Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | இலத்தீன் அமெரிக்காவில் புரட்சிகள்

புரட்சிகளின் காலம் - வரலாறு - இலத்தீன் அமெரிக்காவில் புரட்சிகள் | 12th History : Chapter 11 : The Age of Revolutions

   Posted On :  10.07.2022 05:49 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 11 : புரட்சிகளின் காலம்

இலத்தீன் அமெரிக்காவில் புரட்சிகள்

பதினாறாம் நூற்றாண்டில் இலத்தீன் அமெரிக்க பகுதிகள் ஸ்பானியர்களால் கைப்பற்றப்பட்டன.

இலத்தீன் அமெரிக்காவில் புரட்சிகள்

பதினாறாம் நூற்றாண்டில் இலத்தீன் அமெரிக்க பகுதிகள் ஸ்பானியர்களால் கைப்பற்றப்பட்டன. மேலும் போர்த்துகீசியரும் பிரெஞ்சுக்காரர்களும் அங்கு சென்றனர். இன்கா, அஸ்டெக்குகள் போன்ற தென் அமெரிக்க பண்பாடுகளின் அரசியல் அதிகாரம் இக்காலனியாதிக்கச் சக்திகளால் சிதிலமாக்கப்பட்டன. அங்கிருந்த மத நம்பிக்கைகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்த காலனியாதிக்கச் சக்திகள் அப்பகுதிகளில் கத்தோலிக்க மதத்தை அறிமுகம் செய்தன. இலத்தீன் அமெரிக்காவில் காலனியாதிக்கவாதிகளின் ஆட்சியானது கொடூரமானதாக இருந்தது. அது இனப்படுகொலைகள் மற்றும் பூர்வகுடி மக்கள் கணக்கில்லாமல் கொன்று குவிக்கப்படுதல் போன்றவற்றால் அடையாளப்படுத்தப்பட்டது. பூர்வகுடி மக்கள் காலனிய முதலாளிகளின் பண்ணைகளிலும் சுரங்கங்களிலும் அடிமைகளைப் போல வேலைகள் செய்யவேண்டியிருந்தது. காலனியாதிக்கவாதிகள் சர்க்கரை, காபி, தங்கம், வெள்ளி ஆகியவற்றை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர்.


இலத்தீன் அமெரிக்கா இன்று மத்திய அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலுமுள்ள மெக்சிகோ, பிரேசில், அர்ஜென்டினா, பெரு, சிலி, வெனிசுலா மற்றும் கரீபியன் நாடுகள் போன்ற பல நாடுகளைக் கொண்டுள்ளது.


          

ஹைட்டியர்களின் புரட்சி

முந்நாளில் செயின்ட் - டோமிங்கோ (பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் காலனிகளை அவ்வாறு அழைத்தனர்) என்றறியப்பட்ட ஹைட்டி, கரீபியன் கடலில் இருந்த மிக வளமான பிரெஞ்சுக் காலனியாகும் (1659 - 1804). அது ஐரோப்பாவின், ஏனைய கரீபியன், அமெரிக்கக் காலனிகளின் மொத்த சர்க்கரை உற்பத்தியைக் காட்டிலும் அதிக சர்க்கரையை உற்பத்தி செய்யும் பண்ணைகளைக் கொண்டிருந்தது. இத்தீவின் பூர்வகுடி மக்கள் தங்கத்திற்காகச் சுரங்கங்கள் தோண்ட கட்டாயப்படுத்தப்பட்டனர். ஐரோப்பிய நோய்களாலும் கொடூரமான பணியிடச் சூழலினாலும் இம்மக்கள் பேரழிவுக்குள்ளாயினர். பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் இம்மக்கள் உண்மையிலேயே மறைந்து போனார்கள். மேற்கு ஹிஸ்பானியோலா பகுதியைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் அதிகமான எண்ணிக்கையில் ஆப்பிரிக்க அடிமைகளை இறக்குமதி செய்தனர். 1789இல் 5,56,000 என மதிப்பிடப்பட்ட செயின்ட் டோமிங்கோவின் மக்கள் தொகை 5,00,000 ஆப்பிரிக்க அடிமைகளையும், 32,000 காலனியவாதிகளையும் (வெள்ளை இன மக்கள்), 24,000 சுதந்திர அஃப்ராஞ்சிகள் (affranchis) அல்லது முலாட்டோக்கள் (ஆப்பிரிக்க ஐரோப்பியரின் வழிவந்த கலப்பினக் கருப்பு நிற மக்கள் ) மக்களையும் கொண்டிருந்தது.

