயானர், கணித மேதையான மஹாவீராச்சார்யர் ஆகியோருக்கு ஆதரவளித்தார். அமோகவர்ஷர் சிறந்த கவிஞராக இருந்தார். அவர் இயற்றிய “கவிராஜமார்க்கம்” கவிதையியல் பற்றிக் கன்னட மொழியில் இயற்றப்பட்ட முதல் நூலாகும். அமோகவர்ஷருக்குப் பின்னர் அவரது வாரிசுகள் அரசாண்டனர். அவர்களுள் திறமையானவர் மூன்றாம் கிருஷ்ணர் (பொ.ஆ. 939 - 968) ஆவார்.
ராஷ்டிரகூட ஆட்சியாளர்களில் கடைசி அரசர் மூன்றாம் கிருஷ்ணர். அவர் ஆட்சிக்கு வந்தவுடன் தனது மைத்துனர் புதுங்கரின் துணையுடன் சோழ அரசின் மீது படையெடுத்தார். பொ.ஆ. 943ஆம் ஆண்டில் காஞ்சியும் தஞ்சாவூரும் கைப்பற்றப்பட்டன. ஆற்காடு, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தை அவரது படை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பொ.ஆ. 949ஆம் ஆண்டில் தக்கோலம் (தற்கால வேலூர் மாவட்டம்) என்ற இடத்தில் நடந்த போரில் அவர் ராஜாதித்யனின் சோழர் படையைத் தோற்கடித்தார். மூன்றாம் கிருஷ்ணர் தெற்கே ராமேஸ்வரம் வரை படை கொண்டு சென்றார். அங்கு வெற்றியின் சின்னமாக ஒரு தூணை நிறுவினார். இவ்வாறு தக்காணம் முழுவதிலும் தன் ஆதிக்கத்தை நிறுவுவதில் அவர் வெற்றி கண்டார் அவரது ஆட்சியின் போதுதான் ராஷ்டிரகூடர்கள் கன்னோசியைத் தம் கட்டுப்பாட்டில் கொண்டு வர வட இந்திய ஆட்சியாளர்களுக்கிடையே நடந்த போட்டியில் இணைந்தனர். கன்னோசியைக் கைப்பற்றுவதற்கு அவர்களுக்கிடையே தொடர்ந்து நடந்த மோதலின் காரணமாக அந்தப் பிரதேசத்தின் குறுநில மன்னர்கள் சுயேச்சையாக இயங்கத் தலைப்பட்டனர். அவர்கள் காட்டிய எதிர்ப்பானது கன்னோசியை மையமாகக் கொண்டு வட இந்தியாவை ஆளும் ஒரு அரசு அமைவதின் வாய்ப்பைத் தகர்த்தது. வடமேற்கிலிருந்து வந்த படையெடுப்புகள் ஒரு வலுவான அரசை அமைப்பதற்கான முயற்சிகளுக்குத் தடையாக இருந்தன. ஆனால் மூன்றாம் கிருஷ்ணருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்கள் ராஷ்டிரகூட அரசை அதன் வீழ்ச்சியிலிருந்து காக்க முடியாத அளவிற்கு வலுவற்றவர்களாக இருந்தனர்.
மதம்
ராஷ்டிரகூடர்களின் ஆட்சிக் காலத்தில் சிவ வழிபாடும், விஷ்ணு வழிபாடும் செல்வாக்குப் பெற்றிருந்தன. குடைவரைக் கோவிலாக உருவாக்கப்பட்ட புகழ் பெற்ற எல்லோரா சிவன் கோவில் முதலாம் கிருஷ்ணர் கட்டியதாகும். அரசு முத்திரைகளில் விஷ்ணுவின் வாகனமான கருடன், யோக நிலையில் அமர்ந்த சிவன் மற்றும் விஷ்ணுவின் உருவங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. தந்தி துர்கர் உஜ்ஜையினியில் ஹிரண்யகர்ப்ப சடங்கை நடத்தினார். கோவில் தெய்வங்களுக்குத் தராசில் எடைக்கு எடை தங்கம் அளிப்பதான துலா தானத்தைக் குறித்த குறிப்புகள் கிடைத்துள்ளன.
ஹிரண்யகர்ப்பம் என்றால் தங்கக் கருப்பை என்று பொருள். மதகுருக்கள் விரிவான சடங்குகளை நடத்திய பின்னர் தங்கத்தாலான கருப்பையிலிருந்து வெளிவரும் நபர் மேலுலக ஆற்றல் கொண்ட உடலைப்பெற்றவராக, மறுபடியும் பிறப்பெடுத்தவராக அறிவிக்கப்படுவார். சாதவாகன வம்சத்து அரசரான கௌதமிபுத்ர சதகர்ணி என்பவர் சத்திரிய அந்தஸ்தை அடைவதற்கு ஹிரண்யகர்ப்பச் சடங்கை நடத்தினார்.
