Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | சுதேச அரசுகளின் இணைப்பு

காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு - வரலாறு - சுதேச அரசுகளின் இணைப்பு | 12th History : Chapter 8 : Reconstruction of Post-colonial India

   Posted On :  09.07.2022 10:14 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 8 : காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு

சுதேச அரசுகளின் இணைப்பு

இந்திய அரசமைப்பு 1949 நவம்பர் 26இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிகழ்வைப் புதிதாய் பிறந்த தேசத்தின் துணிச்சலான புதிய பரிசோதனையின் தொடக்கம் எனலாம்.

சுதேச அரசுகளின் இணைப்பு

இந்திய அரசமைப்பு 1949 நவம்பர் 26இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிகழ்வைப் புதிதாய் பிறந்த தேசத்தின் துணிச்சலான புதிய பரிசோதனையின் தொடக்கம் எனலாம். இந்திய அரசமைப்பு நிர்ணய சபை ஏற்படுத்தப்பட்டு சுதந்திர இந்தியாவிற்கான அரசமைப்பு வரைவுப்பணி தொடங்கியபோதே தேசமும் அதன் தலைவர்களும் எதிர்கொள்ள வேண்டிய புதிய சவால்களாக இருந்தன. அவற்றுள், இந்தியப் பகுதிகள் அல்லது சுதேச அரசுகளை ஒன்றிணைப்பது முக்கியமானதாக இருந்தது.


சுதேசஅரசுகளை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும் பணி 1947 ஆகஸ்ட் 15 க்குள் விரைவாக முடிக்கப்பட்டது. காஷ்மீர், ஜுனாகத், ஹைதராபாத் ஆகியவற்றைத் தவிர மற்ற சுதேசஅரசுகள் அனைத்தும் இணைப்புறுதி ஆவணத்தில் (Instrument of Accession) கையெழுத்திட்டு பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பில் இந்தியாவின் மைய ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டன.

இந்தியாவின் ஏதேனும் ஒரு மாகாணத்தோடு சுதேசஅரசுகளை ஒருங்கிணைக்கும் பணி எளிதாகச் செய்துமுடிக்கப்பட்டது. டிசம்பர் 1945 மற்றும் ஏப்ரல் 1947 ஆகிய மாதங்களில் நடைபெற்ற அனைத்திந்திய மாநில மக்கள் மாநாட்டில், இந்திய அரசமைப்பு நிர்ணய சபையோடு இணைய மறுக்கும் மாநிலங்கள் இந்திய ஒன்றியத்தின் எதிரியாகக் கருதப்படும் என்ற அச்சுறுத்தலான அறிவிப்பே பல சுதேசஅரசுகள் இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டு இந்தியாவோடு இணைக்கப் போதுமானதாக இருந்தது. மேலும், இந்திய ஒன்றியத்தோடு இணையும் சுதேச மன்னர்களுக்குத் தாராளமாக மன்னர் மானியங்களும் (Privy Purse to the Princes) வழங்கப்பட்டன. சுதேசஅரசுகளை இந்தியாவோடு நிறைவாக இணைக்கும் பணியை அப்போதைய இடைக்கால அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் மாநில நிர்வாகங்களுக்கான அமைச்சராகவும் இருந்த சர்தார் வல்லபாய் படேல் திறம்பட செய்து முடித்தார். சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்தோடு இணைப்பதற்கான உரிய அழுத்தத்தைக் கொடுத்ததில் மக்கள் இயக்கங்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு.

சுதேச அரசுகளின் இணைப்பில் முக்கியப் பங்கு வகித்த போராட்டங்களாக மூன்று போராட்டங்களைக் குறிப்பிடலாம். திருவாங்கூர் மாநிலத்தின் பொறுப்பரசாங்கம் வேண்டி அந்த மாநிலத்தின் திவான் ஆகிய சி.பி. இராமசாமியை எதிர்த்து நடத்தப்பட்ட புன்னப்புரா - வயலார் ஆயுதப் போராட்டம் முக்கியமானது. இன்னொரு முக்கியமான போராட்டம் பிரஜா மண்டல் மற்றும் ஒடிசாவில் நடந்த பழங்குடியினர் கிளர்ச்சிகள் (நீலகிரி, தெங்கனால் மற்றும் தல்சர்) இந்தியாவில் நடந்த இரண்டாவது முக்கிய சுதேச எதிர்ப்புப் போராட்டம் ஆகும். மைசூர் மகாராஜாவிற்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் நடத்திய போராட்டங்களும் இந்திய சுதேச அரசுகளின் இணைப்புக்கு முக்கியப் பங்காற்றின.