பாஸ்டில் சிறை வீழ்த்தப்பட்டது எனும் செய்தியைத் தொடர்ந்து முடியாட்சியரசின் ஆளுநருக்கு எதிராக ஆயுதமேந்திய எதிர்ப்பு ஒன்று நடைபெற்றது. முலாட்டோபிரிவைச் சேர்ந்த வின்சென்ட் ஓஜ் என்பவர் காலனிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காகப் பாரிஸின் நகரச் சட்டமன்றத்தின் ஆதரவைத் திரட்டிக் கொண்டிருந்தார். 1790இன் இறுதியில் அவர் தலைமையில் கிளர்ச்சி நடைபெற்றது. ஆனால் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். 1791 மே மாதத்தில் பிரான்சின் புரட்சி அரசாங்கம் வசதி படைத்த முலாட்டோக்களுக்குக் குடியுரிமை வழங்கியது. அவர்கள் சொந்தமாக அடிமைகளைக் கொண்டிருந்தனர். ஆனால் ஹைட்டியின் ஐரோப்பியக் குடிமக்கள் இச்சட்டத்தை மதிக்கவில்லை. இரண்டு மாதங்களுக்குள்ளாக ஐரோப்பிய வெள்ளை இனத்தாருக்கும் முலாட்டோக்களுக்குமிடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்தன. கருப்பின அடிமைகளைப் பொறுத்த மட்டிலும், எந்த மாற்றமும் இல்லாமல் அவர்கள் தொடர்ந்து உழைத்து, துயருற்று மாள்வர் என அனைவரும் கருதினர். ஆனால் அனைவரும் வியப்படையும் வண்ணம், ஆகஸ்டு மாதத்தில் ஆயிரக்கணக்கில் அடிமைகள் கிளர்ச்சியை மேற்கொண்டனர்.


ஐரோப்பிய வெள்ளையினத்தவர் அடிமைகளின் கிளர்ச்சியை அடக்குவதற்காக முலாட்டோக்களுடன் சமாதான முயற்சிகளை மேற்கொண்டனர். இதனிடையே 1792 ஏப்ரலில் பிரெஞ்சு தேசியப் பேரவை அனைத்து முலாட்டோக்களுக்கும் குடியுரிமை வழங்கியது. போட்டியும் பகைமையும் கொண்ட குழுக்களிடையே நாடு நாசமானது. அது சாண்டோ டொமிங்கோவில் இருந்த ஸ்பானிய குடியேற்றவாசிகள் அல்லது ஜமைக்காவிலிருந்த பிரிட்டிஷ் துருப்புக்களின் பிடியில் இருந்தது. 1793இல் அமைதியைப் பராமரிப்பதற்காகப் பிரெஞ்சு அரசாங்கம் லெகர் - ஃபெலிசிட் சோன்டோனாக்ஸ் எனும் ஆணையர் ஒருவரை அனுப்பி வைத்தது. அவர் தன்னுடைய படையில் சேர்ந்த அடிமைகள் அனைவருக்கும் சுதந்திரம் வழங்கினார். விரைவில் அவர் அடிமைமுறையை ஒட்டு மொத்தமாகவே ஒழித்தார். இம்முடிவைப் பின்னர் பிரெஞ்சு அரசாங்கம் அதிகாரபூர்வமாக உறுதி செய்தது.


1790களின் இறுதிப் பகுதியில் முன்னர் அடிமையாக இருந்தவரும், படைத்தளபதியுமான ஆசையின்ட் எல்' ஓவர்ச்சர் என்பவர் பல பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். இவருடைய படைகளின் ஆசையின்ட் கட்டுபாட்டின் கீழிருந்த செயின்ட் டோமிங்கோவை மீட்பதற்கு நெப்போலியன் 12,000 படை வீரர்களை கப்பலில் அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து நடந்த போர் நீண்ட, இரத்தக்களரியான போராக அமைந்தது. போரின் ஒரு கட்டத்தில் பிரெஞ்சு படைகள் வெற்றி பெற்றுவிடும் நிலை ஏற்பட்டது. தொஸ்செயிண்ட் எதிரியோடு சமாதானம் செய்துகொள்ள வாய்ப்பிருப்பதாகத் தவறாக நம்ப வைக்கப்பட்டார். பின்னர் அவர் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார். இச்சூழலில் அவரின் முந்நாள் படைத்தளபதி டெசலைன்ஸ் நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து கருப்பின மக்களின் எதிர்ப்பை ஒழுங்கமைத்தார். நெப்போலியனின் படைகள் அவரால் தோற்கடிக்கப்பட்டன. ஹைட்டி 1804இல் செயின்ட் - டோமிங்கோ கருப்பின மக்களின் சுதந்திர நாடானது.