முதலாம் அமோகவர்ஷர், நான்காம் இந்திரர், இரண்டாம் கிருஷ்ணர், மூன்றாம் இந்திரர் போன்ற பிற்கால அரசர்கள் சமண மதத்திற்கு ஆதரவளித்தனர். பௌத்த மதம் வழக்கொழிந்துவிட்ட நிலையில் அதன் முக்கியமான மையம் கன்கேரி என்ற இடத்தில் மட்டுமே இருந்தது.
இலக்கியம்
ராஷ்டிரகூட ஆட்சியாளர்கள் கல்வியைப் போற்றினார்கள். அவர்களது ஆட்சிக் காலத்தில் கன்னட, சமஸ்கிருத இலக்கியங்கள் பெரும் வளர்ச்சி கண்டன. முதலாம் அமோகவர்ஷர் பிரஸ்னோத்ரமாலிகா எனும் சமஸ்கிருத நூலையும், கவிராஜமார்க்கம் எனும் கன்னட நூலையும் இயற்றினார். ஜீனசேனர் சமணர்களின் ஆதிபுராணத்தை எழுதினார். இரண்டாம் கிருஷ்ணரின் ஆன்மிக வழிகாட்டியாக விளங்கிய குணபத்ரர் சமணர்களின் மஹாபுராணத்தை எழுதினார். பழங்காலக் கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்களாக போற்றப்பட்ட கவிச்சக்கரவர்த்தி பொன்னா, ஆதிகவி பம்பா, கவிச்சக்கரவர்த்தி ரன்னா ஆகியோர் ராஷ்டிரகூட அரசர் மூன்றாம் கிருஷ்ணராலும், மேலைச் சாளுக்கிய அரசர்களான தைலபா, சத்யஷ்ரேய ஆகியோராலும் ஆதரிக்கப்பட்டனர்.
கட்டடக்கலை
ராஷ்டிரகூடர்கள் இந்தியச் சிற்பக்கலைக்கு வியத்தகு பங்களிப்பைச் செய்துள்ளனர். தற்கால மஹாராஷ்டிரத்தில் அமைந்துள்ள எல்லோரா, எலிஃபண்டா குடைவரைக்
கோவில்கள் அவர்களது ஆட்சிக் காலத்தில் உருவானவையாகும். எல்லோரா குடைவரைக் கோவில் வளாகம் பௌத்த, சமண, இந்து மதச் சின்னங்களுக்கான கலை நுட்பத்தைக் கொண்டுள்ளது. முதலாம் அமோகவர்ஷர் சமண மதத்தை ஆதரித்தார். அவரது காலத்தியது எனக் கூறப்படும் ஐந்து சமண குகைக் கோவில்கள் எல்லோராவில் அமைந்துள்ளன.
எல்லோராவில் நமது கருத்தைக்கவரும் அமைப்பு என்பது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கைலாசநாதர் கோவிலாகும். எட்டாம் நூற்றாண்டில் முதலாம் கிருஷ்ணரின் காலத்தில் அமைக்கப்பட்ட இக்கோவில் ஒரே பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டதாகும். அது சாளுக்கிய அரசன் இரண்டாம் விக்ரமாதித்யன், தான் பல்லவர்களை வெற்றி கொண்டதன் நினைவாக கர்நாடகத்தில் பட்டாடக்கல் என்னும் இடத்தில் எழுப்பிய லோகேஷ்வரர் கோவிலை ஒத்துள்ளது. தசாவதார பைரவர், கைலாச மலையை ராவணன் அசைப்பது, நடனமாடும் சிவன், விஷ்ணுவும் லட்சுமியும் இசையில் லயித்திருப்பது எனக் கற்பலகைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் சிறந்த சான்றுகளாகும்.
எலிஃபண்டாவின் பிரதான கோவில் எல்லோராவில் அமைந்துள்ள கோவிலை விடவும் சிறந்ததாகும். நடராஜர், சதாசிவம் ஆகிய சிற்பங்கள் அழகிலும் கலை நுட்பத்திலும் எல்லோரா சிற்பங்களை விட மேன்மை கொண்டவையாக விளங்குகின்றன. அர்த்த நாரீஸ்வரர், மகேசமூர்த்தி ஆகியோரின் சிலைகள் புகழ் பெற்ற சிற்பங்களாகும். இவற்றுள் மகேஷமூர்த்தியின் (சிவன்) மூன்று முகங்கள் கொண்ட 25 அடி உயரமுள்ள மார்பளவுச்சிலை இந்தியாவில் உள்ள கவின்மிகு சிற்பங்களுள் ஒன்றாகும். கைலாசநாதர் கோவிலின் வெளித்தாழ்வாரத்திலும், எல்லோராவில் உள்ள கோவிலின் விதானத்திலும் கூரையிலும் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் இன்றளவும் சிறப்புறக் காட்சி தருகின்றன.