காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு - வரலாறு - இந்திய வெளியுறவுக் கொள்கை | 12th History : Chapter 8 : Reconstruction of Post-colonial India
இந்திய வெளியுறவுக் கொள்கை
சுதந்திர இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கான
அடிப்படைக் கோட்பாடுகள் இந்தியா விடுதலை அடைவதற்கு குறைந்தது முப்பது ஆண்டுகளுக்கு
முன்பே உருவாக்கப்பட்டன எனலாம். இந்தக் கோட்பாடு விடுதலைப் போராட்டத்தின் போது படிப்படியாக
வளர்ச்சியுற்றது. காலனியம் எந்த வடிவில் வந்தாலும் அதை எதிர்ப்பது என்பதே இந்தக் கோட்பாட்டின்
அடிநாதமாகும். ஜவகர்லால் நேருவே இந்திய வெளியுறவுக் கொள்கையை முதன்மையான சிற்பி ஆவார்.
இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக்
கோட்பாடுகள் பின்வருமாறு: காலனிய எதிர்ப்பு (அ) ஏகாதிபத்திய எதிர்ப்பு, இன ஒதுக்கலை
எதிர்த்தல், இனவெறியை எதிர்த்தல், வல்லரசு நாடுகளுடன் அணி சேராமை, ஆப்பிரிக்க - ஆசிய
ஒற்றுமை, பிறநாடுகளை ஆக்கிரமிக்காமல் இருத்தல், பிற நாடுகளின் உள்நாட்டு நிகழ்வுகளில்
தலையிடாமல் இருத்தல், ஒரு நாடு மற்றொரு நாட்டின் இறையாண்மை மற்றும் நில எல்லையை மதித்தல்,
உலக அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல், நாடுகளுக்கிடையேயான அமைதியை நிலைநிறுத்துவதில்
வெற்றிடம் ஏற்படா வண்ண ம் இரு நாடுகளும் சமநீதியைப் பாதுகாத்தல்.
இரண்டாம் உலகப்போருக்குப்பின், அமெரிக்கா
(USA) மற்றும் சோவியத் ஒன்றியம் (USSR) ஆகிய இரு வல்லரசு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பனிப்போர்
காரணமாக இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு இந்தியா அணிசேராக் கொள்கை
மூலம் தீர்வு கண்டது.
அணிசேராக் கொள்கையின் விவரங்ளைப் பார்ப்பதற்கு
முன், விடுதலைக்குப் பின் இந்தியா சீனாவோடு கொண்டிருந்த உறவு குறித்துப் பார்க்கலாம்.
இந்தியா விடுதலைபெற்ற இரண்டு ஆண்டுகளுக்குப்பின் 1949இல் சீனா ஜப்பானியக் காலனிய விரிவாக்கத்திலிருந்து
தன்னை விடுவித்துக்கொண்டது. இந்தியா, சீனாவோடு நீண்ட எல்லையைக் கொண்டிருந்ததால் நேரு
சீனாவுடனான நட்புறவுக்கு அதிக முக்கியத்துவம் தந்தார்.
சீன மக்கள் குடியரசை 1950 ஜனவரி 1இல் முதன்
முதலாக அங்கீகரித்த நாடு இந்தியா காலனி ஆதிக்கத்தால் பெற்ற துன்பம், அதன் விளைவுகளான
வறுமை மற்றும் பின்தங்கிய வளர்ச்சி ஆகிய அனுபவ ஒற்றுமைகளின் காரணமாக இந்தியாவும் சீனாவும்
கைகோர்த்து உலகில் ஆசியாவிற்கோர் இடத்தை நிலைநிறுத்த முடியும் என்று நேரு கருதினார்.
ஐ.நா பாதுகாப்பு அவை கம்யூனிச சீனாவை உறுப்பினராக ஏற்க வேண்டுமென்று நேரு வலியுறுத்தினார்.
ஆனால், 1950இல் சீனா, திபெத்தை ஆக்கிரமித்த போது இந்தியா வருத்தமடைந்தது. இந்தியாவின்
நம்பிக்கைக்குப் பாத்திரமாகச் சீனா நடந்துகொள்ளவில்லை என இந்தியா கருதியது. 1954இல்
இந்தியா மற்றும் சீனாவிடையே கையெழுத்தான ஒப்பந்தம் சீனாவிற்கு திபெத் மீதிருந்த உரிமையை
அங்கீகரித்தது. அத்தோடு இந்திய சீன உறவுக்கான கோட்பாடுகளாகப் பஞ்சசீலக் கொள்கையை வகுத்தது.