 

வெனிசுலா, நியூ கிரனடா (தற்போது கொலம்பியா)

ஹைட்டியர்களின் புரட்சியால் ஊக்கம் பெற்ற வெனிசுலாவின் அடிமை மக்கள் 1790களில் கிளர்ச்சிகளை மேற்கொண்டனர். கிரியோல் (கலப்பின ஐரோப்பியர்கள், கருப்பின மக்களின் வழிவந்தோர்) எனப்பட்ட இன மக்கள் தங்களின் பெருந்தோட்டப் பொருளாதாரத்திற்கு லாபம் நல்கும் சுதந்திர வணிகத்தை மேலும் விரிவாக்கம் செய்ய நினைத்தனர். அதே சமயம் ஸ்பானியர்களின் கட்டுப்பாடு நீக்கப்பட்டுவிட்டால் புரட்சிகள் ஏற்பட்டு தங்களுடைய அதிகாரமும் சிதைக்கப்பட்டுவிடுமோ எனவும் அஞ்சினர். எனவே அவர்கள் நியூ கிரனடாவிலுள்ள ஆளுநருக்கு மிகவும் விசுவாசமிக்க ஒரு பிரிவை உருவாக்கினர்.

இதனிடையே திறமையற்ற ஸ்பெயின் நாட்டு அரசர் நான்காம் சார்லஸ் தனது மகன் பெர்டினான்டுக்குச் சாதகமாக அரியணையைத் துறந்தார். ஆனால் அவர்கள் இருவரையும் சிறையிலடைத்த நெப்போலியன் தனது சகோதரர் ஜோசப் என்பவரை 1808இல் ஸ்பெயினின் அரசனாக்கினார். சார்லசும் பெர்டினான்டும் பதவி நீக்கம் செய்யப்பட்டதால் ஸ்பெயினில் ஆறாண்டு காலத்திற்கு நிலையான அரசு என்பது இல்லாமலானது. ஸ்பெயினில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் அதன் காலனிகளுக்குத் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளை வழங்கியது. விரைவில் நாட்டுப்பற்றுமிக்க புரட்சியாளர்கள் புரட்சியரசுகளை நிறுவினர். அவ்வரசுகள் 1810இல் சில சமூகப் பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தன.

வெனிசுலாவில் சைமன் பொலிவரின் தலைமையிலான நாட்டுப்பற்றாளர்கள் தாங்கள் ஸ்பெயினிடமிருந்து விலகிவிட்டதாக அடுத்த ஆண்டில் வெளிப்படையாக அறிவித்தனர். இதனிடையே 1812இல் ஏற்பட்ட பூகம்பம் நாட்டுப்பற்றாளர்களின் வசமிருந்த பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதை வாய்ப்பாகக் கொண்டு ஸ்பெயின் அரசின் விசுவாசப் படையினர் சைமன் பொலிவர் நாட்டுப்பற்றாளர்களின் படைகளைத் தாக்கி, சைமன் பொலிவரையும் ஏனையோரையும் நியூகிரனடாவில் தஞ்சம்புகச் செய்தனர். (ஆளுநரின் ஆட்சிப் பகுதியில் இதயப் பகுதியாக இப்பகுதி இருந்தது).


1813இல் மீண்டும் புதிய படையோடு வெனிசுலா திரும்பிய பொலிவர் மரிக்கும் மட்டிலும் போர்" எனும் முழக்கத்துடன் போரைத் தொடங்கினார். ஜோஸ் தாமஸ் போவெஸ் என்பாரின் தலைமையில் போரிட்ட விசுவாசிகள் பொலிவரை தாய்நாட்டை விட்டு துரத்துவதில் மீண்டும் வெற்றி பெற்றனர். 1815 வாக்கில் வெனிசுலாவிலும் ஸ்பானிய தென் அமெரிக்கா முழுவதும் சுதந்திரப் போராட்டங்கள் அனைத்தும் ஏறத்தாழ மரித்துப்போனது போலக் காணப்பட்டது. ஏழாம் பெர்டினான்டால் அனுப்பி வைக்கப்பட்ட பெரும்படை வெனிசுலாவையும் நியூ கிரனடாவின் பெரும் பகுதியையும் மீண்டும் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றன. 1816இல் பொலிவரால் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு படையெடுப்பும் தோல்வியைத் தழுவியது.

