Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | பிரெஞ்சுப் புரட்சி

புரட்சிகளின் காலம் - வரலாறு - பிரெஞ்சுப் புரட்சி | 12th History : Chapter 11 : The Age of Revolutions

   Posted On :  10.07.2022 04:25 am

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 11 : புரட்சிகளின் காலம்

பிரெஞ்சுப் புரட்சி

பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பா பல்வேறு வம்சாவளிகளைச் சேர்ந்த முடியரசர்களால் ஆளப்பட்டது. அவ்வரசர்கள் முழுமையான அதிகாரம் செலுத்தினர்.

பிரெஞ்சுப் புரட்சி  

பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பா பல்வேறு வம்சாவளிகளைச் சேர்ந்த முடியரசர்களால் ஆளப்பட்டது. அவ்வரசர்கள் முழுமையான அதிகாரம் செலுத்தினர். அவர்கள் நிலப்பிரபுக்கள், சமய குருமார்கள் ஆகியோருடன் பாரம்பரியமான உரிமைகளை அனுபவித்தனர். பிரான்சில் சாதாரண மக்கள் வரி செலுத்துவதைப் போல நிலப்பிரபுக்களும் மதகுருமார்களும் வரி செலுத்தவில்லை . இச்சூழலில்தான் பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்றது. அப்புரட்சி சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்கு ஆதரவளித்தது.

 

பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸ்

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்னர் பிரான்சின் அரசியல் சமூக முறைகள் பண்டைய ஆட்சிமுறை என்றழைக்கப்பட்டது. ஆங்கில மொழியில் பழைய ஒழுங்கமைவு (old order) என்று பொருள். இவ்வாட்சியின் கீழ் ஒவ்வொருவரும் ஒரு பிரிவைச் (எஸ்டேட்Estate) சேர்ந்தவர்களாய் இருந்தனர்.அனைத்து உரிமைகளும் அந்தஸ்தும் மதகுருமார்கள், நிலப்பிரபுக்கள், மூன்றாவது பிரிவைச் சேர்ந்த பொதுமக்கள் ஆகிய மூன்று படிநிலைகளின் வழியே கீழிறங்கியது. போர்பன் அரசவம்சத்தைச் சேர்ந்த இளம் வயதுடைய பதினாறாம் லூயி எனும் மன்னரால் பிரான்ஸ் ஆளப்பட்டது. அவர் ஆஸ்திரிய இளவரசியான மேரி அன்டாய்னட் என்பவரை மணம் முடித்திருந்தார். அரசர் முழுமையான அதிகாரத்தைப் பெற்றிருந்தார். அவர் ஆடம்பரமான வாழ்க்கைமுறையை மேற்கொண்டார். ஏழை மக்களின் மீது வரி விதித்த அரசு, பணம் படைத்தோர் மீது வரி விதிக்கவில்லை.


விளைச்சல் பொய்த்துப் போனதால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு பட்டினியால் அவதியுற்று மன அமைதி இழந்து, தங்கள் அரசர் மீதும் அரசாங்கத்தின் மீதும் எரிச்சல் கொண்ட பாரிஸ் நகரக் கும்பல் 1789 ஜூலை 14இல் பாஸ்டில் கோட்டையைத் (சிறைச்சாலை) தகர்த்தது. பாஸ்டில் சிறை தகர்ப்பானது உலக வரலாற்றில் ஒரு புதிய காலம் தொடங்கிவிட்டதைச் சுட்டிக் காட்டியது. இப்புரட்சி வெடிப்பதற்கு பல காரணங்கள் இருந்தன.


 

விவசாயிகளின் நிலை

பிரெஞ்சு சமூகத்தில் பெரும்பகுதியாக இருந்தவர்கள் விவசாயிகளே ஆவர். அவர்கள் கொத்தடிமைகளாக இருந்தனர். வாரத்தில் சில நாட்கள் ஊதியம் ஏதுமின்றி தங்கள் பிரபுக்களுக்காக அவர்கள் வேலை செய்ய வேண்டியிருந்தது. பிரபுவின் அனுமதியில்லாமல் அவர்களால் திருமணம் செய்யவோ நிலங்களை விற்கவோ முடியாது. இவைகளுக்கும் மேலாக ரொட்டி தயாரிப்பதற்கு தனது அடுமனையைப் பயன்படுத்திய விவசாயிகளிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமையையும், விவசாயிகளுக்குச் சொந்தமான ஆடு, மாடுகளின் மேல் வரி விதிக்கும் உரிமையையும் பிரபுக்கள் பெற்றிருந்தனர். ஒரு விவசாயி தன்னுடைய வருமானத்தில் 80 விழுக்காட்டை பலவிதமான வரி வசூலிப்பாளர்களிடம் வரியாகச் செலுத்தினார் என மதிப்பிடப்பட்டது. அவர்களில் "மூன்றில் ஒரு பகுதியினர் ஆண்டின் மூன்றில் ஒரு பகுதி நாட்களில் மூன்றாம் தர உருளைக் கிழங்கு தவிர உண்பதற்கு வேறெதுவுமின்றி இருந்தனர் - என கார்லைல் எழுதியுள்ளார்.