பஞ்சசீலக் கொள்கை
1.இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று
அவற்றின் நில எல்லை மற்றும் இறையாண்மையை மதித்து நடத்தல்.
2.இரு நாடுகளும் ஒன்றையொன்று
ஆக்கிரமிக்காமல் இருத்தல்.
3.ஒரு நாடு மற்றொரு நாட்டின்
உள் நிகழ்வுகளில் தலையிடாமல் இருத்தல்.
4.இரு நாடுகளுக்கு இடையேயான
சமத்துவம் மற்றும் ஒன்றுக்கொன்று பயனடைவதற்கான கூட்டுறவு.
5. சமாதான சகவாழ்வு
ஏப்ரல் 1955இல் நடைபெற்ற பாண்டுங் மாநாட்டில்
சீனாவையும் அதன் தலைவரான சூ - யென் - லாயும் முன்னிலைப்படுத்த நேரு சிறப்பான முயற்சிகள்
எடுத்தார். ஆனால், 1959இல் சீன அரசாங்கம் பெளத்தர்களின் கிளர்ச்சியை ஒடுக்கியதால்,
பௌத்தர்களின் தலைவரான தலாய்லாமா ஆயிரக்கணக்கான அகதிகளுடன் திபெத்திலிருந்து வெளியேறி
இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இந்தியா, தலாய்லாமா -விற்கு தஞ்சம் வழங்கியது சீனாவை
வருத்தமடையச் செய்தது. அதன் பின்னர், அக்டோபர் 1959இல் லடாக்கில் இருந்த கொங்காய் கணவாயில்
காவல் இருந்த இந்தியப் படை மீது சீனா தாக்குதல் நடத்தியது. இதில் 5 இந்தியக் காவலர்கள்
கொல்லப்பட்டனர், 12 பேர் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்; பலகட்ட அளவில் பேச்சுவார்த்தை
(நேரு மற்றும் சூ-யென் - லாய் உட்பட) நடைபெற்றபோதிலும் இந்திய - சீன உறவில் போதுமான
முன்னேற்றம் ஏற்படவில்லை.
1962இல் இந்திய சீனப் போர் ஏற்பட்டது.
1962, செப்டம்பர் 8இல் சீனப் படைகள் தக்லா மலைப் பகுதியில் தாக்குதல் நடத்தின. இதன்
விளைவாக, இந்தியா சீனாவோடு இணைந்து ஆசிய மண்டலத்தை உருவாக்கும் கனவு தகர்ந்து போனது.
இதனால், இந்திய சுயமரியாதைக்கு ஏற்பட்ட களங்கம், பங்களாதேஷ் போரில் சீனா மற்றும் அமெரிக்காவின்
ஒத்துழைப்போடு போரிட்ட பாகிஸ்தானை தோற்கடித்த பின்பே துடைக்கப்பட்டு இந்தியாவின் சுய
கௌரவம் நிலை நிறுத்தப்பட்டது.
உலகுக்கான இந்தியாவின் பங்களிப்பு, இந்திய
சீன உறவுமற்றும் பஞ்ச சீலக் கொள்கையுடன் மட்டும் நிறைவடையவில்லை . வல்லரசு நாடுகளுடன்
கூட்டு சேராத அணி சேராமை என்ற கருத்தாக்கம் வலுப்பெறவும் பாண்டுங் மாநாடு உதவியது.
மார்ச் 1947இல் டெல்லியில் நேரு ஏற்பாடு செய்த
ஆசிய உறவுக்கான மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன. ஆசிய நாடுகளின்
விடுதலை மற்றும் உலகில் ஆசியாவின் நிலையை உறுதி செய்தல் என்பதே மாநாட்டின் மையக் கருத்தாகும்.
இத்தகைய மாநாடு மீண்டும் ஒரு முறை டிசம்பர் 1948இல் இந்தோனேசியாவில் மறு காலனியாக்கத்திற்கு
உட்படுத்த விரும்பிய, டச்சுக்காரர்களுக்குப் பதில் கூறும் வகையில் நடத்தப்பட்டது. காலனி
ஆதிக்க நீக்க முயற்சிகள் 1954இல் கொழும்பில் நடைபெற்ற ஆசியத் தலைவர்கள் மாநாட்டில்
மேலும் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. இந்த முயற்சிகளின் முத்தாய்ப்பாகவே 1955இல் இந்தோனேசியா
நாட்டின் பாண்டுங் நகரில் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் மாநாடு நடைபெற்றது. சில ஆண்டுகளுக்குப்
பின் பெல்கிரேட் நகரில் இந்த நாடுகள் கூடி அணி சேரா இயக்கத்தைத் தோற்றுவிப்பதற்கான
அடித்தளத்தை பாண்டுங் மாநாடு ஏற்படுத்திக் கொடுத்தது.