ஆனால் அடுத்த ஆண்டில் (1817) மிகப்பெரிய அளவிலான புத்துயிர் ஊட்டப்பெற்ற சுதந்திரப் போராட்டம் உதயமானது. நாட்டின் வட பகுதிகளில் வெற்றி பெற்ற இப்போராட்டம் ஆன்டிஸ் மலைப் பகுதிகளிலும் பரவியது. போராட்டங்களுக்குப் பின்னர் சைமன் பொலிவர் ஒரு வலிமை மிகுந்த இராணுவ, அரசியல் சக்தியாக உருவானார். இத்தருணத்தில் லானெரோ (llanero) என்னும் கலப்பினத்தை சேர்ந்த மேய்ச்சல் சமூகத்தார் ஜோஸ் அன்டோனியா பயஸ் என்பவரின் தலைமையில் விடுதலைப் போராட்டத்தில் இணைந்தனர். 1818-19இல் நாட்டுப்பற்றாளர்களின் படைகள் பெற்ற வெற்றிகளில் இவர்கள் அளப்பரிய பங்களிப்புச் செய்தனர். கிழக்கு ஆன்டிஸ் மலைப்பகுதி வரை தன்னுடைய படைகளை நடத்திச் சென்ற பொலிவர் போயகா போர்க்களத்தில் தனது பகைவர்களை படுதோல்வி அடையச் செய்தார்.


நாட்டின் வட பகுதிகளில் பெற்ற வெற்றிகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்துவது சிரமமான பணியாயிற்று. 1819இல் பொலிவரால் அங்கோஸ்டுரா என்ற இடத்தில் கூட்டப்பட்ட மாநாட்டில், இன்றைய வெனிசுலா, கொலம்பியா, பனாமா, ஈக்வடார் ஆகியவை உள்ளிட்ட ஒன்றியத்திற்கு பொலிவரே குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அப்பகுதியில் நிலவிய கடுமையான வேறுபாடுகள் முந்நாள் ஸ்பானியக் காலனிகளை ஒரே நாடாக, இலத்தீன் அமெரிக்க ஐக்கிய நாடுகள் என மாற்றம் பெறவேண்டும் என்ற பொலிவரின் நம்பிக்கையைச் சிதைத்தன. மேலும் வெனிசுலாவின் கணிசமான பகுதியும், கொலம்பியாவின் ஆன்டிஸ் மலைப்பகுதியும் ஒட்டு மொத்த ஈக்வடாரும் அரசு விசுவாசிகளின் ஆதரவாளர்கள் வசமிருந்தன. 1820இல் நிலைமை சாதகமாக மாறின. அரசருடைய படையெடுப்பில் பங்கேற்பதற்காக கேடிஸ் எனுமிடத்தில் காத்திருந்த படைகள் புரட்சியில் இறங்கின. இதனைத்தொடர்ந்து 1821இல் நியூகிரனடாவும், வெனிசுலாவும் விடுதலை பெற்றன. அதே ஆண்டில், கொலம்பியாவின் குகுடா எனும் நகரில் நடைபெற்ற மாநாட்டில் மென்மேலும் மையப்படுத்தப்பட்ட கிரான் கொலம்பியாவின் தலைவராக பொலிவரை தேர்வு செய்தது.