 

மூன்று பிரிவுகள்

பிரெஞ்சு சமூகம் மூன்று முக்கியப் பிரிவுகளைக் (எஸ்டேட்டுகள்) கொண்டிருந்தது. அவை முறையே மதகுருமார்கள், நிலப்பிரபுக்கள் (நிலங்களைக் கொண்ட உயர் குடிகள்), உரிமைகளற்ற சாதாரண மக்கள் ஆகியனவாகும். மதகுருமார்களும், பிரபுக்களும் சிறப்புரிமைகளை அனுபவித்தனர். அரசரால் விதிக்கப்பட்ட பல வரிகளிலிருந்து அவர்கள் விலக்களிக்கப்பட்டிருந்தனர். சிறப்பு உரிமைகளின் காரணமாய் முதலிரண்டு பிரிவைச் சார்ந்தவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்ததால், மூன்றாம் பிரிவைச் சேர்ந்தவர்களே வரிவிதிப்பின் கொடுமைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. திருச்சபையால் வசூலிக்கப்பட்ட டைத் எனும் வரி, டெய்ல் எனும் பெயரில் செலுத்தப்பட்ட நிலவரி, காபெல் எனும் உப்பின் மீதான வரி, புகையிலையின் மீதான வரி, ஆகியவை முக்கியமான வரிகளாகும்.

நிலமானியமுறை சட்டங்களை விவசாயிகளால் தாங்களாக மட்டுமேயிருந்து எதிர்க்க இயலவில்லை. எனவே அவர்கள் வெளியே இருந்து உதவியும், தலைமையும் வரவேண்டுமென எதிர்பார்த்தனர். எழுச்சிபெற்றுக் கொண்டிருந்த பூர்ஷ்வாக்கள் (நடுத்தர வர்க்கத்தினரின் தொகுப்பு ) தங்கள் பொருளாதார உயர்நிலைக்கு இணையான அரசியல் அதிகாரத்தைப் பெற விரும்பினர். இப்பூர்ஷ்வாக்களே தலைமையேற்று பிரெஞ்சுப் புரட்சி நடைபெற கருவியாய்ச் செயல்பட்டனர்.

பூர்ஷ்வா வகுப்பு கல்வியறிவு பெற்ற இடைத்தட்டு மக்களைக் கொண்டிருந்தது. எழுத்தாளர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் வழக்கறிஞர்கள், நீதிபதிகள், குடிமைப் பணியாளர்கள் ஆகியோர் இவ்வகுப்பை உருவாக்கினர்.

 

நிதி நிர்வாகச் சீர்கேடு

அண்டை நாடான ஆங்கிலப் பேரரசுடன் பிரான்ஸ் தொடர்ந்து போர் மேற்கொண்டதால் கருவூலத்திற்குப் பெருஞ்செலவை ஏற்படுத்தியது. இங்கிலாந்துடனும் பிரஷ்யாவுடனும் மேற்கொள்ளப்பட்ட ஏழாண்டுப் போரில் பிரான்ஸ் பெருந்தொகையைச் செலவழித்தது. அதைக் காட்டிலும் அதிகமான தொகையை அமெரிக்கா இங்கிலாந்துடனான போரில் செலவு செய்தது. பிரான்ஸ் தனது சக்திக்கு மீறிய மிகப்பெரும் உதவிகளை அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்குச் செய்தது. வட்டிக்குக் கடன் கொடுப்போரிடமிருந்து அரசு பெற்ற கடன்தொகை அதிகமானதால், பெற்ற கடன்களுக்கு அரசு அதிகமாக வட்டி செலுத்த வேண்டியதாயிற்று. கடன்களை அடைப்பதற்காக அரசு சாதாரண மக்களின் மீது அதிக வரிகளைச் சுமத்தியது. வரி செலுத்துவதிலிருந்து தங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வரிவிலக்கை, பிரபுக்களும் மதகுருமார்களும் தாங்களாகவே முன்வந்து விட்டுக் கொடுத்து அரசைக் காக்கத் தயங்கினர். அரச சபையின் ஊதாரித்தனமும், பதினாறாம் லூயி மன்னரின் திறமையின்மையும் நிலைமைகளை மேலும் சிக்கலாக்கின.

 