சுதந்திர இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின்
சிற்பியான ஜவகர்லால் நேரு , எகிப்து அதிபர் நாசர் மற்றும் யூகோஸ்லாவியாவின் டிட்டோ
ஆகியோருடன் இணைந்து 1961இல் அணுசக்தி ஆயுதக்குறைப்பு மற்றும் சமாதானத்திற்கான அழைப்பு
விடுத்தார். அணிசேராமையின் முக்கியத்துவம் மற்றும் உலகத்துக்கு அதன் தேவை குறித்து
நேரு பின்வருமாறு குறிப்பிட்டார்.
பாசிசம், காலனித்துவம், இனவாதம் அல்லது அணு
குண்டு, ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறை போன்ற அனைத்து தீய சக்திகளையும் பொறுத்தவரையில்,
நாம் மிகவும் உறுதியாகவும் ஐயத்திற்கு இடமின்றியும் அவற்றை எதிர்த்து நிற்கிறோம். பனிப்போர்
மற்றும் அதுதொடர்பான இராணுவ ஒப்பந்தங்களிலிருந்து மட்டும் நாங்கள் விலகி நிற்கிறோம்.
ஆசிய மற்றும் ஆப்பிரிக்காவின் புதிய நாடுகளைத் தங்களது பனிப்போர் இயந்திரத்துக்குள்
கட்டாயப்படுத்தித் தள்ளும் முயற்சிகளை எதிர்க்கிறோம். இல்லையெனில், நாம் தவறெனக் கருதும்
அல்லது உலகத்துக்கோ , நமக்கோ தீங்கிழைக்கும் எந்தவொரு வளர்ச்சியையும் கண்டனம் செய்யலாம்.
அதற்கான, சந்தர்ப்பம் எழும்போதெல்லாம் நாம் அந்த சுதந்திரத்தைப் பயன்படுத்துவோம்"
பாண்டுங் பேரறிக்கை
உலக அமைதியையும் ஒத்துழைப்பையும்
மேம்படுத்துவதற்காக ஐ.நா.சாசனத்தின் 10 அம்சக் கோட்பாடுகளை உள்ளடக்கிய "பேரறிக்கை:
1.அடிப்படை மனித உரிமைகள் மற்றும்
ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் ஆகியவற்றை மதித்து நடத்தல்.
2.அனைத்து நாடுகளின் இறையாண்மை
மற்றும் எல்லை ஒருமைப்பாட்டிற்கு மரியாதை அளித்தல்.
3.அனைத்து இனங்களின் சமத்துவத்தையும்
பெரிய மற்றும் சிறிய அளவிலான அனைத்து நாடுகளின் சமத்துவத்தையும் அங்கீகரித்தல்.
4.மற்றொரு நாட்டின் உள் நிகழ்வுகளில்
தலையீடு அல்லது தலையீடுகளில் இருந்து விலகுதல்.
5.ஒவ்வொரு நாட்டிற்கும் தன்னைப்
பாதுகாத்துக்கொள்ள உரிமையுண்டு. தனியாகவோ அல்லது கூட்டாகவோ, ஐக்கிய நாடுகளின் சாசனத்திற்கு
ஏற்ற விதத்தில் பாதுகாத்துக் கொள்ளலாம்.
6.(அ) வல்லரசுகளின் எந்தவொரு
குறிப்பிட்ட நலன்களுக்கும் சேவை செய்வதற்கு கூட்டாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை பயன்படுத்துவதில்
இருந்து ஒதுங்கிக் கொள்ளல்.
(ஆ) எந்தவொரு நாடும் பிறநாடுகளின்
மீது அழுத்தங்களைச் செலுத்தாமல் ஒதுங்கி இருத்தல்.
7.ஆக்கிரமிப்பு அல்லது ஆக்கிரமிப்பு
அச்சுறுத்தல்கள் அல்லது எந்த ஒரு நாட்டின் நில ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுயநிர்ணயத்துக்கு
எதிரான செயல்களில் ஈடுபடாமல் விலகி இருத்தல்.
8.ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு
இணங்க அனைத்து சர்வதேச முரண்பாடுகளையும் சமாதான வழிவகைகள், சமரசம் , நடுவர் அல்லது
நீதித்துறை தீர்வு போன்ற அமைதியான வழிமுறைகளில் தீர்த்துக் கொள்ளுதல்.
9.பரஸ்பர நலன்களையும் ஒத்துழைப்பையும்
மேம்படுத்துதல்.
10. நீதி மற்றும் சர்வதேசக்
கடமைகளை மதித்தல்.