Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | தொழிற்புரட்சி

புரட்சிகளின் காலம் - வரலாறு - தொழிற்புரட்சி | 12th History : Chapter 11 : The Age of Revolutions

   Posted On :  12.07.2022 03:06 am

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 11 : புரட்சிகளின் காலம்

தொழிற்புரட்சி

பிரெஞ்சுப் புரட்சியின் பின்விளைவில், நெப்போலியன் பிணையப்பணம் பெறுவதற்காக ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் தன்வசம் வைத்திருந்த போது, மனிதகுல வரலாற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதை தனது விதியாகக் கொண்ட மற்றொரு புரட்சி இங்கிலாந்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதுவே தொழிற்புரட்சியாகும்

தொழிற்புரட்சி

பிரெஞ்சுப் புரட்சியின் பின்விளைவில், நெப்போலியன் பிணையப்பணம் பெறுவதற்காக ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் தன்வசம் வைத்திருந்த போது, மனிதகுல வரலாற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதை தனது விதியாகக் கொண்ட மற்றொரு புரட்சி இங்கிலாந்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதுவே தொழிற்புரட்சியாகும். தொழிற்புரட்சி என்பது பெருமளவிலான பொருட்களை மிகப்பெரும் ஆலைகளில் உற்பத்தி செய்யும் முறையைப் பின்பற்றுதலைக் குறிக்கிறது. இது கைவினைஞர்களின் குடிசைத் தொழிற்கூடங்களிலோ அல்லது பட்டறைகளிலோ பொருட்களைத் தயாரிப்பது எனும் பழைய முறைக்கு எதிரானது.

பருத்தித் தொழிற்சாலைகளில் புரட்சியை ஏற்படுத்திய சில முக்கியமான கண்டுபிடிப்புகளின் தோற்றமே தொழிற்புரட்சியின் முதல் கட்டமாகும். நீராவியின் பயன்பாடானது நிலக்கரியைப் பயன்படுத்தி இரும்பை உருக்கும் பழைய முறையைக் கைவிடச் செய்தது. நிலக்கரி, இரும்புத் தொழிற்சாலைகள் மிக வேகமாக வளர்ந்தன. பின்பு செய்திப் பரிமாற்றத்திற்கான வழிவகைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. இடம் விட்டு இடம் செல்லக்கூடிய முதல் பயணிகள் ரயில் (1830), நீராவிப்படகு, மின்சாரத் தந்தியின் பயன்பாடு (1835) ஆகியவை நடைமுறைக்கு வந்தன. ஒரு நூறாண்டு காலத்தில் இங்கிலாந்து முற்றிலுமாக மாற்றப்பட்டது. 

இரண்டாவது தொழிற்புரட்சியானது (18701914) எஃகு உற்பத்தியிலும் பெட்ரோலியம், மின்சாரம் ஆகிய துறைகளிலும் புதிய முறைகளை எதிர்கொண்டது. ஒட்டுமொத்த ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் இக்காலப்பகுதியில் முதல் கட்டத் தொழிற்புரட்சியின் தாக்கத்தினை உணரத் தொடங்கின.

 

சிறப்புக் கூறுகள்

தொழிற்புரட்சியின் இன்றியமையாத கூறு, அறிவியல் தொழிலில் புகுத்தப்பட்டதுதான். இரும்பு, எஃகு ஆகியவற்றின் பயன்பாடு நிலக்கரி மற்றும் நீராவி போன்ற ஆற்றலுக்கான புதிய மூலப்பொருட்களின் பயன்பாடு, உற்பத்தியை அதிகரிக்கச்செய்த புதிய இயந்திரங்களின் கண்டுபிடிப்பு, ஆலைமுறை என்றழைக்கப்பட்ட வேலைகளை ஒழுங்கு செய்த புதியமுறைகள் ஆலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலை பிரிவினை, சிறப்புத் தொழிற்திறன் முறைகள், போக்குவரத்திலும் செய்தித் தொடர்புகளிலும் ஏற்பட்ட முன்னேற்றங்கள் ஆகியவை பேரளவிலான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதை சாத்தியமாக்கியது.

 

இங்கிலாந்தில் தொழிற்புரட்சி ஏற்பட்டதற்கான காரணங்கள்

பல்வேறு காரணங்களினால் தொழிற்புரட்சி முதன் முதலாக இங்கிலாந்தில் தொடங்கியது.

அ) வணிகப்புரட்சியின் தாக்கம்: வியாபார, வணிகத் துறைகளில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்கள், முதலாளிகள் எனும் புதிய வர்க்கத்தை உருவாக்கியது. இவர்கள் தங்களிடமிருந்த உபரிச் செல்வத்தை முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து தேடினர். இதன் விளைவாக உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடு தாராளமாக கிடைத்தது.