அறிவார்ந்த மக்களின் பங்கு

1789 புரட்சிக்கு மிக முன்னதாகவே கருத்துக் களத்தில் புரட்சி நடைபெற்று விட்டது. அறிவொளிச் சிந்தனைகளால் எழுச்சியூட்டப்பட்டிருந்த அறிவார்ந்த மக்கள் (பிரெஞ்சு மொழியில் philosophes என்றழைக்கப்பட்டனர்) அனைத்து அறிவுத்துறைகளையும் காரணகாரியங்களோடு பார்க்கத் துவங்கினர். பிரெஞ்சுப் புரட்சி வெடிப்பதற்காக சமூகத்தை தயார் செய்ததில் அவர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். வால்டேர், ரூசோ ஆகியோரின் எழுத்துக்கள் புரட்சிக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தன. 'சட்டங்களின் சாரம்' (The Spirit of Laws) எனும் தனது நூலில் மாண்டெஸ்கியூ (1689-1755) அதிகாரங்கள் அனைத்தும் ஓரிடத்தில் குவிக்கப்படுவதை எதிர்த்தார். அதிகாரங்கள் சட்டமியற்றுதல், சட்டங்களை செயல்படுத்துதல், நீதித்துறை என பிரிக்கப்பட வேண்டுமெனக் கூறினார். வால்டேர் (1694-1778) "பதினான்காம் லூயியின் காலம்" (The Age of Louis XIV) என்ற தனது நூலில் பிரெஞ்சுக்காரர்களின் மதம் சார்ந்த மூட நம்பிக்கைகளை எதிர்த்ததோடு முடியாட்சி மன்னர்களின் கீழ் நடைபெற்ற பிரெஞ்சு நிர்வாகத்தையும் விமர்சித்தார். ரூஸோ (17121778) தான் எழுதிய 'சமூக ஒப்பந்தம்' (Social Contract) எனும் நூலில், ஆள்வோர்க்கும் ஆளப்படுவோருக்குமான உறவு ஓர் ஒப்பந்தத்தால் கட்டுப்படுத்தப்பட வேண்டுமென வாதிட்டார். ஆள்பவர் நியாயமான முறையில் ஆட்சி செய்தால் அவர் மக்களால் மதிக்கப்படுவார் என்றும் ஆள்பவர் ஒப்பந்தத்திற்கு மாறாக நேர்மையற்ற முறையில் ஆட்சிபுரிந்தால் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். ஆங்கிலத் தத்துவ ஞானியான ஜான் லாக் "அரசாங்கத்தின் இரு ஆய்வுக் கட்டுரைகள்" (Two Treatises of Government) எனும் நூலில் தெய்வீக உரிமைக் கோட்பாட்டையும் வரம்பற்ற முடியாட்சியையும் எதிர்த்தார். தீதரோ என்பவரும் மற்றவர்களும் வெளியிட்ட கலைக்களஞ்சியத்தில் (Encyclopedia) இது போன்ற கருத்துக்களும் இடம் பெற்றிருந்தன.

ரூஸோ எழுதிய சமூக ஒப்பந்தம் எனும் நூல், "மனிதன் பிறக்கும் போது சுதந்திரமானவனாகப் பிறக்கிறான். ஆனால் அனைத்து இடங்களிலும் சங்கிலிகளில் பிணைக்கப்பட்டுள்ளான்" எனும் புகழ்பெற்ற தொடக்க வரிகளைக் கொண்டுள்ளது. இவ்வரிகளுக்காகவே அவர் போற்றப்படுகிறார்.


 

பிரெஞ்சுப் புரட்சி

தொடக்கம்

1789 மே மாதத்தில் பிரெஞ்சு பாராளுமன்றம் (முப்பேராயம் / Estate General) கூட்டப்பட்டதிலிருந்து பிரெஞ்சுப் புரட்சி தொடங்கியது. அரசாங்கம் எதிர்கொண்டபிரச்சனைகளால் முப்பேராயத்தைக் கூட்டுவது அவசியமாயிற்று. முப்பேராயத்தின் கூட்டம்வெர்செய்ல்ஸ் மாளிகையில் நடைபெற்றது. முதலிரண்டு சமூகப் பிரிவுகளான மதகுருமார்கள், நிலப்பிரபுக்கள் ஆகிய பிரிவுகள் ஒவ்வொன்றும் 300 பிரதிநிதிகளை அனுப்பி வைத்தது. மூன்றாவது பிரிவு பெரும்பாலும் வணிகர்களையும் கல்வி கற்றவர்களையும் உள்ளடக்கிய 600 பிரதிநிதிகளை அனுப்பி வைத்தது. இவர்கள் முதலிரண்டு பிரிவுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் பின்புறம் நிற்க வைக்கப்பட்டனர். இம்முப்பேராயக் கூட்டத்தில் எவ்வாறு பிரதிநிதிகள் வாக்களிப்பது எனும் கேள்வியெழுந்தது. ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு வாக்கு எனும் மரபு சார்ந்த முறை அப்படியே தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டுமென பதினாறாம் லூயி விரும்பினார். ஆனால் சமூகத்தின் மூன்றாம் பிரிவைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு வாக்கு எனும் கோரிக்கையை முன் வைத்தனர்.

 

டென்னிஸ் மைதான உறுதிமொழி

 

சமூகத்தின் மூன்றாம் பிரிவைச் சேர்ந்த பிரதிநிதிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் அவர்கள் 1789 ஜூன் 17இல் தேசிய சட்டமன்றத்தைக் கூட்டினர். பின்னர் அவர்கள் முப்பேராயத்தை விட்டு வெளியேறி 1789 ஜூன் 20இல் டென்னிஸ் மைதானத்தில் ஒன்று கூடினர். அரசரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும். அதுவரை கலைந்து செல்லப் போவதில்லை என உறுதிமொழி எடுத்தனர். இதுவே டென்னிஸ் மைதான உறுதிமொழி" ஆகும். இவ்வெதிர்ப்பில் அவர்களுக்கு மிராபு எனும் பிரபுவும் அபே சீயஸ் எனும் மதகுருவும் தலைமை தாங்கினர்.

 


பாஸ்டில் தகர்ப்பு

மூன்றாம் பிரிவுப் பிரதிநிதிகள் தேசிய சட்டமன்றத்தை அமைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டிருந்தபோது, சாதாரண மக்கள் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், பணம் படைத்த வணிகர்களின் தானியப் பதுக்கல் ஆகியவற்றால் துயரங்களுக்கு உள்ளாயினர். உணர்ச்சிவயப்பட்ட பெண்கள் சந்தைப் பகுதியை முற்றுகையிட்டு கிளர்ச்சி செய்தனர். அமைதியின்மையைக் கண்ணுற்ற அரசர் பாரிஸ் நகர வீதிகளுக்கு செல்லும்படி படைகளுக்குக் கட்டளையிட்டார். இதனால் கோபம் கொண்டு, வெகுண்டெழுந்த மக்கள் பாரிஸ் நகரின் முக்கியச் சிறைக்கூடமான பாஸ்டில் சிறையை 1789 ஜுலை 14இல் தகர்த்து கைதிகளை விடுவித்தனர்.