சைமன் பொலிவர்: பொலிவர் கராகஸ் பகுதியின் கிரியோல் வகுப்பைச் சேர்ந்த பழமை வாய்ந்த உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒரு கொள்கையாளராக, இராணுவத்தலைவராக அவர் விடுதலை இயக்கத்திற்கு அடிப்படைமுக்கியத்துவம் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். தன்னுடைய புகழ்பெற்ற ஜமைக்கா கடிதம் (Jamaica Letter) எனும் கடிதத்தில் (1815இல் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் எழுதப்பட்டது) நாட்டுப்பற்றாளர்கள் பலமுறை தோற்கடிக்கப்பட்ட நிலையிலும் கூட சுதந்திரத்தின்பால் தனக்கிருந்த தளராத நம்பிக்கையை வலியுறுத்தினார். ஸ்பானியர்களின் காலனியாதிக்கத்தை விமர்சித்த அவர், தன்னாட்சியுடன் கூடிய மையப்படுத்தப்பட்ட குடியாட்சி அரசை நிறுவுவதே முந்தைய காலனிகளுக்கு இருக்கும் ஒரே பாதை எனக் கருதினார். முடிவாக அவர் விரும்பிய குடியாட்சியானது குழு ஆட்சியாகும் (Oligarchic). ஒரு நாடு இனங்களால் துண்டு படுமேயானால் அங்கே ஒழுக்கம் நிறைந்த அரசு செயல்பட வாய்ப்பில்லை என நம்பினார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் இருபதாம் நூற்றாண்டிலும் கூட லத்தீன் அமெரிக்க விடுதலை இயக்கங்களுக்கும் இடது சாரிகளுக்கும் உத்வேகமூட்டும் ஒரு சக்தியாகவே பொலிவர் திகழ்ந்துள்ளார்.

 

மெக்சிகோ புரட்சி

மெக்சிகோவின் சுதந்திரம் தாமதமாகவே பெறப்பட்டது. மெக்சிகோவில் கிரியோல் மற்றும் தீபகற்பத்தினர் (Penisulars) என இரு அதிகாரம் மிக்க சமூகப்பிரிவினர் இருந்தனர். இவர்கள் ஸ்பெயினிலோ அல்லது போர்த்து கல்லிலோ பிறந்த காலனியாதிக்கத் தலைவர்களாவர். மெக்சிகோ சமூகத்தின் அதிகாரமிக்க பிரிவினருக்கு ஸ்பெயினிடமிருந்து பிரிந்தால் தங்களின் பாரம்பரிய செல்வாக்கையும் அதிகாரத்தையும் இழக்கும் நிலையிருந்தது. 1808-1810க்கும் இடைப்பட்ட காலத்தில், இப்பகுதியில் ஸ்பெயினின் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்காக தீபகற்பத்தினர் வலுச்சண்டைகளை மேற்கொண்டனர். ஸ்பானிய அரசர் இல்லாத நிலையில் அரசு நிர்வாகத்தை எவ்வாறு நடத்துவது என்ற கேள்விக்கு விடைகாண ஒரு மாநாட்டைக் கூட்டுவது எனும் முடிவை மெக்சிகோ நகரின் முக்கிய பிரிவினரான தீபகற்பத்தினர் எதிர்த்தனர். அவர்கள் ஆளுநரை அகற்றிவிட்டு கிரியோல்களைக் கொடுமைப்படுத்தினர். தங்களால் மேலாதிக்கம் செலுத்த இயலும் எனத்தெரிந்த திறமைகுன்றிய ஆளுநர்களை வரவேற்றனர். எப்படி இருந்தபோதிலும் தீபகற்பத்தினரின் இம்முயற்சிகளால் சுதந்திரப் போராட்டம் உதயமாவதைத் தடுக்க முடியவில்லை.

மிகுவல் ஹிடல்கோ எனும் கத்தோலிக்கப் பாதிரியாரே மெக்சிகோவின் புரட்சிக்குத் தலைமையேற்றார். ஏழை மக்களுக்கு ஆதரவாக இருந்த அவர் பூர்வகுடி அமெரிக்கர்களின் ஏழ்மையான வாழ்க்கைச்சூழல் கண்டு அவர்கள் கொண்டார். டோலோரஸ் திருச்சபையில் அவர் ஆற்றிய உணர்ச்சிகரமான சொற்பொழிவுகளில் மெக்சிகோவின் விடுதலையைக் கோரினார். ஸ்பெயின், கிரியோல்களின் படைகளுக்கு எதிராக மெஸ்டிசோ இன மக்களைக் கொண்ட புரட்சிப்படையொன்றுக்கு அவர் தலைமையேற்றார். இருந்தபோதிலும் அவர் 1811இல் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். பின்னர் இவ்வியக்கத்திற்குத் தலைமையேற்ற ஜோஸ் மரியா மோர்லோஸ் 1813இல் ஸ்பெயினில் இருந்தவாறே சுதந்திரப் பிரகடனம் செய்தார். அவரும் 1815இல் தோற்கடிக்கப்பட்டார்.

