மைய நரம்பு மண்டலம் - மனித நரம்பு மண்டலம் | 10th Science : Chapter 15 : Nervous System
மனித நரம்பு
மண்டலம்
பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட
மாற்றங்களின் காரணமாக நரம்பு மண்டலம் தற்காலத்தில் சிறப்பானதாகவும்
சிக்கலானதாகவும் மாறியுள்ளது. மனிதர்களாகிய நாம் சிந்தித்து செயல்படும் ஆற்றலின்
காரணமாக பிற விலங்கினங்களில் இருந்து வேறுபட்டிருக்கிறோம். இதற்கு சிறப்பான நரம்பு
மண்டலம் காரணமாக அமைந்துள்ளது. மனித நரம்பு மண்டலமானது மூன்று பகுதிகளாக பிரிக்கப்
பட்டுள்ளது. அவையாவன,
மைய நரம்பு மண்டலம் (CNS), புற அமைவு
நரம்பு மண்டலம் (PNS), தானியங்கு நரம்பு மண்டலம் (ANS)
ஆகும் மைய நரம்பு மண்டலமானது தகவல்களை பரிசீலித்து செயல்படுத்தும்
கட்டுப்பாட்டு மையமாக செயல்படுகிறது. இது மூளை மற்றும் தண்டுவடத்தை உள்ளடக்கியது.
புற அமைவு நரம்பு மண்டலம் மூளை மற்றும் தண்டுவடத்திலிருந்து உடலின் பிற பகுதிகளை
இணைக்கும் நரம்புகளை உள்ளடக்கியது. தானியங்கு நரம்பு மண்டலமானது பரிவு
நரம்புகளையும் எதிர்ப்பரிவு நரம்புகளையும் கொண்டது.
மைய நரம்பு
மண்டலம்
மைய நரம்பு மண்டலமானது மூளை
மற்றும் தண்டு வடம் ஆகிய மென்மையான முக்கிய உறுப்புக்களை உள்ளடக்கியது. இவை பாதுகாப்பாக
மண்டையோட்டின் உள்ளேயும்,
முள்ளெலும்புக் கால்வாயினுள்ளும் அமைந்துள்ளன. மைய நரம்பு
மண்டலமானது மையலின் உறையுடன் கூடிய வெண்மையான பகுதி அல்லது மையலின் உறையற்ற
சாம்பல் நிற பகுதிகளால் ஆனது. இவை குறித்து நாம் முன்னரே அறிந்திருக்கிறோம்.
மூளை: உடலின் அனைத்து
செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் மையம் மூளையாகும். மூளையானது மூன்று
பாதுகாப்பான உறைகளால் சூழப்பட்டிருக்கிறது. அவை மெனிஞ்சஸ் அல்லது மூளை உறைகள்
எனப்படும்.
(i) டியூரா மேட்டர் : ( டியூரா: கடினமான, மேட்டர்: சவ்வு)
என்பது வெளிப்புற தடிமனான சவ்வுப்படலம் ஆகும்.
(ii) அரக்னாய்டு உறை : (அரக்னாய்டு : சிலந்தி ) என்பது
நடுப்புற மென்மையான சிலந்தி வலை போன்ற சவ்வுப்படலம் ஆகும். இது அதிர்வுத் தாங்கியாக
செயல்படுகிறது.
(iii) பையா மேட்டர்: (பையா: மென்மையான) இது உட்புற
மெல்லிய உறையாகும். இதில் அதிகமான இரத்த நாளங்கள் காணப்படுகின்றன.
மூளையின் உறைகள் அனைத்தும் மூளையை
அடிபடாமல் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகின்றன.
மனித மூளை மூன்று பகுதிகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன: (1)
முன் மூளை (2) நடு மூளை (3) பின் மூளை.
உங்களுக்குத் தெரியுமா?
"மெனிஞ்சைடிஸ்"
என்பது மூளை உறைகளில் ஏற்படும் வீக்கம் ஆகும். மூளை உறையைச் சுற்றி உள்ள
திரவத்தில் ஏற்படும் நோய்த் தொற்றால் இந்த வீக்கம் உண்டாகிறது. வைரஸ் மற்றும்
பாக்டீரியங்களின் நோய்த் தொற்று இதற்குக் காரணமாகிறது.
முன் மூளையானது பெரு மூளை
(செரிப்ரம்) மற்றும் டயன்செஃப்லான் என்பவைகளால் ஆனது. டயன்செஃப்லான் மேற்புற
தலாமஸ் மற்றும் கீழ்ப்புற ஹைப்போதலாமஸ் கொண்டுள்ளது.
பெருமூளை
மூளையின் மூன்றில் இரண்டு பகுதி
அளவுக்கு பெரும்பான்மையாக இப்பகுதி அமைந்துள்ளது. பெரு மூளையானது நீள் வாட்டத்தில்
வலது மற்றும் இடது என இரு பிரிவுகளாக ஒரு ஆழமான பிளவு மூலம்
பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிளவு நடுப்பிளவு (median cleft) எனப்படும்.