பிரான்சில் இப்போதும் ஜுலை 14 பாஸ்டில் நாளாக அல்லது பிரெஞ்சு தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.

 

தேசிய சட்டமன்றம்

பாஸ்டில் சிறை தகர்ப்பால் ஊக்கம் பெற்ற தேசிய சட்டமன்றம், நிலமானிய முறையை ஒழித்தது. நிகழ்வுகளின் திசை திருப்பத்தால் அதிர்ந்துபோன அரசர் தேசிய சட்டமன்றம் தோற்றுவிக்கப்பட்டதை ஏற்றுக் கொண்டார். திருச்சபை தனது உரிமைகளைக் கைவிடும்படியும் டைத் வரியை நீக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டது. 1791இல் தேசிய சட்டமன்றம் அரசியலமைப்பை உருவாக்கியது. அதன்படி அரசரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. புதிய அரசியலமைப்பு மூன்று வெவ்வேறு அங்கங்களைப் பரிந்துரைத்தது. அவை சட்டமியற்றல், சட்டங்களை நடைமுறைப்படுத்துதல், நீதித்துறை ஆகியனவாகும். மேலும் தேசிய சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் தேர்வாளர்கள் எனப்படும் குழுவினரால் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும், இத்தேர்வாளர்கள் 25 வயது நிரம்பப்பெற்ற, வரி செலுத்துகின்ற ஆண் வாக்காளர்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் புதிய அரசியல் அமைப்பு கூறியது. இதனால் குடிமக்களில் பெரும்பாலோர் வாக்களிக்கும் உரிமையைப் பெறவில்லை .

 

அரசியலமைப்பு உருவாக்கம்

அரசியலமைப்பானது, தேசிய அரசியலமைப்பு நிர்ணய சபையால் உருவாக்கப்பட்டது. 1789 ஆகஸ்டு 26இல் மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைப் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசரைச் சட்டத்தின் ஆட்சிக்குத் துணையாய் இருக்கச் செய்த இப்பிரகடனம் தனிமனித உரிமைகளையும் கூட்டு உரிமைகளையும் வரையறை செய்தது. சட்டம் ஏற்றுக்கொள்ளும் வழக்குகள் தவிர்த்து (உறுப்பு எண் 7) ஏனைய வழக்குகளைக் காரணம் காட்டி எந்தவொரு மனிதரையும் குற்றம் சாட்டவோ, கைது செய்யவோ, சிறையிலடைக்கவோ கூடாதென இது

மனித, குடிமக்கள் உரிமைப் பிரகடனம், ஒரு முகவுரையையும் 17 பிரிவுகளையும் கொண்டுள்ளது. முதல் பிரிவு மனிதர்கள் பிறக்கும் போது சுதந்திரத்துடனும் உரிமைகளில் சமமானவர்களாகவும் உள்ளனர்" என்ற வாசகத்தைக் கொண்டுள்ளது. சுதந்திரம், சொத்துக்களுக்கான பாதுகாப்பு, அடக்குமுறைக்கு எதிர்ப்பு என விவரிக்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாப்பதே அரசியல் ரீதியாக ஒன்றுபடுவதின் நோக்கமாக இருக்க வேண்டும் என இப்பிரகடனம் குறிப்பிடுகிறது. மேலும் இறையாண்மையும் சட்டமும் "பொது விருப்பம்" என்பதிலிருந்து உருவாக வேண்டுமெனவும் அறிவிக்கிறது. பேச்சு சுதந்திரத்தையும் மத சுதந்திரத்தையும் பாதுகாத்து அது சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டுமென வற்புறுத்துகிறது. அனைத்து மக்களும் தங்கள் வருவாய் ஆதாரங்களுக்கு ஏற்றவாறு வரி செலுத்த வேண்டுமென உறுதிபடக் கூறுகிறது. 1791இல் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பிற்கு இப்பிரகடனம் ஒரு முகவுரையாக அமைந்தது.

கூறியது. மேலும் பொது மக்களின் ஒப்புதலின்றி வரிகளை உயர்த்தக் கூடாதெனவும் குறிப்பிட்டது (உறுப்பு எண் 14) அனைத்து மனிதர்களும் பிறப்பில் சுதந்திரமாகவும் உரிமைகளில் சமமாகவும் உள்ளனர்" என பிரகடனம் செய்யும் உறுப்பு 1இல் தாமஸ் ஜெபர்சனின் செல்வாக்கை உய்த்துணர முடியும்.

பிரெஞ்சுப் புரட்சியில் பெண்கள் தனிச்சிறப்பு வாய்ந்த பங்கினை வகித்தனர். பாரிஸ் நகரின் ஏழ்மையான பகுதிகளைச் சார்ந்த பெண்கள், 20,000 ஆயுதமேந்திய ஆண்கள் உடன்வர வெர்செய்ல்ஸ் மாளிகைக்கு அணிவகுத்துச் சென்றனர். அரண்மனைக்குள் புகுந்த அவர்கள் அரசரைத் தங்களுடன் பாரிஸ் நகருக்கு வரும்படி கட்டாயப்படுத்தினர். பாரிஸில் அவர் மக்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். பல பெண்கள் தீவிர அரசியல் செயல்பாட்டாளர்களாகத் திகழ்ந்தனர். மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பிரகடனத்தில் பெண்கள் ஒதுக்கப்பட்டதால் அதன் மீது மனநிறைவு கொள்ளாத ஒலிம்பே - டி கோஜஸ் எனும் பெண்மணி, பெண் சமத்துவத்தை முன் வைத்து பெண்கள் மற்றும் குடிமகன் உரிமைகள் எனும் அறிவிப்பை எழுதினார்.


