அறிமுகம் - பாறைக்கோளம் - வெளி இயக்கச் செயல்முறைகள் | 11th Geography : Chapter 4 : Lithosphere: Exogenic Processes
பாறைக்கோளம் - வெளி
இயக்கச் செயல்முறைகள்
அத்தியாயக் கட்டகம்
4.1 அறிமுகம்
4.2 வெளி இயக்கச் செயல்முறைகள்
4.3 பாறைச் சிதைவு
4.4 பாறைப்பொருள் சிதைவு
4.5 நிலமட்டம் சமமாக்கல்செயல்முறைகள்
4.6 ஆறுகள்
4.7 பனியாறுகள்
4.8 நிலத்தடி நீர் (கார்ஸ்ட் நிலத்தோற்றம்)
4.9 காற்று
4.10 கடல் அலைகள்
கற்றல் நோக்கங்கள்
• புவியின் மேற்பரப்பு வெளி
இயக்கச் சக்திகளால் எவ்வாறு மறுவடிவம் பெறுகிறது என்பதை புரிந்து கொள்ளுதல்.
• இயற்சிதைவு மற்றும்
வேதியியல் சிதைவுகளின் வேறுபாட்டினை தெரிந்து கொள்ளுதல்.
• பருப்பொருள் சிதைவுகளின்
வகைகள் மற்றும் அவற்றின் பண்புகளை அடையாளம் காணுதல்.
• பல்வேறு நிலமட்டம்
சமமாக்கும் காரணிகளை வேறுபடுத்துதல்.
சென்னைக்கு அருகாமையில் உள்ள மகாபலிபுரத்தில் 6 மீட்டர் உயரம், 5 மீட்டர் அகலம் மற்றும் 250 டன் எடையும் கொண்ட "கிருஷ்ணர் வெண்ணெய் கல்" என்ற பாறையானது
காணப்படுகின்றது. இதன் உண்மையான தமிழ் பெயர் "வானிறைக்கல்" ("Vanniraikal")
அதன் பொருள் "ஆகாய கடவுள் கல்" என்பதாகும்.
மேலே உள்ள படத்திற்குள்
காணப்படும் கிருஷ்ணர் வெண்ணெய் கல்லைப் பார்த்து விவாதிக்கவும்
• இப்பாறை இவ்வடிவம் பெறக்
காரணம் என்ன என்பதை சிந்திக்கவும்.
• இக்கல் இந்த வடிவத்தினை
பெறுவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகி இருக்கலாம் என்பதை யூகம் செய்யவும்.
• இப்பாறை எவ்வாறு ஒரே
இடத்தில் நிலைத்து நிற்கிறது என்பதைப் பற்றி சிந்திக்கவும்.
அறிமுகம்
முந்தைய பாடத்தில் நாம் புவியின் உள் இயக்கச்
செயல்முறையினைப் பற்றி விரிவாக படித்தறிந்தோம். இப்பொழுது நாம் புவியின் வெளி
இயக்கச் செயல்முறைகளைப் பற்றி பார்ப்போம். புவியின் மேற்பரப்பில் ஏற்படக் கூடிய
சக்தியை புவி வெளி இயக்கச் சக்தி அல்லது வெளிபுறச் சக்தி என அழைக்கின்றோம். வெளி இயக்க
செயல்முறையினால் பாறைகள் சிதைவுறுவதை நிலச்சிதைவு சக்திகள் என்கிறோம்.
வெளி இயக்கச்
செயல்முறைகள்
வெளிப்புற சக்திகளின்
தாக்கத்தினால் புவிமேற்பரப்பில் நிகழும் செயல்முறையை வெளியியக்கச் செயல்முறை என
அழைக்கிறோம். பாறைச் சிதைவு, பருப் பொருள் சிதைவு, நிலத்தேய்வு (Denudation) ஆகியவை முக்கியமான வெளி இயக்கச்
செயல்முறைகள் ஆகும். இந்த வெளி இயக்க செயல்முறைகளைச் செய்ய வல்ல இயற்கைக் கூறுகளை
நிலமட்டம் சமமாக்கும் காரணிகள் என அழைக்கிறோம். எடுத்துக்காட்டாக, காற்று, ஆறு, கடல் அலைகள் பனியாறுகள் மற்றும்
நிலத்தடி நீர்.