காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு - வரலாறு - அரசமைப்பு உருவாக்கம் | 12th History : Chapter 8 : Reconstruction of Post-colonial India
அரசமைப்பு உருவாக்கம்
இந்திய அரசமைப்பின் வரைவை இந்தியர்கள் தான்
உருவாக்க வேண்டும்; பிரிட்டிஷ் பாராளுமன்றம் அல்ல என்ற கோரிக்கை இந்திய தேசிய காங்கிரசின்
சார்பாக 1934இல் அதிகாரப்பூர்வமாக எழுப்பப்பட்டது. காலனிய அரசாங்கம் வெளியிட்ட வெள்ளை
அறிக்கையைக் காங்கிரஸ் புறக்கணித்தது. இந்தியர்களே தங்களுக்கான அரசமைப்பை உருவாக்குவார்கள்
என்ற அடிப்படைக் கருத்து 1922லேயே காந்தியடிகளால் முன்வைக்கப்பட்டது. தன்னாட்சி என்பது
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் இந்தியர்களுக்கு வழங்கப்படும் கொடையாக இல்லாமல் இந்தியர்களால்
சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட, இந்தியர்களின் விருப்பத்தை வெளிப்படுத்தும் பிரதிநிதிகளிடமிருந்து
உருவாக வேண்டும் என்று காந்தியடிகள் தெரிவித்திருந்தார்.
இந்திய அரசாங்கச் சட்டம் 1935இன் அடிப்படையில்
ஆகஸ்ட் 1946இல் மாகாண சட்டமன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. மாகாண சட்ட மன்றங்கள்
மத்திய சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுக்க அது அரசமைப்பு நிர்ணய சபையாக செயல்பட்டது.
1946இல் நடைபெற்ற மாகாண தேர்தலில் சொத்துரிமை உரியவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என
இருந்தது. வயது வந்தோர் அனைவருக்குமான வாக்குரிமை என்ற தத்துவம் நடைமுறைக்கு வந்திருக்கவில்லை.
தேர்தல் முடிவுகள் முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகளில் முஸ்லிம் லீக் கட்சிக்கும் மற்ற
இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் செல்வாக்கு இருந்ததை உணர்த்தின. முஸ்லிம்
லீக் அரசமைப்பு உருவாக்கும் நடவடிக்கையிலிருந்து ஒதுங்கியிருந்து தனி நாடு கோரிக்கைக்கு
அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது. காங்கிரஸ் அரசமைப்பு நிர்ணய சபையில் இடம்பெற்றது.
மாகாண சட்டமன்றங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள் அரசமைப்பு நிர்ணய சபைக்கான காங்கிரஸ் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
அரசமைப்பு நிர்ணய சபையில் காங்கிரஸ் (224 இடங்கள்) ஆதிக்கம் செலுத்திய போதிலும் கம்யூனிஸ்டுகளும்
சோஷியலிஸ்டுகளும் குறைந்த எண்ணிக்கையில் இடம்பெற்றிருந்தனர். டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்,
பம்பாயிலிருந்து அரசமைப்பு நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுமாறு பார்த்துக் கொண்ட
காங்கிரஸ் அவரை அரசமைப்பு வரைவுக் குழுவின் தலைவராகவும் தேர்ந்தெடுத்தது. காங்கிரஸ்
தலைமைதன் கட்சியின் வல்லுநர்களோடு புகழ்பெற்ற அரசமைப்பு வழக்கறிஞர்களையும் அரசமைப்பு
நிர்ணய சபையில் இடம் பெறச் செய்தது.
இந்திய தேசிய காங்கிரசால் கராச்சி கூட்டத்தில்
(மார்ச் 1931) நிறைவேற்றப்பட்ட அடிப்படை உரிமைகள் தீர்மானத்தில் இடம் பெற்ற தன்னாட்சி
என்பதன் பொருள் மற்றும் விடுதலைப் போராட்டத்தின் இலக்கியல் (idealism) ஆகியவற்றை அடிப்படையாகக்
கொண்டே இந்திய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் மேற்கண்டவாறு
அரசமைப்பு நிர்ணய சபையை உருவாக்கியது. குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளையும் அரசு கொள்கைகளுக்கான
வழிகாட்டு நெறிமுறைகளையும் நம்பிக்கையுடன் உறுதி செய்யும் ஓர் ஆவணமாக இந்திய அரசமைப்பு
உருவாக்கப்படுவதற்கு இதுவே அடிப்படைக் காரணமாக அமைந்தது. இந்திய அரசமைப்பு இந்திய நாட்டிற்குச்
சுதந்திரமான தேர்தல் ஆணையத்தையும் வயதுவந்தோர் அனைவருக்குமான வாக்குரிமையையும் உறுதி
செய்தது. மேலும், இந்திய அரசமைப்பு மக்கள் பிரதிநிதிகளுக்குச் சட்டம் இயற்றுவதில் இறையாண்மையை
உறுதிபடுத்திய அதே அளவுக்கு நீதித்துறையின் சுதந்திரத் தன்மையையும் உறுதி செய்தது.
அரசமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினர்கள் உலகின்
பல்வேறு அரசமைப்புகளின் அம்சங்களைக் கற்றுக் கொள்வதிலும் அவற்றை இந்திய அரசமைப்பு உருவாக்கத்திற்கு
பயன்படுத்திக் கொள்வதிலும் எவ்வித தயக்கமும் காட்டவில்லை . அதே சமயத்தில் இந்திய அரசமைப்பு
உருவாக்கம் என்பது பிற உலக நாடுகளின் அரசமைப்புகளைப் பார்த்து அப்படியே எழுதிவிடும்
பணி அல்ல என்பதிலும் தெளிவாக இருந்தனர்.
1946, டிசம்பர் 13 அன்று ஜவகர்லால் நேரு இந்திய
அரசமைப்புக்கான குறிக்கோள் தீர்மானத்தை அரசமைப்பு நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தினார்.
அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் 1946 டிசம்பர் 9இல் நடைபெற்றது. இராஜேந்திர
பிரசாத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேரு அறிமுகப்படுத்திய குறிக்கோள் தீர்மானம்
இந்திய அரசமைப்பின் உணர்வு மற்றும் உள்ளடக்கத்திற்கானமிகச்சுருக்கமான அறிமுகமாக அமைந்தது.
சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானத்தின் முக்கியத்துவத்தை இந்திய அரசமைப்பின்
முகப்புரை, அடிப்படை உரிமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் ஆகியவற்றைப் பார்த்துப்
புரிந்து கொள்ளலாம். இந்திய அரசமைப்பு 1949 நவம்பர் 26இல் அரசமைப்பு நிர்ணய சபையால்
ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்திய அரசமைப்பு, இந்தியாவிற்கான ஒரு புதிய
விடியலை உருவாக்கியதோடு இந்திய தொன்மையின் தொடர்ச்சியையும் நிறுவியது. அடிப்படை உரிமைகள்
குறிக்கோள் தீர்மானத்தின் ஐந்தாம் பிரிவிலிருந்து உருவாக்கப்பட்டன. அதேபோல், இந்திய
தேசிய காங்கிரசின் கராச்சி கூட்டத்தில் (பாடம் - 5இல் குறிப்பிடப்பட்டுள்ளது) பட்டியலிடப்பட்ட
உரிமைகளும், இதற்கு மூலங்களாய் அமைந்தன. இந்திய அரசமைப்பின் உ ணர்வு (The spirit
of the Constitution) சுதந்திரப் போரின் அனுபவத்திலிருந்து பெறப்பட்டதாகும். அதே போல்,
அரசைமைப்பின் சட்டமொழி குறிக்கோள் தீர்மானத்திலிருந்தும் அதைவிட மிக முக்கியமாக ஐக்கிய
நாடுகள் சபை 1948 டிசம்பர் 10இல் வெளியிட்ட அனைத்துலக மனித உரிமைகள் பேரறிக்கையிலிருந்தும்
எடுக்கப்பட்டது.