 

ஆஸ்திரியாவிற்கும் பிரஷ்யாவிற்கும் எதிராகப் போர்

ஒருபுறம் அரசியல் அமைப்புக்கு கட்டுப்பட்ட முடியாட்சிக்கு ஒத்துக்கொண்ட அரசர் மறுபுறம் ரகசியமாக ஆஸ்திரியா, பிரஷ்யா ஆகிய நாடுகளிடம் உதவி வேண்டினார். பிரான்சில் நடைபெறும் நிகழ்வுகளை அண்டை நாட்டு அரசுகள் கவலையுடன் கவனித்து வந்தன. பொது மக்களின் எழுச்சி முடியாட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் என அஞ்சிய அந்நாடுகள் புரட்சியைக் கட்டுப்படுத்த பிரெஞ்சு அரசுக்கு உதவியாகப் படைகளை அனுப்பி வைத்தன. இதே சமயத்தில் தேசிய சட்டமன்றம் ஆஸ்திரியா, பிரஷ்யா ஆகியவற்றுக்கு எதிராகப் போர் அறிவிப்பு செய்தது. இதைக் கேள்விப்பட்டவுடன் பிரான்சின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அந்நியப்படைகளை எதிர்கொள்ள ஒருங்கிணைந்தனர். மார்செய்ல்ஸ் எனும் இடத்திலிருந்து ஒரு மக்கள் கூட்டம் மார்செய்லைஸ் எனும் பாடலைப் பாடிக் கொண்டே பாரிஸ் நோக்கிப் புறப்பட்டது.

மார்செய்ல்ஸ் எனும் இடத்திலிருந்து பிரெஞ்சுப் படைகளுக்கான ஒரு பாடலை (1792) ரூஜெட் டி லிஸ்லே என்பார் இயற்றினார். அது லா மார்செய்லைஸ் என அறியப்பட்டது. 1795 ஜூலை 14இல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி இப்பாடல் பிரான்சின் தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது.

 

குழுக்களின் தோற்றம்

தேசிய சட்டமன்றம் உருவாக்கப்பட்ட பின்னரும் கூட, சாதாரண மக்களின் துன்பங்கள் தொடர்கதையாகவே இருந்தன. அதிக எண்ணிக்கையிலான சாதாரண மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படாததால், பெரும்பான்மையான மக்கள் சட்டமன்றத்தை பணம் படைத்தவர்களின் இடமாகவே பார்த்தனர். பாரிஸ் நகரின் புதிய ஆயுத அதிகாரமானது இடைத்தட்டு மக்களிடையே இருந்து திரட்டப்பட்ட தேசிய பாதுகாவலர்கள் எனும் படையின் கைவசமிருந்தது. அமெரிக்க சுதந்திரப் போரில் பிரெஞ்சு அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ஆலோசகராகச் செயல்பட்ட லஃபாயட் என்பவரே இதன் தலைவராவார். அரசர், முந்நாள் உயர்குடியினர், இடைத்தட்டு மக்கள், பாரிஸ் நகர மக்கள் கூட்டம் ஆகிய அனைவரும் இணைந்து பாஸ்டில் வீழ்ச்சியின் முதலாமாண்டு நினைவு விழாவைக் கொண்டாடிய போது ஒரு பொதுவான விடுதலைபெற்றஉணர்வும் மகிழ்ச்சியும் நிலவியது. ஆனால் இவ்வொற்றுமை நீண்ட காலம் நீடிக்கவில்லை . மனநிறைவு பெறாத மக்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவாதம் செய்ய அரசியல் குழுக்களை உருவாக்கத் தொடங்கினர். அவ்வாறு உருவாகி பாரிஸ் நகரில் புகழ்பெற்று விளங்கிய குழு ஜேக்கோபியன் குழு (Club) என்பதாகும். சமூகத்தில் ஏழ்மை நிலையில் இருந்தவர்கள், சிறு வியாபாரிகள், கைவினைஞர்கள், பணியாளர்கள், கூலி வேலை செய்யும் தொழிலாளர் ஆகியோர் இதில் உறுப்பினர்களாய் இருந்தனர். அவர்களின் தலைவர் மாக்ஸ்மிலியன் ரோபஸ்பியர் ஆவார். பிரபுக்கள் வகுப்பைச் சேர்ந்தோர் வழக்கமாக அணியக்கூடிய முட்டுக் கால்களின் கீழ் இழுத்துக் கட்டக் கூடிய காற்சட்டைகளுக்குப் பதிலாக ஜேக்கோபியர்கள் நீளமான கோடுகளைக் கொண்ட காற்சட்டைகளை அணிந்தனர். தங்களை வேறுபடுத்திக் காட்டிக் கொள்வதற்காக முட்டுக்குக்கு கீழ் காற்சட்டையைக் கட்டிக் கொள்ளாதவர்கள்" என தங்களைத் தாங்களே அழைத்துக் கொண்டனர். டாண்டன் எனும் வழக்கறிஞர் கார்டிலியர் கிளப்பில் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தார்.


 

கிரோண்டியர்களும் ஜேக்கோபியர்களும்

லஃபாயட்டியின் அரசியல் அமைப்புக்குக் கட்டுப்பட்ட முடியாட்சி இரண்டு ஆண்டு காலம் பிரெஞ்சு அரசியல் களத்தில் கோலோச்சியது. 1791 ஜூனில் பாரிசிலிருந்து தப்பித்து, எல்லையைக் கடந்து அங்கே கூடியிருக்கும் எதிர்புரட்சிப் படைகளுடன் இணைவதற்காக மன்னர் மேற்கொண்ட முயற்சியைக் குடியானவர் படையொன்று முறியடித்தது. இருந்தபோதிலும் உணவுப் பண்டங்களுக்கான பற்றாக்குறையும் விலையேற்றமும் வேலையில்லாத் திண்டாட்டமும் கைவினைஞர்களையும் சிறு வணிகர்களையும் தொழிலாளர்களையும் நம்பிக்கை இழக்கச் செய்தது ஏமாற்றத்தின் எல்லைக்கு இட்டுச் சென்றது. மக்கள் பொங்கியெழுவதை அடக்குமுறையால் கட்டுப்படுத்த இயலவில்லை .அரசாங்கத்தை நடத்திய மிதவாதிகள் தங்களுக்குள்ளேயே வேறுபட்டனர். ஜோக்கோபியன் குழுவிற்குள் இருந்த கிரோண்டியர்கள் (அவர்களின் ஒரு தலைவர் பிரிசாட் என்ற பெயரால் பிரிசாடினியர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்) ரோபஸ்பியரைப் போலவோ, டாண்டனைப் போலவோ அதி தீவிரவாதிகளாக இல்லை. அவர்களுக்குள்ளே பல கருத்து வேறுபாடுகளிருந்தாலும் ரோபஸ்பியரைத் தவிர மற்றவர்கள், அந்நிய சக்திகளுக்கு எதிரான ஒரு போர் செய்வதன் மூலம் நிலைமைகளைச் சீராக்கலாம் என நம்பினர். அவ்வாறான போர் புரட்சிக்கான கதவுகளைத் திறந்து வைக்குமென ரோபஸ்பியர் வாதாடினார். ஆனால் கிரோண்டியர்கள் அரசருடன் இசைந்து ஒரு அரசாங்கத்தை உருவாக்கியதையோ, பின்னர் 1792 ஏப்ரலில் ஆஸ்திரியாவுக்கும் பிரஷ்யாவுக்கும் எதிராகப் போர் அறிவிப்புச் செய்ததையோ அவரால் தடுக்க இயலவில்லை .

 

தேசியப் பேரவை (National Convention)

கிரோண்டியர்கள் திட்டம் பேரிடராக முடிந்தது. கோபம் கொண்ட ஜேக்கோபியன் குழு உறுப்பினர்கள் பதினாறாம் லூயியின் அதிகாரபூர்வமான வசிப்பிடமான டியூலரிஸ் அரண்மனைக்குள் புகுந்தனர். காவலர்களைக் கொன்று அரசரைச் சிறைப்பிடித்தனர். புதிதாக உருவான சட்டமன்றமான தேசியப் பேரவை அரசரைச் சிறையில் அடைக்கவும் நாட்டிற்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடத்தவும் வாக்களித்தது. தேர்தலில் 21 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் செல்வத்திலும், அந்தஸ்திலும் எந்த வேறுபாடும் இல்லாமல் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றனர்.

 

செப்டம்பர் படுகொலைகள்

முடியாட்சி தூக்கி எறியப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் எதிர்புரட்சியாளர்கள் தீட்டிய சதியொன்றில் இணையப் போவதாக மக்கள் நம்பினர். இதன் விளைவாக மக்கள் கூட்டம் சிறைச்சாலைகளைத் தாக்கின. அரச குடும்ப ஆதரவாளர்கள் எனக் கருதப்பட்ட அனைவரும் கேள்வி முறையின்றி கொல்லப்பட்டனர். 1792 செப்டம்பர் 2இல் பாரிஸ் நகரில் அபே சிறையில் தொடங்கிய இப்படுகொலை நகரின் ஏனைய சிறைகளிலும் மேற்கொள்ளப்பட்டு அடுத்து வந்த நான்கு நாட்களுக்கும் தொடர்ந்தது. செப்டம்பர் படுகொலைகள் எனப் பின்னர் அழைக்கப்பட்ட இந்நிகழ்வில் மொத்தம் 1,200 கைதிகள் கொல்லப்பட்டனர். புரட்சியின் பயங்கரத்திற்கு ஆதாரமாக இப்படுகொலைகள் பற்றிய செய்திகள் ஏனைய நாடுகளில் பரவின. இதற்கு கிரோண்டியர்கள் தங்களின் அதிதீவிர எதிரிகளைக் குறிப்பாக மாரட், டாண்டன், ரோபஸ்பியர் ஆகியோரைக் குற்றம் சாட்டினர்.

 

தேசியப் பேரவையின் பணிகள்

1792 செப்டம்பர் 20இல் புரட்சிப் படையினர் ஊடுருவி வந்த பகைவர்களை வால்மி எனுமிடத்தில் எதிர்கொண்டு நிறுத்தினர். மறுநாள் புதிய சட்டமன்றமான தேசியப் பேரவை முடியாட்சியை ஒழித்து பிரான்ஸ் ஒரு குடியரசு என அறிவித்தது.

1793 ஜனவரி 21இல் அரசர் பதினாறாம் லூயி மக்கள் தீர்ப்பாயத்தின் முன்னர் கொண்டுவரப்பட்டு கில்லட்டின் கொலைக்கருவியில் கொல்லப்பட்டார். தனது மக்களுக்கு எதிராக அயல்நாட்டவரின் உதவியைக் கோரியதே அவர் செய்த குற்றமாகும். இதன் பின்னர் விரைவில் மேரி அன்டாய்னெட்டும் சிரச்சேதம் செய்யப்பட்டார்.


இச்சூழ்நிலையில் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் ஒரு சேரப் பசித்துயரம் பெருகியது. விலைகளைக் கட்டுப்படுத்தும்படியும், மக்களுக்கு உணவு தானிய விநியோகங்களை முறைப்படுத்தும்படியும் ஊகவணிகர்களுக்கும் பதுக்கல்காரர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கும்படியும் பாரிஸ் நகர மக்கள் கோரிக்கை வைத்தனர். பாரிஸ் நகர மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்காத தேசியப் பேரவை, மாறாக இராணுவத்தை ஏவி மக்களைத் தாக்கியது. படைத்தளபதிகளில் பலர் எதிரணியில் சேர்ந்து கொண்டதால் படைகள் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்தன. மேற்கு பிரான்சின் வெண்டி பகுதியில் நம்பிக்கை இழந்த விவசாயிகள் முடியாட்சி ஆதரவாளர்களுடன் கை கோர்த்தனர். முடிவாக (1793 மே 29) மிதவாதிகளும் முடியரசு ஆதரவாளர்களும் லியான்ஸ் (Lyons) பகுதியைக் கைப்பற்றினர். இப்பகுதி பட்டு ஆலைத் தொழில் நன்கு செயல்பட்ட பகுதியாகும். மேலும் இப்பகுதியில் ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து பணம் படைத்த வணிகர்கள் பலர் குடியேறியிருந்தனர்.

 

ஜேகோபியன்களின் ஆட்சி

புரட்சி தொடங்கியது முதல் கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்டிருந்தநன்மைகளை இழப்பதற்கு ரோபஸ்பியர் விரும்பவில்லை . எனவே அவர் தன்னுடைய சர்வாதிகார ஆட்சியைத் தொடங்கினார். ஜேகோபியர்கள், கிரோண்டியர் குழுவின் தலைவர்களை சிரச்சேதம் செய்யும் கில்லட்டின் இயந்திரத்திற்கு அனுப்பி வைத்தனர். டாண்டனும் கில்லட்டினுக்கு அனுப்பப்பட்டார்.

1793க்கும் 1794க்கும் இடைப்பட்ட காலம் தீவிர சீர்திருத்தங்களுக்கான காலமாகும். 1794 பிப்ரவரி 4இல் ஜேக்கோப்பியர்கள் அதிகம் இருந்த சட்டமன்றம் பிரான்சின் அனைத்துப் பகுதிகளிலும் அடிமைமுறையை ஒழித்து ஆணை பிறப்பித்தது. மக்கள் பெரும் ஊதியத்திற்கு உச்சவரம்பு விதிக்கப்பட்டது. ரொட்டி, இறைச்சி போன்ற உணவுப் பண்டங்கள் பங்கிட்டு விநியோகம் (Ration) செய்யப்பட்டன. பண்ணைப் பொருட்களுக்கான விலையை அரசாங்கம் நிர்ணயம் செய்தது. சார், மேடம் எனும் சொற்களுக்குப் பதிலாக ஆண் குடிமகன், பெண் குடிமகள் எனும் வார்த்தைகள் பயன்பாட்டிற்கு வந்தன. திருச்சபைகள் போன்ற சமயம் சார்ந்த இடங்கள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டன. அரசாங்கமும், சமூகத்தின் அடித்தளமும் அளவுக்கு மேலாக தீவிரமயமாக்கப்பட்டதால் கோபம் கொண்ட உறுப்பினர்கள் ரோபஸ்பியருக்கு எதிராகவே திரும்பினர். அவரும் குற்றம் சாட்டப்பெற்று 1794இல் தூக்கிலிடப்பட்டார்.

டாக்டர் ஜோசப் - இக்னேஸ் கில்லட்டின் என்பார் ஒரு பிரெஞ்சு மருத்துவராவார். அவர் ஒரு கட்டுரையில் மரண தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளை விரைவாகக் கொல்லும் இயந்திரம் குறித்து எழுதினார். அதுபோன்ற இயந்திரத்தை அவர் கண்டுபிடிக்காவிட்டாலும் அதற்கு அவர் பெயரே வைக்கப்பட்டது. கண்டுபிடித்தவர் ஆண்டனி லூயி எனக் கூறப்படுகிறது.

