Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | மொழி அடிப்படையில் மாநிலங்களின் மறுசீரமைப்பு

காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு - வரலாறு - மொழி அடிப்படையில் மாநிலங்களின் மறுசீரமைப்பு | 12th History : Chapter 8 : Reconstruction of Post-colonial India

   Posted On :  12.07.2022 05:01 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 8 : காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு

மொழி அடிப்படையில் மாநிலங்களின் மறுசீரமைப்பு

விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவின் உருவாக்கத்தில் முக்கியமான ஒரு அம்சம் மொழிவாரியாக மாநிலங்களை மறுசீரமைத்ததாகும்.

மொழி அடிப்படையில் மாநிலங்களின் மறுசீரமைப்பு

விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவின் உருவாக்கத்தில் முக்கியமான ஒரு அம்சம் மொழிவாரியாக மாநிலங்களை மறுசீரமைத்ததாகும். காலனிய ஆட்சியாளர்கள் இந்தியத் துணைக்கண்டத்தை நிர்வாக அலகுகளாக அதாவது, இந்திய நிலப்பரப்பு மொழி, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அமையாத, நிர்வாக வசதிக்காக மட்டுமே பிரிக்கப்பட்ட மாகாணங்களாக விட்டுச் சென்றனர். விடுதலையும் அரசமைப்பு அடிப்படையிலான மக்களாட்சி கருத்தாக்கமும் மக்களை இறையாண்மை உள்ளவர்களாகவும் இந்தியாவை வெறும் நிர்வாகரீதியாக அணுகாமல், பன்முக கலாச்சாரம் கொண்ட தேசமாக, கூட்டாட்சித் தத்துவ அடிப்படையில் முழுமையாக அணுக வேண்டும் என்பதை வலுப்படுத்தின.

மொழிவாரி மாநில மறுசீரமைப்பு, இந்திய அரசமைப்பு நிர்ணய சபையின் 1947 மற்றும் 1949 இடைப்பட்ட ஆண்டுகளில் எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டது. ஆனால், அரசமைப்பு நிர்ணய சபை இது குறித்த விவாதத்தை இரண்டு காரணங்களுக்காக நிலுவையில் வைத்தது. மொழிவாரி மாநில மறுசீரமைப்பானது பெரும்பணி என்பது முதற் காரணம், இந்தியப் பிரிவினையும் அது தொடர்பான வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் மொழிவாரியான மாநிலம் குறித்து விவாதம் மேலும் பிரச்சினைகளை உருவாக்கும் என்பது இன்னொரு காரணம்.

இந்திய அரசமைப்பு நடைமுறைக்கு வந்தபின் மொழிவாரி மாநில மறுசீரமைப்புக் கொள்கை படிப்படியாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. 1956இல் ஆந்திரப்பிரதேச உருவாக்கத்தில் தொடங்கி 1966இல் பஞ்சாப் மாநிலத்தைப் பஞ்சாபி மொழி பேசும் பஞ்சாப் மாநிலம் மற்றும் அதிலிருந்து பிரிக்கப்பட்ட ஹரியானா மற்றும் இமாச்சலப்பிரதேச மாநிலங்கள் என மூன்றாகப் பிரித்ததில் முற்றுப்பெற்றது.

1920ஆம் ஆண்டு முதலே இந்திய விடுதலை இயக்கத்தோடு, மொழிவாரி மாநிலக் கோரிக்கை ஒன்றிணைந்திருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் (1920ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் மொழி வாரியான மாகாண காங்கிரஸ் குழுக்கள் அமைக்கப்படுவதன் மூலம் மொழி அடையாளத்தின் அடிப்படையில் அமைந்த தேசிய அடையாளம் பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்தது.

1928இல் வெளியான நேரு அறிக்கை பிரிவு 86இல் பின்வருமாறு தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. நிதி மற்றும் நிர்வாக காரணங்களுக்கு உட்பட்டு, பெரும்பான்மை மக்கள் வாழும் இட அடிப்படையில் மாநிலங்களை மொழி வாரியாக மறு சீரமைப்பதற்கான கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்"

1945ஆம் ஆண்டு மாகாண மற்றும் மத்திய சட்டமன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தலின் போது இந்திய தேசிய காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மொழிவாரி மாகாணங்கள் பற்றிய கருத்து ஆணித்தரமாக இடம் பெற்றிருந்தது. காங்கிரஸ் (இந்திய தேசத்திற்குள் வாழும்) ஒவ்வொரு குழுவின் சுதந்திரத்திற்கும் துணை நிற்பதோடு அந்த குழுக்களின் தனிப்பட்ட வாழ்வு, கலாச்சாரம் போன்றவற்றை மேம்படுத்த தேசத்திற்குள் மொழி மற்றும் கலாச்சார அடிப்படையில் மாகாணங்களை அமைக்கவும் துணை செய்யும் என்று குறிப்பிட்டது.