இப்பிரிவுகள் செரிப்ரல் ஹெமிஸ்பியர் / பெரு மூளை
அரைக் கோளங்கள் என்று அழைக்கப்படும். இப்பிரிவுகள்
மூளையின் அடிப்பகுதியில் கார்பஸ் கலோசம் என்னும் அடர்த்தியான நரம்புத்
திசுக்கற்றையால் இணைக்கப்பட்டுள்ளன. பெருமூளையின் வெளிப்புற பகுதி, சாம்பல் நிறப் பகுதியால் ஆனது. இது பெருமூளைப் புறணி எனப்படும்.
பெருமூளையின் உட்புற ஆழமான பகுதி வெண்மை நிறப் பொருளால் ஆனது. பெருமூளைப் புறணி
அதிகமான மடிப்புகளுடன் பல சுருக்கங்களைக் கொண்டு காணப்படும். இவற்றின் மேடு “கைரி" என்றும், பள்ளங்கள்
"சல்சி" என்றும் அழைக்கப்படும். இவ்வாறு மடிப்புற்று இருப்பதால்
பெருமூளைப் புறணி அதிக பரப்பைக் கொண்டதாக உள்ளது.
ஒவ்வொரு பெரு மூளை அரைக்கோளமும், முன்புறக்
கதுப்பு, பக்கவாட்டுக் கதுப்பு, மேற்புறக்
கதுப்பு மற்றும் பின்புறக் கதுப்பு என்று பிரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பெருமூளை
கதுப்புகள் என அழைக்கப்படும். இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட செயலுக்கு
பொறுப்பானவை. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கதுப்பில் ஏற்படும் சேதம் அந்தப் பகுதிக்கான
செயல்களை பாதிக்கும்.
பெரு மூளையானது சிந்தித்தல், நுண்ணறிவு,
விழிப்புணர்வு நிலை, நினைவுத் திறன், கற்பனைத்திறன், காரணகாரியம் ஆராய்தல் மற்றும் மன
உறுதி ஆகியவற்றுக்கு காரணமானதாகும்.
தலாமஸ்
பெருமூளையின் உட்புற ஆழமான
பகுதியான மெடுல்லாவைச் சூழ்ந்து தலாமஸ் அமைந்துள்ளது. உணர்வு மற்றும் இயக்க
தூண்டல்களைக் கடத்தும் முக்கியமான கடத்து மையமாக தலாமஸ் செயல்படுகிறது.
ஹைபோதலாமஸ்
ஹைபோ என்பதற்கு கீழாக என்று
பொருள். இப்பொருளுக்கேற்ப இது தலாமஸின் கீழ்ப்பகுதியில் உள்ளது. இது உள்ளார்ந்த
உணர்வுகளான பசி, தாகம், தூக்கம், வியர்வை,
பாலுறவுக் கிளர்ச்சி, கோபம், பயம், ரத்த அழுத்தம், உடலின்
நீர் சமநிலை பேணுதல் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது. இது உடலின் வெப்பநிலையை
ஒழுங்குபடுத்தும் மையமாக செயல்படுகிறது. மேலும் இது பிட்யூட்டரி சுரப்பியின்
முன் கதுப்பு ஹார்மோன் சுரப்புகளைக் கட்டுப்படுத்துகிறது. தலாமஸ் நரம்பு மண்டலம்
மற்றும் நாளமில்லாச் சுரப்பு மண்டலத்தின் இணைப்பாக செயல்படுகிறது.
இது தலாமஸிற்கும் பின் மூளைக்கும்
இடையில் அமைந்துள்ளது. நடுமூளையின் பின்புறத்தில் நான்கு கோள வடிவிலான பகுதிகள்
உள்ளன. இவை கார்ப்போரா குவாட்ரிஜெமினா என அழைக்கப்படும். இவை பார்வை
மற்றும் கேட்டலின் அனிச்சைச் செயல்களை கட்டுப்படுத்துகிறது.
பின் மூளையானது சிறுமூளை, பான்ஸ் மற்றும் முகுளம் ஆகிய 3 பகுதிகளை
உள்ளடக்கியது.
சிறுமூளை
மூளையின் இரண்டாவது மிகப்பெரிய
பகுதி சிறு மூளை ஆகும். சிறு மூளையானது மையப் பகுதியில் இரண்டு பக்கவாட்டு
கதுப்புக்களுடன் காணப்படும். இது இயக்கு தசைகளின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துதல்
மற்றும் உடல் சமநிலையைப் பேணுதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.
உங்களுக்குத் தெரியுமா?
மனித
மூளையின் 60% பகுதி கொழுப்பாலானது. நமது மூளையை ஒன்றிணைக்கும்
மற்றும் செயல்படும் திறனுக்கு காரணமானவை அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள். இவை
நம்மால் உற்பத்தி செய்ய இயலாத காரணத்தால் உணவின் மூலமே பெற முடியும். மீன்,
பச்சை காய்கறிகள் பாதாம், வாதுமை கொட்டை
ஆகியவற்றில் அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் (EFA) அதிகம்
உள்ளது.
பான்ஸ்
"பான்ஸ்"
என்னும் இலத்தின் மொழி சொல்லுக்கு "இணைப்பு" என்று பொருள். இது சிறு
மூளையின் இரு புற பக்கவாட்டு கதுப்புகளை இணைக்கும் இணைப்பு பகுதியாக
செயல்படுகிறது. இது சிறு மூளை, தண்டுவடம், நடுமூளை மற்றும் பெருமூளை ஆகியவற்றிற்கிடையே சமிக்ஞைகளை கடத்தும் மையமாக
செயல்படுகிறது. இது சுவாசம் மற்றும் உறக்க சுழற்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.
முகுளம்
மூளையின் கீழ்ப்பகுதியான முகுளம்
தண்டுவடத்தையும் மூளையின் பிற பகுதிகளையும் இணைக்கின்றது. இது இதயத் துடிப்பினை
கட்டுப்படுத்தும் மையம்,
சுவாசத்தினை கட்டுப்படுத்தும் சுவாச மையம், இரத்தக்
குழாய்களின் சுருக்கத்தினை கட்டுப்படுத்தும் மையம் ஆகிய மையங்களை உள்ளடக்கியது.
மேலும் உமிழ்நீர் சுரப்பது மற்றும் வாந்தி எடுத்தல் ஆகியவற்றை
ஒழுங்குபடுத்துகிறது.
தண்டுவடம்
தண்டுவடமானது குழல் போன்ற
அமைப்பாக முதுகெலும்பின் உள்ளே முள்ளெலும்புத் தொடரின் நரம்புக் குழலுக்குள்
அமைந்துள்ளது. மூளையைப் போன்று தண்டுவடமும் மூவகை சவ்வுகளால் மூடப் பட்டுள்ளது.
இது முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கி இடுப்பெலும்பின் கீழ்ப்புறம் வரை
அமைந்துள்ளது. தண்டுவடத்தின் கீழ்ப்புறம் குறுகிய மெல்லிய நார்கள் இணைந்தது போன்ற
அமைப்பு காணப்படுகிறது. இது "ஃபைலம் டெர்மினலே” எனப்படுகிறது.
மேலும் அறிந்துகொள்வோம்
எலக்ட்ரோஎன்செஃப்லோகிராம்
(EEG) என்பது மூளையில் உண்டாகக்கூடிய மின் அதிர்வுகளை பதிவு செய்யும் கருவி. இது
மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் அசாதாரணமான மூளை அலைகளை கண்டுணரவும், மூளையில் ஏற்படும் உடனடி மாற்றங்கள், மூளைக்கட்டி,
தலையில் ஏற்படும் காயங்கள், வலிப்பு போன்ற
நோய்களை கண்டுணரவும் பயன்படுகிறது.
தண்டுவடத்தின் உட்புறம், தண்டுவடத்
திரவத்தால் நிரம்பியுள்ள குழல் உள்ளது. இது மையக்குழல் (central
canal) எனப்படுகிறது. தண்டுவடத்தின் சாம்பல் நிறப் பகுதியானது
ஆங்கில எழுத்தான “H” போன்று அமைந்துள்ளது. "H"
எழுத்தின் மேற்பக்க முனைகள் “வயிற்றுப்புறக்
கொம்புகள்" (posterior horns) என்றும், கீழ்ப்பக்க முனைகள் “முதுகுப்புறக் கொம்புகள்" (anterior
horns) என்றும் குறிப்பிடப்படுகிறது. வயிற்றுப் புறக்
கொம்புப்பகுதியில் கற்றையான நரம்பிழைகள் சேர்ந்து பரிவு நரம்புகளை
உண்டாக்குகின்றன. முதுகுப்புற கொம்பு பகுதிகளிலிருந்து வெளிப்புறமாக வரும்
நரம்பிழைகள் எதிர்ப்பரிவு நரம்புகளை உண்டாக்குகின்றன. இவையிரண்டும் இணைந்து தண்டுவட
நரம்புகளை (spinal nerves) உண்டாக்குகின்றன. வெளிப்புற
வெண்மை நிறப் பகுதி நரம்பிழைக் கற்றைகளைக் கொண்டுள்ளது. தண்டு வடமானது, மூளைக்கும் பிற உணர்ச்சி உறுப்புகளுக்கும் இடையே உணர்வுத் தூண்டல்களையும்,
இயக்கத் தூண்டல்களையும், முன்னும் பின்னுமாக
கடத்தக்கூடியது. இது உடலின் அனிச்சைச் செயல்களைக் கட்டுப்படுத்துகிறது.