 

இயக்குநர் குழு

ரோபஸ்பியரை பதவியைவிட்டு தூக்கியவர்களாலும் நீண்ட நாட்கள் அதிகாரத்தில் இருக்க முடியவில்லை . புரட்சியை வெறுத்தவர்கள் பாரிஸ் நகரின் வீதிகளை ஆக்கிரமித்து புரட்சிகர சிந்தனைகளை ஆதரித்தவர்களையெல்லாம் தாக்கினர். 1795 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இரண்டு கிளர்ச்சிகள் ஏற்பட்டன. புதிதாக உருவாயிருந்த தெர்மிடோரியன் எனும் குழுவுக்கு விசுவாசமாயிருந்த படைகளால் அவைகள் நசுக்கப்பட்டன. இதனிடையே எமிகிரஸ்கள் (Emigres) நாடு திரும்பத் தொடங்கினர். அவர்கள் விரைவில் முடியாட்சி மீட்கப்படுமென தற்பெருமை பேசினர்.

எமிகிரஸ் (Emigres): அரசியல் காரணங்களுக்காக தங்கள் சொந்த நாட்டிலிருந்து வெளியேறி மற்றொரு நாட்டில் குடியேறுவோரை எமிகிரஸ் என்பர். பிரான்சின் அன்றைய சூழலில் புரட்சியைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் நாட்டை விட்டு ஓடிய பிரபுக்களை எமிகிரஸ் என அழைத்தனர்.

1795 அக்டோபரில் முடியாட்சி ஆதரவாளர்கள் பாரிஸ் நகர வீதிகளில் தாங்களாகவே ஒரு கிளர்ச்சியை அரங்கேற்றினர். ஒரு காலத்தில் ஜேகோபியராக இருந்தவரும், ராணுவத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் அதிகாரியுமான நெப்போலியன் போனபர்ட் படைகளுக்குத் தலைமையேற்று கிளர்ச்சியாளர்களுக்கு உதவி செய்யக் களமிறங்கினார். ரத்தம் சிந்துவதற்கு அஞ்சிய தெர்மிடோரியன்கள் ஐந்து நபர்களைக் கொண்ட இயக்குநர் குழுவிடம் அதிகாரத்தை ஒப்படைக்க இசைந்தனர். நான்கு வருட காலத்தில் ஏதாவது ஒன்றை சாக்காகக் கொண்டு நெப்போலியன் அதிகாரம் மிக்கவரானார். 1799இல் நெப்போலியன் ராணுவப் புரட்சியை அரங்கேற்ற அது அவருக்கு அனைத்து அதிகாரங்களையும் நல்கியது. 1804இல் நெப்போலியன் தன்னைப் பிரான்சின் பேரரசராகப் போப்பாண்டவரைக் கொண்டு முடிசூட்டச் செய்தார்.

புரட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் புரட்சியினுடைய பாரம்பரியத்தின் பெரும் பகுதி நவீன உலகை வடிவமைக்க தொடர்ந்து வாழ்ந்தது.

 

பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கம்

• பிரெஞ்சுப் புரட்சி பிரான்சில் மட்டுமல்லாது ஐரோப்பாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பத்தொன்பதாம் நூற்றாண்டையும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியையும் சேர்ந்த காலனிய எதிர்ப்பு, அறிவார்ந்த மக்களின் இயக்கங்களுக்கும் கூட ஊக்கமளித்தது.

• பிரெஞ்சுப் புரட்சி பிரான்சில் பதினாறாம் லூயியின் ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது.

• சமூக சமத்துவமின்மையைக் குறைத்தது. பிறப்பின் அடிப்படையில் சமூகத்தின் சில பிரிவினருக்கு வழங்கப்பட்டிருந்த உரிமைகள் பறிக்கப்பட்டன.

• இப்புரட்சி தேர்தல் உரிமைகளுடன் குடியரசு தன்மையிலான அரசு முறையை அறிமுகம் செய்தது.

• நிலமானிய முறை ஒழிக்கப்பட்டது.

• அடிமை முறை முற்றிலுமாக ஒழிக்கப்படுவதற்கு சில ஆண்டுகள் ஆனாலும் பிரெஞ்சுப் புரட்சி அடிமை முறையை ஒழித்தது.

• திருச்சபை தனது உயர்நிலையை இழந்தது. அது அரசுக்குக் கீழ் எனும் நிலையை அடைந்தது. மதச் சுதந்திரம், மத சகிப்புத்தன்மையும் நிலை பெற்றன.

• மனிதன் மற்றும் குடிமக்கள் உரிமைப் பிரகடனம் தனிப்பட்ட, கூட்டு உரிமைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.

• அரசின் மூன்று உறுப்புகளான சட்டமியற்றல், நடைமுறைப்படுத்தல், நீதித்துறை ஆகியன முக்கியத்துவம் பெற்றன. ஒன்றையொன்று கண்காணித்துச் சமநிலைப்படுத்திக் கொண்டன. இந்த ஏற்பாடு ஒரு குறிப்பிட்ட மையத்தில் அதிகாரங்கள் குவிக்கப்படுவதைத் தடை செய்தது.

• ஐரோப்பா முழுவதிலும், கொடுங்கோல் ஆட்சியை ஒழித்து சமத்துவ சமூகத்தை நிறுவ முடியும் எனும் நம்பிக்கையைப் பிரெஞ்சுப் புரட்சி மக்களுக்கு வழங்கியது. 

Tags : The Age of Revolutions | History புரட்சிகளின் காலம் - வரலாறு.
12th History : Chapter 11 : The Age of Revolutions : The French Revolution The Age of Revolutions | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 11 : புரட்சிகளின் காலம் : பிரெஞ்சுப் புரட்சி - புரட்சிகளின் காலம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 11 : புரட்சிகளின் காலம்