ஆ) கடல் கடந்து காலனிகளை உருவாக்கும் போட்டியில் இங்கிலாந்து தாமதமாக இணைந்தாலும், காலப்போக்கில் இங்கிலாந்து மேலாதிக்கம் பெற்றது. ஸ்பெயின், போர்த்துகல், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய சக்திகளை அது தோற்கடித்தது. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகின் நான்கில் ஒரு பகுதி இங்கிலாந்தின் காலனிகளாக இருந்தது. அது உலக மக்கள் தொகையில் 25 விழுக்காட்டு மக்களை (ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா) ஆட்சி செய்தது. இதனால் இக்காலனி நாடுகளில் ஆலைப்பொருட்களுக்கான தேவை வளர்ந்து கொண்டேயிருந்தது.

இ) இங்கிலாந்தில் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்றவாறு சந்தைகளும் விரிவடைந்தன. 1600இல் நான்கு மில்லியன்களாக இருந்த இங்கிலாந்தின் மக்கள்தொகை 1700இல் ஆறு மில்லியன்களாகவும் பதினெட்டாம் நூற்றாண்டின் முடிவில் ஒன்பது மில்லியன்களாகவும் பெருகியது.

ஈ) பல்வேறு காலனிகளின் குறிப்பாக இந்தியாவின் செல்வங்கள் சுரண்டப்பட்டு இங்கிலாந்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. அதனால் தொழிற்சாலைகளில் முதலீடு செய்யத் தேவையான மூலதனம் தாராளமாகக் கிடைத்தது.

உ) ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்து மிகவும் தாராளத்தன்மை கொண்ட நாடாக இருந்தது. அதன் அரசியல் உறுதித்தன்மை தொழில்களின் வளர்ச்சிக்குச் சாதகமான சூழலை உருவாக்கியது.

ஊ) நிலக்கரி, இரும்பு போன்ற மூல வளங்கள் இங்கிலாந்தில் அதிக அளவில் கிடைத்ததென்பது தொழிற் வளர்ச்சிக்கு மற்றுமொரு காரணமாகும். 1800இல் இங்கிலாந்து பத்து மில்லியன் டன் நிலக்கரியை அல்லது உலகின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் 90 விழுக்காட்டினை உற்பத்தி செய்தது.

எ) தொழிற்புரட்சிக்கு முன்பு வேளாண்மையிலும் இங்கிலாந்து விரைவான முன்னேற்றத்தைப் பதிவு செய்திருந்தது. இயந்திரமயமாக்கலின் மூலமாக அதிக அளவிலான நிலங்கள் வேளாண்மையின் கீழ் கொண்டுவரப்பட்டன. செல்வச் செழிப்புமிக்க நில உரிமையாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் சிறிய அளவிலான நிலங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பெரும் பண்ணைகளாக மாற்றப்பட்டன. புதிய வேளாண்மைத் தொழில் நுட்பங்களுடன் பயிர் சுழற்சி முறையும் அறிமுகமானதால் வேளாண் உற்பத்தி அதிகமானது. ஆனால் இது விவசாயத் தொழிலாளர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டத்தை ஏற்படுத்தியது. அனைத்தும் இழந்து திவாலாகிப்போன விவசாயிகள் நகரங்களுக்குக் குடிபெயர்ந்தனர். பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து இவ்வாறு சென்றவர்களே பல்வேறு தொழிற்சாலைகளுக்குப் பெருமளவிலான உழைப்பாற்றலை வழங்குவோராய் இருந்தனர்.

ஏ) தனது கடற்கரைப்பகுதி முழுவதிலும் இங்கிலாந்து சிறப்பாக நிறுவப்பட்டிருந்த துறைமுகங்களைக் கொண்டிருந்தது. அது உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வணிகத்தை எளிதாக்கியது.

ஐ) நிலப்பகுதியிலிருந்து சற்றே தொலைவில் அமைந்திருந்த இங்கிலாந்தின் புவியியல் அமைவிடமும், அந்நியர் படையெடுப்புகளிலிருந்து சற்றே பாதுகாப்பாக அமைந்திருந்தமையும் தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு மற்றுமொரு காரணமாக அமைந்தது.

ஒ) இங்கிலாந்துத் தீவுகளில் நிலவிய மிதமான தட்பவெப்பநிலை பருத்தியிழைத் துணி உற்பத்திக்கு உகந்ததாக இருந்தது.