இணைப்புறுதி ஆவணம்: இந்திய அரசாங்கச் சட்டம் 1935 கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வமான ஆவணம் ஆகும். இந்த ஆவணமே பிரிவினையின்போது இந்திய சுதேச அரசர்கள், இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய ஏதேனும் ஒரு நாட்டுடன் இணைவதற்கான ஒப்பந்தமாகவும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

ஹைதராபாத் நிஜாம் இந்திய ஆளுகைக்கு கீழ்ப்படிய மறுத்து, அவர் ஹைதராபாத் அரசை சுதந்திர அரசு என்று அறிவித்தார். ஜுனாகத் அரசர் மக்கள் விருப்பத்திற்கு எதிராக பாகிஸ்தானுடன் சேர விரும்பினார். இதே போல், காஷ்மீரின் இந்து அரசரான மகாராஜா ஹரிசிங் காஷ்மீர் சுதந்திர அரசாக இருக்குமென்று அறிவித்த போது அந்நாட்டு மக்கள் தேசிய மாநாட்டுத் தலைமையில் காஷ்மீரைவிட்டு வெளியேறுங்கள்' என்ற போராட்டத்தை அரசருக்கெதிராக தொடங்கினர். காஷ்மீரிலும் பிற சுதேசஅரசுகளிலும் தோன்றிய இயக்கங்கள் நிலப்பிரபுத்துவத்தின் நலிவு மற்றும் அங்கு நிலவிய சமூகஉறவுகளுக்கு எதிரானவையாகும்.

ஹைதராபாத் நிஜாம் விடுதலைப் பிரகடனம் செய்த 48 மணிநேரத்திற்குள் இந்தியா அங்கு காவல்துறை நடவடிக்கைகளைத் தொடர்ந்தது. ஹைதராபாத் நிஜாம் மற்றும் அவரது இராணுவமான இரசாக்கர்கள் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தித் தெலங்கானா மக்கள் இயக்கத்தை கம்யூனிஸ்டுகள் வழிநடத்தினர் இதன் காரணமாக ஹைதராபாத் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதற்குச் சட்டப்பூர்வமான காரணம் வாய்த்தது எனலாம்.


1946 முதலே படேல் காஷ்மீர் மகாராஜாவோடு பேச்சு வார்த்தை நடத்தி வந்த போதிலும், காஷ்மீர் அரசர் ஹரிசிங் இந்தியாவோடு இணைய மறுத்துவந்தார். எனினும், இந்திய விடுதலைக்குச் சில மாதங்களுக்குப்" பின் (அக்டோபர் 1947) பாகிஸ்தானியர்கள் சிலர் காஷ்மீரைச் சூறையாடிய போது மகாராஜா ஹரிசிங்கால் அந்த நடவடிக்கையைத் தடுக்க முடியவில்லை . காஷ்மீர் அரசருக்கு உதவுவதற்காக, இந்திய இராணுவம் அனுப்பப்படுவதற்கு முன் காஷ்மீர் அரசர் இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதில் படேல் உறுதியாக இருந்தார். இதன் விளைவாக, காஷ்மீர் சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியானது. இந்த நிகழ்வின் போது தலைவர்கள் காஷ்மீர் மக்களுக்கு அளித்த உறுதி மொழிகளும் காஷ்மீர் மக்கள் மீதான அக்கறையும் அரசமைப்பு நிர்ணய சபையை ஜம்மு காஷ்மீருக்கு இந்திய அரசமைப்பின் உறுப்பு 370இன் படி தனி அந்தஸ்து வழங்கக் காரணமாயின.


Tags : Reconstruction of Post-colonial India | History காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு - வரலாறு.
12th History : Chapter 8 : Reconstruction of Post-colonial India : Merger of Princely States Reconstruction of Post-colonial India | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 8 : காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு : சுதேச அரசுகளின் இணைப்பு - காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 8 : காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு