நரம்புத்
தூண்டல் கடத்தப்படுதல்
உணர் உறுப்புகளான கண், மூக்கு, தோல் போன்றவற்றின் மூலம், புறச் சூழ்நிலையிலிருந்து பெறப்படும்
தூண்டல்கள் உணர்வேற்பிகளின் மூலம் உணரப்படுகின்றன. இத் தூண்டல்கள் மின்தூண்டல்களாக
நியூரான்கள் வழி கடத்தப் படுகின்றன. மேலும் இத்தூண்டல்கள் டெண்ட்ரான் முனை
வழியாக செல் உடலத்துக்குள் கடத்தப்பட்டு ஆக்ஸான் முனையை சென்றடைகின்றன. இப்போது
ஆக்ஸான் முனையானது நரம்புணர்வு கடத்திகளை (நியூ
ரோட்ரான்ஸ்மிட்டர்) வெளியிடுகிறது. இவை நரம்பு இணைவுப்
பகுதியில் பரவி அடுத்த நியூரானிலுள்ள டெண்ட்ரான்களை அடைந்து செல் உடலத்தில் மின்
தூண்டல்களாக கடத்தப்படுகின்றன. இவ்வாறு தொடர்ந்து கடத்தப்பட்டு மின் தூண்டல்கள்
மூளை அல்லது தண்டுவடத்தைச் சென்றடைகின்றன. இதற்குரிய துலங்கல்கள் (Response)
மூளை அல்லது தண்டுவடத்திலிருந்து வெளிப்பட்டு குறிப்பிட்ட தசைகள்
அல்லது சுரப்பிகளை சென்றடைகின்றன.
ஒரு குறிப்பிட்ட நியூரான்களின்
தொகுப்பில் நடைபெறும் நரம்பு தூண்டல்கள் செல்லும் பாதையானது, எப்பொழுதும் ஒரு
நியூரானின் ஆக்சான் முனையிலிருந்து மற்றொரு நியூரானின் டெண்ட்ரான் முனைக்கு சினாப்ஸ்
அல்லது சினாப்டிக் குமிழ் மூலம் கடத்தப்படுவதை "சினாப்டிக் கடத்துதல்” என்கிறோம்.
உங்களுக்குத் தெரியுமா?
ஒவ்வொரு
நியூரானும் 1000 நரம்பு தூண்டல்களை ஒரு வினாடி நேரத்தில் கடத்தக் கூடியவை.
மேலும் பத்தாயிரத்திற்கும் அதிகமான நரம்பிடை இணைப்புகளை பிற நியூரான்களோடு
உருவாக்கக் கூடியவை.
நரம்புணர்வு
கடத்திகள் (நியுரோ டிரான்ஸ்மிட்டர்கள்)
நரம்புணர்வு கடத்திகள் என்பவை ஒரு
நரம்புச் செல்லின் ஆக்சான் முனையிலிருந்து மற்றொரு நரம்புச் செல்லின் டெண்டிரான்
முனைக்கு அல்லது எந்த இலக்கு உறுப்புகளோடு இணைக்கப் பட்டுள்ளதோ அந்த குறிப்பிட்ட
இலக்கு உறுப்புக்கு நரம்புத் தூண்டல்களை கடத்தும் வேதிப் பொருள்கள் ஆகும். அசிட்டைல்கோலின்
எனப்படும், நியூரான்கள் வெளியிடும் வேதிப்பொருள் ஒரு குறிப்பிடத்தகுந்த நரம்புணர்வு கடத்தி
ஆகும்.