அரசமைப்பு நிர்ணய சபைக்கான தேர்தல் முடிவடைந்து ஒரு மாதத்திற்குப்பின், 1946 ஆகஸ்ட் 31இல் பட்டாபி சீதாராமைய்யா ஆந்திரா மாகாணத்திற்கான கோரிக்கையை அரசமைப்பு நிர்ணய சபையின் முன் வைத்தார். இந்த முழுப்பிரச்சனையை முதல் பிரச்சனையாகவும், முக்கியப் பிரச்சனையாகவும் எடுத்து அரசமைப்பு நிர்ணய சபை தீர்வு காண வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார். மேலும், 1946, டிசம்பர் 8இல் ஒரு மாநாட்டிற்கு அவர் தலைமை தாங்கிய போது நிறைவேற்றிய தீர்மானத்தில் மொழிவாரி மாநில மறுசீரமைப்புக் கொள்கையை அரசமைப்பு நிர்ணய சபை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்திய அரசாங்கத்தின் அறிவிக்கை ஒன்று, புதிய அரசமைப்பில் சிந்து, ஒரிசா (ஒடிசா) மாகாணங்கள் போல ஆந்திராவும் தனி அலகாகக் குறிப்பிடப்படும் என்று தெரிவித்ததோடு மட்டுமின்றி இந்திய அரசாங்கச் சட்டம் 1935-லும் அவ்வாறே இடம்பெற்றது.

ஆனால், அரசமைப்பு வரைவுக்குழு ஆந்திராவிற்கான புவியியல் மாகாண எல்லைகள் வகுக்கப்படும் வரை ஆந்திராவைத் தனி அலகாக குறிப்பிட முடியாது என்று கருதியது. எனவே, 1948, ஜுன் 17இல் அரசமைப்பு நிர்ணய சபைத் தலைவர் இராஜேந்திர பிரசாத் மூவர் ஆணையம் ஒன்றை அமைத்தார். மொழிவாரி மாகாணங்கள் ஆணையம் என்றழைக்கப்பட்ட அது புதிய மொழிவாரி மாகாணங்களாக ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகியவற்றை உருவாக்குவது குறித்து ஆராய்ந்தது. 1948 டிசம்பர் 10இல் இந்த ஆணையத்தால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மொழிவாரி மாகாண மறுசீரமைப்பு என்னும் கருத்தாக்கத்திற்கு எதிரான காரணங்களைப் பட்டியலிட்டது. முன்மொழியப்பட்ட நான்கு மாநிலங்களான ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகியவற்றை உருவாக்குவதற்கு எதிராக அந்த ஆணையம் கருத்துரைத்தது.

எனினும், மொழிவாரி மாகாணக் கோரிக்கை நின்றுவிடவில்லை. ஜெய்ப்பூர் மாநாட்டில் பட்டாபி சீதாராமையா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் இந்தக் கோரிக்கை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. அதன் காரணமாக, மொழிவாரி மாகாணக் கோரிக்கையை ஆராய ஜவகர்லால் நேரு, வல்லபாய் படேல் மற்றும் பட்டாபி சீதாராமையா ஆகிய மூவரையும் கொண்ட ஜே. வி.பி. குழு (J.V.P. Committee) அமைக்கப்பட்டது.


ஜே.வி.பி. குழு தனது அறிக்கையை 1949 ஏப்ரல் 1இல் சமர்ப்பித்தது. துரதிருஷ்டவசமாக இந்தக் குழுவும் மொழிவாரி மாகாண ஆணையத்தின் முடிவையே ஆதரித்தது. இந்தக் குழு மொழிவாரி மாகாணங்கள் குறுகிய பிராந்தியவாதத்தை வலியுறுத்துகின்றன என்றும், அது நாட்டின் மேம்பாட்டிற்கு "அச்சுறுத்தலாக" உருவாகக்கூடும் என்றும் தெரிவித்தது. ஜே.வி.பி. குழு மொழியானது பிணைக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பதோடு பிரிக்கும் ஆற்றலும் உடையது என்று குறிப்பிட்ட போதிலும், "நாட்டில் சாதகமான சூழ்நிலை உருவாகும் போது - மக்களின் சிந்தனைகள் அமைதிப்படும்போது, எல்லைகளை மாற்றி அமைத்து புதிய மாகாணங்களை உருவாக்கலாம் என்றும் அவ்வாறு உருவாக்குவது எளிதாகவும் அனைத்து அக்கறைகளுக்கும் நன்மை தருவதாகவும் அமையும் என்றும் வலியுறுத்தியது.

ஜே.வி.பி. குழு தனது அறிக்கையின் முடிவுரையில் மொழிவாரி மாநில மறுசீரமைப்பிற்கு அது உகந்த நேரமல்ல என்று தெரிவித்தது. வேறுவிதமாக சொல்வதானால், மொழிவாரி மாநிலம் மறுசீரமைப்பிற்கான ஒருமித்தக் கருத்தை உருவாக்கும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அதே நேரத்தில் எதிர்காலத்தில் மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகளை மறுசீரமைக்கவும் இருக்கின்ற மாநிலங்களிலிருந்து புதிய மாநிலங்களை உருவாக்குவதற்குமான வழிவகைகளைத் திறந்து வைத்தது.