 

மெக்சிகோவைச் சேர்ந்த கிரியோல்கள் அல்லது செல்வச்செழிப்புமிக்க வணிகர்கள் ஸ்பெயின் நாட்டு அரசியல் நிகழ்வுகளைக் கண்காணித்து வந்தனர். ஸ்பெயினில் முடியாட்சியை அகற்றிவிட்டு, புதியதோர் அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக ஒரு இயக்கம் தயாராகிக் கொண்டிருந்தது. இது தங்களின் அதிகாரத்தைக் குறைத்துவிடும் என்று எண்ணிய கிரியோல்கள் 1821இல் சுதந்திரப்பிரகடனம் செய்தனர். இதில்வியப்பு யாதெனில் இச்சுதந்திரப் பிரகடன இயக்கத்திற்கு தலைமையேற்ற இராணுவ அதிகாரிதான் முன்னர் மரியா மோர்லோசை தோற்கடித்தவராவார். தன்னையே பேரரசராக அறிவித்துக் கொண்ட இவருடைய கொடிய ஆட்சி 1824இல் அகற்றப்பட்டது. மெக்சிகோ தன்னைத்தானே ஒரு குடியரசாக அறிவித்துக் கொண்டது.

 

பிரேசிலின் சுதந்திரம்

பிரேசில் போர்த்துகலின் ஒரு காலனியாக இருந்தது. 1808இல் நெப்போலியன் போர்த்துகலின்மீ து படையெடுத்தபோது போர்த்துகலின் அரசர் டாம் ஜோவோ (ஆறாம் ஜான்) பிரேசிலுக்குத் தப்பியோடினார். அங்கே அவர் நிலச் சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தல், இராணுவத்தை உருவாக்குதல், மருத்துவ, கலைக் கல்லூரிகளை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரேசிலை அனைத்து அம்சங்களிலும் முன்னேற்றமடையச் செய்தார். நெப்போலியன் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் போர்த்துகீசிய அரசர் தொடர்ந்து பிரேசிலில் தங்கியிருந்தார். ஆனால் அவருடைய அதிகாரத்திற்கு எதிராக சவால்கள் தோன்றிய போது, காலனியான பிரேசிலை தனது மகன் டாம் பெட்ரோவின் கைகளில் ஒப்படைத்து விட்டு போர்த்துகல் சென்றுவிட முடிவு செய்தார்.


பிரேசிலின் மேட்டுக்குடி மக்கள் ஆப்பிரிக்க அடிமைகளைச் சார்ந்திருந்தனர். அது போர்த்துகல் உடனான தொடர்ந்த உறவுக்கு சாதகமாய் அமைந்தது. பெருந்தோட்டங்களின் உரிமையாளர்கள் ஆப்பிரிக்க அடிமை வணிகத்தைச் சார்ந்திருந்தனர். அவ்வணிகத்தைப் போர்த்துகல் கட்டுப்படுத்தியது. 1800இல் பிரேசிலின் மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழப் பாதி மக்கள் அடிமைகளாக இருந்தனர். இதனால் கிரியோல்கள் அரசியல் முன் முயற்சிகளில் தயக்கங்காட்டவும் அதன் விளைவாக சமூகத்தில் தங்களைக் காட்டிலும் கீழானவர்களின் மீதான கட்டுப்பாட்டினை இழப்பதற்கும் வாய்ப்பிருந்தது. ஆகவே போர்த்துக்கல்லில் இருந்த அதிகாரிகள் பிரேசிலில் ஜோ மேற்கொண்ட சீர்திருத்தங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தனர். டாம் பெட்ரோவையும் போர்த்துக்கல்லுக்குத் திரும்பிவரக் கோரினர். இருந்தபோதிலும் டாம் பெட்ரோ பிரேசிலின் சுதந்திரத்தை அறிவித்துவிட்டு அங்கேயே தங்கிவிட முடிவு செய்தார். 1822இல் பிரேசில் போர்த்துகல்லிடமிருந்து விடுதலை பெற்றது. தென் அமெரிக்காவில் அரசியல் அமைப்பிற்கு கட்டுப்பட்ட முதல் முடியரசாக அது மாறியது. முதலாம் பெட்ரோ அதன் முதல் பேரரசர் ஆவார்.

 

ஏனைய புரட்சிகள்

அர்ஜென்டினாவின் விடுதலை வீரர் சான் மார்ட்டின், சிலியின் விடுதலை வீரரான பெர்னார்டோ ஓ ஹிகின்ஸ் என் பாரு டன் இணைந்தார். இருவரும் இணைந்து 1818இல் சிலிக்கும் 1820இல் பெரு சான் மார்ட்டின் நாட்டிற்கும் விடுதலை பெற்றுத் தருவதில் வெற்றி பெற்றனர். பொலிவரும் சான் மார்ட்டினும் ஈக்வடாரில் உள்ள குவாயாகில் துறைமுகத்தில் லத்தீன் அமெரிக்காவின் ஒருங்கிணைப்புக்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கச் சந்தித்தனர். ஐரோப்பிய பாணியிலான, அரசியலமைப்புக்கு உட்பட்ட முடியாட்சி அரசு அமைக்கப்பட வேண்டுமென சான் மார்ட்டின் விரும்பினார். பொலிவர் குடியாட்சி அரசு முறை அமைவதை விரும்பினார். அவர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை . இதனிடையே ஓய்வு பெற்ற சான் மார்ட்டின் முழு அதிகாரத்தையும் பொலிவரிடம் ஒப்படைத்தார். 1826 காலப்பகுதியில் அனைத்து தென் அமெரிக்கக் காலனிகளுக்கும் பொலிவர் சுதந்திரம் பெற்றுக்கொடுத்தார்.


காலனிகள் அனைத்தும் சுதந்திரம் பெற்ற பின்னர், அனைத்து இலத்தீன் அமெரிக்க நாடுகளையும் ஒருங்கிணைத்து கிரான் கொலம்பியா எனும் பெயரில் ஒரே நாடாக மாற்ற பொலிவர் முயற்சி மேற்கொண்டார். ஆனால் மலைகளையும் காடுகளையும் கொண்ட கரடு முரடான நிலவியல் அமைப்பினாலும், அதிகாரப் போட்டிகளாலும் அவரது கனவு நனவாகாமல் போயிற்று. பெரும்பான்மையான தென் அமெரிக்க நாடுகள் தங்களைக் குடியரசுகளாக அறிவித்துக் கொண்டாலும் ஸ்பெயினின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்தாலும், அவைகள் பெருமளவில் அந்நிய நாடுகளையே சார்ந்துள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் போக்கில் அமெரிக்காவும் பிரான்சும் மெக்சிகோவின் மீது படையெடுத்தன. அர்ஜென்டினா, சிலி போன்ற நாடுகளின் மீது இங்கிலாந்து தொடர்ந்து தனது மேலாதிக்கச் செல்வாக்கை நீண்டகாலம் வரை கொண்டிருந்தது. ஒவ்வொரு லத்தீன் அமெரிக்க நாட்டிலும் கருத்து வேறுபாடு கொண்ட குழுக்கள் எதிரெதிர் தாராளவாதக் கட்சிகளையும் பழமைவாதக் கட்சிகளையும் நடத்தி நடுநிலையற்ற, ஏற்றதாழ்வுகளைக் கொண்ட சமூகக் கட்டமைப்பை பாதுகாக்கின்றன. ஒரு பக்கம் சகலவிதமான உரிமைகளையும் பெற்றுள்ள மிகப்பெரும் நில உடைமையாளர்கள் மறுபுறம் உரிமைகளற்ற கடுமையான வறுமையில் வாடும் சாதாரண மக்கள் என்பதே அச்சமூகங்களின் குணாதிசயமாக உள்ளது.

இருபதாம் நூற்றாண்டில் குறிப்பாக இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர், அமெரிக்கா தனக்குச் சாதகமான, வளைந்து கொடுக்கக்கூடிய சர்வாதிகார அரசுகள் மூலம் (வாழைப்பழ குடியரசுகள் என குறிப்பிடப்படுகின்றன) இந்நாடுகளைக் கட்டுப்படுத்துவதால் தென் அமெரிக்கா இடர்ப்பாடுகள் நிறைந்த கண்டமாகவேயுள்ளது.

Tags : The Age of Revolutions | History புரட்சிகளின் காலம் - வரலாறு.
12th History : Chapter 11 : The Age of Revolutions : Revolution in Latin America The Age of Revolutions | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 11 : புரட்சிகளின் காலம் : இலத்தீன் அமெரிக்காவில் புரட்சிகள் - புரட்சிகளின் காலம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 11 : புரட்சிகளின் காலம்