 

தொழிற்புரட்சி காலத்தைய முக்கியக் கண்டுபிடிப்புகள்

தொழிற்சாலை அமைப்பு

தொழிற்புரட்சிக்கு முன்னர் பொருள்களின் உற்பத்தியானது தொழிற்கூடங்களிலோ அல்லது தொழிலாளர்களின் குடிசைகளிலோ நடைபெற்றது. மண்பாண்டத்தொழில் செய்வோர், சக்கரங்கள் தயாரிப்போர், வண்டிகள் செய்வோர், நூற்போர், நெசவு செய்வோர் தங்களின் திறன்களையும் வலுவையும் கொண்டு விரும்பிய பொருட்களை உற்பத்தி செய்தனர். புதிய கண்டுபிடிப்புகளின் வருகைக்குப் பின்னர் இப்பணிகளை இயந்திரங்கள் செய்தன. இயந்திரங்களைக் குறிப்பிட்ட இடைவெளிகளில் இயக்குவதற்கு தனித்திறன் பெற்ற அல்லது ஓரளவு திறன் பெற்ற தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். தொழிற்சாலைகள் பெருமளவிலான பொருட்களை உற்பத்தி செய்யுமிடமாயிற்று.

பருத்தித் தொழிற்சாலைகள்

பருத்தித் தொழிலில் தான் முதன்முதலாக தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. நூற்பு இயந்திரம், நூற்புச் சட்டகம், பறக்கும் நாடா, கிராம்டன் மியூல் எனும் நூற்கும் இயந்திரம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதின் காரணமாக இது சாத்தியமாயிற்று. பறக்கும் நாடா 1733இல் ஜான் கே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்புக்கு முன்னர் நெசவு செய்பவர் தனது கையிலிருக்கும் நாடாவிலுள்ள நூலை, தனக்கு முன்பாக நீளவாக்கில் இருக்கும் நூல்களுக்கிடையே (பாவு) மெதுவாகச் செலுத்தி எடுக்க வேண்டும். பறக்கும் நாடா கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இப்பணி வேகமாக நடைபெற்று நெசவு செய்பவரின் உற்பத்தி இருமடங்காயிற்று. 1764இல் ஸ்பின்னிங் ஜென்னி எனும் நூற்பு இயந்திரம் ஜேம்ஸ் ஹார்கிரீவ்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பாரம்பரிய முறையின்படி ஒரே ஒரு இழையை மட்டுமே நூற்க இயலும். ஆனால் இந்த இயந்திரம் ஒரே நேரத்தில் எட்டு இழைகளைப் பின்னி நூற்றது. ரிச்சர்டு ஆர்க்ரைட் என்பவரால் 1769இல் உருவாக்கப்பட்ட நீர்ச்சட்டகம் என்ற இயந்திரத்தால் ஒரே சமயத்தில் 128 நூல்களை நூற்க முடிந்தது. ஸ்பின்னிங் ஜென்னியையும் நீர்ச்சட்டகத்தையும் இணைத்து சாமுவெல் கிராம்டன் மியூல் எனும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.இவ்வியந்திரத்தின் மூலம் நெசவுமுறையைப் பெருமளவில் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடிந்ததோடு ஒரே நேரத்தில் பல்வகைப்பட்ட நூல்களையும் நூற்க முடிந்தது.


இங்கிலாந்து 1700இல் 500 டன் பருத்தியை மட்டுமே இறக்குமதி செய்தது. நூற்றல், நெசவு செய்தல் ஆகியவற்றில் புதிய கண்டுபிடிப்புகள் செய்யப்பட்டதோடு, ஜவுளியானது ஆலைகளில் அதிகமாக உற்பத்தியானதைத் தொடர்ந்து கச்சாப் பருத்திக்கான தேவை வியப்பூட்டும் அளவுக்கு உயர்ந்தது. 1860 முதல் ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்து 5,00,000 டன் பருத்தியை இறக்குமதி செய்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தின் ஜவுளித் தொழிற்சாலைகளின் மையமான மான்செஸ்டர் காட்டன் பொலிஸ் எனும் புனைப்பெயரைப் பெற்றது.

இரும்புத் தொழிற்சாலைகள்

பாரம்பரியமாக இரும்பானது இரும்புத் தாதுவை காய்ச்சி உருக்கி வடித்தெடுக்கப்பட்டது. இதற்குப் பெருமளவிலான கரி தேவைப்பட்டது. கரி விறகினை எரிப்பதன் மூலம் பெறப்பட்டது. 1700 வாக்கில் காடுகள் அழிக்கப்பட்டதன் விளைவாக கரி உற்பத்திக்கான மூலப்பொருள் வெகுவாகக் குறைந்தது. 1709இல் இங்கிலாந்தால் இப்பிரச்சனையை ஓரளவு தீர்க்க முடிந்தது. அப்போது ஆபிரகாம் டர்பி எனும் டெர்பிஷயரைச் சேர்ந்த நிலக்கரிச் சுரங்க உரிமையாளர் இரும்புத்தாதுவை உருவாக்குவதற்கு நிலக்கரியைப் பயன்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்தார். ஆனால் சுரங்கங்களில் நிறைந்துவிடும் நீர் நிலக்கரியை எடுப்பதற்கு முக்கியத்தடையாய் இருந்தது. 1712இல் முதன் முதலாக தாமஸ் நியூ கோமென் நிலக்கரிச் சுரங்களிலிருந்து நீரை வெளியேற்றுவதற்கு நீர் ஏற்றும் இயந்திரத்தை உருவாக்கினார். 1769இல் ஜேம்ஸ்வாட் இதை மேலும் மேம்படுத்தினார். அவரும் தொழில் முனைவோராய் இருந்த மாத்யூ பவுல்ட்டனும் இணைந்து 500 நீராவி இயந்திரங்களைத் தயாரித்தனர். அவைகள் புதிய தொழிற்சாலைகளுக்குத் தேவையான ஆற்றலை விநியோகம் செய்ய பயன்பட்டன. ஆற்றல் மூலம் இயக்கப்படும் இயந்திரங்களின் வருகையோடு ஆலைமுறையானது விரிவான அளவில் ஏற்றம் பெற்றது.


நிலக்கரி புகையற்றது. மேலும் கரியைக் காட்டிலும் அதிக வெப்பத்தைத் தரவல்லது. இதன் காரணமாக இரும்புத் தொழிற்சாலைகள் நிலக்கரிச் சுரங்கங்களின் அருகே அமைக்கப்பட்டன. அதிக அளவிலான இரும்பு உற்பத்தியால் வீட்டு உபயோகப் பொருட்களான கரண்டிகள், தட்டுகள் ஆகியன இரும்பினாலே செய்யப்பட்டன. ஆலைகளும்கூட வலுவான இரும்பு தூண்களையும் சட்டங்களையும் பயன்படுத்திக் கட்டப்பட்டன.

மிகப்பெரும் கட்டுமானங்களில் இரும்பு பயன்படுத்தப்படுவதைக் கண்டு ஈர்ப்புக்குள்ளான பிரெஞ்சுக்காரர்கள் 1889இல் 324 மீட்டர் உயரமுள்ள ஈபில் கோபுரத்தை (Eiffel Tower) பாரிசில் எழுப்பினர்.

நீராவி இயந்திரங்கள்

நீராவி இயந்திரங்களுக்கு முன்னதாகவே நீராவிப்படகானது போக்குவரத்து சாதனமாக இயங்கின. 1802இல் கிளைடு கால்வாயின் கழிமுகத்தில் ஒரு நீராவிப்படகு இயங்கியது. 1804இல் முதல் ரயில் என்ஜின் உருவாக்கப்பட்டது. 1830இல் லிவர்பூலுக்கும் மான்செஸ்டருக்கும் இடையே இருப்புப்பாதை திறக்கப்பட்டது. ஜார்ஜ் ஸ்டீபன்சன்னுடைய ராக்கெட் என்ற ரயில் என்ஜின் ஒரு மணி நேரத்தில் முப்பது மைல்களுக்கும் மேலான வேகத்தில் இயங்கியது. அக்காலத்தில் இது கற்பனை செய்து பார்க்கமுடியாத ஒன்றாகும்.


1807இல் ராபர்ட் புல்டன் எனும் அமெரிக்கர் முதல் வெற்றிகரமான நீராவிப்படகினை உருவாக்கினார். 1838 ஏப்ரலில் சைரஸ், கிரேட் வெஸ்டர்ன் எனும் முதல் நீராவிக்கப்பல்கள் அட்லாண்டிக் கடலைக் கடந்தன. ஆங்கிலேயப் பொறியாளரான இசாம்பார்டு கிங்டம் புருனல் 1843இல் "SS கிரேட் பிரிட்டன்" என்ற முழுவதும் இரும்பினால் செய்யப்பட்ட கப்பலை உருவாக்கினார். இக்கப்பல் சுழல்விசை இயக்கத்தின் மூலம் முன்னோக்கிச் செலுத்தப்பட்டது. இதற்கு முன்னர் சுழல் விசைக்குப் பதிலாக துடுப்புச் சக்கரங்களே பயன்படுத்தப்பட்டன.

சாலைகள்

உற்பத்தியின் பெருக்கத்தைத் தொடர்ந்து நல்ல சாலைகளைப் பெற்றிருப்பது முக்கியமாயிற்று. ஆனால் சாலைகள் மோசமாக இருந்ததால் பயண நேரம் அதிகமானதோடு பெருமளவு முயற்சியும் தேவைப்பட்டது. மிகப்பெரும் தொழிலதிபர்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகச் சாலைகளைப் பராமரிப்பதற்கென ஆட்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் சாலைகளை சரியாகப் பராமரிப்பதற்காக மக்களிடமிருந்து சாலைவரி வசூலித்தனர். ஜான் லவுடன் மெக்காடம் என்பவர்தான் குறைந்த செலவில் வலுவான சாலைகள் அமைக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.

மெக்காடமயமாக்குதல் என்பது உடைக்கப்பட்ட கற்களைப் பரப்பி அதன் மேல் அடுத்தடுத்த அடுக்குகளாகக் கற்களைப் பரப்பி அதன்மேல் உருக்கப்பட்ட தாரை ஊற்றுவதாகும்.


1835இல் முதல் மின் தந்திமுறை நடைமுறைக்கு வந்தது. பதினாறு ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலாந்திற்கும் பிரான்சுக்குமிடையே கடலடித் தந்தி வடம் அமைக்கப்பட்டது. ஒரு சில ஆண்டுகளில் தந்தி முறை உலகம் முழுவதும் பரவியது. மிகப்பெரும் வடிவத்தாலான புகை போக்கிகளைக் கொண்ட நவீன ஆலைகள் மான்செஸ்டர், லங்காஷயர், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ ஆகிய நகரங்களின் நிலப்பரப்பை ஆக்கிரமித்தன. 1750இல் இங்கிலாந்தில் உள்ள லண்டன், எடின்பர்க் ஆகிய இருநகரங்களில் 50,000த்திற்கும் அதிகமான மக்கள் வசித்தனர். 1851இல் இதைப்போன்ற நகரங்களின் எண்ணிக்கை 29 ஆனது.



தொழிற்புரட்சியின் இரண்டாம் கட்டம்: ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும்

தொழிற்புரட்சியின் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்த அரிய கண்டுபிடிப்புகளில் பெருபான்மையானவை தனிப்பட்ட கண்டுபிடிப்பாளரின் மூளையில் இருந்து உதிக்காமல் இயற்பியல் வேதியியல் ஆய்வாளர்களின் பரிசோதனைச் சாலைகளிலிருந்து வெளிவந்தன. தானியங்கி எந்திரங்களின் அறிமுகம், பேரளவு உற்பத்தியின் பெருமளவுப் பெருக்கம், உற்பத்திச் செயல்பாட்டில் மிக நுண்ணிய அளவிலான வேலைப் பிரிவினை ஆகியவை இரண்டாம் கட்டத் தொழிற்புரட்சியின் ஏனைய இன்றியமையாக் கூறுகளாகும்.

பதினெட்டாம் நூற்றாண்டு முழுவதிலும் மேற்கு ஐரோப்பாவில் சீரான தொழில் வளர்ச்சியும் பெருமளவிலான வணிக நடவடிக்கையும் ஏற்பட்டன. வங்கித் தொழிலின் வளர்ச்சியும், சாலைகள், கால்வாய்கள் என உள்நாட்டுப் போக்குவரத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களும் இதற்குச் சான்றுகளாகும். பிரான்சிலும் பிரஷ்யாவிலும் அரசின் ஆதரவில் ஆலைகள் இருந்தன. லெ குருசாட்டில் அமைந்திருந்த கண்ணாடித் தொழிற்சாலையும், சைலீசியாவின் பட்டு உற்பத்தியும் மிக முக்கியமானவை. ஐரோப்பியக் கண்டத்தின் வணிக, தொழில் முன்னேற்றம் நெப்போலியனின் போர்களால் தடைப்பட்டது. அமைதி ஏற்பட்ட பின்னர் இங்கிலாந்தின் இயந்திரங்கள் பிரான்சிலும் ஜெர்மனியிலும் மிகச் சுதந்திரமாக அறிமுகமாயின. நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் வந்த முப்பது ஆண்டுகளில் மேற்கு ஐரோப்பா முழுவதிலும் நீராவி ஆற்றல் மிக விரைவாகப் பயன்பாட்டிற்கு வந்தது. 1847காலப்பகுதியில் பாரிஸ், லியான்ஸ், மார்சிலெஸ், போர்டியாக்ஸ், தெளலௌஸ் போன்ற பிரான்சின் நகரங்களில் மிகப்பெரும் ஆலைகள் உருவாயின. ஆங்கிலேய அறிவியல் அறிஞரான மைக்கேல் பாரடே மின்சாரத்தைக் கண்டறிந்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தான் கண்டுபிடித்த எரியும் மின்சார பல்புகளை வீடுகளில் பயன்படுமாறு மேம்படுத்தினார். இதனால் 1870களில் மின்விசை உற்பத்திக் கருவிகள் உருவாக்கப்பட்டன. அதனால் மின்சாரம் பொதுப்பயன்பாட்டிற்கு வருவது சாத்தியமானது.

ஜெர்மனியில் பிரஷ்யாவின் தலைமையில் செயல்பட்ட நாடுகள் செய்தொழில்களிலும் தொழில் உற்பத்தியிலும் இங்கிலாந்தின் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தின. சுதந்திர வணிகத்தைப் பொதுக் கொள்கையாகக் கொண்ட, நாடுகள் அங்கம் வகிக்கும் ஸோல்வரெய்ன் எனும் அமைப்பு பிரஷ்யாவில் உருவாக்கப்பட்டது. இதனால் சுங்கச் சாவடிகள் அகற்றப்பட்டன.

 

1871இல் ஜெர்மனி இணைக்கப்பட்டது வேகமான தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டது. மின்சாரத்தின் கண்டுபிடிப்பும் பயன்பாடும் அத்துடன் ருடால்ப் டீசல் கண்டுபிடித்த டீசல் என்ஜினும் சேர்ந்து ஜெர்மனியை ஐரோப்பியாவில் மோட்டார்வாகன உற்பத்தியின் தலைமை வகிக்கும் நாடாக மாற்றியது. டெய்ம்லர், பென்ஸ் ஆகிய இரு மோட்டார் வாகனங்கள் ஜெர்மனியிலும், உலகத்திலும் பிரபலமான அடையாளச் சின்னங்களாயின. ஜெர்மனி இரும்பு எஃகுத் தொழிலில் தனது முத்திரையைப் பதித்தது. வேளாண்மையில் ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதற்கும், ஜவுளி ஆலைகளில் சாயம் பயன்படுத்தப்படுவதற்கும், மின்சார சாதனங்கள் உற்பத்தியிலும் ஜெர்மனி தனது பங்களிப்பைச் செய்தது.


பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஜெர்மனி, மிகப் பெருமளவில் தொழில்மயமான நாடாக உருவானது. தொழிற்புரட்சியின் தாயகமான இங்கிலாந்தை மிஞ்சி அமெரிக்காவின் போட்டியாளராகத் தன்னை நிலைநாட்டியது. மின்சாரத்தில் ஜெர்மனியின் சீமன்ஸ் போன்ற நிறுவனங்கள் ஏனைய நாடுகளில் இருந்த தங்களைப் போன்ற நிறுவனங்களைக் காட்டிலும் மேம்பட்டவைகளாகத் திகழ்ந்தன. வேதியியலில் பொட்டாசியம் உப்பு தயாரிப்பு, சாயம், மருத்துவப் பொருட்கள் உற்பத்தி, செயற்கை பொருட்கள் ஆகியவற்றில் ஜெர்மனி முன்னணி வகித்தது. பேயர், ஹோசெட் போன்ற நிறுவனங்கள் ஜெர்மனியின் இரசாயனத் தொழிலுக்குத் தலைமை தாங்கின.


அமெரிக்காவில் தொழிற்புரட்சி

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் பெருமளவில் ஒரு விவசாய நாடாகவே விளங்கிற்று. காலனிகளின் எண்ணிக்கை அதிகமானதற்கு ஏற்றவாறு மக்கள் தொகையும் பெருகியது. ஆலையை இயக்குவதில் அனுபவம் பெற்றிருந்த குடிமகனான சாமுவெல் சிலேட்டர் அமெரிக்காவின் ரோட் ஐலென்டைச் சேர்ந்த தொழில் அதிபரும், ஏற்கனவே ஒரு ஆலையை இயக்குவதில் வெற்றிபெற முடியாமல் இருந்தவருமான மோசஸ் பிரவன் என்பவருடன் இணைந்து பணி செய்ய விரும்பினார். பிரவுனும் அதற்கு இசைந்ததன் விளைவாக அவ்வாலை 1793இல் செயல்படத் துவங்கியது. அதுவே அமெரிக்காவின் நீர் உருளையால் இயக்கப்பட்ட முதல் ஜவுளி ஆலையாகும். 1800இல் தொழில் முனைவோர் பலர் சிலேட்டரின் ஆலையைப் போன்றே பல ஆலைகளை உருவாக்கினர். அமெரிக்க குடியரசுத்தலைவரான ஆண்ட்ரூ ஜேக்சன், சிலேட்டரை அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை எனப் போற்றினார்.


அமெரிக்காவின் உள்நாட்டுப் போருக்கு முன்னதாகவே சாமுவெல் F.B. மோர்ஸ் தந்தி முறையையும், எலியாஸ் ஹோவ் என்பவர் தையல் இயந்திரத்தையும் கண்டுபிடித்தனர். உள்நாட்டுப் போருக்குப் பின்னர் தொழில்மயமாதல் மிகவும் விரைவாக நடைபெற்றது. 1869இல் மக்களையும், கச்சாப் பொருட்களையும் முடிவுற்றப் பொருட்களையும் கொண்டு செல்வதற்காக கண்டங்களைக் கடந்து செல்லும் ரயில் பாதை அமைக்கும் பணி முடிவுற்றது. தாமஸ் ஆல்வா எடிசனால் கண்டுபிடிக்கப்பட்ட மின்சாரமும் (1879) அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்லால் கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசியும் (1876) மொத்த உலகையே மாற்றியது.

 

ஒருகிராமிய சமூகமாக இருந்த அமெரிக்காவை, ஒரு நகர்ப்புற சமூகமாக மாற்றம் பெறச் செய்யும் செயல்பாட்டினைத் தொழிற்புரட்சி வேகப்படுத்தியது. பண்ணைகளில் வளர்ந்த இளம் வயது மக்கள் நகரங்களில் வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தால் நகரங்களுக்குச் சென்றனர். முன்னெப்போதும் இருந்திராத அளவில் நகரமயமாதலும் ஆட்சிப்பரப்பு விரிவாக்கமும் அமெரிக்காவில் நடைபெற்றது. அதன் விளைவாக 1860-1900 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பதினான்கு மில்லியன் மக்கள் அமெரிக்காவிற்கு வந்தனர். பல்வகைப்பட்ட தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாக வேலை செய்தனர்.

 

தொழிற்புரட்சியின் தாக்கம்

• மறுமலர்ச்சி மக்களின் வாழ்க்கையைப் பற்றிய அணுகுமுறையை மாற்றியமைத்தது எனில், தொழிற்புரட்சி விவசாய காலம் தொட்டு அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் பாதையையே மாற்றியது. ஆலைகள் இயந்திரமயமானதின் விளைவாக உற்பத்தி மிகப்பெருமளவிற்குப் பெருகியது. அதனால் செல்வமும் பெருகியது. ஆனால் அவ்வாறு பெருகிய செல்வம் புதிய தொழிற்சாலைகளின் முதலாளிகளாய் இருந்த சிறு குழுவுக்கே சென்றது.

• தொழிற்புரட்சி உற்பத்தியில் இருந்த பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தது. ஆனால் புதிதாக உருவாக்கப்பட்ட செல்வத்தை விநியோகிப்பதில் ஏற்பட்ட பிரச்சனைகளை அதனால் தீர்க்க இயலவில்லை.

• இயந்திரங்களைப் பயன்படுத்தி பொருளுற்பத்தி செய்வோர்கள் கைவினைத் தொழில்களைப் பாழ்படுத்தினர். ஆயிரக்கணக்கான கைவினைஞர்களும் நெசவாளர்களும் வேலையற்றவர்களாயினர்.

• தொழிற்புரட்சியின் முதற்கட்டத்தில் இயந்திரங்கள் அறிமுகமானபோது பெண்கள், குழந்தைகள் ஆகியோரிடமிருந்து மலிவான விலையில் உழைப்பு பெறப்பட்டதால் உடல் வலுமிக்க ஆண்கள் வேலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் பல தொழிற்சாலைகளும் சுரங்கங்களும் ஆபத்து நிறைந்தவையாயும் சுகாதாரமற்றவையாகவும் இருந்தன.

• தொழிற்புரட்சியின் மிகமுக்கியமான விளைவு ஆலை முதலாளிகள், ஆலைத் தொழிலாளர்கள் என இரண்டு வர்க்கங்கள் உருவாக்கப்பட்டதுவே தங்கள் உற்பத்திப் பொருட்களைப் பாதுகாக்கக் காப்புவரி விதிப்பது, தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்குவது ஆகிய இவ்விரு விஷயங்களைக் கடந்து ஏனையவற்றில் அரசு தலையிடுவது முதலாளிகளுக்கு ஒவ்வாமையாக இருந்தது. வலிமையான பொருளாதார வளர்ச்சிக்கு, புதிய முயற்சிகளுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்படுவது, முற்றிலும் இன்றியமையாதது என முதலாளிகள் வற்புறுத்திக் கூறினர்.