இந்திய அரசமைப்பை உருவாக்கியவர்கள் மாநில மறுசீரமைப்பு, மொழி அடிப்படையில்தான் அமைய வேண்டும் என்று குறுக்காமல் மாநில மறுசீரமைப்பை ஒத்துக்கொள்ளக்கூடிய வேறு காரணங்கள் அடிப்படையிலும் அமைக்கலாம் என பரந்த பார்வை கொண்டிருந்தனர்.

முதல் பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்னர் மீண்டும் மொழிவாரி மாநில கருத்தாக்கம் எழுச்சிபெற்றது. ஆந்திரா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி 1952 அக்டோபர் 19இல் சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கிய பொட்டி ஸ்ரீராமுலு 1952 டிசம்பர் 15 அன்று இரவு காலமானார்.

இந்திய அரசமைப்பின் உறுப்பு 3 (Article 3) பின்வருமாறு தெரிவிக்கிறது நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கலாம். (அ) ஒரு மாநிலத்திலிருந்து நிலப்பகுதியைப் பிரித்தோ அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களை அல்லது மாநிலங்களின் பகுதிகளை இணைத்தோ அல்லது ஏதேனும் நிலப்பகுதியை மாநிலப் பகுதிகளோடு இணைத்தோ புதிய மாநிலத்தை உருவாக்கலாம்;

(ஆ) எந்த மாநிலத்தின் நிலப்பகுதியையும் அதிகரிக்கலாம்;

(இ) எந்த மாநிலத்தின் நிலப்பகுதியையும் -குறைக்கலாம்;

(ஈ) எந்த மாநிலத்தின் –எல்லையையும் மாற்றியமைக்கலாம்;

இதன் காரணமாக பசல் அலியைத் தலைவராகவும், கே.எம்.பணிக்கர் மற்றும் எச்.என். குன்ஸ்ரூ ஆகியோரை உறுப்பினராகவும் கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது அறிக்கையை 1955 அக்டோபரில் சமர்ப்பித்தது. இந்த ஆணையம் பின்வரும்மாநிலங்களைக் கொண்டதே இந்திய யூனியன் என்று வரையறுத்தது. மதராஸ், கேரளம், கர்நாடகம், ஹைதராபாத், ஆந்திரம், பம்பாய், விதர்பா, மத்தியபிரதேசம், இராஜஸ்தான், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், ஒரிசா (ஒடிசா), ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகியவையாகும். வேறுவிதமாகச் சொல்வதெனில் ஆணையத்தின் பரிந்துரைகள் நிர்வாகக் காரணங்கள் மற்றும் மொழிவாரி மாகாண கோரிக்கைகள் ஆகியவற்றிற்கிடையேயான சமாதான நடவடிக்கைகளாக அமைந்தன.

நேரு ஆட்சிக்காலத்தில் மொழிவாரி மாநில மறுசீரமைப்புக் கொள்கை , மாநில மறுசீரமைப்புச் சட்டமாக 1956இல் நிறைவேற்றப்பட்டு உறுதியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஹைதராபாத்தை உள்ளடக்கிய ஆந்திரபிரதேசம் உருவானது. திருவாங்கூர், கொச்சின் அரசு மற்றும் மதராஸ் மாநிலத்தின் மலபார் மாவட்டம் ஆகியவற்றை உள்ளடக்கி கேரளம் உருவானது. மைசூர் அரசு மற்றும் பம்பாய், மதராஸ் மாநிலத்தின் பகுதிகளை உள்ளடக்கி கர்நாடகம் உருவானது. இவை அனைத்திலும் மொழி அடையாளமே மையக் கருத்தாக அமைந்தது.

குஜராத்தி மொழி பேசும் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மே 1960இல் மகாராஷ்டிராவிலிருந்து குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்டது. பஞ்சாபி சபாவால் முன்வைக்கப்பட்ட பஞ்சாப்மாநிலக் கோரிக்கை 1966 வரை பிரிவினை வாதமாகப் பார்க்கப்பட்டு வந்தாலும் 1966இல் பஞ்சாப் மாகாணம் பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம் என 3 மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. இதன் மூலம் 1920இல் இந்திய தேசிய காங்கிரசால் தொடங்கப்பட்ட மொழிவாரி மாகாண சீரமைப்பு முடிவுக்கு வந்தது. 

Tags : Reconstruction of Post-colonial India | History காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு - வரலாறு.
12th History : Chapter 8 : Reconstruction of Post-colonial India : Linguistic Reorganization of States Reconstruction of Post-colonial India | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 8 : காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு : மொழி அடிப்படையில் மாநிலங்களின் மறுசீரமைப்பு - காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 8 : காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு