வரலாறு - புரட்சிகளின் காலம் | 12th History : Chapter 11 : The Age of Revolutions
கற்றலின் நோக்கங்கள்
கீழ்க்கண்டவற்றைப் பற்றி அறிந்துகொள்ளல்
• அமெரிக்க விடுதலைப் போருக்கான காரணங்கள், அதன் போக்கு, விளைவுகள்
ஆகியவற்றை அறிந்துகொள்ளல்
• பிரெஞ்சுப் புரட்சி, அதற்கான காரணங்கள், போக்கு, ஐரோப்பாவின்
மீதும் உலக நாடுகளின் மீதும் ஏற்படுத்திய தாக்கத்தினைப் புரிந்துகொள்ளல்
• லத்தீன் அமெரிக்க புரட்சியினை புரிந்துகொள்ளல்
• முதலில் இங்கிலாந்திலும் பின்னர் ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளில்
நடைபெற்ற தொழிற்புரட்சியின் தொடக்கத்தை அறிந்துகொள்ளல்
அறிமுகம்
நிலவியல் கண்டுபிடிப்புகள், மறுமலர்ச்சி, சமய
மறுமலர்ச்சி, முடியரசர்களின் காலம் ஆகியவற்றின் காரணமாக, பதினெட்டாம் நூற்றாண்டின்
தொடக்கத்தில், உலகம் முழுவதிலும், அரசியல், சமய, சமூக, பொருளாதார நிலைகள் மாற்றமடையத்
தொடங்கின. பதினெட்டாம் நூற்றாண்டு முடிவடைகின்ற தருவாயில் இரு புரட்சிகள் நடைபெற்றன.
அவை அமெரிக்க புரட்சி (1775-83), பிரெஞ்சுப் புரட்சி (1789-95) ஆகியனவாகும். இப்புரட்சிகள்
முடியாட்சிமுறை சார்ந்த அரசாங்கங்களுக்கு பெரும் வீழ்ச்சியைக் கொடுத்ததோடு, அதற்குப்
பின்னரான மனிதகுல வரலாற்றின் மீது நிலையான தாக்கத்தினையும் ஏற்படுத்தின. இப்புரட்சிகள்
மக்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. அத்துடன் வேளாண்மையை அடிப்படையாகக்
கொண்ட பொருளாதாரமானது ஆலையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக மாற்றம் பெறும் புதிய
காலகட்டத்தை அடைந்தது. மேற்சொல்லப்பட்ட, உலக முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளைப் புரிந்து
கொள்ள இப்பாடம் நமக்கு உதவும்.