• ஆலைத் தொழிலாளர் என்ற புதிய வர்க்கம் அவ்வளவு எளிதாகத் துன்பங்களை, ஏற்றுக்கொள்ளவில்லை. நெப்போலியப் போர்களின் இறுதியில் வலுவான எதிர்ப்பலைகள் வீசத் துவங்கின. இயந்திரங்களை உடைப்பது, பெரும் எண்ணிக்கையில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வது, தொழிலாளர் சங்கங்கள் உருவாக்குவது என பலகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பீட்டர்லூ படுகொலை: 1819ஆம் ஆண்டு தொழிலில் மந்தநிலையும் உணவுப்பொருட்களின் விலையேற்றமும் ஏற்பட்ட ஆண்டாகும். பெண்களும் குழந்தைகளும் உட்பட 60,000 அதிருப்தியுற்ற மக்கள் ஹென்றி ஹன்ட் எனும் தீவிரவாதத் தலைவரின் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் யாரும் ஆயுதம் வைத்திருக்கவில்லை. ஆர்ப்பாட்டமும் அமைதியான முறையில் நடைபெற்றது. கூட்டத்தின் எண்ணிக்கையையும் அவர்களின் மனநிலையையும் கண்டு பீதியடைந்த அதிகாரிகள் மான்செஸ்டர் யோமனரி எனும் தன்னார்வ குதிரைப்படை காவலர்களைக் கொண்டு கூட்டத்தினரைத் தாக்க உத்தரவிட்டனர். 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர், 17 நபர்கள் கொல்லப்பட்டனர். ஹனட்டும் ஏனைய தீவிரவாதத் தலைவர்களும் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டது.

டோல்புடில் குற்றவழக்கு: இங்கிலாந்தின் விக் அரசாங்கம் தொழிலாளி வர்க்கத்தாரிடையே வளர்ந்து வரும் அதிருப்தியைக் கண்டு அச்சம் கொண்டு, 1834இல் அறிவிக்கப்பட்ட ஊதிய வெட்டுக்கு எதிராக தொழிலாளர்களை ஒன்று திரட்டியதற்காக ஆறு டோல்புடில் தொழிலாளர்களைக் கைது செய்தது. அவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனையாக ஏழு வருடங்களுக்கு ஆஸ்திரேலியாவில் இருந்த தண்டனைக் காலனிக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் ஆறுபேரும் தொழிலாளர்களுக்காக உயிர் துறந்த தியாகிகள் ஆயினர்.

அமெரிக்காவில் மாபெரும் இருப்புப்பாதை வேலை நிறுத்தம் (1877): ஆலைகளில் நிலவிய மோசமான வேலைச் சூழல், பலமணி நேர வேலை, குறைந்த ஊதியம், பெண்களும் குழந்தைகளும் சுரண்டப்பட்டது உட்பட அனைத்தும் சேர்ந்து அமெரிக்காவில் தொழிற்சங்கங்கள் உருவாகப் பங்களிப்பு செய்தன. உள்நாட்டு போருக்குப் பின்னர் தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களை அவற்றில் மிகப்பெரும் வேலை நிறுத்தம் 1877இல் நடைபெற்ற இருப்புப்பாதைத் தொழிலாளர் வேலை நிறுத்தமாகும். நீண்ட பொருளாதார மந்தம் நிலவிய சூழலில் இருப்புப்பாதைத் தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஊதியவெட்டு வேலை நிறுத்தத்திற்கு இட்டுச் சென்றது. அமைதிப் பாதுகாப்புக் குழுவினர், தேசியக் காவலர்கள், ஐக்கிய அரசின் இராணுவம் ஆகிய அமைப்புகளால் வேலைநிறுத்தம் நசுக்கப்பட்டது.

ஹேமார்கெட் படுகொலை: 1886 மே 4இல் சிக்காகோ நகரின் ஹேமார்கெட் சதுக்கத்தில், தொழிலாளர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். நாளொன்றுக்கு எட்டு மணிநேர வேலை எனும் கோரிக்கைக்குப் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் முந்தைய தினம் நடைபெற்ற போலீஸ் தாக்குதலில் பல தொழிலாளர்கள் கொல்லப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் அமைதியான ஊர்வலம் தொடங்கியது. காவலர்கள் கூட்டத்தைக் கலைக்க முற்படுகையில் யாரோ ஒருவர் டைனமைட் குண்டை போலீசார் மீது வீசினார். குண்டு வெடிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு ஆகியவற்றில் ஏழு காவல்துறை அதிகாரிகளும் நான்கு பொதுமக்களும் கொல்லப்பட்டனர். எண்ணற்றோர் காயமடைந்தனர். ஹேமார்கெட் நிகழ்வை நினைவு கொள்ளும் வகையில் 1887 மே 1 தொழிலாளர் தினமாக அல்லது மே தினமாக அல்லது உலக உழைப்பாளர் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

Tags : The Age of Revolutions | History புரட்சிகளின் காலம் - வரலாறு.
12th History : Chapter 11 : The Age of Revolutions : Industrial Revolution The Age of Revolutions | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 11 : புரட்சிகளின் காலம் : தொழிற்புரட்சி - புரட்சிகளின் காலம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 11 : புரட்சிகளின் காலம்